கோவா – கூடியாட்டம் – குட்டிச் சாத்தான்(மஞ்சரி ஃபிப்ரவரி 1955 – பகுதி 2)

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

இரா முருகன்


1955 இந்தியாவின் பகுதியாகக் கோவா இல்லை. அதற்கு இன்னும் ஏழு ஆண்டு காத்திருக்க வேண்டியிருந்தது. ஒரு அமெரிக்கப் பத்திரிகைக்கு ஜவஹர்லால் நேரு அளித்த பேட்டியிலிருந்து ஃபிப்ரவரி 55 மஞ்சரியில் எடுத்துப் போட்டிருப்பது இது –

****

நேரு சொல்கிறார்-

சுதந்திரமாக மக்கள் ஓட்டுப் போடத்தக்க நிலை கோவாவில் இல்லை. சமீபத்தில் தான் கோவாவில் பிரபல சர்ஜன் ஒருவர், ‘கோவா போர்ச்சுகல் நாட்டின் பகுதி அல்ல ‘ என்றார். அடுத்த நாளே அவரைக் கைது செய்து நாடு கடத்தி லிஸ்பன் நகருக்கு அனுப்பி விட்டார்கள். ஜனங்கள் ஒரேயடியாகப் பயந்து கிடக்கிறார்கள். சுதந்திரமாய் அபிப்பிராயம் சொல்ல அவர்களால் முடியாது. போர்ச்சுக்கீசியரிடம் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்பதும் சாத்தியம் இல்லை. அதற்கு நாங்கள் எப்போது முயன்றாலும், என்றோ பதினாறாம் நூற்றாண்டில் போப் போட்ட ஒரு கட்டளையை ஆதாரம் காட்டி, கோவா தங்களுடையதுதான் என்று அவர்கள் வாதிக்கிறார்கள். ஆனால் காலக்கிரமத்தில் கோவா இந்தியாவோடு சேர்ந்துவிடும். ஏனென்றால் கோவாவின் பொருளாதார வாழ்வு இந்தியாவைச் சார்ந்திருக்கிறது. அது ஒரு தனிக் காலனியாக நிலைக்க முடியாது.

****

வடமொழி அறிஞர் கே.பி.நாராயண பிஷாரடி ‘கூடியாட்டம் ‘ பற்றி மாத்ருபூமி கோழிக்கோடு பதிப்பில் எழுதியிருக்கும் கட்டுரை ஐம்பது வருடத்துக்கு முந்தைய மஞ்சரியில் மொழிபெயர்ப்பாகியுள்ளது.

தேர்ந்த ரசிகரான பிஷாரடி கூடியாட்டம் என்ற வடமொழி நாடகத்தை நுணுக்கமாக ரசித்து எழுதியிருக்கும் அழகே தனி. சாக்கியார் ஒற்றை நபராகக் கூத்தம்பலம் ஏறி ஐந்து நாள் தொடர்ந்து ஆடும் ராமாயணக் கதை பற்றிய கட்டுரை இது. திருச்சூர் வடக்கநாத க்ஷேத்ரத்தில் நடந்த ‘வாலிவதாங்கக் கூடியாட்டம் ‘ பற்றிய வர்ணனையிலிருந்து –

****

ஆட்டம் தொடங்கியபோது இரவு சுமார் ஒன்பது மணியிருக்கலாம். கவியின் உள்ளம்போல் விசாலமும், அழகும் வாய்ந்திருந்தது கூத்தம்பலம் (கூத்தாடும் இடம்). மிழவு, குழித்தாளம், கொம்பு, குறுங்குழல், சங்கு இந்த வாத்தியங்களின் இனிய ஓசை ஆகாயத்தில் அலை மோதிக் கொண்டிருந்தது. குலைவாழை, குருத்தோலை இவற்றைக் கொண்டு அலங்கரித்த ஒரு மேடை. அதில் நிறபற (பறை என்பது சுமார் ஏழு பட்டணம் படி கொள்ளுமளவு பாண்டம். அதில் நெல்லைக் குவித்து வைப்பதை நிறபற என்கிறார்கள்.), அஷ்ட மாங்கல்யம் இரண்டையும் வைத்துப் பெரிய குத்துவிளக்கு ஒன்றையும் ஏற்றி வைத்திருந்தார்கள்….

