சதாரா மாலதி மறைவு

This entry is part [part not set] of 37 in the series 20070329_Issue

பாவண்ணன்



தொண்ணு¡றுகளின் தொடக்கத்தில் சில கவிதைமுயற்சிகள் வழியாகவும் சிறுகதைமுயற்சிகள் வழியாகவும் தமிழில் அறிமுகமானவர் மாலதி. புதுச்சேரியைச் சேர்ந்த மாலதியும் அப்போது எழுதிக்கொண்டிருந்தார். பெயர்க்குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக சதாரா மாலதி என்று மாற்றிக் குறிப்பிடத் தொடங்கினார். எங்கள் துறையிலேயே பணிபுரியும் முகம்மது அலி என்னும் நண்பர்வழியாகத்தான் அவர் எனக்கு அறிமுகமானார். அப்போது பெங்களூரில் வசித்துவந்த சரஸ்வதி ராம்னாத் அவர்களைச் சந்தித்து ஒரு நீண்ட நேர்காணல் எடுக்கவேண்டும் என்னும் விருபத்தை ஒருமுறை வெளிப்படுத்தினார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தபோது அவர் மிகவும் மகிழ்ந்தார். இதுநடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவருடைய வரிக்குதிரைகள் என்னும் கவிதைத்தொகுப்பு அவருடைய சொந்தப் பெயரிலேயே வெளிவந்தது. பெங்களூரிலிருந்து சதாரா என்ற ஊருக்கு மாற்றலாகிச் சென்ற தருணத்தில்தான் அந்த ஊரின் பெயரைத் தன் பெயரோடு சேர்த்துக்கொண்டார். சந்தியா பதிப்பகத்தின் வழியாக அவருடைய சிறுகதைத் தொகுப்பொன்றும் வெளிவந்தது. பல கருத்தரங்குகளில் பங்கேற்று தொடர்ந்து தன் சிந்தனைகளை முன்வைத்து ஊக்கமுடன் செயல்படுபவராகவே வலம்வந்துகொண்டிருந்தார். உரையாடலில் அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பாவைப் பாடல்களில் தாம் திளைத்த அனுபவத்தை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் ராயர்காப்பி கிளப் என்னும் வலைமனையில் தொடர்ந்து எழுதிவந்தார். அவருடைய சிந்தனை வளத்துக்கு இந்த அனுபவக்கட்டுரைகள் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. மொழிபெயர்ப்பு முயற்சியிலும் அவர் ஆர்வம் காட்டினார். எச்.எஸ்.சிவப்பிரகாஷ் என்னும் கன்னட நாடக ஆசிரியர் சிலப்பதிகாரத்தைப் பின்னணியாகக் கொண்டு மதுரைக்காண்டம், மாதவி என்னும் இரண்டு நாடகங்களை எழுதினார். அவற்றில் மதுரைக்காண்டம் என்னும் நாடகத்தை நான் மொழிபெயர்த்திருந்தேன். மாதவி நாடகத்தையும் நான் மொழிபெயர்த்திருப்பேனோ என்கிற ஐயமிருந்தது அவருக்கு. என்னிடம் விசாரித்தார். நான் மொழிபெயர்க்கவில்லை என்றதும் அவர் ஊக்கத்துடன் மொழிபெயர்த்தார். பெண் பாத்திரங்களை மையமாகக் கொண்ட நாடகங்களைத் தொடர்ந்து ஆர்வத்துடன் அரங்கேற்றிவரும் வெளி ரெங்கராஜனுக்கு அந்தக் கையெழுத்துப் பிரதியை அனுப்பிவைத்தார். அவரும் அந்த நாடகத்தை அரங்கேற்றும் எண்ணத்தில் இருந்தார். சில முன்னேற்பாடுகளை செய்துவிட்டு பயிற்சியைத் தொடங்க எண்ணியிருந்தார். ஆனால் தன் மொழிபெயர்ப்பில் நாடக அரங்கேற்றத்தைக் காணாமலேயே அவர் இயற்கையெய்திவிட்டார். சதாராவிலிருந்து மீண்டும் பெங்களூர் வந்துவிடலாம் என்று எண்ணியிருந்த அவரை சாங்லிக்கு மாற்றல் செய்தது நிர்வாகம். அது அவரை மிகவும் மனச்சோர்வுக்குள்ளாக்கியது. கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு அவர் இரண்டாண்டுகளுக்கு முன்னர் பெங்களூர் வந்தார். சில மாதங்கள்மட்டுமே வேலை பார்த்திருந்துவிட்டு விருப்ப ஓய்வைப் பெற்று எழுத்து முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட நினைத்தார். எதிர்பாராதவிதமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டதால் அந்த முயற்சி கைகூடவில்லை. தொடர்ச்சியான மருத்துவம் பலனளிக்காமல் 27.03.2007 அன்று மாலை இயற்கையெய்தினார். 28.03.2007 அன்று அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு பெங்களூர் இலக்கிய நண்பர்களும் அலுவலக நண்பர்களும் அஞ்சலி செலுத்தினர். அன்று நண்பகல் அவருடைய உடல் எரியூட்டப்பட்டது.


paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்