தி. ஜானகிராமனின் மோகமுள்

This entry is part [part not set] of 33 in the series 20061221_Issue

நதியலை


நூலின் தலைப்பு : மோகமுள்
ஆசிரியர் : தி. ஜானகிராமன்
விலை : 330/-
பதிப்பகம் : ஐந்திணை
பக்கங்கள் : 686

சமீபத்தில் வாசித்த நாவல் மோகமுள். ஒவ்வொரு முறையும் வாசித்து அதை மூடிவைக்கும் போது மனதை எதுவோ பிடித்து அழுத்தும். இன்று இதற்கு மேல் தாங்காது என்ற நிலையில் தான் மூடினேன் ஒவ்வொரு முறையும் நள்ளிரவில். மூடிவைத்தப் பிறகு குறைந்தது ஒரு மணி நேரமாவது அதை பற்றிய சிந்தனைகள் மனதில் அசைபோடும். அந்த கதாபாத்திரங்களில் ஒன்றிவிட்ட ஒர் உணர்வு. வெவ்வேறு கதாபாத்திரங்களில் என்னை பொருத்திப்பார்த்து சலனப்படுகிறது மனது. முக்கிய கதாபாத்திரமான பாபு மிகவும் நல்லவன். அதனாலோ என்னவோ அவன் பழகும் எல்லோரையும் நல்லவர்களாகவே பார்க்கிறான். வாசிக்கும் நமக்கும் எல்லா கதாபாத்திரங்களையும் பிடித்து விடுகிறது. பாபுவுடன் நமக்கும் அவர்களோடு ஒரு ஒட்டுதல் ஏற்பட்டுவிடுகிறது. அவனுக்கு தழதழத்தது என்று சொல்லும்போதே நமக்கும் தழதழக்கும். அவன் சங்கடப்படுகிறான் என்னும்போதே நம் மனதிலும் ஒரு வலி உண்டாகும். அவ்வளவு யதார்த்தமாக அழுத்தமாக தி.ஜானகிராமன் சொல்லியிருக்கிறார்.

ராஜம் :

ரசிக்கும் படியான காதாபாத்திரங்கள் யமுனா, வைத்தி, ரங்கண்ணா இருந்தாலும் மிகவும் ஈர்க்கும் கதாபாத்திரம் ராஜம், பாபுவின் தோழன் இவனைவிட நாலு வயது மூத்தவன். பொன்னியின் செல்வனில் கல்கி கூறுவது போல :

“யௌவன பிராயத்தில் உண்மையாக உள்ளம் ஒன்றுபட்ட ஒரு நண்பன் கிடைத்தால்அதைகாட்டிலும் பரவசப்படுத்தக் கூடியது வேறு என்ன உண்டு? காதல் என்பது ஒன்று இருக்கத்தான் இருக்கிறது. ஆனால் காதலில் இன்பமும் குதூகலமும் எத்தனை உண்டோ அதைவிட அதிகமான துன்பமும் வேதனையும் உண்டு. யௌவனத்துச் சிநேக குதூகலத்திலோ துன்பத்தின் நிழல் கூட விழுவதில்லை”

இப்படியான நண்பர்கள் தான் பாபுவும் ராஜமும். இவர்களிடையில் நடக்கும் உரையாடல்களை நிச்சயம் ஒருதடவைக்கு மேல் வாசிக்க தூண்டும்.

இதுபோல…..

பாபு : நான் கூட இன்னிக்கு கும்பேஸ்வரன் கோவிலுக்கு போகலாம்னு பார்க்கறேன். நாளைக்கு ஊருக்கு போய்ட்டா, அப்புறம் நவராத்திரியும் போயிடும்……நீயும் வாயேன்.

ராஜம் : நான் வரலை

பாபு : எனக்காக வாயேன், இன்னிக்கு ஒரு நாளுக்கு

ராஜம் : உனக்காகதான் நீ போறியே, நான் எதுக்கு?

