உலகத்துக்கு எழுதிய கடிதம்

This entry is part [part not set] of 29 in the series 20070614_Issue

அ.முத்துலிங்கம்


எமிலி டிக்கின்ஸனின் கவிதை தொகுப்பு ஒன்று படிக்கக் கிடைத்தது. நூற்றுக் கணக்கான கவிதைகள் எழுதியிருப்பார் என்று நினைத்தேன் ஆனால் இவர் உண்மையில் ஆயிரக் கணக்கான கவிதைகளை எழுதிக் குவித்திருந்தார். 19ம் நூற்றாண்டிலே வாழ்ந்த இந்த அமெரிக்க பெண் கவியின் பெருமையை அவர் காலத்தில் ஒருவருமே உணரவில்லை. அவர் உயிருடன் இருந்தபோது ஐந்தாறு கவிதைகள் மட்டுமே பிரசுரமாகியிருந்தன, அதுவும் அவருக்கு தெரியாமல்.
வார்த்தைகளை அவர் ஆராதித்தார் என்று சொல்லலாம். சிலர் ஒரு வார்த்தை பாவிக்கப்பட்டதும் அந்த வார்த்தை இறந்துவிட்டது என்று சொல்வார்கள். எமிலியோ ஒரு வார்த்தையை பாவிக்கத் தொடங்கியதும் அது அன்றைய நாளை வாழத்தொடங்குகிறது என்பார். தன்னுடைய கவிதைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதில் அவருக்கு துக்கம் உண்டு. அவருடைய மன அவஸ்தையை சொல்லும் கவிதை வரிகள் இப்படிச் செல்லும்:
எப்போது காலை வருமென்று தெரியாமல்
ஒவ்வொரு கதவாக திறக்கிறேன்.

கடைசி வரையில் கவிதை உலகில் தன் இடம் தெரியாமலே 120 வருடங்களுக்கு முன்னர் அவர் இறந்துபோனார்.

* * *
ரொறொன்ரோவில் சர்வதேச எழுத்தாளர் மாநாடுகள் அடிக்கடி நடக்கும். ஒரு கூட்டத்துக்கு போனபோது சபையிலே எண்பது வீதம் பெண்களாகவே இருந்தார்கள். மேடையைப் பார்த்தால், ஒன்றிரண்டு ஆண் எழுத்தாளர்களைத் தவிர மீதி எல்லாமே பெண்கள். ஓர் அமர்வில் நோபல் பரிசு பெற்ற வோலே சோயிங்கா வாசித்தார். இன்னொன்றில் புலிட்சர் பரிசு பெற்ற எட்வர்ட் ஜோன்ஸ் ஒரு சிறுகதை படித்தார். நைஜீரியாவிலிருந்து வந்திருந்த இளம்பெண் சிமமண்டா Half of a Yellow Sun என்ற அவருடைய நாவலின் முதலாவது அத்தியாயத்தை வாசித்தார். அவருடைய தன்னம்பிக்கையும், வாசிப்பும், கதை சொன்ன பாங்கும் சபையோரை கவர்ந்தது. வாசிப்பு முடிந்ததும் புத்தகத்தை வாங்கிக்கொண்டு பலர் அவருடைய கையெழுத்துக்காக நீண்ட வரிசையில் நின்றார்கள். பெண்களுடைய எண்ணிக்கை சபையிலே எக்கச்சக்கமாக இருந்ததன் காரணம் எனக்கு அப்போது புரிந்தது.
