ஆ கா ய ம் வா ட கை க் கு…”வானவில் கூட்டம்” – உலகத் தமிழர் கதைகள் தொகுப்புக்கான அணிந்துரை

This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue

பாலுமகேந்திரா


சன் தொலைக்காட்சிக்காக ‘கதைநேரம்’ என வாரம் ஒரு சிறுகதையைத் தேர்வுசெய்து குறும்படமாக்கும் மும்முரத்தில் தமிழின் முக்கிய சிறுகதைகளை மனம்நிறைய ஒருசேர மறுவாசிப்பு நிகழ்த்த நேர்ந்தது. அதற்குமுன்பேகூட, தமிழ்ச் சிறுகதை உலகதரத்துக்கு எப்போதோ வளர்ந்து விட்டது என்கிற கருத்து எனக்கு உண்டு. உலகின் சிறந்த கதைகளின் வரிசை என்று, தோன்றிய கணத்தில் கடகடவென்று தமிழ்க்கதைகளை நினைவுகூர்ந்து எடுத்துக்கூற முடியும். நிஜத்தில் தொலைக்காட்சிக்கான அந்த சிறுகதைத் தொடரை நான் இயக்க ஆர்வப்பட்டதே இப்படித்தான் என்று சொல்லலாம்.
இடைப்பட்டு பல்வேறு அலுவல்கள், திரைப்படக் கல்லூரி துவங்கும் யோசனை, தற்போது ‘அனல்காற்று’ திரைப்பட வேலைகள்… என்று காலம் என்னை சுவிகரித்துக் கொண்டபோதும், படிக்கிற வழக்கம் விட்டுவிடவில்லை. அது பசி போன்றதொரு தினவு. தானாக அடங்காது, தீரும்வரை விடாது. வாசிப்பதால் வாழ்க்கையில் இன்னும் உற்சாகம் மீதமிருப்பதாய்த் தோன்றுகிறது. முக்கிய படைப்புகளை, அவை வெளியான சூட்டோடு படித்துவிடுவதில் தளராத ஆர்வம் எனக்கு உண்டு.
இப்போது ஒரு மாறுதலான அனுபவம். வெளியான சூட்டோடு கூட அல்ல, வெளியாகுமுன்னாலேயே – தரமான சிறுகதைகளை ஒருசேரத் தொகுத்து என் முன் வைத்திருக்கிறார் உதயகண்ணன். உலகத் தமிழர் கதைகள், என்கிறார். உலகெலாம் தமிழ்ப்புகழ் பரப்பும் நம் மக்கள் தங்கள் பாடுகளை, அனுபவங்களை இலக்கியத்தில் கொட்டித் தந்த கதைகள். இப்படி உலக வளாகத்தைத் தமிழ்க்கண்ணுடன் வளைய வருகிறது தனியான வாசக அனுபவம்தான். முன்னுரை தரவேண்டும், என்று உதயகண்ணன் கேட்டுக்கொண்டபோது மகிழ்ச்சியடைந்தேன்.
உலகமே உள்ளங்கைக்குள் அடங்கிப்போகிற அளவு, காலத்தின் வீச்சும் வளர்ச்சியும் அபரிமிதமாய் இருக்கிறது. தமிழர்கள் நாடுகடந்து சாதனை படைக்கத் துவங்கி விட்டார்கள். கணினி கண்டுபிடிக்கப் பட்டதுமே இந்தியனை உலகமே இருகரம் நீட்டி அரவணைத்து வரவேற்கும் அளவு நிலைமை உருவாகிவிட்டது. உலகெலாம் இந்தியத் தமிழர்களும், ஈழத் தமிழர்களும் பரந்து படர்ந்து, வெற்றியாளர்களாக, சாதனையாளர்களாக நிலைகொண்டு பவனி வந்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்தத் தொகுப்பில், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழ்ப் படைப்பாளிகள் கதைகளைப் பங்களித்திருக்கிறார்கள். உலகத் தமிழர் ஒன்றுகூடிய இலக்கியத் திருவிழா கோலாகலத்தை இந்த நூலில் காணமுடிகிறது.
புலம்பெயர்ந்த தமிழர்கள் என்றால், வேலைநிமித்தம் பெற்றார் உற்றாரை விட்டு, மனைவி குழந்தைகளை விட்டு, ஊரை விட்டுப் பிரிந்து போனவர்கள், முன்தலைமுறையினர் போய், அங்கேயே பிறந்த, பின்தலைமுறை மக்கள், தாய்நாட்டில் வாழ்க்கை நெருக்கடி வரவும், ஏக்கத்துடன் தாய்மண்ணைப் பிரிந்து வெளியேறி, இன்னும் தாய்மண்ணை மறவாத நெகிழ்ந்த நெஞ்சுக்காரர்கள்…. இப்படி எல்லா மனிதர்களின் பண்புகளும், சிந்தனைத் தெறிப்புகளும் கதைவடிவம் கண்டிருக்கின்றன. எல்லைகளை விரித்துப் பறக்கும் பறவைகள் இவர்கள். காலச்சிமிழ் இவர்களைப் பூதமாய் அடக்கிவிட அனுமதிக்காதவர்கள்.
