திருக்குறள் ஒரு சமண நூல்தான்

This entry is part [part not set] of 33 in the series 20061221_Issue

இரா.பானுகுமார்


திருக்குறள் பற்றிக் கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வது சரிதானா ? – சரி தான். திருக்குறள் ஒரு சமண நூல்தான்!

இரா. பானுகுமார்,
சென்னை.
____________________________________________

கவிக்கோ அப்துல் ரகுமான் “திருக்குறள் ஒரு சமண் நூல்” என்று சொன்னதற்கு மறுப்பாக திருவாளர். நா.முத்து நிலவன் என்பார் எழுதியதிற்கு என் மறுப்பை பின்னூட்டாக எழுதுகிறேன்.

நா.முத்து நிலவன் எழுதிய மறுப்புரையை இங்கே பார்க்கலாம்.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60408055&format=html

திருக்குறள் ஒரு சமண நூல்தான்!

>>>>>>>>>>>>>>
“*புத்தனுக்குரிய ‘பகவன் ‘ எனும் சொல்லை முதல் குறளிலேயே வழங்கியிருக்கும் திருக்குறள் சமண நூலாகுமா ?”
என்று வினவுகிறார்.
<<<<<<<<<<<<<< என் பதில்: "பகவன்" என்ற சொல் அருக பகவானுக்கு வழங்கப்படவில்லையா? எல்லா தமிழ் நிகண்டுகளும் "அருகனு"க்கும் "பகவன்" என்ற பெயர் உண்டு என்று பறைச்சாற்றுகின்றன! ஆனால், தாங்கள் அச்சொல் புத்தனுக்கே உரியது என்கிறீர்கள். முதல் குறளில் உள்ள "பகவன்" என்ற சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வர முடியாது. அக்குறளில் உள்ள "ஆதிபகவன்" என்ற சொற்றொடரைச் சேர்த்துப் பொருள் கொள்ளவேண்டும். அச்சொற்றொடருக்கு "ஆதியில் தோன்றிய பகவன்" அல்லது "முதல் பகவன்" என்று பொருள் வரும். இப்படிப் பொருள் கொண்டால், திருக்குறளில் வரும் பகவன் என்ற சொல் புத்தரைக் குறிப்பதாகாது. அச்சொல் புத்தரைத்தான் குறிக்கும் என்றால், அக்குறளில் பொருள் குற்றம் ஏற்படும். புத்தபெருமான் இவ்வுலகின் கண் தோன்றிய முதல் "பகவன்" என்றாகிவிடும். அதற்கு பெளத்த இலக்கியங்களில் சான்றில்லாமையாலும் மற்றும் சத்தியபிரமாணம் இல்லாமையாலும் பெறப்படும். மாறாக, புத்தர் பெருமான் தோன்றுவதற்கு முன்னமே அருகர்கள் (சமண தீர்த்தங்கரர்கள்) தோன்றியுள்ளார்கள் என்பது வரலாறு. இதை பெளத்த இலக்கியங்களும் அரண் செய்யும். மேலும், கடைசி தீர்த்தங்கரராக போற்றப்படும் "வர்த்தமான மகாவீரர்", புத்தரைவிட காலத்தால் மூத்தவர் என்பதனாலும் இது உறுதிப்படும். இதனால், புத்தரை "ஆதிபகவன்" என்ற சொற்றொடர் குறிக்கா