சிமமண்டாவின் எழுத்திலே திடீர் திருப்பமோ, அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிய விழையும் ஆர்வமோ பெரிதாக இருக்காது. ஆனால் மிக அமைதியான நடையில் எழுதிக்கொண்டே போவார். ஒரு வரியை படித்தால் அடுத்த வரியையும் படிக்கத் தூண்டும் எழுத்து. இவருடைய சிறுகதை ஒன்றை நான் படித்திருந்தேன். அந்தச் சிறுகதையை அவர் இரண்டு வருடங்களாக எழுதியதாகச் சொன்னார். ‘இரண்டு வருடங்களா? ஒரு சிறுகதைக்கா?’ என்றேன். சிறுகதையை எழுதும்போது அதை ஒரு முடிவை நோக்கிச் செலுத்தினேன். பின்னர் படித்துப் பார்த்தபோது பலவந்தமாக ஒரு திசையில் அதை தள்ளிக்கொண்டு போனது தெரிந்தது; இயற்கையாகவே இல்லை. மீண்டும் தொடக்கத்தில் இருந்து புதிதாக எழுதவேண்டி வந்தது என்றார். ஒரு சிறுகதை கேட்டதும் பத்து தாள்களுடன் அறைக்குள் போய் பூட்டிக்கொண்டு மூன்று மணி நேரத்தில் சிறுகதையோடு வெளியே வரும் எழுத்தாளர்களை எனக்குத் தெரியும். நான் வியப்படைந்ததற்கு காரணம் அதுதான்.
அவரிடம் உங்களுக்கு பிடித்த எழுத்தாளர் யார் என்று கேட்டதும் அவர் தந்த பதில் ஆச்சரியமாக இருந்தது. ரொமேஷ் குணசேகெரா என்றார். அவர் பெயரை கேள்விப்பட்டிருந்தேனே ஒழிய அவரைப் படித்ததில்லை. ஓர் இலங்கை எழுத்தாளரைப்பற்றி நைஜீரியப் பெண் கனடாவில் வைத்து என்னிடம் கூறியது அபூர்வமான விடயம்தான். ஒருவருடைய எழுத்து தரமானதா என்பதைக் கண்டுபிடிக்க எழுத்தாளருடைய ஒரு வசனத்தைப் படித்தாலே போதும். வார்த்தைகளை எப்படி தெரிவு செய்கிறார், எப்படி அடுக்குகிறார், வசனங்களை செதுக்கி எப்படி உருவம் கொடுக்கிறார் என்பதைப் பார்ப்பதே முக்கியம் என்றார்.
சிமமண்டாவுக்கு 29 வயதாகிறது. இஆரண்டு நாவல்களும் சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். இவருடைய முதலாவது நாவலின் பெயர் Purple Hibiscus. இரண்டாவது நாவல்தான் Half of a Yellow Sun. 1960களில் நைஜீரியாவின் ஒரு பகுதியான Biafra பிரிந்து தனி நாடாக பிரகடனம் செய்தது. அதைத் தொடர்ந்து உள்நாட்டு போர் மூள்கிறது. அந்தக் காலகட்டத்தின் பின்னணியில் கதை சொல்லப்படுகிறது. ஒரு பேராசிரியர், அவருடைய காதலி ஒலானா, அவர்கள் வேலைக்காரன் உக்வு, இவர்களே பிரதான கதை மாந்தர்கள். போர் எப்படி அறிவு ஜீவிகளையும், சாதாரண ஏழை மக்களையும் ஒரே மாதிரி பாதிக்கிறது என்பதையும், அதனால் ஏற்படும் அவலங்களையும், கொடூரங்களையும் பாத்திரங்களின் சம்பாசணை ஊடாக மெள்ள மெள்ள வெளிப்படுத்துகிறது நாவல். கைனானி என்று ஒரு பெண், ஒலானாவின் இரட்டைச் சகோதரி, அவள் பேசும்போது நறுக்காகவும் கெறுக்காவும் இருக்கும். அற்புதமான அவருடைய குணாதியம் நூல்கண்டில் சுழல் சுழலாக நூல் பிரிவதுபோல வெளிப்படும். நாவலின் இடையிலே வந்து இடையிலே மறைந்துவிடும் அந்தப் பாத்திரம் மனதை விட்டு அகலுவதில்லை. .
