மக்களின் மொழி சம்ஸ்க்ருதம்

This entry is part [part not set] of 39 in the series 20060825_Issue

புதுவை சரவணன்



திண்ணையில் சில மாதங்களுக்கு முன்பு நமது பாரம்பரிய சம்ஸ்க்ருத மொழியை பரப்பி வரும் “சம்ஸ்க்ருத பாரதி’ என்ற அமைப்பின் செயல்பாடுகள் பற்றி எழுதியிருந்தேன். பலர் இந்த கட்டுரையைப் படித்துவிட்டு எனக்கு மெயில் அனுப்பி இருந்தார்கள். திண்ணையில் சம்ஸ்க்ருதத்தைப் பற்றி எழுதியிருந்தது பலரை மகிழ்ச்சியடையச் செய்தது. நடந்து முடிந்த சுதந்திர தினத்தன்று சென்னையில் சம்ஸ்க்ருத பாரதி நடத்திய சம்ஸ்க்ருத தின விழாவிற்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
சென்னை புரசைவாக்கம் தர்மபிரகாஷ் மண்டபத்தில் நடந்த இவ்விழாவில் ஆண்களும், பெண்களும், இளைஞர்களும், இளம் பெண்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர். அந்த பெரிய அரங்கம் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே நிரம்பியிருந்தது. சம்ஸ்க்ருத பாரதி ஊழியர்கள் வந்திருந்த விருந்தினர்கள் அனைரையும் ராக்கி கட்டி வரவேற்றது வித்தியாசமாக இருந்தது. நிகழ்ச்சி தொகுப்பாளர் சம்ஸ்க்ருதத்திலேயே தொகுத்து வழங்கினார். ஆனாலும் அந்த சம்ஸ்க்ருதம் சம்ஸ்க்ருதம் தெரியாத எனக்கும், என்னைப் போன்ற பலருக்கும் நன்றாகவே புரிந்தது.
மதியம் இரண்டு மணிக்கு அறிவியலின் பல்வேறு துறைக்கு சம்ஸ்க்ருதம் அளித்த கொடையை விளக்கும் சம்ஸ்க்ருத அறிவியல் கண்காட்சியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த கண்காட்சிக்கு “பாரதத்தின் பெருமிதம்’ என்று பெயரிட்டிருந்தார்கள். சம்ஸ்க்ருத பாரதியின் மாநிலச் செயலாளர் டாக்டர் ராமச்சந்திரன் கண்காட்சிக்கு வந்திருந்தவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்றுக் கொண்டிருந்தவர்கள். அப்படி வரவேற்பதில் அவர் பெரும் ஆனந்தமடைகிறார் என்பதை அவரது புன்னகை முகம் வெளிக்காட்டியது. அறிவியல் கண்காட்சியை நூற்றுக்கணக்கான மாணவர்களும், மாணவிகளும் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தை கவனித்தைக் கொண்டே நான் கண்காட்சி அரங்கை விட்டு வெளியே வந்து சம்ஸ்க்ருத தின விழா நடக்கும் அரங்கிற்கு வந்தமர்ந்தேன்.
அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தபடியே மாலை 3.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் துவங்கின. கலை நிகழ்ச்சிகள் முழுக்க முழுக்க சம்ஸ்க்ருதத்திலேயே இருந்தது. இடை இடையே சம்ஸ்க்ருத பாரதி ஊழியர்கள் பாடிய சம்ஸ்க்ருத கூட்டுப்பாடலை அனைவரும் சேர்ந்து பாடினார்கள். 15 வயது சிறுவனான கலைமகன் தலைமையிலான சிறுவர்கள் குழுவின் தமிழும் சம்ஸ்க்ருதமும் கலந்த வில்லுப்பாட்டு பார்வையாளர்களை பரவசப்படுத்தின. சென்னை வியாசர்பாடி விவேகானந்த வித்தியாலயா பள்ளி மாணவர்களின் சம்ஸ்க்ருத நாடகம் ரசிக்கும்படியாக இருந்தது. அந்த பிஞ்சு மாணவர்கள் மிக இயல்பாக மிக வேகமாக சம்ஸ்க்ருதத்தில் பேசியது பலரை ஆச்சரியப்படுத்தியது.
சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் ஒரு சம்ஸ்க்ருத பாடலை பாடி பார்வையாளர்களின் கைத்தட்டலை அள்ளிக்கொண்டனர். மாலை 4.30 மணிக்கு டாக்டர் ராமச்சந்திரனின் சம்ஸ்க்ருத வரவேற்புரையோடு விழா துவங்கியது. அவரது சம்ஸ்க்ருத பேச்சை கூர்ந்து கவனித்த சிறப்பு விருந்தினரும், வேலம்மாள் கல்வி நிறுவனங்களின் தலைமை கல்வி அதிகாரியுமான டாக்டர் எம்.வி.எம் வேல்முருகன் அடுத்த முறை என்னை சம்ஸ்க்ருத பாரதியின் நிகழ்ச்சிக்கு அழைத்தால் சம்ஸ்க்ருத்திலேயே பேசுவேன் என்று உறுதியளித்தார். தங்களது வேலம்மாள் கல்வி நிறுவன பள்ளிகளில் அடுத்த ஆண்டிலிருந்து சம்ஸ்க்ருதத்தை ஒரு பாடமாக அறிமுகப்படுத்த இருப்பதாக அவர் அறிவித்தபோது எழுந்த கைத்தட்டலில் தர்மபிரகாஷ் மண்டப அரங்கம் அதிர்ந்தது. விழாவில் தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் கலந்துகொண்ட சம்ஸ்க்ருத பராதியின் அகில பாரதத் தலைவர் கி.சூர்யநாராயணராவ் சம்ஸ்க்ருதம் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு சொந்தமான மொழி அல்ல. அப்படி சொல்பவர்கள் சம்ஸ்க்ருத்தின் எதிரிகள். சம்ஸ்க்ருதம் அனைவருக்கும் சொந்தமான மொழி. சம்ஸ்க்ருதம் மக்களின் மொழி என்றார். சம்ஸ்க்ருத பாரதி வெளியிட்டுள்ள ‘கணூடிஞீஞு ணிஞூ ஐணஞீடிச்’ என்ற நூலை அறிமுகப்படுத்தி பிரபல மேலாண்மை ஆலோசகர் என்.ஆர்.குமார் சம்ஸ்க்ருத்திலேயே பேசினார். இந்த நூலை பல்துறை விஞ்ஞானிகளும், சம்ஸ்க்ருத அறிஞர்களும் இணைந்து உருவாக்கியுள்ளனர். விலை ரூ.2000.
சம்ஸ்க்ருத பாரதியின் கர்நாடக மாநில அமைப்புச் செயலாளர் சத்தியநாராயண பட் சிறப்புரையாற்றுவதற்கு முன்பு சம்ஸ்க்ருத பாரதியின் முழு நேர ஊழியர் செல்வி பர்வதவர்த்தினி ஒரு சம்ஸ்க்ருத பாடலை பாடினார். அந்த பாடலின் அர்த்தம் புரியாவிட்டாலும் அவரது இனிய குரல் அந்தப் பாடலை கேட்க வைத்தது. ஆனால் அவர் பாடும் போது கண்களை சுருக்கி முகத்தை அஷ்ட கோணலாக்கி கொள்கிகிறார். அந்த நிகழ்ச்சி முடிந்து நான் வீட்டிற்கு திரும்பியதுபோது பொதிகை சேனலில் கண்களை சுருக்கி பாடக்கூடாது என்று சிந்தாமணி என்ற நூல் சொல்வதாக பிரபல ஆன்மிக பேச்சாளர் அ.அறிவொளி பேசிக்கொண்டிருந்தார். இருந்தாலும் பர்வதவர்த்தினியின் முகபாவனை ரசிக்கும் படியாகத்தான் இருக்கிறது. மொத்தத்தில் இந்த சம்ஸ்க்ருத தின விழா சம்ஸ்க்ருதம் தெரிந்தவர்களுக்கு நல்ல தீனியாகவும், சம்ஸ்க்ருதம் தெரியாதவர்களுக்கு ஒருவித ஏக்கத்தையும் ஏற்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் தாடி வைத்த ஒருவரை என்னிடம் அறிமுகப்படுத்தி இவர்தான் சம்ஸ்க்ருத பாரதியின் தலைவர் என்றார்கள். அவரது பெயர் எம். எம். அலெக்ஸ். ஆம் சம்ஸ்க்ருத பாரதி ஜாதியை, மதத்தை கடந்து சம்ஸ்க்ருதத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறது.

புதுவை சரவணன்

musaravanan@gmail.com

Series Navigation

புதுவை சரவணன்

புதுவை சரவணன்