என்பதும் பெறப்படும். சரி! அச்சொற்றொடர் யாரை குறிக்கிறது? எனில்! சமணத்தின் முதல் தீர்த்தங்கரரான "ஆதிபகவன்" என்றழைக்கப்படும் "ஆதிநாத"ரைத் தான் அச்சொற்றொடர் குறிக்கும். சமண வரலாற்றின்படி நிகழ்க்கால தீர்த்தங்கரர்கள் இருபத்துநால்வர். அதில், முதல் தீர்த்தங்கரராகக் கருதபடுபவர் "ரிஷபதேவர்" என்று அழைக்கப்படும் "ஆதிபகவன்" ஆவார். இருபத்துநான்காவது சமண தீர்த்தங்கரர் "வர்த்தமான மகாவீரர்". இவர் புத்தபெருமானின் சமக்காலத்தவர் எனபதும் கருத்தில் கொள்ளவேண்டும். இதையே சற்று விரிவாகப் பார்க்கலாம். அஃதாவது, "அகர முதல எழுத்தெல்லாம்" என்ற அடியை நோக்கும்போது அகரம் எழுத்துக்கெல்லாம் முதலாக வருவதுபோல் முதல் தீர்த்தங்கரரான "ஆதிநாதர்" மற்ற தீர்த்தங்கரர்களுக்கு முதலாக உள்ளார் என்பதுவும் சிந்திதற்பாலது. இதற்கு சான்றாக கீழ் வருவனவற்றைக் காணலாம். "தத்வார்த்த சூத்திரம்" என்னும் சமண நூலுக்கு "அகளங்க தேவர்" என்னும் சமணப் பன்மொழிப் புலவர் உரையெழுதியிருக்கிறார். அவர் 11ஆம் சூத்திரத்திற்கு உரையெழுதுகையில், "அகாரா தயோ வர்ணா ரிஷபா தயஸ் தீர்த்தகரா இதி" என்னும் சுலோகத்தை மேற்கோள் காட்டுகிறார். இதற்கு, "எழுத்துக்கள் அகரத்தை முதலாக உடையன, தீர்த்தங்கரர்களில் விருஷப தேவரை முதலாக உடையவர்" என்று பொருள். இந்த சூத்திரம் அப்படியே திருக்குறளின் முதற்ப் பாட்டாக வருவதும் என் கருத்தை அரண் செய்யும். "ஆதிபகவன்" என்ற சொற்றொடரை அப்படியே எடுத்தாளும் மற்ற சமண தமிழ் நூற்களை கீழே காணலாம். 1. "ஆதிபகவனை அருகனை மாதுயர் நீங்க வழுத்துவம் பலவே" - திருக்கலம்பகம் 2. "ஆதிபகவன் அசோக வசலன் சேதிபமுதல்வன் சினவரன் தியம் பகன்" - திருப்பாமாலை 3. "அத்தனே என்னை ஆளிர் சரணம் ஆதி பகவன் அருளே சரணம்" - தோத்திரத் திரட்டு 4. "செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன் தரும முதல்வன் தலைவன் தருமன்" - சிலப்பதிகாரம் இதுபோல் "ஆதிபகவன்" என்ற சொற்றொடரை ஆளும் பெளத்த நூற்களையோ, அல்லது மற்ற சமய நூற்களையோசுட்டினால், அது ஒரு நல்ல கருத்துப் பரிமாற்றத்துக்கு வழிவகுக்கும். >>>>>>>>>>>
” ‘பகவான் ‘ என்பது, பின்னர் வைணவம் வளர்ந்த பிறகு ‘உட்கவரப்பட்ட ‘ ஒரு சொல். (இதே பெயர் சமணருக்கும் உண்டெனினும், அது புத்தருக்குரியதுபோலப் பிரதானமான பெயரல்ல என்பது கவனிக்கத்தக்கது) ”
>>>>>>>>>>>