நாவலை விமர்சகர்கள் புகழ்கிறார்கள். பல விருதுகளும், பரிசுகளும் சிமமண்டாவைத் தேடி வருகின்றன. அடுத்த சினுவ ஆச்சிபி என்று இவரை சிலர் சொல்கிறார்கள். எனக்கு என்னவோ இவரை புக்கர் பரிசு பெற்ற நைஜீரிய எழுத்தாளர் பென் ஒக்ரியுடன் ஒப்பிடவே தோன்றுகிறது. இவரால் ஒரு மோசமான வசனம்கூட எழுதமுடியாது. இவருடைய வசனத்துக்கு ஒரேயொரு உதாரணம். ‘அவள் குருவி கொத்துவதுபோல நிறுத்தி நிறுத்தி பேசினாள்.’ என்ன காட்சி வடிவமான, நுட்பமான வசனம். அவருடைய புத்தகத்துக்கு கொடுத்த காசு அந்த ஒரு வசனத்துக்கே சரியாய் போய்விட்டது.
எதற்காக எழுதுகிறீர்கள் என்ற கேள்விக்கு அவருடைய பதில்:
‘நான் எழுதுகிறேன். நான் எழுத வேண்டும். எழுதாமல் இருக்க என்னால் முடியாது. சிலவேளைகளில் எழுத்து என்னிலும் பெரிதாக இஆருக்கிறது.’

சமீபகாலங்களில் நான் நிறைய பெண் எழுத்தாளர்களை படிக்க நேர்ந்தது. முன்னெப்போதும் இல்லாத மாதிரி இளம் பெண்கள் எக்கச்சக்கமாக எழுதுகிறார்கள். அவர்களுடைய எழுத்து புதுமையாகவும், விநோதமாகவும், சுவைக்கும் படியாகவும் இஆருக்கிறது.
மொனிகா அலியுடைய பிரிக் லேன் மறக்க முடியாத நாவல். மொனிக்கா பங்களதேசத்திலிருந்து இங்கிலாந்துக்கு வந்தபோது அவருக்கு வயது மூன்று. அவருடைய 27 வது வயதில் இஆந்த நாவல் பிரசுரமாகி புக்கர் பரிசு குறும்பட்டியலில் இடம் பெற்றது. இஆங்கிலாந்தில் வசிக்கும் ஒரு பங்களதேசக் குடும்பத்தின் கதைதான் நாவல். பதினெட்டு வயது நஸ்னீன் நாற்பது வயது சானுவை மணமுடிப்பதுடன் கதை ஆரம்பமாகி அவர்கள் குடும்ப வாழ்க்கையை அணு அணுவாக சித்தரித்த விதமாக நகர்கிறது.
வி.எஸ். நய்பாலுடைய House for Mr Biswas நாவலில் வரும் பிஸ்வாஸை அறிந்தவர்களுக்கு சானுவை புரிந்துகொள்வது கஷ்டமாக இஆராது. ஆஇருவரையும் இஆடம் மாற்றி வைக்கலாம். கோமாளித்தனமான, புத்திசாலியான, தினம் தினம் தோல்வியை சந்திக்கும் ஒரு கணவன். தன்னுடைய தோல்விக்கு மற்றவர்களே காரணம் என்று உறுதியான நம்புகிறவர். நஸ்னீன் அடக்கமான, விசுவாசமான, அன்பான இஆளம் மனைவியாக அறிமுகமாகிறாள். ஆரம்பத்தில் அவளுக்கு தன் இஆடம் எதுவென்று தெரியவில்லை. கணவனுடைய காலில் ஆணி வளரவளர அதைக் கிரமமாக வெட்டுவாள். அவளிடம் தன் காலைக் கொடுத்துவிட்டு சானு தன் எதிர்காலத் திட்டங்களை அவிழ்த்து வைப்பார். நாட் செல்லச்செல்ல நஸ்னீனுக்கு தன் கணவனின் கையாலாகாத்தன்மை வெளிச்சத்துக்கு வருகிறது. ஒரு கட்டத்தில் சானு தன் நிரந்திரமான பணியை துறந்துவிட்டு வாடகைக்கார் ஓட்டும் வேலையை ஏற்றுக்கொள்கிறார். அதே சமயம் நஸ்னீனும் வீட்டிலே தையல் மெசின் ஒன்றை வாங்கி வைத்து சம்பாதிக்கத் தொடங்குகிறாள். துணி தைக்கக் கொடுக்கவரும் இஆளைஞன் அலியுடன் நஸ்னீனுக்கு காதல் உண்டாகிறது. ஒளிவு மறைவில்லாமல் நீண்டகாலமாக இஆந்த கள்ளக் காதல் தொடர்ந்தாலும் சானுவுக்கு அது இஆறுதிவரை தெரியவரவில்லை. காதலைவிட்டு வெளியே வரும்போது நஸ்னீன் ஒரு வித விடுதலை உணர்வையும், முதிர்ச்சியையும் அடைகிறாள்.