விளக்கின் முன்பக்கம் பிடித்திருந்த திரை சட்டென்று விலகியது. கண்ணைக் கவரும் நாயகனின் உருவம் அங்கே தோன்றியது….

தீபத்தை நோக்கியிருந்த அந்த நாயகனின் கண் கோதண்டம் தரித்த அவனுடைய இடது கையின் பக்கம் ஒரு நிமிஷத்துக்கெல்லாம் திரும்பியது. வாத்தியங்களின் தாளத்தை ஒட்டி ரொம்ப மெதுவாக அந்த வில்லின் நடுவிலிருந்து மேற்புறமும் கீழ்ப்புறமும் பார்த்தது; மீண்டும் தீபச் சுடரிடையே திரும்பிச் சென்றது. பிறகு இரண்டு நிமிட நேரம் அசைவற்றிருந்தது. அதன்பின் வலக்கையில் இருக்கும் பாணத்தின்மீது திரும்பியது. அடி முதல் நுனி வரையிலும் நுனிமுதல் அடிவரையிலும் அதைப் பார்த்தது. மீண்டும் தீபத்துக்குச் சென்றது. அப்புறம் ஒரு நிமிஷம் அந்த முகத்தில் சந்தோஷம் மெல்ல மெல்லப் பொங்கியது. கண், புருவம், கை, உடல், தலை எல்லா உறுப்புகளும் ஒருதடவை சுழன்றன. அந்தக் காட்சியிலே வீர ரசம் அலைமோதியது. ஏழு தேக்கு மரங்களையும் ஒரே பாணத்தால் துளைத்துப் பெருமை பூண்டிருக்கும் ராமனைத்தான் நேருக்கு நேரே நான் இந்த வடிவத்தில் கண்டேன்.

****

55ம் வருடம் இலங்கையில் பேரின வாதம் எழவில்லையோ அல்லது அடங்கியிருந்ததோ தெரியவில்லை. ஆனால், கொழும்புவிலிருந்து வெளியான ஸ்ரீலங்கா என்ற தமிழ்ப் பத்திரிகை வைத்திருந்த நம்பிக்கை மனதைக் கனக்க வைக்கிறது.

அக்டோபர் 54-ல் அந்தப் பத்திரிகையில் சிங்களவரின் ‘ஏர் பூட்டல் ‘ விழா பற்றிய கட்டுரை வெளிவந்திருக்கிறது.

‘தமிழ்ப் பண்பாடும் சிங்களப் பண்பாடும் எவ்வளவு ஒத்திருக்கின்றன! ‘ என்று வியந்து குறிப்பு எழுதி மஞ்சரி மறுபடி வெளியிட்டிருக்கும் அந்தக் கட்டுரை இப்படி முடிகிறது –

****

நாடு சுதந்திரம் பெற்றதும் நம் தலைவர்கள் மக்களை வேளாண்மையில் ஊக்குவிக்கத் திட்டம் வகுத்து வருகிறார்கள். மினிடே, கல்லோயா போன்ற அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்ததோடல்லாமல், பண்டு பண்புடன் திகழ்ந்த ஏர்ப்பூட்டு விழா, நாற்று நடுகை விழா போன்றவற்றையும் ஆரம்பித்து வருகிறார்கள். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதன்முதலாக 8-9-54ல் ஏர்ப்பூட்டு விழா ஒன்று அக்மீமலை என்ற இடத்திலே அதிவிமரிசையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் கவர்னர் ஜெனரல் சர் ஒலிவர் குணதிலக கலந்துகொண்டார். முதலில் தெய்வங்களுக்குப் பூசை நடத்தி, சுபவேளையில் வெண்பட்டு உடுத்து, கவர்னர் ஜெனரல் வயலில் இறங்கி மக்களின் கரகோஷங்களுக்கு இடையே ஏர்பிடித்து உழுதார். மறைந்த பண்பு அன்று பரிணமித்தது.

