புத்தக விமர்சனம் : கவியோகி கவிதைகள்

This entry is part [part not set] of 33 in the series 20080724_Issue

சௌந்தர், கனடா



ஆசிரியர்: திரு கவியோகி வேதம்
பதிப்பகம்: எல்.கே.எம் பப்ளிகேஷன், தி.நகர், சென்னை-600 017(Price-Rs 50/-)

தண்டமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் வரப்பிரசாதமாக அமைந்த எண் அறுபத்து மூன்று. ஆம்! அறுபத்து மூன்று அருங்கவிதைகள் அழகுற அமைத்து
வெளிவந்த கவியோகியின் கவிதைத் தொகுப்பு நமக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம். கடவுள் பக்தி, யோகத்தின் பெருமை, வாழ்க்கைத் தத்துவங்கள்,
கம்பன், பாரதி, கண்ணதாசன், நகைச்சுவை, தான் பிறந்த சொந்த ஊரின் பெருமை, இளமைக்கால நினைவுகள், அமெரிக்கா கொலு மற்றும் பலவாறான
தலைப்புகளில் அமைந்த ஒரு கவிதைப் பொக்கிஷம். இவருடைய கவிபாடும் நடைக்கு முத்திரையாக அமைந்த குறள்வெண்செந்துறை எனப்படும் கவிதை
வடிவத்தைப் பரவலாகக் கையாண்டிருக்கிறார். விருத்தமும் சிந்துப்பாடல்களும் மிக அருகி வந்துள்ளன. வெண்பா எழுதிவதில் மிகத்திறமை உடைய
இவர் ஒரு வெண்பா கூட இந்தத்தொகுப்பில் சேர்க்காமல் இருந்ததற்குக் காரணம் யாதோ?கண்களை மூடி, கருத்தை ஒருமிக்கச் செய்யும் ஒருவரா கவிதை எழுதுகிறார் என்று வியக்க வேண்டாம். இதை இவரே இப்படிச் சொல்கிறார். தன்னொரு மூச்சால் மூச்சை இழுத்தே
. . தளர்த்தல் மட்டுமா ஒருயோகம்?
என்சொல் ஏறிய கவிதை சொல்வது
. . எத்தனை எத்தனை புதுயோகம்!மரத்தில் மறைந்தது மாமத யானை; மரத்தை மறைத்தது மாமத யானை என்னும் படியான யோக சித்தாந்தத்தைப் பயின்றவர் நம்வேதம்.
இதையே கவிஞனின் கண்கொண்டு நோக்கினால் இப்படிச் சொல்லலாம்.இந்தப் புதுயோகத்தை உலக மகாகவியான ஷேக்ஸ்பியருக்கும் கையாண்டிருக்கிறார். உன் விருப்பப்படி (As You Like It) என்னும் படைப்பில்
அமைந்த சில வரிகள்.And this our life exempt from public haunt,
Finds tongues in trees, books in the running brooks,
Sermons in stones, and good in every thing.
I would not change it.கவியுணர்வும் யோகமும் ஒருசேரத் தன்சிந்தையில் நிறைந்திருப்பதால்தான், இவரால் கல்லிலும் கவிபாடும் கலையை இனம் கண்டு கொள்ளமுடிகிறது.
ஊட்டி மலை உச்சியிலிருந்து உருகாப்பனி போர்த்துக்கொண்ட அலாஸ்கா வரை எதிலும் இயற்கையின் எழில் கொஞ்சும் நடனத்தைக் காண்பதும்,
வேள்விச் சாம்பலில் உயிர்த்திருக்கும் ‘பீனிக்ஸ்’ பறவையை இனம் கண்டுகொள்வதும் ஒரு கவிஞனால்தானே முடியும்! அதனால் தான் மேலே
குறிப்பிட்ட Sermons in stones என்பதற்கேற்ப ‘நாக்கை நீளமாய்த் தொங்கவிட்டு நடுங்கவைக்கும்’ அய்யானார் சிலையும் இவருக்கு ஞானம்
போதிக்கும் ஆசானாகிப் போகிறது. மனத்தால் தியானித்தால் முடியாதது என்று ஒன்றும் உண்டோ என்று சவால்விடும் இவர், உட்கார்ந்த இடத்தில் கண்களை மூடியிருந்தே மலையையும்
குனித்து விடும் அசகாய சூரர்.’மலையா? குனிவதுவா? மண்டையைக் குடையுதய்யா!’ என்று நீங்கள் மனம் கலங்க வேண்டாம். முன்னொரு நாள் மலையும் குனிந்த கதை படித்திருப்பீர்களே! குடைசாய்ந்த குவலயத்தைச் சமன்செய்யக்
. . குறுமுனிவன் முன்னர் ஓர்நாள்
கொடைநல்கும் விந்தியத்தின் செருக்கொழித்துக்
. . குனித்தகதை கேட்ட துண்டே!
நடையழகும் நற்றமிழும் குலவுகின்ற
. . நற்கவிதை நயங்கள் காட்டி
மடைதிறந்த வெள்ளமென மலைகள்பல
. . வணங்கியதை அடுக்கிச் சொல்லும் வகையாக அமைந்த ‘குனிந்த மலை’ என்னும் கவிதை மனதில் நிற்பதொன்று.ஞானம் செறிந்த மனத்தினரான வேதம் தான் பிறந்த ஊரின் பெருமைகளை நினைந்து நினைந்து உள்ளம் உருகுகிறார். ஆனைப் பிளிறலில் அழகனை அத்திருமாலை
வானில்சக் கரமுடனே வரவழைத்த தெங்கள் ஊர்என்று பெருமையைத் தேடிக்கொண்ட அத்தாழநல்லூரைச் சேர்ந்தவர். பல வருடங்கள் கழித்துச் சொந்த ஊருக்குத் திரும்பியவர்,
அங்குள்ள மக்கள்
பலர் வயது காரணத்தால் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அதை நினைந்து அவர் அங்கலாய்க்கிறார். சின்ன வயதில் கொஞ்சியவர்கள்-எனக்குத்
. . தின்னப் பண்டம் தந்தவர்கள்
என்னை மறந்தே விட்டார்கள்-தலையை
. . எடுத்து நிமிர்ந்தும் பார்க்கவில்லைநகரத்திலே பலவருடங்கள் தங்கிவிட்டாலும் கிராமத்தின் எழிலை நினைத்து அவர் சொல்கிறார் கிராமம் என்பது ஆன்மாவின் கிளர்ச்சியடாமேலும், நெற்கதிர் முத்தமிடும்-தட்டான்
. . நிமிரும்முன் சிக்கியதும்
குற்றுயிர் ஆவதற்குள்-பாட்டன்
. . கூச்சலால் தப்பியதும்நினைவு கூர்ந்து கிராமத்தில் கழித்த இளம்பருவத்தினை அசைபோடுகிறார்.பாமரருக்கும் எளிதில் புரியும்படியான நடையில் ஆஞ்சனேயரு என்ற கவிதை அமைந்துள்ளது. ‘தாசனுக்குத் தாசன் நம்ம ஆஞ்சனேயரு’
என்று தொடங்கி, ‘சின்ன வயசிலே சூரியனைப் பழமா நெனச்சாரு’ என்றெல்லாம் மிக எளிய நடையில் முழு ராமாயணத்தையே சொல்லிவிடுகிறார். சில தவிர்த்திருக்க வேண்டிய இடங்களையும் குறிப்பிட்டு விடுகிறேன்.. பார்த்தசாரதியும்
பகவத்கீதையும் என்னும் கவிதையில், அனைவரும் கீதையென்னும் முத்தினையே மனம்கொள்வோம்; முக்கண்ணன் நெஞ்சில்வர’ என்கிறார். ‘முகில்வண்ணன்
நெஞ்சில்வர’ என்றிருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். சில இடங்களில் எதுகை தேவை என்பதற்காக கருத்து ஒன்றாத அடிகளும் காணக்கிடைக்கின்றன. காட்டாக, கிராமத்தில் உயிர் என்னும் கவிதையில்,
. . . செங்கல்லுக் குயிரூட்டும்
கோடிசுகம்; அதோ அந்த ஆலமரத்தில் தலைகீழாய்த்
தோடிராகம் தொங்கியிசைக்கும் குரங்குத் துள்ளல்