நாவலை இஆன்னொரு பரிமாணத்துக்கு உயர்த்துவது பங்களதேசத்தில் வசிக்கும் நஸ்னீனின் தங்கை ஹஸீனாவிடமிஆருந்து கிரமமாக வரும் கடிதங்கள். ஹஸீனா ஒளிவு மறைவில்லாமல் தன் சகோதரிக்கு தன் வாழ்க்கையை தினக்குறிப்புபோல எழுதுகிறாள். உடைந்த ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அத்தனை கடிதங்களும் கவிதைகள்தான். இஆளவயதிலேயே காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப்போன ஹஸீனா தொழில்சாலையில் வேலை பார்க்கையில் முதலாளியின் ஆசைநாயகியாகிறாள். அவர் கைவிட பாலியல் தொழிலில் ஈடுபடுகிறாள். இஆறுதியில் வேலைக்காரியாகிறாள்.
இரண்டு சகோதரிகளின் வாழ்க்கையையும் அலி பக்கத்து பக்கத்திலே காட்டிக்கொண்டு போகிறார். ஒரு மொழியை அதன் பலவித சாத்தியங்களுடன் இஆவ்வளவு லாவகமாகக் கையாளும் திறமையை 27 வயதுக்குள் தன் வசமாக்கிவிட்ட அலியின் அசாத்திய சாதனை வாசிப்பவர்களை வியப்படைய வைக்கும்.

கிரான் தேசாயுடைய Inheritance of Loss வெளிவந்தபோது அதைப் படிப்பதில்லை என்ற முடிவுடன் இருந்தேன். என்னுடைய பிடிவாதம் தெரிந்தோ என்னவோ அந்தப் புத்தகத்துக்கு 2006ம் ஆண்டின் புக்கர் பரிசு கிடைத்தது. கிரான் தேசாயும் இளம் பெண்தான், 35 வயதாகிறது. 14 வருடங்களை இந்தியாவிலும் ஒரு வருடத்தை இஆங்கிலாந்திலும் 20 வருடங்களை அமெரிக்காவிலும் கழித்திருக்கிறார். இவரிடம் இஆந்திய கடவுச்சீட்டே உள்ளது. ஏன் அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவில்லை என்று வினவினால் ஜோர்ஜ் புஷ்சை காரணம் காட்டுகிறார். பொதுநல நாடுகள் மட்டுமே பங்கேற்கும் புக்கர் பரிசுக்கு தன் புத்தகத்தை அனுப்பவேண்டும் என்ற காரணத்தினாலேயே அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பிக்காமல் காலம் கடத்தினார் என்று சிலர் இவர்மேல் குற்றம் சாட்டுகிறார்கள்.
இவருடைய புத்தகம் புக்கர் பரிசு குறும் பட்டியலில் இடம் பெற்றதும் கடைகளில் போய் தன்னுடைய புத்தகத்தை கிரான் தேசாய் தேடியிருக்கிறார். ஒன்றுமே இல்லை. அவருடைய போட்டியாளர்களின் புத்தகங்கள்கூட அகப்படவில்லை. தனக்கு பரிசு கிடைத்ததும் எங்கிருந்தோ புத்தகங்கள் மாயமாக கடைகளுக்கு வந்துவிட்டன என்கிறார். நானும் என்னுடைய பிடிவாதத்தை விட்டு கிரான் தேசாயுடைய புத்தகத்தை வாங்கிப் படித்தபோது அந்தப் பெண்ணில் எனக்கு அளவுகடந்த மரியாதை உண்டாகியது.