என் பதில்:

மேலே சொன்ன கருத்துக்கள் மூலம் திருக்குறளில் வரும் “பகவன்” என்ற சொல் இங்கு “சமண கடவுளான அருகனையே” சுட்டும் என்பதும் “ஆதிபகவன்” என்ற சொற்றொடர் அருகனைத்தவிர மற்ற கடவுளைக் குறிக்கா என்பதுவும் உள்ளங்கை நெல்லிக்கனி.

>>>>>>>>>>>
” * ‘அறிவன் ‘- எனும் நேரடித் தமிழாக்கமும் புத்தருக்கே உரியது.”
<<<<<<<<<<< என் பதில்: இவ்வாறு "Sweeping statement" ஆக சொல்வதின் மூலம் தங்களுக்கு சமண நூற்களில் பயிற்சி இன்மையைத்தான் காட்டுகிறது. "அறிவன்" என்ற சொல் அருக பகவானுக்கும் உண்டு. அவற்றையும் ஈண்டு காட்டுதும். 1. " கடையிகந்த காட்சியொடு - கடையிகந்த வாலறிவன்" - திருக்கலம்பகம் 2. " இலங்கொளி முக்குடை யெந்திரத் தியங்க அறிவர் சரிதம் முறையிற் காட்டி" - பெருங்கதை 3. " அறிவினாலறியாத அறிவநீ" - மேருமந்திர புராணம் 4. " உலகமூன்று பொருங்குட னேத்துமாண் டிலகமாய திற லறிவன்னடி" - வளையாபதி 5. " அறிவன் அறவோன் அறிவுவரம்ப இகந்தோன்" - சிலப்பதிகாரம் என்று சமண இலக்கியங்கள் பேசுவதன் மூலம் "அறிவன்" என்பது சமண கடவுளுக்கும் உண்டு என்பதாகிறது. >>>>>>>>>>>>
” * ‘மலர்மிசை ஏகினான் ‘ – என்பதுகூட அப்பட்டமாக புத்தரையே குறிப்பதாகத் தெரிகிறது. (புத்தரின் பாதங்களில் தாமரை
மலர் போலும் சக்கரச் சின்னம் இருந்ததான பழங்கதைகள் பலவுண்டு. புத்தரின் பட்டப் பெயரான ‘ததாகதா ‘ என்பதற்கு
‘இவ்விதம் சென்றவன் ‘-ஏகியவன்- என்பது பொருள்) ”
<<<<<<<<<<<< என் பதில்: இதுவும் தங்களின் ஒருமுகமான "Sweeping statement" தான். "மலர்மிசை ஏகினான்" என்ற சொற்றொடர் அருகருக்கும் உண்டு. 1. " விரிபூந்தாமரை மேற்சென்ற திருவாரடி யேந்தி" - சீவக சிந்தாமணி 2. " விரைமணந்த தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய்" - சூளாமணி 3. " பூவின்மேல் சென்றான் புகழடியை" - அறநெறிச்சாரம் 4. " பூவின்மேல் வந்தருளும் புங்கவன்றன் பொற்பாதம்" - நேமிநாதம் 5. " மருவார் மலர்பிண்டி மன்னா நமஸ்தே வண்டாரு மலர்மேல் நடந்தாய் நமஸ்தே" - தோத்திரத்திரட்டு 6. " மலர்மிசை நடந்தோன் மலரடி அல்லதென்" - சிலப்பதிகாரம் என்பதன் மூலம் அருகருக்கும் அப்பெயர் உண்டென்றாகிறது. சிரமண மதப் பிரிவுகளில் மிக முக்கியமானதாக கருதப்படும் மதங்கள் சமணம், பெளத்தம், ஆசிவகம் என்பன. இவற்றுள் சமணமே (ஜைனம்) காலத்தால் முந்தியது. சமணத்தில் இருந்தே பெளத்த, ஆசிவக மதங்கள் தோன்றின. அதனால் சமணத் தாக்கங்கள் பெளத்ததிலும், ஆசிவகத்திலும் உண்டு. சிறு, சிறு வேறுபாடுகள் உண்டெனினும் அவைகள் ஒரே பாரம்பரியத்தில் இருந்து வந்ததுதான். சில பல காரணங்களால் ஆசிவகம் தற்போது அடியோடு மறைந்துவிட்டது. அதே போல், பெளத்தம் பாரத மண்ணில் நிலைப்பெற முடியாமல், நம் பக்கத்து