பாபு : என்னமோ உன் சித்தமே அலாதி. எனக்கு நீ சொல்றது புரியலெ.

ராஜம் : புரியாட்டாப் போறது, நான் என்னைக் காப்பாத்திக்கணுமோல்லியோ?

பாபு : காப்பாத்திக்கறதா? ஸ்வாமிக்கிட்டேருந்தா?

ராஜம் : மனிதர்களிடமிருந்து

பாபு : மனிதர்களிடமிருந்து ஸ்வாமி காப்பாத்துவார் வா

ராஜம் : ஸ்வாமிக்கு அந்த சிரமும் கொடுப்பானேன், நான் வரலை

*********

பாபு : புத்திசாலின்னா கட்டறுத்துண்டு ஓட முடியுமா? கும்பேஸ்வரன் கோயில் யானைக்குட்டிக்கு பலமா இல்லை? ஒற்றைச் சங்கலியிலே கட்டுப்பட்டுத்தானே அவதிப்படறது அது?

ராஜம் : உங்க யானைக்குட்டி அப்படி இருக்கட்டும் ஆனா மனிதர்கள் இதையெல்லாம் பண்ணினால் புகைஞ்சு புகைஞ்சு வற்ரது எனக்கு. தப்புன்னு தெரிஞ்சு, ஒரு வழக்கத்துக்குப் பணிகிறவர்கள் எந்தக் காரணத்தினாலே பணிந்தாலும் சரிதான், கபோதிகள் – அவர்களாலே உலகத்துக்குப் பிரயோஜனமில்லை. அவங்களுக்கும் பிரியோஜனமில்லை.

*********
ராஜம் பாபுவுக்கு கூறும் அறிவுரைகள் நமக்கும் நல்ல பாடமாக அமைகிறது.

“பாபு குழந்தை மாதிரி பேசாதே. நல்ல திறமைகள் இருக்கறப்போது, பொழுதைப் போக்காமல் அதுகளை வளர்த்துக்கறதுதான் புத்தியுள்ளவன் செய்ய வேண்டிய காரியம். ஒரு நல்ல காரியத்திலே ஈடுபட்டோமானால் மோகினி மயக்கம் மாதிரி நம்ம கவனத்தை அந்தாண்டே இழுத்துண்டு போறதுக்கு எவ்வளவோ வந்து சேரும். ஸ்நேகிதம், காதல், பணம் சம்பாதிக்கிற ஆசை இப்படி எதாவது ஒரு பேர் வச்சுண்டு வரும் அதெல்லாம். அதுக்கெல்லாம் இடம் கொடுத்தா காரியம் கெட்டுப்போயிடும். பின்னால் வருத்தமாயிருக்கும்.”

ராஜத்தின் அப்பவும் மிகவும் உயந்தவராகவே இருக்கிறார். அதை இப்படியாக பாபு யோசிக்கிறான்…

“நல்லவன் ஒருவன் இருந்தாலே போதும், தன்னைச் சுற்றித் தூய்மையுயான ஒளியை அவனால் பரப்ப முடியும். அருவியினின்று எட்டி நிற்கும்போது திவலைகள் பட்டு சுகப்படுவதுபோல. அதன் திவலைகளை உணரமுடியும். இந்த ராஜத்திடம் அந்த ஒளியிருக்கிறது.”

ராஜம் பாபுவுடன் இருக்கும்வரையில் நாட்கள் உற்சாகமாக நகர்கிறது. வேலைக்காக வெளியூர் செல்லும் போது ஒரு வெறுமை வந்து ஒட்டிக்கொள்கிறது. பக்கங்களும் சற்று நிதானமாக திரும்புகின்றன. ரயில் நிலையத்தில் ராஜத்தை வழியனுப்பும்போது…..