இந்த நாவலின் பிரதானமான பாத்திரங்கள் அதில் வரும் தாத்தா, அவருடைய 17 வயது பேத்தி சாய், சமையல்காரக் கிழவன், பேத்தியைக் காதலிக்கும் விடுதலைப் போராளி கயான், அமெரிக்காவில் உணவகத்தில் வேலை செய்யும் சமையல்காரக் கிழவனின் மகன் பிச்சு. அமெரிக்காவில் கள்ளத்தனமாகக் குடியேறிய பிச்சு குடிவரவு அதிகாரிகளை ஏமாற்றியபடி அலைகிறான். தகப்பனை நினைத்துக்கொண்டு எப்படியும் வாழ்க்கையில் முன்னேறிவிடவேண்டும் என்று உழைக்கிறான். ஆனால் அவன் முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிகின்றன.
சாயுக்கும் கயானுக்கும் ஆஇடையில் ஏற்படும் காதல் சுவாரஸ்யமாகச் சொல்லப்படுகிறது. கயான் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். சாயுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதற்காக அவனை தாத்தா ஏற்பாடு செய்கிறார். கயான் அவளிடம் கேட்கும் முதல் கேள்வி ‘நீ தலைக்கு எண்ணெய் பூசுகிறாயா?’ மெள்ள மெள்ள சம்பாசணை வேறு திசையில் போகிறது. இஆரண்டுபேரும் கைவிரல்களை பக்கத்து பக்கத்தில் வைத்து அளந்து பார்க்கிறார்கள். பிறகு கைகள், கால்கள் என்று அவயவம் அவயவமாக அளந்து நெருங்கியபோது காதலும் வளருகிறது. இஆன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கலாமே என்று தோன்றும்போது காதல் நின்றுவிடுகிறது. நாவலின் ஒவ்வொரு பக்கத்தை திருப்பும்போதும் ஒன்றோ இஆரண்டோ நல்ல வசனத்தொடர் கிடைக்கிறது.
நாவலின் கதை நாலு திசைகளிலும் கிளைவிட்டு படர்வதால் முக்கியமான பாத்திரங்கள் மெலிந்துபோய் தோன்றுகிறார்கள். உபகதைகளும் அநேகம். வாசகரின் கவனம் நாவலின் மையமான கதையில் ஒட்டாமல் சிறு சிறு பாத்திரங்களிலும் சம்பவங்களிலும் சிதறிப்போகிறது. எதிர்பார்த்த முடிவை நோக்கி நாவல் நகர்ந்தபோது கிடைக்கும் ஏமாற்றத்தை ஈடுகட்டுவது கிரானின் எழுத்தும், நடையும்தான். அதற்காக அவருடைய நாவலை எத்தனை முறையும் படிக்கலாம்.

இன்னொரு இளம் பெண் எழுத்தாளர் ஷேடி ஸ்மித். ஒரு நூலைப் படிக்க முதலும், படித்த பின்னரும் படிக்கும்போதும் பிரமிப்புக்கு மேலே பிரமிப்பு ஏற்பட்டது என்றால் அது இஆவருடைய White Teeth நாவலை படித்தபோதுதான். இருபத்திரண்டாவது வயதிலேயே ஷேடி ஸ்மித் தன்னுடைய நாவலின் சில பகுதிகளை எழுதிவிட்டார். பிரசுரிப்பாளர்கள் பலர் ஒன்று சேர்ந்து நாவலை யார் வெளியிடுவது என்று ஏலம் விட்டு தீர்மானித்தார்கள். முன்பின் தெரியாத ஓர் ஆஇளம்பெண்ணின் நாவலை பிரசுரிக்க இஆப்படி போட்டி நடந்தது புதுமையான விசயம். இரண்டு வருடங்களில் அவர் நாவலை எழுதி முடித்துவிட்டார். நாவல் என்று சொல்வதிலும் பார்க்க அதைக் காவியம் என்றுதான் அழைக்கவேண்டும். நாவல் வெளியான உடனேயே உலக பிரபல்யம் அடைந்தது. ஓர் இருபத்தினாலு வயதுப் பெண்ணால் ஏறக்குறைய 500 பக்கங்கள் கொண்ட ஒரு காவியத்தை எப்படி எழுத முடிந்தது என்ற விமர்சகர்கள் வியந்தார்கள். உலகத்திலே வெளியான ஆகத்திறமான 100 நாவல்களின் பட்டியலில் இஆந்த நூலும் இஆடம் பெற்றிருப்பது மிகச் சரியானது என்றே பலரும் கருதுகிறார்கள்.
