வாசிப்பவருக்கு நெருக்கமான கவிதைகள்

This entry is part [part not set] of 36 in the series 20060811_Issue

வே.சபாநாயகம்


புதுக்கவிதை இயக்கத்தை முடுக்கி விட்ட சி.சு.செல்லப்பா காலத்தில் தொடங்கிய ‘புதுக் கவிதை புரியவில்லை’ என்கிற புகார் இன்னும் ஓய்ந்ததாகத் தெரியவில்லை. அன்று வார்த்தைளின் அடுக்குகளாகத் தெரிந்த கவிதைகள் இன்று மருட்டுகிற இசங்களைச் சொல்லி மேலும் கவிதை வாசிப்பவர்களை ஆர்வமிழக்கச் செய்வதாக ஆகி வருகின்றன. புதிதாக எழுதும் இளங்கவிஞர்களும் ‘புதையல் வேட்டை’ போல தாங்கள் சொல்ல
நினைப்பதை வாசகர்கள், மிக உழன்று தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டுமென்பதில் தங்களது மூத்தவர்களைப் போலவே பிடிவாதமாக இருக்கிறார்கள். ஆனால் ‘புதையல் வேட்டை’ தான் வெற்றி பெறக் காணோம்.

இப்படியெல்லாம் வாசகர்களை அலைக்கழிக்காது தமது அனுபவங்களை நேரிடையாக வாசகரிடம் சேர்ப்பிக்கும் யதார்த்தவாதிகளாக கவிஞர் இரத்தின.புகழேந்தி போல் சிலராவது இருப்பது கவிதை என்றதுமே பக்கத்தை அவசரமாகத் தள்ளிவிடச் செய்வதிலிருந்து தடுத்து சிந்திக்க வைப்பதாக உள்ளது.

இரத்தின புகழேந்தி, இன்றைய நவீனமாக்கலின் காரணமாய் வாழ்வின் எல்லா நிலைகளிலும் தென்படும் அதிர்ச்சியான மாற்றங்களை வெகு நுட்பமாய்க் கவனித்து தன் ஆதங்கத்தைக் கவிதைகளில் பதிவு செய்வதில், வெற்றி பெற்றிருப்பதை ‘நகர்க் குருவி’ என்கிற அவரது புதிய தொகுப்பில் உள்ள பல கவிதைகள் காட்டுகின்றன. அவர் பணி நிமித்தமாய் நகர்வாசியாய் ஆகிவிட்ட நிலையில் – தனக்கு வினவு தெரிந்தது முதல் தன் ஊரிலும் மக்களிடமும் மற்ற ஜீவராசிகளிடமும் பார்த்து ரசித்த பல அற்புதங்கள் இங்கே காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுடன் அதன் காரணங்களைச் சிந்திக்கிறார். தலைப்புக் கவிதையான ‘நகர்க் குருவி’ அப்படிப் பட்ட ஒன்று.

நகரில் புதிதாகக் கட்டிய வீட்டில் நுழை வாயிலுக்கு மேலே, அப்பா கொடுத்தனுப்பியப் நெற்கதிர்கள் இணைத்துக் கட்டிய தொகுப்பை கட்டித் தொங்கவிட்டிருக்கிறார். கிராமங்களில் குருவிகள் அதைத் தேடிவந்து நெல்மணிகளைக் கொத்தும் அழகை ரசித்திருக்கிறார். இங்கே நகரத்தில் தென்படும் குருவிகள் எதுவும்- ‘நெல்காய்ச்சி மரம்’ பற்றி வியக்கும் நகரத்து சிறுவர்களை போலவே நெற்கதிர்களைப் பார்த்தும் கண்டு கொள்ளாமல் போகிற விசித்திரத்தைப் பார்க்கிறார். மரங்களையெல்லாம் அழித்து காங்கிரீட் காடுகளாக்கி விட்ட நிலையில், அங்கு மரத்தில் வாழ்ந்தால் அல்லவா குருவிகளுக்கு நெற்கதிரைக் கொத்தித் தின்ன ஆசை வரும்?

‘புதுவீட்டில் ……………..அப்பா பின்னிக்கொடுத்த/ நெற்கதிர்களை/ வளையத்தில் தொங்கவிட்டு/ கண்காணிக்கையில் ………………../ முற்றம் வரை வந்து/ ஏமாந்து திரும்பும் / தவிட்டுக்குருவிகள்’ – என்பது படிக்கிறவர்க¨ளை ‘நவீனமயமாக்கலின் விபரீதம்’ எத்துணை யதார்த்தமாகப் பிரக்ஞை கொள்ள வைக்கிறது?