“ஒன்றும் பேசமுடியவில்லை ஒரு நிமிஷம் என்னை பார்த்துவிட்டு, ஒரு புன்சிரிப்புச் சிரித்தான்! அவன் புன்னகைக்கு நாலு தாஜ்மகாலைக் கொடுக்கலாமா? மனிதத் தன்மையின் அழகையெல்லாம் காட்டக்கூடிய இந்தப் புன்னகை எப்படி வருகிறது இவனுக்கு?”

*********

யமுனா :

யமுனாவின் அலாதியான குணத்தை தனியாக விவரிப்பார் ஆசிரியர் என்று ஆரம்பத்திலிருந்து ஆவலாக காத்திருந்து கடைசி வரை இல்லாமல் போனது ஏமாற்றம் தான். அவள் அழகி என்று வர்ணித்த ஆசிரியர் அவள் குணங்களை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். பாபு அவள் அழகையும் தாண்டி ஏன் அவளிடத்தில் விழுந்தான், ஏன் இத்தனை நாள் காத்திருந்தான் என்பதை இன்னும் வலுவாக ஆசிரியர் விவரித்திருக்கலாம். அவன் தெய்வமாக போற்றும் அவளின் குணாதிசயங்களை இன்னும் சிறப்பாக சொல்லியிருக்கலாம்.

“யமுனாவுக்கு கல்யாணம் எதற்கு? இப்படியே தனக்குத் தானே அரசியாக இருக்கத்தானே பிறந்தவள் அவள்! அவள் கல்யாணம் செய்து கொண்டால், அவளை மணந்தவன் எப்படி இருப்பான்! எவ்வித சிந்தனைகள் அவனுக்கு ஓடும்… நிச்சயமாக மணந்தது தனி வாய்ப்பு, லகுவில் கிட்டாத ஒரு தனித்தன்மை என்று உணர முடியும் அவனுக்கு… அந்த மாதிரி உணரும் அளவுக்கு மன அமைப்பு இருந்தால்.

தனிவாய்ப்பு என்று எதை ஆசிரியர் குறிக்கிறார். அழகையா? அறிவையா? தனிச்சிறப்பு அவளிடம் உள்ளதை சொல்கிறாரே தவிர அது என்ன என்று எங்கும் விளக்கமாக வரவில்லை.

யமுனாவின் தாயாரையும் மிகவும் நல்லவளாகவே ஆசிரியர் எழுதியிருக்கிறார். அவள் பாபுவிடம் அழும்போது…..

“அழகான முகம் ஒன்று அதுவும் துயரங்களையே காணக்கூடாத, துயரம் என்ன என்றே அறியத்தேவையில்லாத அழகிய முகம் ஒன்று தேம்பிக் கண்ணீர் உதிர்க்கும் போது ஒன்றும் புரியவில்லை. நம்மிடம் மட்டும் பிரத்யோகமாக ஒப்படைக்கப்பட்ட ரகசியம் இந்தக்கண்ணீர் என்று பெருமிதம் அடைவதைத் தவிர ஒன்றும் புரியவில்லை”

*********

தங்கம்மா :

ஒரு கிழவரை திருமணம் செய்துக்கொண்ட தங்கம்மாவிடம் ஒரு நாள் தடுமாறிவிடுகிறான் பாபு. அப்போது கூட அவன்மீது வெறுப்பு தோன்றவில்லை. அவ்வளவு நேர்த்தியாக தி.ஜா எழுதியிருக்கிறார்.

“அவளே வந்தாள். என்னை இரண்டு கையையும் காலையும் கட்டினாள். தரதரவென்று இழுத்துப்போனாள். பொத்தென்று சேற்றில் போட்டுவிட்டுப் போய்விட்டாள்”

இவன் தடுமாறியதற்கும் சேர்த்தே அவளே மொத்தக்காரணம் என்று சொல்லும்போது பாபுவின் உயரம் சற்று சரிகிறது. படர்வதற்கான இடமின்றி ஏங்கித்தவிக்கும் ஒரு கொடியை கவனிக்காமல் நிராகரித்துவிட்டாலும் அது எப்படியோ உயிர்வாழ்ந்துவிடும். ஆனால் ஓர் இரவில் அதற்கு நம்பிக்கைத்தூணை நட்டு அதில் படரச்செய்து பின் வேரோடு பிடுங்கினால் அது எப்படி உயிர்வாழும்.

