கவிஞர் சதாரா மாலதியும் சிலப்பதிகார மாதவியும்

This entry is part [part not set] of 34 in the series 20070906_Issue

வெளி ரங்கராஜன்



அண்மையில் மறைந்த கவிஞர் சதாரா மாலதி கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன் கன்னட நாடகாசிரியர் ஹெச்.எஸ். சிவப்பிரகாஷ் கன்னடத்தில் எழுதிய மாதவி நாடகத்தின் தமிழாக்கத்தை எனக்கு அனுப்பிவைத்தார். அத்துடன் நாடகம் பற்றிய பார்வையாக பின்வரும் குறிப்பையும் இணைத்திருந்தார். “கோவலன் இறந்த பிறகு மாதவி என்னவானாள் என்பது பற்றிய கேள்வியை கண்ணகியின் மதுரை எரிப்பு மறக்கடித்துவிட்டது. காதலின் முழுமை காட்டிய மாதவியின் உணர்வுபூர்வமான கதை நீட்டத்தை சிவப்பிரகாஷ் அவர்கள் கன்னடத்தில் எழுதி தமிழ் இலக்கியச் செழுமையை அயல் மாநிலத்துக்கு அறிமுகப்படுத்தினார். இதை மொழிபெயர்த்தபோது எனக்கு Antony and Cleopatraவில் க்ளியோபாட்ரா சார்மியான் என்கிற தாதிப்பெண்ணிடம் பேசும் பேச்சுகள் ஞாபகம் வந்தன. க்ளியோபாட்ரா மானிட்ரகோரா என்ற மதுவைக் கோருவாள். ஆண்டனி இல்லாத காலத்தை தூங்கி நகர்த்திவிடுகிறேன் என்பாள். ஓ சார்மியான், அண்டனி இப்போது எங்கிருப்பார் என்று நினைக்கிறார்? நின்றிருப்பாரா? உட்கார்ந்தா இல்லை நடக்கிறாரோ! இப்போது முணுமுணுக்கிறார், என் நைலின் சர்ப்பம் எங்கே என்று. அப்படித்தான் அழைப்பார் என்னை – இப்படியே அரற்றுவாள் க்ளியோபாட்ரா. எழுதுகோல் மையினால் கடிதப்போர் நடத்துவாள். தினம் பல செய்தி எனது பெறவேண்டும் மன்னன். தூதுவிட்டு எகிப்தைக் காலி செய்வேன் ஜனங்களின்றி என்பாள் க்ளியோபாட்ரா. எனோபார்பஸ் மாய்ந்து மாய்ந்து போவான். இரு பெண்களின் தூய அன்பின் சிகரங்களாகவே அவர்கள் சோகமுடிவுகளும் நேர்ந்தன.

தளைகள் கடந்த அன்பின் தீவிர நெகிழ்ச்சிகளை இனங்கண்டு அதற்கான ஒரு குரலை எதிரொலிப்பவராகவே சதாரா மாலதி தன்னுடைய எழுத்துகளில் வெளிப்பட்டார். அது சார்ந்த ஒரு தொடர்ந்த கூக்குரல் அவரிடமிருந்து இடையறாது ஒலித்துக்கொண்டிருந்தது. புறச்சூழலின் நிர்ப்பந்தகளைக் கடந்து அக்குரலின் அளுகைக்கு ஆட்பட்டவராகவே அவர் இருந்தார். அலுவல்களின் எந்திரத் தன்மைகளுக்கு இடையில்கூட தன் மனதில் தோன்றுகிற கவிதைகளை உடனடியாகப் பகிர்ந்து கொள்ளும் துடிப்புகளுடன் நீண்ட தொலைபேசி உரையாடல்களை நிகழ்த்திக் கொண்டிருந்தார். கட்டற்ற நேசத்துயரின் தீவிர இழையொன்று அவரைத் தொடர்ந்து இயக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கமுடிந்தது.