என்று வருமிடத்தில் தோடிராகம் எப்படி குரங்கின் துள்ளலுக்குப் பொருந்துகிறது என்று தெரியவில்லை. ஒருவேளை” ஹனுமத்தோடி” என்ற பெயர்
அமைய இப்படி ஒரு காரணம் இருந்திருக்குமோ?அ.கி.பரந்தாமனார் குறிப்பிடுவதுபோலே ‘உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தன்மையுடையதுதான் கவிதை. உத்தம மனப்பான்மை, எளிய இனிய சொற்கள்
எதையும் ஊடுருவிப் பார்க்கும் அறிவுக்கூர்மை, மன்பதையிடம் அன்பு, இடத்துக்கேற்ற இசை’ என யாவும் அமைந்த வடிவமே
கவியோகியாரின் இந்தக் கவிதைத் தொகுப்பு. வாழ்க்கை அனுபவத்தைச் சித்தரித்துக் காட்டித் திரும்பத் திரும்ப படித்தின்புறுமாறு செய்வது எதுவோ,
அதுவே கவிதை அல்லவா? கவிஞன் உணர்ச்சி வசப்பட்டுத் தன்னை மறந்து பாடுவது எதுவோ, அதுவே கவிதை!
..நம்மைப் பொறுத்தவரை ‘கவியோகி கவிதைகள்’ நம் கையில் விழுந்த கனி.———–(soundar,canada)-

Series Navigation

சௌந்தர், கனடா

சௌந்தர், கனடா