“என்ன செய்ய சொன்னாலும் செய்யத் தயாராயிருக்கிறாயா? எங்கே வரச்சொன்னாலும் தயாராயிருக்கிறாயா? நான் எதற்காக உன்னை வரச்சொல்ல வேண்டும்? உன்னை எங்கு வரச் சொல்லத்தான் நான் யார்? நீ யார்?…. எனக்காகவா மானம் வெட்கம் எல்லாம் விட்டாய் நீ? யார் விடச் சொன்னார்கள்?…. என்னைக் கொலை செய்யவா? இப்படி என்னை வதை செய்யவா? யார் முகத்திலும் விழிக்க முடியாத அமாவாசை நிலவாக என்னைச் செய்யவா? ஸ்வாமி கூட என்னைத்தேடி வந்தாலும் நான் அகப்படாமல் என்னைப் பதுக்கி வைக்கவா? நீ யார் இதெல்லாம் செய்ய? எங்கேயோ பிறந்து நான் இங்கு வந்திருக்கிறேன். என் அப்பாவை நீ பார்த்திருக்கிறாயா? என் அக்காவை நீ பார்த்திருக்கிறாயா? அவளுக்கு யார் தெய்வம் தெரியுமா? என் ராஜத்தை நீ பார்த்திருக்கிறாயா? என் ரங்கண்ணாவை, யமுனாவை? நான் என்ன வெறும் அந்த ஆளா? உனக்குச் சௌகரியம் போல் இந்தப் பணிவிடை செய்கிற கூலிக்காரனா?… நீ யார் சொல்லு? எனக்கும் உனக்கும் என்ன?…”

ஓடும் நீர் சுழித்து வளைந்தது. விகாரமாக ஒரு கப்பல் நுரையை ஏந்திக் கொண்டு போயிற்று. வளைந்து விழுந்திருந்த நாணல் தட்டையில் சிக்கி அந்த நுரைக்கப்பல் சிதறிற்று.”

அனாதையான தங்கம்மா எழுதிய கடிதத்தை படித்துவிட்டு பாபு இப்படி நினைக்கும்போது சராசரி மனிதனின்றும் சற்று கீழாகத் தான் பார்க்கத்தோன்றுகிறது. இதை அவன் எதுவும் நிகழ்வதற்கு முன் சொல்லியிருந்தால் கைதட்டியிருக்கலாம். இப்போது இது அவனுடைய கர்வத்தின் வெளிப்பாடாகவே தெரிகிறது.

மிகவும் உலுக்குவது தங்கம்மாவின் சாவும், இரண்டு நாள் கழித்து விஷயம் அறிந்த பாபு சுடுகாட்டுக்கு போய் அவள் சாம்பலை பார்த்துக்கொண்டு நிற்பதும் தான். இங்கு தி.ஜாவின் வார்த்தைகள் நம்மையும் கலங்கடித்து விடுகிறது. அவன் உடலில் சாம்பல் என்று சொல்லும்போது நம் உடம்பிலும் சாம்பல் ஒட்டிக்கொண்டது போல ஒரு பிரம்மை. வெகு நேரம் அங்கேயே கட்டிப்போட்டு விடுகிறார் ஆசிரியர். அந்த நினைவுகளில் இருந்து வெளிவர பாபுவோடு சேர்ந்து நாமும் அவஸ்தை படவேண்டியதாயிருக்கிறது.

*********

வைத்தி :

பாபுவின் அப்பா வைத்தி. மிகவும் மதிக்கக்கூடிய கருணையே வடிவான பாசமிகு தந்தையாக வருகிறார். இந்த வரிகளை வாசிக்கும்போது நமது அப்பாவின் உள்ளங்கைக்கு ஏங்க வைத்துவிடுகிறார் ஆசிரியர்.

