அம்பையின் எழுத்து

This entry is part [part not set] of 37 in the series 20070329_Issue

லதா ராமகிருஷ்ணன்


(இலக்கியத்திற்கான விருதுகளும், பிறவேறுஅங்கீகாரங்களும் தரமான படைப்பாளிகளுக்குக் கிடைத்தால் நல்ல எழுத்துக்களை நாடிப் படித்து வரும் வாசகர்களுக்கு அது மிகுந்த மனநிறைவைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. அத்தகைய மனநிறைவு 2006ம் ஆண்டு ‘விளக்கு’ பரிசு எழுத்தாளர் அம்பைக்கு அளிக்கப்படுவதில் தங்களுக்குக் கிட்டியிருப்பதாக நிறைய பேர் மனதாரக் கூறினார்கள். அம்பைகு ‘விளக்கு’ விருது வழங்கும் குறிப்பிடத்தக்க இலக்கிய நிகழ்வு சென்னையில் சமீபத்தில் சிறப்பாக நடந்தேறியது. கவிஞர் ஞானக்கூத்தன், ஸ்ரீநேசன், எழுத்தாளர் நா.முத்துசாமி, திலீப்குமார், வெளி ரங்கராஜன், முதலியோர் அம்பையின் படைப்புலகம் குறித்த தமது பார்வைகளைப் பகிர்ந்து கொண்டனர்.அம்பை பல்வேறு துறைகளைச் சார்ந்த பெண்களைப் பற்றிய வாய்மொழி வழக்காறுகளை எழுதி தொகுத்திருப்பதிலிருந்து ஒருவரைப் பற்றிய வாழ்க்கைச் சித்திரத்தை கூத்துப் பட்டறையைச் சேர்ந்த ஒரு பெண் கதை கூறுவதே போல் அழகாகத் தொகுத்துரைத்தார்.

FOLKORE SUPPORT CENTRE ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவுக்கு அம்பையால், அவருடைய தாயார் இறந்து விட்ட காரணத்தால் வர இயலவில்லை. அவர் சார்பில் விருதை கவிஞர். கிருஷாங்கினி பெற்றுக் கொண்டார். நிகழ்வில் பேசியவர்கள், அம்பையின் எழுத்தில் மரியாதையும், அபிமானமும் கொண்டு விழாவுக்கு வருகை தந்தவர்கள் எல்லோருமே, அம்பையின் கதைகளில் சமூகப் பிரக்ஞையும், இலக்கிய நயமும் ஒன்றுக்கொன்று வளம் சேர்ப்பதாய் அமையும் விதத்தையும், தனது கருத்துக்கள், பார்வைகள், நம்பிக்கைகளை எந்தவித அலங்காரத்திலும் தோய்க்காமல், எந்தவித சமரசத்திற்கும் உட்படுத்தாமல் அவர் இலக்கியமாக்கும் பாங்கையும் ஒரு படைப்பாளி என்ற அளவிலும், ஒரு மானுடப் பிரதிநிதி என்ற அளவிலும் முக்கியமான அம்சங்களாக எடுத்துக் காட்டினர். இந்த நிகழ்வில் நான் எழுதி வாசித்த கட்டுரை கீழே தரப்பட்டுள்ளது. லதா ராமகிருஷ்ணன் )

(சமீபத்தில் சென்னையில் நடந்தேறிய ‘அம்பை’க்கு விளக்கு விருது வழங்கும் விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

ஒரு படைப்பாளி ஏன் இதை எழுதவில்லை, அதை எழுதவில்லை என்ற கேள்வி ஒருவகையில் விமர்சனப்பூர்வமானது என்றாலும் இன்னொரு வகையில் படைப்பாளியை ஒருவித ஏவலாளியாகப் பார்க்கும் எதேச்சாதிகாரப் போக்கும் கூட.