பொருளாதார வளர்ச்சியின் வேகத்தில் உயிர் ஆதாரங்கள் அழிபடும் சோகத்தை சமூகப் பரிவுணர்வுடன் சொல்கிறது ‘ஊற்றுக்கண்’ என்கிற கவிதை. ‘கால்நடைகளின்/ உரும நேர/ உயிர்த்தண்ணீர், ஆடு மேய்க்கும் சிறுவர் அதன் ஆதி தேடி/ தாகம் தணிப்பர், அந்த ஆற்று-ஊற்றுநீர்க் கண்களை, ஆலைக்குக் கரும்பேற்றிச் செல்ல அமைத்த செம்மண் சாலை, குருடாக்கித் தொலைத்த சோகத்தைச் சொல்லும் கவிதை இது.

மக்கள் தொகைப் பெருக்கம் காரணமாய், நாட்டில் எங்கேபார்த்தாலும் மக்கள் கால்கடுக்க நாள் முழுதும் ஏதாவது ஒன்றுக்காய் வரிசையிட்டு நிற்கிற பரிதாபத்தை ‘நிரல்’ என்கிற கவிதையில் பார்க்கிறோம்.

‘நாட்டின் எதிர்காலத்தை/ கைகளில் ஏந்தி நின்றனர் வரிசையில்/ சத்துணவுக் கூடத்தின் முன்’, அவர்களே வளர்ந்தபின் சுகாதார நிலயங்களின் முன், திரையரங்குகளில், பயணச் சீட்டு வாங்குமிடத்தில், ரேஷன் கடைக்கு முன், ஓட்டுச் சாவடியில், இலவச வேட்டி சேலை வழங்குமிடத்தில், அமெரிக்கத் தூதரகத்தின் முன் காத்து நிற்பவர்கள் எல்லோரும் ‘இந் நாட்டு மன்னர் தான்’ என்று புதுமைப் பித்தனைப் போலப் பகடி செய்கிறது இக்கவிதை.

பல்லிகள், மூஞ்சூறுகள் போன்றவைகள் தரும் தொலைக்கமுடியாத தொல்லைகளை ‘பல்லி’ என்கிற கவிதையில் நகையுணர்வுடன் சித்தரிக்கிறார் கவிஞர். ‘நாம் முதன்முதலாக/ அடிவைக்கும்போது/ தம் இருப்பைச் சொல்லி/ நம்மை வரவேற்கின்றன/ அன்று முதல்/ நம்மை மேய்க்கத் தொடங்கி விடுகின்றன’. எத்தனை அனுபவபூர்வமான எவருக்குமான யதார்த்தம்!

பார்வை படுமிடமெல்லாம் பரிவுணர்வும் பச்சாதாபமும் கவிஞருக்கு ஏற்படுவதை பனையும் பச்சைக் கிளிகளும்’, ‘ஒரு இறுதிச் சடங்கு’, ‘ஓணான்’ போன்ற கவிதைகளில் பார்க்கிறோம். ‘குழந்தை மனிதனின் தந்தை’ என்கிற ஆங்கிலக் கவிஞனின் அதே புரிதலை இவரது குழந்தைகளை மையமாகக் கொண்ட, இத் தொகுப்பிலுள்ள அனுபவிக்க முடிகிறது.

– இப்படி தன்னைச் சுற்றியும், தன் சுயானுபவப் பாதிப்பிலும், தன் மக்களிடம் காணும் சாதீயம் போன்ற சிறுமைகளிலும், அரசியலிலும் காணும் ‘பொதுவான நம்பிக்கை வரட்சி’யை அனேகமாக எல்லா கவிதகளிலும் சித்தரிக்கிறார் புகழேந்தி. எளிய சொல்லாளுமைகள் கொண்ட, சமூகப் பிரக்ஞையும் சமூக அக்கரையும் கொண்ட, அலட்டிக் கொள்ளாத- தன் மேதைமையைப் பறைசாற்றாத, அடக்கி வாசிக்கிற, எளியவர்க்கும் புரிகிற – லகுவான கவிதைகளாக இருப்பதால் இவரது கவிதைகள் வாசிப்பவரின் மனதுக்கு நெருக்கமானவை ஆகின்றன. இனி இவரது பெயர் பார்த்ததும் விரும்பிப் படிக்கத் தூண்டுவதாக அமைந்துள்ளது இத்தொகுப்பு.

நகர்க் குருவி – கவிதைத் தொகுப்பு – இரத்தின.புகழேந்தி – மருதா வெளியீடு – விலை. 60 ரூ.
———————-

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்