“பாபு தூங்குடா என்று அப்பா ஒருக்களித்துப் படுத்திருந்த அவனுடைய கையை தடவிக்கொடுத்தார். என்ன ஆனந்தமான ஸ்பரிசம்! ஒரு ஸ்பரிசத்தில் தந்தையின் பாசம் முழுவதையும் வடிக்கக்கூடிய அந்த உள்ளங்கை.

அந்த உள்ளங்கையில் ஊறிவடித்த அமைதியும் ஆறுதலையும் இன்னும் மறக்க முடியவில்லை”

வைத்தியின் உபாசனை….

“நமக்கு ஹிருதயத்திலே எப்பொழுதும் ஒரு தீபம் வேணும். சமயத்துக்கு அது அந்தகாரத்தை நீக்கி வழிகாட்டும். அருள் கிடைக்கிற பாதையைக் காட்டும். தைரியம் கொடுக்கும். தெம்பு கொடுக்கும். ஒவ்வொரு க்ஷ்ணமும் அந்தச் சக்தி நம்மை ஆதாரமாகத் தாங்கிக் கொண்டிருக்கும். துக்கம் வரும் போது சகித்துக்கொள் ள சக்தி கொடுக்கும். ஆனந்தம் வரும்போது நிதானமாக அனுபவிக்கச் சொல்லும். சுயநலத்தை அறுத்தெறியும். ஐஸ்வர்யம் கிடைக்கும்போது, அதைப் பொதுச் சொத்தாகக் கருதி பிறரோடு பகிர்ந்து கொள்ளும் மனுஷத் தன்மையைக் கொடுக்கும். நாட்டில் பார்க்கும் பெண்களையெல்லாம் நடமாடும் தெய்வங்களாகப் பார்க்கச் செய்யும். அகந்தையை அறுக்கும், மனதைச் சுத்தம் செய்யும்.”

“பக்தி என்பது பேரமில்லை. ‘நான் உன்னை நெனைக்கிறேன், நீ என்ன கொடுக்கறே? பணம் கொடுக்கிறாயா? சக்தி கொடுக்கிறாயா? ஆபத்திலிருந்து காப்பாத்தறியா? இப்படிக் கேட்கறத்துக்காக பக்தியில்லே. அப்படி கொடுக்கிறதுன்னு நாம நெனச்சிண்டிருக்கிற தெய்வம் நாம்தான். நாம் சாதாரண மனுஷனா இருந்தாலே போதும். அதாவது மனுஷனாயிருக்கிறபோது உயர்ந்த மனுஷனாக இருக்க பாடுபடணும். உயர்ந்த மனுஷன் எப்படியிருப்பான்னு கேட்டா போகப் போகத் தெரியும். நீ ஏறஏற உயர்ந்த மனுஷன் மேலே மேலே போயிண்டிருப்பான். அப்படியே போயிண்டிருக்க வேண்டியதுதான்…..”

*********

ரங்கண்ணா :

சங்கீதமாகவே சங்கீதத்திற்காகவே வாழ்பவர். அவர்குணங்களை அழகாக விவரிக்கிறார் தி.ஜா.

“ரங்கண்ணாவின் தூய்மை வேடிக்கையான அதிசயமான தூய்மை. அது கபடமில்லாத இயற்கையாக அமைந்த தூய்மையா? அல்லது நல்லதல்லாததைச் செய்யக் கூடாது என்று பிரக்ஞையிடன் பிரயாசைப்பட்டுக் காப்பாற்றி வந்த தூய்மையா? எதுவென்று தீர்மானமாக சொல்லுவது கஷ்டம். ஒரு சமயம் குழந்தையினதைப் போன்ற தூய்மையாக இருக்கும். இன்னொரு சமயம் சரீரத் தூய்மையைக் காப்பாற்ற வேண்டிய, மனத் தூய்மையைக் காப்பாற்ற வேண்டிய அவசியத்தைப்பற்றி அவர் கிண்டலும் கோபமுமாகப் பொரியும்போது, அதிப்பிரயாசைப்பட்டு, போராட்டங்கள் செய்து சாதித்த தூய்மை போன்று இருக்கும். போராட்டமே நிறைந்த நீண்ட ஆயுள் வடிவெடுத்து எதிரில் அமர்ந்திருப்பது போல் தோன்றும்.”