உடல் இங்கே, உள்ளம் அங்கே என்கிற அவர்கள் தவிப்புப் பதிவு கண்ட கதைகள் இவற்றில் உள்ளன. கலாச்சார ரீதியான முரண்களும், ஒத்திசைவுகளும், மாற்றங்களும் ஊடாடுகின்றன. என்னதான் வெளிநாட்டுக்குப் போனாலும் தாய்நாடு என்கிற பாதுகாப்பு தங்களுக்குக் கிடைக்கவில்லை என உள்ளூற கவலைப் படுகிறார்கள் சிலர். அச்சூழலில் அவர்களுக்கு நிகழும் ஆபத்துகள், எளிய சுருக்கு வழியில் பணம் சம்பாதித்து கீழ்மைப் பட்டுப்போகிற நெருக்கடிகள். சிலர் அதைத் தாண்டி வருகிறார்கள். சிலர் அதில் வீழ்ந்து வலைப்படுகிறார்கள். வயிற்றின் சவாலில் தோற்றுப் போனவர்கள் ஒருபுறம். மனசின் சிடுக்குகளை அவிழ்க்க இயலாதவர்கள் இன்னொருபுறம். வேற்றூரில், வெளிநாட்டில், எதிர்பாராமல் கேட்ட தமிழ்க்குரல் என்று சிரிப்புடன் கிட்ட வருகிற நபர் அவசியம் போல ஜாதியை விசாரிக்கிறார்.
இப்படிக் கதைகளில் கிடைக்கிற நிகழ்காலத்தின் சாயம் அல்லது சாயல் முக்கியமான பதிவுகளாக நம்மைப் பாதிக்கின்றன. எல்லாவற்றையும் ஒருசேர வாசிக்கிறதே ஒரு பேரனுபவம்… பாஸ்போர்ட்டைத் தொலைத்து விட்டு, சொந்த நாட்டுக்குத் திரும்பக்கூட முடியாது தத்தளிக்கிறவர்களை நினைக்கவே நெஞ்சு நடுங்குகிறது. ஊர் திரும்ப முடியாமல் கடிதம் என்று எழுதி மனதைப் பிழியும் ‘மஜ்னூன்’ கதையின் நாயகனும் (மஜ்னூன் என்றால் அரபி மொழியில் பைத்தியம் என்கிறார்), அப்பாவின் இளையதாரத்தின் மூலம் பிறந்த தன் தங்கைகளின் கல்யாணத்துக்கு ராப்பகலாக உழைத்துப் பணம் சேர்க்கும் அந்த ‘பெயர் உதிர் காலம்’ நாயகனும் மறக்க முடியாதவர்கள். கதைக் களத்தின், நிஜத்தின் உக்கிரம் அத்தகையது.
சொல் புதிது, களம் புதிது, அனுபவம் புதிது, சேதி புதிது என இந்தக் கதைகள் தத்தம் அளவில் ஒவ்வொன்றும் தனி முத்திரை பெற்று விளங்குகின்றன. கதை நிகழும் சூழல் (லீணீதீவீtணீt) அதுவே கதைக்கு ரொம்ப சுவாரஸ்யம் அளிக்கிறது. முத்துலிங்கம் போன்றவர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் பணியாற்றியவர்கள். தமிழ்ச்சூழலோடு பொருத்தியே வேடிக்கைபோல விவரங்களைத் தருகிற சமர்த்து, கதைக்கு அபார சுவையும் வலுவும் சேர்க்கிறது. பாகிஸ்தானிய இஸ்லாமியச் சூழல், நம்ம ஊர் ஸ்ரீதேவி அங்கே தேர்தலில் நின்றால் ஜெயிப்பார் என்கிறார், சமீபத்திய தேர்தலில் அந்த வாய்ப்பை அவர் விட்டுவிட்டாரே என்றிருந்தது. ஓர் அழகான பொறுமைசாலியான இசுலாமியப் பெண் அவருக்கு மிகுந்த நட்புடன் பூங்கொத்து தரும் கதை.
நான் முன்பே வாசித்து மகிழ்ந்த எழுத்தாளர்கள், இவர்களுடன் ரெ.கார்த்திகேசு, ஆபிதீன் போன்றவர்களின் கதைகளும் இதில் இடம் பிடித்துள்ளன.
தமிழ்நாடு அல்லாது வெளி மாநில வேற்றுமொழிப் பிரதேச இந்தியக் கதைகளும் தொகுக்கப் பட்டிருக்கின்றன. கல்கத்தா பூர்விகவாசி மும்பையில் வசிக்கிற (மொகித்தே), மும்பையின் பிரதான பிரச்னையை அலசும் (கழிப்பறைக் காதல்), தில்லி சூழலில் (மிட்டாதார்), கேரளச் சூழலில் (திருமுகப்பில்) – என்று கதைகள் அணிவகுத்துள்ளன.
