மனங்கவர்ந்த டோரேமோனும் அற்புத மனிதர்களும்

This entry is part 28 of 30 in the series 20100425_Issue

க.ராஜம்ரஞ்சனி, மலேசியா


Bangkok,Thailand – March 21, 2015: Yellow Doraemon a robot cat protagonist of Doraemon Japanes animation cartoon. There are plastic toy sold as part of the McDonald’s Happy meals.


பால்ய காலங்களில் கார்ட்டூன்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. என் பால்ய பருவத்தில் நான் சந்தித்த டோரேமோன் கார்ட்டுன் கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று என்பதால் இன்றும்கூட நேரம் கிடைக்கும்போது சந்திப்பை ஏற்படுத்திக் கொள்ள மறப்பதில்லை. டோரேமோன் கார்ட்டுன் கதைச்சித்திரங்களையும் படித்ததுண்டு. அப்போதெல்லாம் டோரேமோன் உடன் இருந்து கைக்கோர்ப்பதாய் ஓர் உணர்வு.
டோரேமோன் எனும் ரோபோட் பூனை மற்றும் அதன் உயிர்தோழனான நோபிதாவிடம் காணப்படும் அன்பு பரிமாற்றம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இத்தகைய தூய அன்பிலான நட்பைக் காண்பது சுலபமானதல்ல. நோபிதா இக்கட்டான தருணங்களில் டோரேமோனிடம் மனம்விட்டு பேசுவான்; சில சமயங்களில் அழுவான். இக்கட்டான சூழ்நிலைகள் அவன் வாழ்க்கையில் நிரம்பி இருக்கும். காலை எழுவது தொடங்கி, பள்ளி, வீட்டுப்பாடம், தேர்வு, நண்பர்கள் என எல்லாமே அவனுக்குப் பிரச்சனை தரும் விஷயங்கள். இவையனைத்துக்கும் பொறுமை காத்து தீர்வு தரும் தோழன் டோரேமோனைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இன்ப துன்பத்தில் பங்கு கொள்ளும் உயர்நட்பை டோரேமோனிடம் உணர முடியும்.
நோபிதாவிற்கு உதவ டோரேமோன் நோபிதாவிற்குப் பல அற்புத பொருட்களைத் தருவித்து தரும் வேளைகளில் அதன் செயல்பாட்டையும் கட்டுப்பாட்டையும் முன்வைக்கும். ஆனால் நோபிதாவின் பேராசையினால் அளவுக்கு மிஞ்சிய பயன்பாடுகளும் மீறிய கட்டுப்பாடுகளும் ஆபத்தான பின்விளைவுகளையே ஏற்படுத்திவிடும். அதிலிருந்து காப்பாற்றவும் டோரேமோனே உதவிகள் புரியும். நண்பனின் தவறுகள் மீது கோபம் கொண்டாலும் நோபிதா மனம்திருந்தி மன்னிப்பு கேட்கும்போது மன்னித்து விடும் டோரேமோனின் குணத்தை நினைக்கும்போதே மகிழ்ச்சியாய் இருக்கும். டோரேமோன் தரும் பொருட்கள் யாவும் அற்புதமானவை. சில பொருட்கள் அறிவியல் சார்ந்தும் இருப்பதுண்டு. கார்ட்டுன் பகுதித்தொடர்கள் யாவும் அற்புத பொருட்களைத் தலைப்பாக கொண்டிருக்கும். ஒவ்வொரு பொருட்களையும் காணும்போது ‘இது நம்மிடமிருந்தால் நல்லாயிருக்குமே’ என்ற எண்ணம் இயல்பாகவே பிறந்துவிடும். இளைய வயதில் டோரேமோனிடம் கனவில் பல பொருட்களைக் கேட்டிருந்திருக்கலாம்; நினைவில்லை. நகைச்சுவையும் நன்னெறியும் கலந்த கார்ட்டூன் பகுதிகள் அனைத்தும் நோபிதாவின் பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் சுவாரஸ்யமாக இட்டுச் செல்லும். குழந்தைகளுக்கு சந்தோஷம் தரும் அதே தருணம் சிந்திக்கவும் வைக்கும்.