“மனிதனுடைய நல்ல அம்சங்களெல்லாம் உருவாகி வந்தவர் அவர்…. அவரோடு பழகுவதே போதும். அவர்கூட இருந்தாலே போதும், உன்னையும் அறியாமல் நீ பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பாய். அவர் பேச்சுக்கூட வேண்டாம். நல்லார் ஒருவர் உளரேல் என்று சொல்லுகிறார்போல. இந்தமாதிரி மனிதர்கள் சுத்தாத்மாக்கள், இருந்து கொண்டிருந்தாலே உலகம் ஷேமம் அடையும். அவர்கள் யாருக்கும் வாயை திறந்து உபாதேசமோ நல்ல வார்த்தைகளோ சொல்லவேண்டிய அவசியமில்லை.”

ரங்கண்ணா அற்புதமாக தம்புராவில் சுருதி சேர்க்கிறார். அதன் நாதத்தில் நம்மையும் இப்படி மூழ்கடிக்கிறார் ஆசிரியர்.

“தம்புராவின் நாதம் அலை அலையாக எழுந்து, செவியையும், உள்ளத்தையும் நிரப்பிற்று. சுருதி பரிபூர்ணமாகச் சேர்ந்திருந்தது. தீயும் சூடும் போல, இரவும் இருளும் போல, நிலவும் தன்மையும் போல, வைகறையும் தூய்மையும் போலச் சேர்ந்திருந்தது. மகாகவியின் சொற்களில் எழுதுவது போல. சொல்லாத காந்தாரம் சேர்ந்து தொனித்தது.

புலன்களைக்கூட்டி, ஒருமுகப்படுத்திற்று அந்த நாதம். புறத்தின் நினைவை அகற்றி உள்ளத்தை மீற முடியாமல் கவ்விச் சென்றது. உடலையும் உலகையும் விட்டுச்சென்ற நினைவும், புத்தியே ஒலியும் பாவுமான அனுபவத்தின் மேலமர்ந்து, மாயக் கம்பளத்தில் அமர்ந்தது போல் பறந்தது. திக்கும் எல்லையும் அற்ற பெருவெளியில் உலவுவது போன்றிருந்தது அந்த நாத உணர்வு”

*********

திஜா ஒவ்வொரு கதாபாத்திரத்தை உருவகித்த விதம் நமக்குள் ஒரு கற்பனை உருவத்தை தோற்றுவித்துவிடுகிறது. அத்தனை நயமாக விவரிக்கின்றார். பெரும்பாலும் கதையில் வரும் அத்தனை கதாபாத்திரங்களையும் ஒருவர் விடாமல் இப்படி விவரிக்கும் போது நம் கண்னெதிரே நடக்கும் சம்பவமாகவே பாவிக்க தோன்றுகிறது. கதாபாத்திரங்களை மட்டுமல்ல கதையில் வரும் வீடுகளை பற்றியும், காவிரி ஆறு, கல்லூரி, கல்லூரிக்கு அடுத்து செல்லும் ஆற்றில் படகு சவாரி, தெருக்கள், மரங்கள், அலுவலகம் என்று எதை பற்றி சொன்னாலும் நம் கண்முன் அக்காட்சி விரிகிறது.