தேசங்களில் (சீனம், திபேத்து, இலங்கை, பர்மா, தாய்லாந்து) நிலைப்பெற்றது. ஆனால் ஒரு காலத்தில் பெருசமயமாக இருந்த சமணம் தற்போது சிறுபான்மை சமயமாகக் குன்றிவிட்டது. ஆங்கிலேயர்கள் காலத்தில் மேற்கத்திய ஆராய்ச்சியாளர்களின் பார்வை பெளத்தம் மேல் பட்டதன் விளைவாக பெளத்த மதத்தைப் பற்றி நிறைய ஆராய்ச்சி நூற்கள் எழுதப்படலாயின. இதன் காரணமாக பெளத்தம் பற்றி உலகளாவியப் பார்வை ஏற்பட்டது. இது நல்லதுதான். என்றாலும், அந்த ஆராய்ச்சியை நிறைய அறிஞர்கள் வேறு கோணத்தில் புரிந்துக்கொண்டனர். அப்புரிதல் சில விளைவுகளை ஏற்படுத்தியதை நாம் உணர மறந்துவிட்டோம். அந்த விளைவுகள் தான் இன்றளவும் ஆராய்ச்சி உலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகின்றன. >>>>>>>>>>>>
“(1)துறவறத்தை வற்புறுத்திய சமணத்துக்கு மாறாக,இல்லறத்தைப் பாடிய திருக்குறள் சமண நூலாகுமா ? குறளில், சமணம் போன்ற ‘கெடுபிடி ‘ நடைமுறை இல்லை. புத்தம் போன்ற ‘ஜனநாயக ‘ மரபே அதிகம். டுமாடுகளைப் பலிகொடுக்கும் வைதீக வேள்விக்கு எதிராக ‘தன்னைக் கட்டும்தவம் ‘ வலியுறுத்தப் பட்டது -சமணத்தில். அதைக்காட்டிலும், குடும்பவாழ்க்கையே பெரிதென்று கூறிய குறள் எப்படி சமண நூலாக முடியும் ? (காதலுக்கென்று மூன்றில் ஒருபகுதி நூலையே ஒதுக்கி காதலைப் பாடியது சமணக் கோட்பாடா என்ன ?)”
<<<<<<<<<<<< என் பதில்: இவ்வாறு சொல்வதன் மூலம் தாங்கள் நேரிடையாக சமணம் பற்றியறியவில்லை என்பது புலனாகிறது. மற்றவர் ஆராயாமல் சொன்ன கருத்துக்களை அப்படியே இங்கே சொல்கியிருக்கிறீர்கள் என்பது அங்கை நெல்லிக்கனி. பாரத வரலாற்றில் முதன்முதலில், இல்லறம் என்றும் துறவறம் என்றும் பிரித்து மகக்ளை நல்வழிப்படுத்தியவர்கள் சமணர்களே ஆவர். இல்லறம் இல்லையேல் துறவறம் பயனற்றது என்று துணிந்து சொன்னவர்கள் சமணர்களேயாவர். "சோலைதாழ் பிண்டிக்கீழ்ச் சூழ்ந்தவர்தம் சொல்முறையான் மனையறமுந் துறவறமும் மன்னவர்க்கும் விண்ணவர்க்கும் வினையறுக்கும் வகைதெரிந்து வீடொடு கட்டியை யுரைத்த தொன்மைசால் மிகுகுணத் தெம் துறவரசைத் தொழு தேத்த நன்மைசால் வீடெய்து மாறு" -யாப்பருங்கலக்காரிகை மேற்கோள் உரை இல்லறத்தைப் போற்றி தமிழிலும், வடமொழிகளிலும் நிறைய சமண நூற்கள் எழுந்திருக்கின்றன. உதாரணமாக, தமிழில் தோன்றிய அறநெறிச்சாரம், அருங்கல செப்பு போன்ற நூற்களும் சிராவகச்சாரம், சமணசுத்தம் போன்ற வடமொழி நூற்களையும் சொல்லலாம். சான்றாக ஒன்றைப் பார்போம்: " நோற்பவர் இல்லவர்க்குச் சார்வாகி இல்லவரும் நோற்பவர்க்குச் சார்வாய் அறம்பெருக்கி - யாப்புடைக் காழும் கிடுகும்போல் நிற்கும் கயக்கின்றி ஆழிசூழ் வையத்து அறம்" -அறநெறிச்சாரம் இல்லற நோன்பிகள் இல்லாமல் துறவிகள் தத்தம் கடமையை ஆற்ற முடியாது. அதுபோல் துறவற விரதிகள் வழிக்காட்டுதல் இல்லாமல் இல்லறம் முறையாக நடைபெறா என்பதைத்தான் மேற்சொன்ன பாடல் இயம்புகிறது. எனினும், இல்லறத்தார்க்கு வீடுபேறு இல்லாமையால், வீடுபேறு வேண்டுவோர் துறவறம் மேற்கொள்ளவேண்டும் என்றுதான் சமணம் சொல்கிறது. அதனால், சமணம் இல்லறத்தை வெறுத்தது என்றால் எப்படி? 