‘கலை கலைக்காகவே’ என்றும், ‘கலை சமூகத்திற்காகவே’ என்றும் இரண்டு பிரிவுகளாக இலக்கியப் படைப்புகளைக் கட்டம் கட்டிப் பகுத்துரைக்கும் போக்கும், இது தொடர்பான காரசாரமான விவாதங்களும் காலங்காலமாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாலும், இரண்டு பிரிவுகளிலும் அடிப்படை நேர்மையோடும், பற்றுறுதியோடும் இயங்கும் படைப்பாளீகளின் எழுத்தாக்கங்களில் கலையும், சமூகமும் இரண்டறக் கலந்திருக்கும் என்பது என் தீர்மானமான நம்பிக்கை. அப்படிப்பட்ட படைப்பாளிகளின் எழுத்தாக்கங்களில் நமக்கு உடன்பாடு இல்லாத கருத்துக்கள் இருந்தாலுமே கூட அவற்றைக் கொண்டு அந்தப் படைப்பாளிகளின் எழுத்து நேர்மையை நம்மால் சந்தேகப்பட முடியாது. அவர்களுடைய எழுத்தின் வலிமையும், நேர்மையும் அவர்கள் முன்வைக்கும் கருத்துக்களையும் அவதானிக்கும்படி, பரிசீலிக்கும்படி வசகரைத் தூண்டும்.

ஒரு தத்துவார்த்தச் சொற்பொழிவைப் போல்அல்லாமல் ஒரு நல்ல இலக்கியப் படைப்பு வாசகருக்கும்,படைப்பாளிக்கும் இடையேயுள்ள இடைவெளியைக் குறைத்துக் கொண்டே போய், வாசகரோடு வலி, வேதனை, பலம், பலவீனம், பரவசம், களிப்பு, பயம், துக்கம் என பலவற்றையும் பகிர்ந்து கொண்டே வந்து, வாசகரும், தானும் இரண்டு கால்களாகப் புதிய புதிய நுழைவாயில்களைக் கடந்து, வழிகளைக் கண்டறிந்தவாறே முன்னேறி , ஒரு கட்டத்தில் வாசகரே படைப்பாளியாய் உணரும் ‘இரண்டறக் கலந்த’ நிலையை வரவாக்குகிறது.

Message, பி¢ரச்சாரம் என்பதெல்லாம் இன்று இலக்கியத் துறையில் எதிர்மறைக் கருத்தில் உபயோகிக்கப்படும் சொற்பிரயோகங்களாகியிருக்கின்றன. ஆனால், உண்மையில் எந்த்வொரு தரமான இலக்கியப் படைப்பிலும் கண்டிப்பாக ஒரு உள்ளார்ந்த செய்தி அல்லது பிரச்சாரம் உண்டு. மேம்போக்கான இலக்கியப் படைப்பில் அது தன்னை வெளித்துருத்திக் காட்டிக் கொள்ளப் பிரயத்தனப்பட்டுக் கொண்டு, அதற்கான பாராட்டையும், கைத்தட்டலையும் வழிமேல் விழிவைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும். அப்படியல்லாமல், ஒரு தரமான படைப்பில் அது ஆற்றொழுக்காய், மூச்சுக்காற்றாய் தன்பாட்டில் உணரக் கிடைக்கும்.