இந்த நாவலைப் படிக்கும்போது அடிக்கடி மகாபாரதத்து வியாசர் நினைவுக்கு வருகிறார். ஒரு விசயத்தை ஒரு வசனத்தில் சொல்லிவிட்டு ஆசிரியரால் நகரமுடியாது. அதை ஆதியோடு அந்தமாகச் சொன்னால்தான் அவருக்கு திருப்தி. உப பாத்திரங்களாக வருபவர்களின் கதைகளும் விஸ்தாரமாகச் சொல்லப்படுகின்றன, ஆனால் சுவை குன்றாமல். அதை ஒரு குறை என்று சொல்லலாம்; அதுவே பலம் என்றும் சொல்லலாம்.
ஆழமான உண்மைகளை வெகு சாதாரணமாகச் சொல்லிவிட்டு நகரும் இஆடங்களில் மெல்லிய நகைச்சுவை வெளிப்படுகிறது. அது ஏற்படுத்தும் அதிர்வு சிறிது நேரம் நம்முடனேயே இருக்கிறது. ஒரு புது நாட்டில் குடியேறியவர்களுடைய கஷ்டங்களையும், எதிர்பார்ப்புகளையும், ஏமாற்றங்களையும், வெற்றிகளையும் நாவல் சொல்கிறது. முதுகிலே பட்ட மண்ணைத் தட்டிவிடுவதுபோல ஒருவர் தன் பழையதை புறக்கணித்துவிட்டு வாழமுடியாது. அது நிழல்போல அவரைத் தொடரும். மனிதன் என்னதான் பிரயத்தனம் செய்தாலும் அவனையும் மீறி சில காரியங்கள் நடந்துவிடுகின்றன; இதற்கு இதுதான் விளைவு என்பதை முன்கூட்டியே யாராலும் தீர்மானிக்கமுடியாது. நாவலின் முடிவு செயற்கையான உச்சகட்டத்தை நோக்கி நகர்ந்தாலும் ஓர் இளம்பெண்ணின் இஆந்த முதல் நாவல் எவருக்கும் பிரமிப்பை தரும் என்பதில் ஐயமே இஆல்லை.

இஆந்த நாலு புத்தகங்களும் எனக்கு படிப்பதற்கு எதேச்சையாக ஒன்றன்பின் ஒன்றாகக் கிடைத்தன. ஆஇவற்றை எழுதிய நால்வருமே ஆஇளம் பெண்கள். ஒருவர் நைஜீரியப் பெண்மணி; ஒருவர் இஆந்தியர்; ஒருவர் பங்களதேசத்தில் பிறந்து இஆங்கிலாந்தில் வளர்ந்தவர்; மற்றவர் ஜமாய்கன் தாய்க்கு பிறந்தவர். இஆவர்களுடைய எழுத்து அனாயாசமாக ஆஇருக்கிறது; ஒன்றுடன் ஒன்று போட்டிபோடுகிறது. ஆங்கில இஆலக்கிய உலகில், மாறுபட்ட கலாச்சார பின்னணியிலிருந்து இஆவ்வளவு பெரிய வரவு முன்பு ஒருபோதும் இருந்ததில்லை.
இந்த நாவல்களில் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இவை எல்லாம் ஒரு குறுகிய காலகட்டத்தில் இளம்பெண்களால் எழுதப்பட்டவை. ஆசிரியர்களுடைய பூர்வீகம் வேறு வேறாக இருந்தபோதிலும் நாவல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. உலகயுத்தம், தீவிரவாதம் அல்லது விடுதலைப்போர் நாவலில் மோதலுக்கான அடிப்படைக் காரணங்களாக அமைந்திருக்கின்றன. இந்த நாவல்கள் அனைத்தும் அதிவிற்பனைப் பட்டியலில் இடம் பெற்றதோடு பல பரிசுகளையும், விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றவை.