இருப்பினும், தமிழ்நாட்டுச் சூழலுக்கு களம் தந்த கதைகள் தனி முத்திரை கொண்டவையாக விளங்குகின்றன. புதிய வாசக அனுபவத்தைத் தரும் சிறப்பும் செறிவும் கொண்ட கதைகள். விடிவிளக்கு வெளிச்சத்தில், தூளியில் உறங்கும் குழந்தையைப் பார்க்க ஏங்கும் இருள் பற்றிய கதை. சின்னப் பிள்ளைகளை விவேகானந்தர் என்கிற பெரிய தத்துவதரிசினியைப் பற்றிப் பேசச் சொல்வதில் உள்ள அபத்தத்தை விளக்கும் கதை, ஊரிலேயே பெரிய விபத்து நடக்கிறபோது, தன் குடும்பக் கவலையாய் அங்கே நிற்கிற போலிஸ்காரன் கதை… என ஒவ்வொன்றும் நினைத்து நினைத்து அசைபோடத் தக்கவையாக இருக்கின்றன.
எதிர்காலத்தைக் கற்பனைசெய்து சுஜாதா தந்திருக்கிற ‘திமலா’ ஒரு பக்கம் என்றால், ஆதிவாசிகள் ரோஜாவை முட்செடி என்று அழித்து ஒதுக்கியிருப்பார்களே, எப்படியோ அது காதல்சின்னமாக உருவாகி விட்டதே என ஆச்சர்யம் காட்டும் தமிழ்மகனின் படைப்பு இன்னொரு சுவை. ரமேஷ் வைத்யாவின் கதையில் சங்ககாலப் புலவன் மீண்டும் பிறந்து குடிகாரக் கவிஞனாகிறான். குடியரசு அல்லவா இந்தியா.
கற்பனைக்கு வானமே எல்லை.
கௌதம புத்தனின் சங்கம் பற்றிய கதை (எழுதியவரே சித்தார்த்தன் தான்), அதன் முதல் பிக்குணி அவன் மனைவி என்கிறது. இது ஒருவிதம் என்றால், கணிகையிடம் தத்துவம் பரிமாறும் ஒரு பிற்காலச் சாமியும் வாசிக்கலாம். சுவாமிஜியாகித் திரிந்து போகிறவர்களிடையே, இவர் திரியாமல் சுவாமியானவர். படிப்பறிவில்லாத பாமரர் முதல் கற்றறிந்து பெருவாழ்வு வாழ்கிறவர்வரை பல்வேறு கதாபாத்திரங்கள் காணக் கிடைக்கின்றன. திருடனும் உண்டு, போலிஸ்காரனின் கதையும் உண்டு. கிரிக்கெட் வீரர் காளிசரண் பற்றி ஜெயமோகன் கதை வரைகிறார். நமக்கு அரிய செய்திகளைப் பரிமாறும் இசுலாமியக் கதைகள் இதில் கிடைக்கின்றன. ஆபிதினின் ‘உயிர்த்தலம்’ சுன்னத் பற்றியது – ‘சீவிய பென்சில்தான் எழுதும்’ – புராணப் பாங்கில் ஐயடிகள் காடவர்கோன், அன்னம் தானம் கதைகளும் வாசிக்கலாம். லைப்ரரி கதையில் எல்லாருக்குமே தமது இளமைப் பருவம், படித்துமுடித்தபின் வேலைக்கு அமருமுன்னான பருவம், நினைவு வரும். எழுதியவர் சூர்யராஜன், அவரே ஒரு திரைப்பட இயக்குநர்தான்.
கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். மீண்டும் மீண்டும் வாசித்து மகிழத்தக்கவை. இவைகளில் பலவற்றை நான் முன்பே வாசித்து மகிழ்ந்திருக்கிறேன். சில புதிய பெயர்களும், மனதில் பதியும்படியான கதைகளோடு காணக் கிடைக்கின்றன. சுஜாதா, நாஞ்சில்நாடன், ஷங்கரநாராயணன் முதலிய சிலரின் கதைகளை குறும்படங்களாக ஏற்கனவே நான் தந்திருக்கிறேன். இத்தொகுப்பு அந்நாட்களை மீண்டும் நினைவில் கொண்டு வந்துவிட்டது. விரைவில் மேலும் புதிய சிறுகதைப்படங்கள் தரும் ஆவலைக் கிளர்த்துவதாக இத்தொகுதி அமைந்திருக்கிறது.
காலம் கைகூட வேண்டும்.
நல்வாழ்த்துக்களுடன்,
தங்கள் அன்பன்,

பாலுமகேந்திரா

Series Navigation

பாலுமகேந்திரா

பாலுமகேந்திரா