அம்பையின் சிறுகதைகளும் அத்தகையவை. இலக்கிய நயம் குறையாத, அதேசமயம், மேம்பட்ட வாழ்வுமதிப்புகளை, கொள்கைப் பிடிப்புகளை அடிநாதமாக உணர்த்திக் கொண்டேயிருக்கும் எழுத்தாக்கங்கள் அவருடையவை. ‘ஆண்களெல்லோருமே அயோக்கியர்கள், பெண்களெல்லோருமே பலவீனமானவர்கள்’ போன்ற பொத்தாம்பொதுவான அபிப்பிராயங்களை, sweeping statements ஐக் கொண்டிராதவை. எந்தவொரு விஷயத்தையும் thread-bare அலசலுக்குட்படுத்த, சம்பந்தப்பட்ட விஷயம் பற்றிய ஆழ்ந்த அறிவும், அக்கறையும், வாசகரை முட்டாளாக பாவிக்காத மனப்பாங்கும் அவசியம். அம்பையின் எழுத்தாக்கங்களில் இவ்விதமான அகல்விரிவான அலசல்களையே கான முடியும். அவருடைய பெரும்பாலான எழுத்தாக்கங்கள் பெண்ணின் கண்ணோட்டத்திலிருந்தே விஷயங்களை அணுகியவை, பெண்சார் பிரச்னைகளையே முதன்மைப்படுத்தியவை என்றாலும், அவற்றில் வெளிப்ப்படும் அவருடைய conviction அவற்றின் ‘வெளி’யை கடிவாளப் பார்வையாகக் குறுக்கி விடாமல் பாதுகாக்கிறது என்று கூற முடியும்.

சிறுகதைகளைத் தாண்டி அரசியல்-சமூக நிலவரங்கள் குறித்த ஏராளமான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதியிருப்பவர் அம்பை. அவருடைய எழுத்தாக்கங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்ட வாசகர்கள் எத்தனையோ வருடங்கள் அவருடைய முகத்தைப் புகைப்படமாகக் கூட பார்த்தறியாத நிலையே இருந்து வந்தது. முழுக்க முழுக்க தன் எழுத்தின் தரத்தாலேயே தமிழ் இலக்கியவுலகில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்களில் அம்பையும் ஒருவர்.இன்று இருப்பதை விட மிக அதிக அள்வில் எதிர்மறையாக விளங்கிய சமூகச்சூழலில் தனி ஆளாக, துணிவோடு, தன் மனதிற்கு சரியென்று பட்டதைத் தொடர்ந்து எழுதி வந்தவர். அப்படி தீவிரமாக, radical ஆக எழுதி வருவதற்கான எதிர்வினைகள், எதிர்ப்புகள் என்னவாக இருக்கும் என்ற முழுப்பிரக்ஞையோடு, நாம் இருப்பது ஒரு இலட்சிய உலகமல்ல என்ற தெளிவோடு எழுதி வந்தமையால் தன் எழுத்துக்களுக்கான எதிர்வினைகள் பற்றி அவர் புலம்பியதில்லை; புகார் கூறியதில்லை.

பல வருடங்களுக்கு முன்பு ECONOMICS AND POLITICAL WEEKLY இதழொன்றில், ‘திராவிட இயக்கமும், கட்சிகளும் கூட பெண்ணை சமமாக நடத்துவதில்லை’ என்ற பொருளில் அகல்விரிவாக அவர் எழுதியிருந்த கட்டுரைக்கு பெரிய அளவில் எத்ர்ப்பெழுந்த போது கூட, அதை வைத்து, ஒட்டியும் வெட்டியும் பேசுபவர்கள், தன்னை பகடைக்காயாக்கி விட இடம் தரவில்லை!

அவருடைய எழுத்தாக்கங்களில் ஆண் பாத்திரங்கள் ஓரளவு தட்டைத்தன்மையுடனேயே தான் காணப்படும் என்றாலும், அகல்விரிவாக அவர் படைக்கும் பெண்பாத்திரங்களை ஒருபோதும் ‘மிகையுணர்ச்சிச் சித்திரங்களாக’ அவர் வடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தாய்மை, பெண்மை முதலான, காலங்காலமாய் ‘பெண்ணின் பெருமைகளாய்’ வலியுறுத்தப்பட்டு வரும்’ஒற்றைப் பரிமணப் பண்புநலன்களை’ அவர் தன் கதைகளில் உயர்த்திப் பிடிக்க முயன்றதில்லை. உறவுகளுக்கு மேலாய் ‘உயர்ந்த வாழ்வு மதிப்புகளுக்கு இடமளிப்பவை அவருடைய கதைகள்.