காவேரி :

“மின்சார ஒளியின் நெடுவீச்சில் காவேரி இன்று வேகமாக ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தது. இவ்வளவு ஓட்டத்திலும் விரைவிலும் கூட ஒரு தனி அடக்கமும் அமைதியும் நிறைந்து நின்றன. எதனால்? பரம்பரை பரம்பரையாகக் கொடுப்பதையே கருமமாகக் கொண்ட பண்பாடா? பிறரை வாழ்விக்கவே உடல் எடுத்துள்ள நிறைவா, இந்தக் காவேரிக்கு ஒரு மனித உருக்கொடுப்பதென்றால்…….”

பசி :

பசியில்லாம இருக்கணும். பசியிருந்தா மனசு நாயாய்ப் போகிறது. கோபமும் பொறாமையும் எரிகிறது. பொல்லாத நினைவெல்லாம் வருது. பசியில்லாம இருந்தா போதும். எனக்கு யார்கிட்டவும் கோபம் கிடையாது இந்த உலகத்திலே பசி ஒண்ணுகிட்ட தவிர. அது எவ்வளவு நீசமான ஜந்துன்னு இப்பதான் தெரிஞ்சுண்டேன். பெரிய பீடை. இருக்கிற இடமே விடியாது. மனுஷனை அல்பத்தனம், முட்டாள்தனம், சின்னத்தனம், விவஸ்தை கெட்ட துணிச்சல் எல்லாத்திலும் கொண்டு இறக்கிவிடும்.

கடலலைகள் :

நெற்றியில் நுரையை அணிந்து அலைகள் வீசி வந்து கொண்டிருந்தன. வந்த சுருக்கில் அடங்கிக்கொண்டிருந்தன. எவ்வளவு இயலாமை! எதற்கு இந்த வேகம்! கடைசியில் அடக்கத்திலும் தோய்விலும் ஒடுங்கி விடுகின்ற சீறல்! என்னைப்போலத்தான் இருக்கிறது இந்த அலையும்.

கிழமைகள் :

ஒரு நாளைப்போல் இன்னொரு நாள் எப்படி இருக்கும்? திங்கட்கிழமை, செவ்வாய், புதன்…. ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு வடிவம் இருக்கத்தான் இருக்கிறது. ஊரும், வீதிகளும், மனிதர்களும், தெருக்களும் அப்படியே இந்த ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு உருவம், அடையாளம் கண்டுபிடிக்கக்கூடிய தனித்தன்மை இருக்கிறது. திங்கள், செவ்வாய் என்ற பெயர் மாறாமல், முந்தாமல் ஒன்றன்பின் ஒன்றாக வருகிறதிலிருந்தே இந்தத் தனித்தன்மை விளங்கத்தான் விளங்குகிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்த வரிசை கலையாமல் வருகிற கட்டுப்பாடு இந்த நாட்களுக்கு இருக்கும் அதிசயத்தை நினைத்துப் பார்க்கிற போதே, ஒரு நம்பிக்கையும் அவநம்பிக்கையும் தைரியமும் அச்சமும் கனவுகள் பலிக்கிற ஆசையும் பலிக்கா நிராசையும் சேர்ந்து சேர்ந்து வருகின்றனவே…. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்தக் கிழமைகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அப்படியானால் கிழடு தட்டித்தானிருக்க வேண்டும். இப்படி மெல்ல மெல்ல ஊரும் மந்தப் போக்கைப் பார்க்கும் போது, கிழக் கிழமைகள் என்றுதான் தோன்றுகிறது.

*********

கடிதங்கள் :

ஒருவருக்கொருவர் எழுதிக்கொள்ளும் கடிதங்கள் எல்லாமே மிகச்சிறப்பாக உணர்ச்சிக்குவியலாக எழுதப்பட்டிருக்கிறது. பாபு தான் எழுதிய கடிதத்தை மீண்டும் வாசிக்கிறான்……

“கடிதத்தை நாலைந்து முறை வாசித்தான் அவன். உயிரற்ற குரல் சொல்லுக்குத் தவிப்பது போலிருந்தது கடிதம்”

*********

திஜாவின் வாக்கிய பொக்கிஷங்கள் :

* இன்பத்தைவிட துன்பத்திலிருந்து விடுதலையை உடலும் மனமும் அனுபவிப்பது அதிகம்தான்

* உண்மை எப்போதும் தன்னை மறைத்துக் கொள்ளாமல் நினைக்கிற போது வந்து தரிசனம் கொடுக்கும்

* என் ஆசீர்வாதம் பூரணமாக உண்டு. ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் தான் தான் ராஜா. அவனேதான் அவனை அடக்கி ஆளவேண்டும்.