****

சர் ஒலிவர் குணதிலக உழ ஆரம்பித்தது இன்னும் தொடர்கிறது போல – நாற்றும், பயிரும், கதிரும் எழுந்தாலும் எல்லாவற்றையும் சேர்த்து வீழ்த்தி உழுதுகொண்டேதான் இருக்கிறார்கள்.

அராபியரின் மொழிப்பற்று பற்றி ஃபிப்ரவரி 55 மஞ்சரியில் ஒரு துணுக்குச் செய்தி –

****

பிற நாட்டினருக்குச் சிற்பம், ஓவியம், சங்கீதம் இவை எல்லாம் எவ்வளவு மதிப்பரியவையோ அவ்வளவு மதிப்பரியது அராபியருக்கு மொழி.

ஒட்டகம் என்ற ஒரே பிராணியையோ, வாள் என்ற ஒரே ஆயுதத்தையோ குறிப்பதற்கு உள்ள 100 சொற்களும் அராபியனுக்குத் தெரியும். மிகச் சிக்கலான வாக்கியங்களெல்லாம் அவன் வாக்கிலே வெளிவரும். அதிலே அவனுக்குப் பெரிய இன்பம். சின்னஞ்சிறு வயது முதலே அழகான சொற்களை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். தன் குழந்தைகள் இலக்கணப் பிழையோடு பேசினால் பெடுவின் ஜாதித் தாய் கண்டிப்பாள்.

வெவ்வேறு அராபியப் பழங்குடிகளுக்கும் தனித்தனியே சொந்தமாகக் கவிஞர் உண்டு. இரண்டு பழங்குடி மக்கள் கூட்டத்துக்கு இடையே போர் மூளுமானால், அந்த இரண்டின் கவிஞர்கள்தான் முதலில் வெளியே வந்து, எதிர் எதிரே நின்றுகொண்டு, தங்கள் கூட்டத்தின் பெருமைகளை எடுத்தோதி, எதிரிகளின் குறைகளை விளக்கிப் பழிப்பார்கள். சில சமயம் எந்தக் கூட்டத்தின் கவிஞர் தோற்றாரோ அந்தக் கூட்டம் வாள் எடுத்துப் போரிடாமலே போர்க்களத்தை விட்டுப் பின்வாங்கியதும் உண்டு.

****

இங்கே மட்டும் இந்த முறை இருந்தால் இந்தியா முழுவதையும் நாம் தான் ஆண்டு கொண்டிருப்போம். சுனாமியே கேட்டு வாலைச் சுருட்டி ஓடும் கவிப் பெருக்காச்சே.

சென்னையிலிருந்து வெளியான ‘பாரதி ‘ தெலுங்குப் பத்திரிகையில் ‘க்ஷேத்ரக்ஞர் பதங்கள் ‘ பற்றி பி. கணபதி சாஸ்திரி எழுதிய கட்டுரையும் சுவையானது. அதையும் மஞ்சரி பிரசுரம் செய்திருக்கிறது.

****

க்ஷேத்ரக்ஞர் 17-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர். அன்னமையவின் வம்சத்தாரால் தோன்றிய பத இலக்கியம் க்ஷேத்ரக்ஞரின் காலத்தில் நல்ல பக்குவம் பெற்றுப் பூரண உருப் பெற்றுவிட்டது.

சிறந்த பத அமைப்பில் சங்கீதம், சாகித்தியம் இரண்டும் ஒன்றோடொன்று கைகோர்த்துக்கொண்டு, ஒன்றை ஒன்று பற்றிக் கொண்டு, ஒரு புதிய உருவத்துடன் விளங்கும். கீழே காணப்படும் க்ஷேத்ரக்ஞரின் இந்தப் பதத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு க்ஷேத்ரக்ஞர் பதம் –

சாவேரி – ஆதி

(தோழியின் புத்திமதி)

பல்லவி

தாலி மொக்கரி கைன வந்தா –

ஓசெவியரோ

அநுபல்லவி

லோலாக்ஷி முவ்வ கோபாலுனிகி

நீரு மாடலைதே – (தாலி)

