‘கூடு’ என்ற இலக்கிய ஆய்வரங்கின் மூன்றாமாண்டு தொடக்கவிழா

This entry is part [part not set] of 33 in the series 20080724_Issue

சரவணன்


இதழாசிரியர் அவர்களுக்கு
சரவணன் எழுதுவது.
பின்வரும் குறிப்பினைத் தங்களின் இதழில் பிரசுரம்செய்துதவுமாறு வேண்டுகிறேன்.
எழுத்தாளர் திரு. பெருமாள் முருகனால் நாமக்கல்லில்; மாதந்தேறும் நடத்தப்பெற்றுவரும் கூடு என்ற இலக்கிய ஆய்வரங்கின் மூன்றாமாண்டு தொடக்கவிழாவும் 25ஆவது அமர்வும் சிறப்பாக 20.07.2008 நிகழ்ந்தது. அந்த நிகழ்வு பற்றிய குறிப்பு பின்வருமாறு.
நன்றி.

‘மூன்று பெண்களும் முப்பது ஆண்களும்’

‘கூடு’ என்ற இலக்கிய ஆய்வரங்கின் மூன்றாமாண்டு தொடக்கவிழாவும் 25ஆவது அமர்வும் நாமக்கல்லில் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் இல்லத்தில் சிறப்பாக (20.07.2008 மாலை 4.00 – 7.00 ) நிகழ்ந்தது. இதில் ப.செயப்பிரகாசம் மற்றும் பிரபஞ்சம் ஆகியோர் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டுஇ ப.செயப்பிரகாசம் ‘வட்டார இலக்கியம்’ என்ற தலைப்பிலும் பிரபஞ்சன் ‘கதைகளினூடே பயணம்’ என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர்.
நிகழ்வு முருங்கை மரத்தின் கீழ் நடைபெற்றதால் நிகழ்ச்சியினைத் தொடங்கிவைத்து உரையாற்றிய பெருமாள் முருகன்இ பிரபஞ்சனின் ‘பிருமம்’ என்ற கதையினை நினைவுகூர்ந்து பேசினார். முருங்கை மரத்தினைப் பிரபஞ்சன் ‘பிருமம்’ என்று அக்கதையில் கூறியிருந்தார். நிகழ்வில் மூன்று பெண்கள் உள்பட முப்பது ஆண்கள் கலந்துகொண்டனர். பெரும்பாலானோர் தமிழ் ஆய்வாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு. ப. செயப்பிரகாசம் மொழியின் முக்கியத்துவம் வட்டாரச் சொற்களின் அழிவு கரிசல் எழுத்தாளர்கள்இ வட்டாரமக்களின் புழங்குபொருள் சார் வழக்காறுகள் போன்றன பற்றி விளக்கிக்கூறினார். இவரது உரை தஞ்சை மற்றும் கரிசல் வட்டார இலக்கியத்தைப் பற்றி மட்டும் இருந்தது.
திரு. பிரபஞ்சன் கதை படிப்பதன் நோக்கம் என்ன , கதையைப் படைப்பதன் நோக்கம் என்ன, சிறந்த கதை எவ்வாறு இருக்கும் என்று பல்வேறு சிறுகதைகளை எடுத்துக்கூறி விளக்கினார். வரலாற்று மீட்டுருவாக்கக்கதைகள் என்ற போர்வையில் எழுதப்படும் விசம்தோய்ந்த கதைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இரண்டுபடைப்பாளர்களும் தங்களின் உரையில் உதாரணத்திற்காகக் கூடத் தாங்கள் எழுதிய கதைகளைப் பற்றிக் கூறவில்லை என்பது இலக்கிய அவையடக்கத்திற்குச் சான்றாக இருந்தது.
சிறப்புரைகளைத் தொடர்ந்த கலந்துரையாடல் நிகழ்ந்தது. பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதோர் இலக்கியம் பற்றியும் கணிப்பொறிப் பயன்பாட்டினால் ஏற்படும் வட்டார வழக்குச் சொற்களின் அழிவு பற்றியும் வட்டார இலக்கியங்களின் பயன் குறித்தும் வினாக்கள் எழுப்பப்பட்டு விடைகள் பெறப்பட்டன.
நிகழ்ச்சியின் நன்றியுரையில் சரவணன் மறைந்த எழுத்தாளர் திரு. நா.பார்த்தசாரதி நடத்திய ‘தீபம்’ இலக்கிய அரங்குபோலக் ‘கூடு’ இலக்கிய அரங்கும் அழிந்துபடக் கூடாது என்று தனது ஆதங்கத்தை முன்வைத்துப் பேசினார்.
சிறப்பு விருந்தினருக்குப் பெருமாள் முருகன் அவர்கள் நினைவுப் பரிசாகப் புத்தகம் வழங்கினார். தேனீர் விருந்துடன் அரங்கு கலைந்தது. நிகழ்ச்சியினை ம. நடராஜன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
– சரவணன்
——————

Series Navigation

சரவணன்

சரவணன்