ஒரு சம்பவம் குறித்து திட்டவட்டமான கருத்த்தைத் தெரிவிக்காதவர்கள், ஒரு தீர்மானமான நிலைப்பாடு எடுக்காதவர்கள் கோழைகள் என்பதாய் ஒரு ‘பார்வை’ இருந்து வருகிறது. முழுமொத்த உண்மை அல்லது முழுமொத்த நியாயம் என்ற ஒன்று இருக்க முடியுமா என்ற கேள்வியும் பொருட்படுத்த வேண்டியதே. அம்பையின் கதைகளில் எந்தவொரு விஷயம் பற்றியும் விரிவான ஆய்வலசல்கள் இருப்பதோடு அது குறித்த ஒரு தெளிவான நிலைப்பாடும் பெரும்பாலும் இடம்பெற்றிருக்கும். வர்ணணைகளும், கனவுகளும், குழந்தைப் பரவசமும், காதல் கிறக்கமும் இருக்க வேண்டிய இடத்தில் கட்டாயம் இருக்கும். அதேசமயம், பெண்ணின் வலியை, பாலியல் பலாத்காரத்தை romanticize செய்வதாய் அவருடைய எழுத்துக்கள் ஒருபோதும் இருந்ததில்லை. நெகிழ்வும், கூர்மையுமாய் அவருடைய வார்த்தைப் பிரயோகங்கள் தமிழுக்குவளம் சேர்ப்பவை. அவருடைய ‘கருப்பு குதிரைச் சதுக்கம்’ என்ற சிறுகதை தனது வார்த்தைகளாலும், நிகழ்வுகளாலும் ஏற்படுத்தும் ‘அதிர்வுகள்’ நான் சொல்வதை உறுதிப்படுத்தும்.

சமீபத்தில் படித்த ‘அம்பை’யின் கதையொன்றில் இந்து-முஸ்லிம் கலவரம் தொடர்பாய் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கும் மகள் தன்
தாயின் இஸ்லாமியத் தோழியை இனி தங்கள் வீட்டிற்கு வர வேண்டாம் என்று கூறி விட, சிறுவயது முதலே தான் சீராட்டி வளர்த்தவள் அவ்விதம் பேதம் பாராட்டியதில் மனமுடைந்தவளாய் அந்த இஸ்லாமியப் பெண்மணி தற்கொலை செய்து கொள்ள, தைரியமான பெண்ணாக விளங்கிய தன் தோழியின் தற்கொலைக்கான உண்மைக் காரணம் தெரிய வந்ததும் மகளை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி விடுவாள் தாய். இது அவருடைய ‘வாழ்வு மதிப்புகள்’ சார் பற்றுறுதிக்கு ஒரு உதாரணம். நுட்பமான விஷயங்களை அம்பை கையாளும் நேர்த்திக்கு ‘பயணம்’ என்ற தலைப்பிட்ட கதைகளில் ஒன்றை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

இதுகாறும் அம்பையின் விரிவான இரண்டு நேர்காணல்கள் தமிழில் படிக்கக் கிடைத்திருக்கின்றன. காலச்சுவடில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் பேட்டி கண்டு எழுதியது, பனிக்குடம் இதழில் அதன் ஆசிரியராகப் பொறுப்பு வகிக்கும் கவிஞர். குட்டி ரேவதி பேட்டி கண்டு எழுதியது. இரண்டுமே அம்பையின் ஆளுமையை வெளிப்படுத்தும் கேள்விகளையும் , பதில்களையும் கொண்டிருந்தது குறிபிடத் தக்கது

‘அம்பை’யின் ‘கருப்புக் குதிரைச் சதுக்கம்’ என்ற சிறுகதையிலிருந்து ஒரு சிறிய பத்தி கீழே தரப்பட்டுள்ளது:-