சரணம்

வாடலுக நீவலுக

வசமே நீகை திருகு

லாடி சாலு நன்னட்

லுன்னதி எவருமெத்துரே

கூடக மீரிட

லுன்னதி நேஜெல்லமீகு

கோபமு முக்கு

லுன்னதி செலியரோ – (தாலி)

கருத்து – பொறுமை ஒருவருக்காவது வேண்டாமா ? ஏ மங்கையே! அலைகின்ற கண்களை உடையவளே! முவ்வ கோபாலனுக்கும் உனக்கும் சண்டையானால், பொறுமை வேண்டாமா ? அவன் கோபித்துக் கொண்டால் நீ கோபித்துக் கொள்ளலாமா ? உங்களுக்காக நடந்து நடந்து எனக்குப் போதுமென்றாகி விட்டது. நீங்கள் சேர்ந்து கொள்ளாமல் இப்படி இருப்பதை யார் மெச்சுவார்கள் ? என்னால் முடியாது, உங்கள் இருவருக்கும் கோபம் மூக்கிலேயே இருக்கிறது பெண்ணே.

****

எல்லா வகைப் பெண்களோடும் கூட விலைமாதரும் ஸ்ரீகிருஷ்ணனின் நாயகிகளாக பதங்களில் வருவதாகச் சொல்கிறார் சாஸ்திரி.

விலைமாதர்களின் கூட்டம் ஒன்று பண்டரிபுரம் செல்வது பற்றிய அருண் கொலட்கரின் மராத்திக் கவிதைத் தொகுப்பு, குறிப்பாக ராதையை விலகிக்கொள்ளச் சொல்லிவிட்டு, கண்ணனின் அட்டை உருவத்தோடு புகைப்படம் எடுத்துக்கொள்பவள் பற்றிய கவிதை நினைவு வருகிறது – இரண்டு வருடம் முன்னால் நான் இணையத்தில் இதை மொழியாக்கியிருப்பதைத் தேடிக்கொண்டிருக்கிறேன் இன்னும்.

55-ம் வருடம் சென்னை மூணு ஜெனரல் பாடர்ஸ் ரோடிலிருந்து ஃப்ரீ இந்தியா என்ற ஆங்கிலப் பத்திரிகை வெளிவந்திருக்கிறது. அந்தக்கால ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு லட்சணமாக ஆவடி காங்கிரஸில் அக்ராசனர் பிரசங்கம் பற்றியோ, அந்தக்கால யூகோஸ்லேவியாவின் அதிபர் மார்ஷல் டிட்டோ ரங்கூனிலிருந்து கப்பலில் சென்னை வந்து சேர்ந்தது பற்றியோ (செய்தி உபயம் தி ஹிந்து – ‘ஐம்பது வருடத்துக்கு முந்திய ஹிந்து ‘ பகுதி 22-1-2005) செய்தி வெளியிடாமல், பில்லி சூனியம் குறித்து படு சீரியஸாகக் கட்டுரை எழுதியிருக்கிறார்கள்.

‘விஷயம் எவ்வளவு தூரம் உண்மையோ தெரியவில்லை; கேட்க மிக்க ரசமாயிருக்கிறது ‘ என்ற குறிப்போடு மஞ்சரி ஃபிப்ரவரி 55 இதழில் இந்தக் கட்டுரையை மொழிபெயர்த்துப் போட்டிருக்கிறார்கள்.

‘பேய் பிசாசில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் பயமாக இருக்கிறது ‘ என்று எழுதிய புதுமைப்பித்தன் காலத்து மஞ்சரி ஆசிரியர் தி.ஜ.ரவும் அதே கருத்துத்தான் கொண்டிருந்தாரோ என்னமோ. (அமானுஷ்யம் பற்றி தி.ஜ.ர எழுதிய கட்டுரையை வேறொரு சந்தர்ப்பத்தில் படித்த நினைவு இருக்கிறது. தன் தமக்கை மகளான சிறுமி பெரியம்மை பாதித்துக் கிடந்தபோது ஒரு நடுராத்திரி உடம்பு முழுக்க அம்மைக் கொப்புளங்களோடு தன் அறையில் வந்து நின்று தூக்கத்திலிருந்து எழுப்பியதையும் அவள் மரணத்தையும் பற்றி எல்லாம் உணர்ச்சியோடு சொல்லியிருப்பார் அதில்.)