ஹெச். எஸ். சிவப்பிரகாஷின் மாதவி நாடகத்தில் வெளிப்பட்ட சிலப்பதிகார மாதவியின் உதவியற்ற நிலை குறித்த மாலதி கொண்ட ஈர்ப்பு அவருடைய மொழிபெயர்ப்புக்கு ஒரு முக்கியமான தூண்டுகோலாக அமைந்ததை என்னால் பார்க்கமுடிந்தது. அத்தகைய ஈடுபாட்டின் காரணமாகவே அவருடைய மொழியாக்கம் மிகுந்த கவித்தன்மையுடன் மொழிச்செறிவுடன் விளங்கியதை நாடகமாக்கலின்போது எங்களால் உணர முடிந்தது. மூல நாடகத்தின் சூழல் குறித்தும், நாடகத்தில் பூடக வடிவம் கொண்ட காலம் என்கிற அம்சத்தின் புதிர்த்தன்மை குறித்தும் ஒரு நுட்பமான புரிதல் அவருடைய மொழியாக்கத்தில் வெளிப்பட்டு நாடகவரிகள் அதிகப் பரிமாணங்களுடன் இலக்கியச் செறிவு பெற்றதை நாங்கள் நாடக ஒத்திகைகளில் மிகவும் உணர்ந்து அனுபவித்தோம். அந்த மொழியாக்கத்தில் வெளிப்பட்ட சில பொறிகள், உதாரணத்திற்கு மாதவிக்கும் அவளுடைய தோழிக்கும் இடையிலான உரையாடலிலிருந்து:

“இந்த கதம்ப மாலைகள் உங்கள் மனத்தோடு போட்டி போட்டுக்கொண்டு காத்திருக்கின்றன, உங்கள் கண்ணாளர் தோள் தழுவ-

இல்லை. இந்தப் பூக்களின் யுத்தம் முடிவை அணுகிவிட்டது-

உனக்கு அனுபவித்துப் பழக்கமில்லை இந்த வருத்தம். நீ சுவைத்துப் பார்த்ததில்லை காதலின் இன்பத்தையும் துயரையும்-

நான் காலதேவதைபோல அமர்ந்து உங்கள் மின்னல் பாதங்கள் அந்த யுகத்தையும் கடப்பதைக் கவனித்துக் கொண்டே இருப்பேன்-

நட்சத்திரங்கள் மின்னி மறைகின்றன
காலடிச் சத்தம் கேட்கப்படவில்லை
வாழ்க்கையின் கடினம் பொறுக்கமுடியவில்லை
போ என் தோழி போய் எட்டிப்பார்
உலகத்தின் சாளரத்து வழியே பார்
அவர் என்னுடன் இங்கே இல்லாமல்
எப்படி நான் காலங்களை வாழ்வேன் –

இதயத்துடிப்புக்கு இணையாக எல்லா ராகங்களையும் தாளங்களையும் ஆகவிடாமல் தூசு பரப்பியிருக்கிறது காலம். தினம்தோறும் நாம் நாடகமாடி காலத்தைப் பழிவாங்குகிறோம். இன்று காலம் நம்மைப் பழிவாங்கிவிட்டது. நாளையிலிருந்து இந்த நாடகம், நடிப்பு எதுவும் வேண்டாம். கற்பனையை நிஜம் என்று பாசாங்கு செய்வது எவ்வளவு குரூரம். உண்மை கொடியது எனக்குத் தெரியும். நான் கடலைப் போல புயலைப் போல பயம் தவிர்க்கப் போகிறேன். உலகைத் திறந்துகொண்டு வெள்ளை மேகம் அணிந்து வெளிறிய சூரியன் உதிக்கும்போதே நான் அவளிடம் உண்மை சொல்லியாக வேண்டும்-”

என்று பாட்டும் உரையாடலும் நடனமுமாக நாடகம் நீண்டு செல்கிறது. கலைக்கும், வாழ்வின் யதார்த்தத்திற்கும் இடையிலான ஒரு இடையறாத பயணத்தைப் பாத்திரங்கள் பிரதிபலித்தபடி உள்ளனர். எதிர்பார்ப்பு, தனிமை, துயரம், உன்மத்த நிலை இவற்றின் இடையே ஊசலாடும் பாத்திரங்கள் கலையின் ஊடே நம்பிக்கைகளைத் தேடுபவர்களாக வடிவம் கொள்கின்றனர்.

