கடித இலக்கியம் – 40

This entry is part [part not set] of 26 in the series 20070111_Issue

வே.சபாநாயகம்



கடிதம் – 40

திருப்பத்தூர்.வ.ஆ.
24-2-90
அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

முன்பொரு முறை, துன்பங்களில் நான் உழலும்போது, உங்களுக்குக் கடிதம் எழுதுவது நின்றுவிடுகிற மாதிரியும், சந்தோஷங்களின் அலை அடிக்கையில் தவிர்க்க முடியாமல் உங்களுக்கு எழுதத் தொடங்குவதாகவும் நான் என் கடித
மொன்றில் குறிப்பிட்ட நினைவு.

இப்பொழுதோ சந்தோஷங்களின் போது கூட உங்களை மறக்க முடிகிறது. ஆனால் என் ஆழ்ந்த துன்பங்களின் போது, அது சரிதானா என்று உரசிப் பார்க்கும் கல்லோடு, அருகிலேயே நீங்கள் நிற்பது கண்டு, அப்போதெல்லாம் எனக்கு எழுதத் தோன்றுகிறது என்று இப்போது எழுதத் தோன்றுகிறது!

இரண்டின் தாத்பர்யமும் ஒன்றே. ஆழ்ந்த நேரங்களில் நாம் நமது அருமந்த நண்பர்களை நினைக்கிறோம்.

அதுவும் நமது உறவு, ஆரம்பத்திலிருந்தே தனது நீண்ட கடிதங்களால், பிறரு டையதையும் விடவும் விசேஷப் பிணைப்புடையது. எனவே, எதையுமே, எடுத்தவுட னேயே உங்களுக்குத்தான் எழுதத் தோன்றுகிறது.

‘எழுத்தாளன்’ என்கிற ரீதியில் என்னை இப்போது யாரேனும், ” இதுவரை நீ என்ன எழுதியிருக்கிறாய்?” என்று கேட்டால், சபாவுக்குப் பல கடிதங்கள் எழுதியிருக்கிறேன் என்று பதிலளிப்பேன்.

நான் மத்தியில், போன பௌர்ணமியன்று JK மாயவரம் செல்வதறிந்து, தங்களையும் வந்து அழைத்துக் கொண்டு நாமிருவரும் மாயவரம் போகலாமா என்று நினைத்தேன். அப்படி வந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். மாயவரம் பெண்கள் கல்லூரியில் பாரதிதாசன் விழாவில் JK பேசினார்.

வருகிற பௌர்ணமி 11-3-90 அன்று – 9,10 இருதேதிகளும் வெள்ளி, சனியாக வருகின்றன. JK ஒருக்கால் இந்த நாட்களில் இங்கு வரலாம். அப்படியாயின், போதிய அவகாசத்தோடு தங்களுக்குத் தெரிவிக்கிறேன். அல்லாத பட்சத்தில், அவசரமாக ஒரு போன் போட்டாவது சொல்கிறேன். அந்த நாட்களில் தாங்கள் எங்களோடு இணைந்து கொள்ள முடிந்தால், இரு தரப்பின் பாக்கியமும் ஆகும் அது.

தங்கள் கதை வந்த உடனேயே ஆறுமுகம் தான் அதைப் படித்து விட்டு வந்து எனக்குச் சொன்னார். கதை என்னவென்று நான் கேட்டேன். கிராமப்புற வாழ்க்கையில் மிக நுட்பமாக நடக்கும் அந்த நாடகம் ஒரு ரசமான கதைப் பொருள்தான். கதையைக் காதால் கேட்ட மாத்திரத்திலேயே அங்ஙனம் நன்றாய் இருந்தது. ஆனால், சமீப நாட்களில் என் பழக்கம் காரணமாக ஆனந்த விகடன் என் கண்ணிலேயே படவில்லை. எந்த ஒரு விகடனையும் புரட்டிப் பார்க்கக்கூட மனம் இப்போது
அயர்கிறது. அரசியலின் அதன் வாடை எனக்கு அவ்வளவு குமட்டுகிறது.

இனிமேல்தான் அந்த விகடனைத் தேடிப் பிடித்துப் படிப்பேன்.

நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுக்கத் தொடர்ந்து எழுதுகிறீர்கள். இந்தத் தொடர்ச்சி என்னும் அம்சம் தெய்வீகமானது – நம்மையொத்த கலைஞர்களுக்கு! அது தங்களுக்கு வாய்த்திருப்பது ஒன்றே மகிழ்ச்சிக்குரியது. இலக்கணங்களையும் விமர்சங்களையும் அதிகம் பொருட்படுத்தாதீர்கள். உங்களுக்கே இலக்கணம் தெரியும். உங்களுக்குள்ளேயே உங்களுக்கான விமர்சகன் இருக்கிறான்.

இந்தக் கடிதத்தை இன்னும்கூட எழுதலாம். நாளைய தபாலில் சேர்க்க முடியாமல் இன்னும் ஒத்திப்போய்விடும். அதனால் உடனே முடிக்கிறேன்.

– தங்கள் –
பி.ச.குப்புசாமி.


Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்