Brick Lane நாவலைப் படித்து கடைசிப் பக்கங்களுக்கு வந்தபோது நிதானமாக ஓடிவந்த ஆறு திடீரென்று வற்றிப்போய் முடிவுக்கு வந்துவிட்டதுபோல சின்ன ஏமாற்றம் உண்டானது.
White Teeth தற்செயலான கணங்கள் நிறைந்தது. நம்பிக்கைத் தன்மையை சில இடங்களில் தொலைத்துவிடுகிறது. உச்சக்கட்டப் பகுதி சினிமாத்தனமாக மாறியது வேறு நெருடுகிறது.
Inheritance of Loss நாவல், 1500 பக்கங்களை சுருக்கி 357 பக்கங்களுக்குள் அடக்கியது. ஆகவே நீண்ட மௌன இடைவெளிகளும் சில அருமையான நல்ல பகுதிகளும் அங்கங்கே வரும். நல்ல பகுதிகளை ஒன்று சேர்க்கும்போது கிடைக்கும் கூட்டுத்தொகை மொத்த நாவலைப் படித்தபோது கிடைக்கவில்லை.
Half of a Yellow Sun நூலை எப்படிப் பார்த்தாலும் அது ஒரு நிறைவான நாவல். இதைப் பற்றி பேசும்போது ஆசிரியர் ‘கற்பனை உண்மை’ என்ற வார்த்தை தொடரை உபயோகிப்பார். நாலு வருடங்களாக ஆராய்ச்சி செய்து அடுக்கி வைத்த குறிப்புகளை பயன்படுத்தாமல் அவர் அதைச் சுற்றி எழுதியதுதான் நாவலின் வெற்றிக்கு காரணம். பள்ளிக்கூட பிள்ளைகளிடம் Show and Tell என்று ஒரு முறை இருக்கிறது. ஒரு பொருளை மாணவர் வகுப்பறைக்கு எடுத்துச் சென்று அதைக் காட்டி பேசுவது. சிமமண்டாவின் யுக்தி Show, Don’t Tell. அவர் வசனம் எழுதுவதில்லை; காட்சி காட்சியாகவே எழுதுகிறார்.
நாவல் தன்னைத்தானே எழுதியது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் கிடைக்காது. குதிரையின் கடிவாளத்தை பிடித்துச் செல்வதுபோல அதை ஆசிரியர் நடத்திச் செல்லவில்லை; இரைதேடும் வேட்டை நாய்க்கு பின்னால் போகும் வேட்டைக்காரன்போல கதையை ஓடவிட்டு பின்னே தொடர்கிறார்.
* * *
நவீன பெண் படைப்பாளிகளுடன் ஒப்பிடும்போது எமிலி டிக்கின்ஸன் மீது இரக்கம் பிறக்கிறது. அவருடைய 56வது வயதிலே அவர் இறந்தபோது 40 நோட்டுப் புத்தகங்கள் நிறைய அவர் கவிதைகள் எழுதி வைத்திருந்ததை கண்டுபிடித்தார்கள். எல்லாமாக 1789 கவிதைகள். அவற்றை வெளியிட்டபோது எமிலி டிக்கின்ஸனுக்கு காலம் தாழ்த்தி பெரும் புகழ் கிடைத்தது. 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த கவி என்று கவிதை உலகம் சொன்னது. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் அறியப்படவில்லை. அவருடைய ஒரு கவிதையே அதற்கு சாட்சி.
உலகத்துக்கு இது என் கவிதை
உலகம் எனக்கு எழுதவில்லை.
இன்று எமிலி டிக்கின்ஸன் வாழ்ந்திருந்தால் மேலே சொன்ன கவிதையை அவர் எழுதியிருக்கமாட்டார். இளம் வயதிலேயே புகழ் சம்பாதித்துவிடும் இன்றைய பெண் படைப்பாளிகள் போல அவரும் உலக பிரபலமாகியிருப்பார்.


Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்