மாலதியின் மொழியாக்கத்தில் வெளிப்படும் வார்த்தைகளின் செறிவு, பெண் இருப்பின் சிக்கல்கள் குறித்து அவர் கொண்ட கோஷங்களற்ற ஆழ்ந்த பரிவின் பின்விளைவாகவே தோற்றம் கொள்கிறது. அவர் கடந்த சில ஆண்டுகளாகவே தன்னுடைய கவிதைகள் மூலமும் கட்டுரைகள் மூலமும் உரையாடல்கள் மூலமும் இத்தகைய பரிவுணர்ச்சியின் அடையாளங்களையே வெளிப்படுத்தினார். புறச்சூழல் சார்ந்து எத்தகைய கட்டுப்பாடும் விதித்துக் கொள்ளாமல் கவிதை சார்ந்து நண்பர்களுடன் நீண்ட உரையாடல்களை நிகழ்த்தியபடி இருந்தார். இதன் நீட்சியாகவே பழைய இலக்கியங்கள் குறித்த அவருடைய தீவிரமான மறுவாசிப்பும் அமைந்தது. ஆன்மிகம் தாண்டிய அழகியலையும் காதல் இசைந்த உலகியலையும் திருப்பவையின் அடிநாதமாக அவரால் பார்க்க முடிந்தது. உடல் வேறு உள்ளடக்கம் வேறு என்கிற சம்பிரதாய போதனைகளைக் கடந்து உள்ளிருப்பதும் உடல்தான் என்பதான ஆண்டாளின் குரலை முன்னெடுக்க முடிந்திருக்கிறது. இன்னும் குழு சார்ந்த ஒற்றுமை, தொடர்பு, கூட்டு முயற்சி, அதிகாரப் பகிர்வு என எண்ணற்ற சிறுகதையாடல்களின் தொகுப்புகளை திருப்பாவைக்குள் அவரால் இனம் கண்டு முன்னிலைப்படுத்தமுடிந்திருக்கிறது. உடல் இருப்பின் அங்கீகரிப்பு குறித்த ஒரு புதிய பிரதியை கு.ப.ராஜகோபாலனிடத்திலும் அவரால் வாசிக்க முடிந்தது. பெண்ணின் உடல் சார்ந்த பிரக்ஞைகளைப் புறக்கணிக்கும் கருக்கலைப்பு குறித்த ஆண்மயப் பார்வைகளை அவர் கடுமையாகச் சாடியதை ஒரு விவாதத்தில் பார்க்க முடிந்தது.

பிறப்புகளில் எல்லாம்
நெடிதுயிர்த்த வேட்கையில்
உடல் கொடுத்தேன் ஆகுதியாய்
கண்ணீர்ப் புனல் மீறி
வெந்து நீரானது என் உடமை
(தணல் கொடிப் பூக்கள்)

என்றெல்லாம் தீவிர நெகிழ்ச்சிகள் அவர் கவிதைகளில் வெளிப்பட்டன.

அவருடைய மொழிபெயர்ப்பில் உருவான மாதவியின் நாடகமாக்க ஒத்திகைகளின் போது அவருடைய இந்தப் படிமமே மீண்டும் மீண்டும் உயிர்ப்பெற்று சிலப்பதிகார மாதவிக்கான வடிவமாக முன்நின்றது. சிவப்பிரகாஷின் நாடகமாக்கலில் வெளிப்படும் மாதவி கலை வாழ்வின் மீது புனையும் மாய யதார்த்தத்தைப் பற்றியபடி நம்பிக்கைகளும் அவநம்பிக்கைகளும் சூழ கோவலன் இல்லாத காலத்தை எதிர்கொள்ள முனைகிறாள். கலையும் யதார்த்தமும் அவள் மீது மாறி மாறித் தூவும் உன்மத்த நிலையே அவளுடைய இருப்புக்கான புகலிடமாகிறது. மாதவியின் இந்தப் போராட்டத்தில் பெண் இருப்பின் இருத்தலியல் சிக்கல்களின் அடையாளங்கள் சிறுசிறு கூறுகளில் வெளிப்படுவதையே நாங்கள் உணரமுடிந்தது. நாடக ஒத்திகைகள் எல்லாம் நிஜ வாழ்வின் மாதிரி வடிவங்களாகவே தோற்றம் பெற்று நீட்சி கொண்டன. மரபான வெளிப்பாட்டு முறைகளுக்கே பழக்கமாயிருந்த நடிகர்கள்கூட இந்த நாடகத்தின் இருத்தலியல் சார்ந்த நவீனக்குரல்களை இயல்பாக உள்வாங்கி புதியவடிவம் கொண்டனர். சதாரா மாலதியின் குரல் ஏதோ ஒருவகையில் மாதவியின் வேட்கையாக உருமாறியதையே இந்த நாடகமாக்கலில் நாங்கள் உணர்ந்தோம்.

சதாரா மாலதியின் எதிர்பாராத மரணத்துக்கு பிறகே இந்த நாடகத்தை அரங்கேற்றும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அந்த மரணத்தின் வலி இந்த நாடகம் குறித்து ஒரு நுண்ணிய ஈர்ப்பையும் உந்துதலையும் உருவாக்கியதையே நான் உணர்ந்தேன்.

-வெளி ரங்கராஜன், உயிர் எழுத்து செப்டம்பர் 2007.


Series Navigation

வெளி ரங்கராஜன்

வெளி ரங்கராஜன்