ஃப்ரீ இந்தியாவில் ஒய்.ஏ.ஸாம் எழுதிய கட்டுரையில் மலையாள மந்திரவாதிகளைப் பற்றிச் சொல்கிறார். இதில் என்னைக் கவர்ந்த விஷயம், நூறு வருடத்துக்கு முந்தைய இந்த மந்திரவாதிகள் எல்லோரும் யட்சிணிகளையும் குட்டிச் சாத்தான்களையும் பழக்கி டிரைவர், தோட்டக்காரன், சமையல் போல் ரொட்டான் வேலைகளுக்கு வைத்துக் கொண்டிருந்தார்கள் என்பது தான்.

****

தெற்கு திருவிதாங்கூர்ப் பகுதி பள்ளியடி சாமிவில்லை ஆசான் ..

அவர் பாட்டுக்கு வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பார் ஆனால் கண்ணுக்குத் தெரியாத யட்சிணியோ என்னவோ அவருடைய மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு போய்வரும்.

அவர் காலத்திலேயே வேலு ஆசான் என்ற மந்திரவாதி சிறிது தூரத்திலிருந்த மெக்கா மண்டபம் என்ற இடத்தில் வசித்து வந்தார்.

ஒரு நாள் இரவு வேலு ஆசானும் அவருடைய குடும்பத்தாரும் நன்றாக உடுத்துக்கொண்டு ஒரு கல்யாணத்துக்குப் புறப்பட்டுப் போனார்கள். கல்யாண வீடு சற்றுத் தூரத்தில் இருந்தது. பாதிவழியில் ஜனசந்தடி இல்லாத ஒரு வெட்டவெளிப்ப்பக்கம் வரும்போது சில திருடர்கள் இவர்களை மடக்கிக்கொண்டார்கள். உடம்பிலுள்ள நகை, நட்டு, உடை எல்லாவற்றையும் கழற்றினால்தான் ஆச்சு என்று மிரட்டினார்கள். ஆசானும் அவருடைய குடும்பத்தினரும் பதில் பேசாமல் தங்களிடம் இருந்ததையெல்லாம் அந்தத் திருடர்களிடம் கொடுத்துவிட்டார்கள்.

ஆண்கள் கோவணத்தோடும், பெண்கள் துண்டுகளைப் போட்டு உடம்பை மூடிக்கொண்டும் கல்யாண வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். இந்தக் காட்சியைப் பார்த்ததும் கல்யாண வீட்டார் அசந்துவிட்டார்கள். புதுத் துணியும், புடவைகளும் உடுக்கச் சொல்லிக் கொடுத்தார்கள். விஷயம் என்ன என்று விசாரித்தார்கள். வேலு ஆசான் நடந்ததைச் சொல்லி முடிப்பதற்குள் திருடர் கூட்டமே அவர்களைத் தேடி வந்து விட்டது. ‘தெரியாமல் செய்துவிட்டோம். மன்னித்து விடுங்கள். எங்களை இந்த யட்சிணிகளிடமிருந்து மீட்டால் போதும் ‘ என்று கெஞ்சினார்கள்…

வேலு ஆசானின் மனைவியும் இந்த வித்தையில் தேர்ந்தவள். மிகவும் கெட்டிக்காரி. எப்போதாவது வீட்டில் ஆசான் ரகளை செய்தால் அவள் மந்திரம் ஜபித்து சில சூட்சும வேலைகள் செய்து அவரை உடனே அடக்கி வழிக்குக் கொண்டுவந்து விடுவாள்.

****

இதில் கடைசிப் பகுதியைக் கட்டாயம் நம்பலாம். வேலு ஆசானின் மனைவி ஜபித்த மந்திரத்தைத் தலையணை மந்திரம் என்றும் சொல்வதுண்டு.

இரா.மு

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்