* யுகயுகமாக இவ்வளவு வெசவு வாங்கி அபக்யாதி பெற்றுவிட்ட சரீரத்தில் தான் விண்ணின் விதைகளும் அமுக்கிக்கிடக்கின்றன. இது என்ன வேடிக்கை.

* அறிவை மயக்குகிற திமிரைத் தின்றுத் தின்று வளர்ந்து மதமதத்துப்போன மனம், நுணுக்கமான மனித உணர்வுகளை ஆராயவா தெரியப்போகிறது.

* இது தண்டனை இல்லை. தப்பித்துக் கொண்டு ஓடி ஒளியும் கோழைத்தனம். ஓடி ஒளிந்து கொள்வதற்கு மரணத்தைப்போல பத்திக் குறைவான இடம் இருக்க முடியாது! சிரிப்புகளும் நகைப்புகளும் எழுந்து மானத்தை வாங்குகிற இடம்.

* கேள்விகள்தான். விடைதெரியாத, யோசனை தொடரும் கேள்விதான் அந்த ‘உம்’ காரம்.

* எந்த ஊர் திருப்தியும் நமக்கு லட்சியமில்லை. நம்முடைய திருப்தியே நமக்கு லட்சியம்.

* மனிதனுக்குள் பதுங்கிக் கிடக்கிற சக்திகளையும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் ஆற்றலையும் எப்படி எடை போட முடியும்? வருகிற வாய்ப்புகளை எல்லாம் போ போ என்று விட்டு விட்டு திடீரென்று பெரிதாக வருகின்ற அலைமீது ஏறிக்கொண்டு ன்னுக்குப்போனால்?

* எண்ணங்களுக்கு வலு அதிகம். வேறு எங்கும் சிதற அடிக்கப்படாமல் ஒரு முகமாகப் பாயும் எண்ணத்திற்கு பலம் அதிகம். ஒரு இடத்தில் குவிக்கப்பட்ட படைகளைப்போல, ஒரு புள்ளியில் குவிந்த வெயிலின் ஒளியைப்போல எதிர்ப்புகளைப் பொசுக்கிவிடும் அது.

* கற்பூர சம்புடம் காலியாகி வெகு நாள் வரையில் மணக்கிறது. ஆனாலும் தற்போது சூன்யமாக இருப்பது உண்மைதானே!

*********

முடிவுரை :

நாவலை படித்து முடித்தப் பிறகு ஒரு நிறைவு இருக்கத்தான் செய்கிறது. மிகவும் எதார்த்தமாக உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். இதை கதையாக ரசிக்கமுடிகிறதே தவிர இது நடைமுறைக்குச் சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது. அதையும் ஆசிரியர் ஓர் இடத்தில் அழகாகச் செல்லிவிடுகிறார் இப்படி….

“அதையும் தாண்டி இன்னும் சாலை நீளப்போவது போலிருந்தது. அதோடு நின்றுவிடவில்லை. ஆனால் அப்பால் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் அப்பால் போய்தானாக வேண்டும் என்று எதிர்த்து நிற்க முடியாத கட்டாயம் அவனை உந்திற்று. எங்கே போவது எதற்காகப்போவது என்று தெளிவுபடாமல் அவன் மனம் புருவத்தைச் சுளித்துச் சுளித்து, காலத்தின் இருளை துளைத்துப் பார்த்துக்கொண்டிருந்தது”

– நதியலை

Series Navigation

நதியலை

நதியலை