அற்புத பொருட்களைத் தேடி நாம் செல்ல வேண்டியதில்லை. நம்மைச் சுற்றி இருக்கும் பொருட்கள் அனைத்துமே அற்புதமானவை, மனிதர்கள் யாவருமே அற்புதமானவர்கள். அற்புதங்களைத் தாங்கி நிற்கும் இவ்வுலகமும் அற்புதமானது. ஆனால் பெரும்பாலும் இழப்பிற்குப் பின்னரே அருமையும் அற்புதமும் தெரிகின்றது. அண்மையில் ஒன்றுகூடல் நிகழ்வொன்றில் நானும் நண்பர்களும் அவரவர் வேலை, பொழுதுபோக்கு, விருப்பங்கள் என பரிமாறிக்கொண்டோம். நண்பர்களின் விருப்பங்கள் இணையம், இணைய நட்பு வலைத்தளம் என விரிந்திருக்க நான் ‘பணியில் மாணவர்களுடன் அதிக நேரத்தைக் கழிக்கின்றேன். என் வாழ்நாள் பொழுதுகள் அதிகமாக மனிதர்களுடனே கழிகின்றன. நான் இதை விரும்புகின்றேன். காரணம் எனக்கு மனிதர்களைப் பிடிக்கும்’ என கூறியபொழுது அனைவரும் சிரித்து விட்டனர். என்னைச் சுற்றியிருக்கும் மனிதர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்களாகவும் அற்புதமானவர்களாகவும் என் கண்களுக்குத் தெரிகின்றனர். அதனால் என்னைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரும் நூறு சதவீதம் நல்ல மனம் படைத்தவர்கள் என்பது என் கருத்தல்ல. எல்லா மனித மனதிலும் சிறிதளவிலாவது நல்ல குணம் ஒளிந்திருக்கவே செய்கின்றது. அதை வெளிகொணர்வதும், பன்மடங்காக்குவதும், தூர எரிவதும் தனிமனித குணங்களாய் நம்முன் பிறப்பெடுக்கின்றன. சில மனித குணங்களை நம்மால் ஏற்று கொள்ளமுடியாமல் போகின்றது. என்னாலும் ஏற்றுக் கொள்ள இயலாத குணங்களென இருப்பது நம்பிக்கை துரோகங்ளும் அதற்குத் துணை போகும் பொய்களும். எனக்கு மனிதர்களின் மீது எளிதாக நம்பிக்கை உருவாகிவிடுவதில்லை. ஆழ்ந்து உருவாகும் நம்பிக்கைகளைத் தகர்க்கும் துரோகங்களை நான் வெறுக்கிறேன். மன்னித்து மறப்பதை நான் விரும்பினாலும் ஏனோ நம்பிக்கை துரோகங்களுக்கு மட்டும் அது விதிவிலக்காகிவிடுகின்றது.
இன்றைய நிலையில் உற்று நோக்கினால் மனிதர்கள் பொருட்களின் மீது காட்டும் கவனம், அக்கறை, அன்பு ஆகிய இயல்புகள் சகமனிதர்களிடம் காட்டுவது குறைவாகவே உள்ளது. அவ்வாறான அக்கறை, அன்பு மனிதர்களின் மீது அவ்வப்போது மிகும் வேளைகள் இருந்தாலும் அதற்குப் பின்னால் சுயநலமும் சேர்ந்தே மறைந்திருக்கின்றது.
‘Every person in this world is different. That is unique properties of human beings’. உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் வித்தியாசமானவன். அதுவே மனிதனின் உன்னத சிறப்பம்சம். நான் கண்ட மனிதர்களின் வழி என்னுள் உருவான கருத்து இது. டோரேமோனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அற்புத மனிதர்களின் மனங்களில் அன்பு வழிய செய்யும் ஒர் அற்புத பொருளைக் நானும் கேட்பேன். நோபிதாவிற்கு உதவும் டோரேமோன், ரஞ்சனிக்கும் உதவும் என்ற கற்பனை கலந்த எதிர்பார்ப்பு. நோபிதாவைப் போன்றே எனக்கும் டோரேமோன் மீது உண்மை அன்பு உண்டு.

படைப்பு:
க.ராஜம்ரஞ்சனி
மலேசியா

Series Navigation<< மராத்தா- முகலாயர் – 27 வருட போர் – போரியல் ஆராய்ச்சிஇணையத்தில் தமிழ் >>

க.ராஜம்ரஞ்சனி, மலேசியா

க.ராஜம்ரஞ்சனி, மலேசியா