🙂 திருக்குறளும் இவ்வுண்மையையே பகர்கிறது. இல்லறத்திலே வீடுபேறு அடையலாம் என்று எந்தக் குறள் சொல்கிறது சொல்லுங்களேன். மேலும், தாங்கள் "குறளில், சமணம் போன்ற 'கெடுபிடி ' நடைமுறை இல்லை. புத்தம் போன்ற 'ஜனநாயக ' மரபே அதிகம்" என்று எழுதியிருக்கிறீர்கள். தேவர் (குறள் ஆசிரியர்) கொல்லாமை, புலால் மறுத்தல், தவம், கூடா வொழுக்கம் போன்ற அதிகாரங்களில் சமண கெடக்குப்பிடி நிறையவே கையாண்டிருக்கிறார். விரிவஞ்சி விடுக்கிறேன். "(காதலுக்கென்று மூன்றில் ஒருபகுதி நூலையே ஒதுக்கி காதலைப் பாடியது சமணக் கோட்பாடா என்ன ?)" என்றும் எழுதியிருக்கிறீர்கள். சிவக சிந்தாமணியை யார் எழுதியது ஐயா. அதற்கு மணநூல் என்ற பெயரும் உண்டு இல்லையா? (ஹி..ஹி...) >>>>>>>>>>>
(2) ‘உழவே செய்யக்கூடாது – செய்தால் அது தொடர்பான உயிர்களை அழிக்கவேண்டி வரும் ‘ என்பது சமணக் கோட்பாடு.
எனில், ‘உழவே தலை ‘ என்ற குறள் எப்படிச் சமண நூலாக முடியும் ? இவை போலும் கேள்விகள் ஏராளம் ஏராளம்!
<<<<<<<<<< என்னடா வம்பா போச்சு? உழவே செய்யக்கூடாது என்று எந்த தமிழ் சமண இலக்கியத்தில் இருக்கிறது. முதன்முதலில் வாழ்வியலை "இல்லறம்" என்றும் "துறவறம்" என்று பிரித்தது சமணம் என்று முன்னமே சொல்லியிருக்கிறேன். புலால் உடன்பாடென்றானால், செத்தது, சாவாதது, ஓடுவது, ஒடாதது, பறப்பது, பற்ப்பாதது (:-), நடப்பது, நடப்பாதவது என்று எல்லாத்தையும் ஒரு கைப் பார்க்கலாம். ஆனால், இல்லறத்தாராகட்டும், துறவிகளாகட்டும் இருசாராருமே புலால மறுத்தவர்கள். இல்லறத்தார் உழவு செய்யவில்லையென்றால் அவர்களுக்கு புவா (உணவு) எங்கிருந்து கிடைக்குமாம்?. முதன்முதல் இவ்வுலகிற்கு அறம் உரைத்தவர் முதல் சமண தீர்த்தங்கரரான "ஆதிபகவன்" என்றழைக்கப்படும் "ரிஷபதேவரே ஆவார். அவரே அறுதொழில்களை வகுத்தவர். வாள், வரைவு, வாணிபம், உழவு, கல்வி மற்றும் சிற்பம் என்பனதான் அவைகள். "வரைவொடு தொழிலே வித்தை வாணிகம் உழவே சிற்பம் உரைசெய்யும் போகபூமி யொழிவினி லாதிகாலம் விரைசெறி பிண்டிவேந்தன் விதித்த லினஃதேயம்ம கருமபூமி என்னும்பேர்கண்ட தொன்றுண்டுநூலில்" -சூடாமணி நிகண்டு என்ற பாடலின் மூலம் அதையறியலாம். இதனால் சமணர்கள் உழவை ஆதரித்தார்களேயன்றி உழவு செய்யக்கூடாது என்று யாங்கணும் சொல்லவில்லை என்பது நிதர்சணம். தாழ்மையுடன், இரா.பானுகுமார், சென்னை. மின்னஞ்சல்: banukumar.r@gmail.com, banukumar_r@yahoo.com Blog: http://banukumar_r.blogspot.com/

Series Navigation

இரா.பானுகுமார்

இரா.பானுகுமார்