கடித இலக்கியம் – 25

This entry is part [part not set] of 36 in the series 20061006_Issue

வே.சபாநாயகம்


கடிதம் – 25

நாகராஜம்பட்டி
2-3-81

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

பணிகள் பலவாகி விட்டன. எத்தனையோ நேரங்களில் எவ்வளவோ அனுபவங்களில் தங்களோடு கடிதங்களுடன் கலந்து கொண்டிருக்கலாம். ஆயினும் பரவாயில்லை. நாம் நித்யப் பெருவெளியில் நீந்திக் கொண்டிருக்கிறோம். அசதிகள் வந்து ஆளைக் கவ்விக் கொண்டு விடுகின்றன. அவற்றை யெல்லாம் பேசாது விடுவோம்.

நான் சித்தாந்த ரீதியாகச் செழுமைப் பட்டுக் கொண்டிருக்கிறேன். காரல் மார்க்ஸ¤ம் எங்கெல்ஸ¤ம் லெனினும் அந்தோன் மகரென்கோவும் பாரதியாரும் விவேகானந்தரும் JKயும் நாளூம்நாளும் அறிவினுள் அருள் மழை பொழிந்து கொண்டிருக்கின்றனர்.

திட்டமிட்டதோர் ஆசிரியப் பணியாற்றாமல் பதினெட்டு ஆண்டுகளை வீணாக்கியது போன்ற எண்ணம் உண்டாகிறது. அந்த ஆண்டுகளில் அற்புதமான போதனை நேரங்களை நாம் நிகழ்த்தியதுண்டு. ஆனால் திட்டம் இல்லை. நமது
கல்விமுறையே திட்டவட்டமான குறிக்கோள் இல்லாதது என்பது ஒருபுறம் இருக்க, விசேஷமாய், பேணி வையமெல்லாம் நன்மை பெருக வைக்கும் விரதம் பூண்டு, கண்ணனின் பொறிகளில் ஒன்றாய்ப் பிறந்த நமக்கு, நம்மளவிலாவது நமது தனித் திட்டம் வேண்டுமல்லவா?

இதை இனித் துவங்க உத்தேசம். உத்தேசமென்ன? உடனடிக் கருமமாய் அது என்னால் இயன்ற அளவு நடந்து வருகிறது. உபகரணங்களும் ஜோடனைகளும் இல்லாத உயரிய நம்பிக்கையில் அதை நடத்துகிறேன்.

அந்தோன் மகரென்கோவை நீங்கள் படிக்க வேண்டும். போதனை இயல் நிபுணர். மகாப் பெரிய பெர்ஸனாலிட்டி ஆகியும், ஒரு எழுத்தாளர் ஆகமுடியாமல் போய் விட்டதே என்ற சிறு ஏக்கம் கொண்டவர். அவர் தன் நூலில் விவரிக்கிற உத்தி முறைகள் சிலவற்றை நீங்களும் நானும் சமயங்களில் நமது ஆசிரியப்பணியில் கையாண்டிருக்கிறோம். உங்கள் பள்ளியின் பலநிகழ்ச்சிகள் எனக்குக் கவனம் வருகின்றன. அவை அந்தோன் மகரென்கோவைத் தாங்கள் படிக்கிற பொழுது, மேலும் integrity (ஒருமை) கொள்ளும்; எல்லாம் ஒன்றையன்று நன்கு சார்ந்து கொள்ளும்.

மாடு கன்று போட்டு, அந்தக் குடித்தனம் பெருகி விட்டது. நாட்டிலோ பஞ்சம்.

தமையனார் புதல்வியின் திருமணச் செய்தி, மகிழ்ச்சியோடு மனசில் பல ஆசிகளைச் சுரக்கச் செய்தது. அந்த அழைப்பிதழை முற்றிலும் ரசித்து, என்னென்னவோ விவரங்கள் தெரிய வருகிற ஒரு செய்தி போல் படித்தேன். தங்கள் குடும்ப விசேஷங்கள் எல்லாவற்றிலும் பங்குபெற்று மகிழ்கிற அனுபவம் ரொம்ப பாக்கியமானதுதான். ஒரு சமூக இயலின் observation போல் அது ஓர் உன்னதமான அனுபவம். ஆயினும் உன்னதமான விஷயங்களைக்கூடத் துறந்து விட்டு, உப்புப் புளி பருப்புக்கு அலைகிற உலகத்தில், அத்தகைய அனுபங்கள் நம்மைப் போன்றவர்களுக்குக் கிட்டுவது அரிதாகி விடுகிறது.

மணமக்களுக்கு எனது நல்லாசிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்; வாழ்த்துகிறேன்!

தங்கள் –
பி.ச.குப்புசாமி.


Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்