‘வெகு எளிதான மராட்டியில் ஜரிகை அலங்காரம் செய்யாமல் அவள் பேசினாள். அவள் பேச்சுக்குக் கிடைத்த மிகப் பெரிய பாராட்டு மீனா அரோரா அடுத்துச் செய்தது தான். அவளுக்குப் பிறகு பேச வந்த மீனா எதிரேயுள்ள கூட்டத்தைக் கூர்ந்து பார்த்து விட்டு பெருத்த விம்மல்களோடு அழத் தொடகினாள். அதை விட நன்றாகப் பேசியிருக்க முடியாது. நாங்கள் ஊர்வலச் செய்தியைக் காட்ட டி.வி. ஐ அணுகிய போது, அந்த கோபால் ஷர்மா, ” நாங்கள் காட்டுகிறோம். ஆனால், மௌனப்படம் தான். நீங்கள் என்ன பேசப் போகிறீர்களோ, யாருக்குத் தெரியும்?”, என்றான். மீனா அரோரா அழுது அவனைத் தோற்கடித்து விட்டாள் என்று நினைக்கிறேன். அவன் டி.வி. காமிராவைத் திருப்பிய பக்கமெல்லாம் கண்ணீர். அவன் செய்ததெல்லாம் படக்கென்று வெட்டி விட்டது தான். இவனை எல்லாம் தான் இடுப்பின் கீழே உதை விடலாம் என்று வருகிறது. உட்காரு என்றால் தவழ்பவர்கள்.”

_ தமிழின் படைப்பாக்கத் திறனும், களனும் வீர்யத்தோடும், தனித்துவத்தோடும், இலக்கிய நயமும், சமூகப் பொறுப்பும் இரண்டறக் கலந்ததாய் தொடர்ந்து இயங்கி வரும் உண்மைக்குக் கட்டியங் கூறுபவை அம்பையின் எழுத்துக்கள்.

அம்பையின் எழுத்துக்களின் மீது, செயல்பாடுகளின் மீது எனக்கு எதிர்-விமர்சனமே இல்லையா என்ன? கண்டிப்பாக உண்டு.
*( கவிதை எழுதும் பெண்களை ஒடுக்க நினைப்பவர்களுக்கு எதிராய் களத்தில் குதிப்பதாய் திடுமென கவிதைப் பக்கம் கவனத்தைத் திருப்பிய பலரைப் போல் அவரும் தமிழகத்தின், தமிழ் இலக்கிய உலகின் ஒட்டுமொத்த ஆண்சமுதாயமே ஆணாதிக்கச் சமூகம் என்பதாய் ஒரு தோற்றத்தை வெளியிடங்களில் தனது எழுத்துக்கள் மூலம் உருவாக்கியது வருத்தமளித்ததது. அதேபோல், மும்பை குண்டு வெடிப்புச் சம்பவங்களின் சமயம் தன் நலன் குறித்து தமிழ் எழுத்தாளர்கள் விசாரிக்க முற்படாததற்காய் அவர் காலச்சுவடில் ஆதங்கப்பட்டிருந்த விதம் ஒரு பெரிய சமூக பாதிப்பு நிகழ்வை தன்னை மையப்படுத்திப் பேசும் சிறுபிள்ளைத்தனமாய் இருந்தது).

நாம் நம்பிக்கையோடு பொருட்படுத்திப் படிக்கும் எழுத்தாக்கங்களின் மீது தான், அந்த படைப்பாளிகளின் மீது தான் நம் எதிர்-விமரிசனங்களும் தோன்ற முடியும். மேலும், விம்ரசினங்கள் படைப்பாளியை விட அதிகமாக விமரிசகர்களையே அம்பலப்படுத்தி விடும் தருணங்களும் உண்டு! எப்படியிருந்தாலும், ‘குணம் நாடி, குற்றமும் நாடி, அவற்றுள் மிகை நாடிப் பார்க்கும் போது, அம்பையின் எழுத்துக்களுக்கான நிறைவும், நன்றியுமே என் வாசக மனதில் அதிகமான இடத்தைப் பிடித்திருக்கிகின்றன!


ramakrishnanlatha@yahoo.com

Series Navigation

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்