வெங்கட்ரமணனின் குவாண்டம் கனி

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

அ.முத்துலிங்கம்


தமிழ் நாட்டில் இருந்து வந்த பிரபல எழுத்தாளர் ஒருவர் ஒருமுறை என்னிடம் சொன்னார் ‘எனக்கு விஞ்ஞான அறிவு இல்லை. பள்ளிக்கூடத்தில்

படித்து பட்டம் வாங்கியதும் கிடையாது. ஆனாலும் ஐஸாக் அஸ’மோவின் வேதியியல் கட்டுரை ஒன்றைப் படித்தேன். அது எனக்கு முற்றிலும் விளங்கியது.

இது எப்படி சாத்தியம் ? தமிழில் இப்படி யாரும் எழுதுகிறார்கள் இல்லையே ‘ என்றார். நான் ‘ஏன் இல்லை, வெங்கட்ரமணன் என்று ஒருவர் திண்ணையில்

எழுதி வருகிறாரே. நீங்கள் படித்தது இல்லையா ? ‘ என்று கேட்டதோடு ற்காமல் அவருடைய கட்டுரை ஒன்றையும் படிக்கக் கொடுத்தேன். அவர் அதைப்

படித்துவிட்டு அப்படியே அசந்துபோனார். இது நடந்தது 2000ம் ஆண்டு.

அப்பொழுது நான் கென்யாவில் இருந்தேன், வெங்கட்ரமணன் யப்பானில் இருந்தார். ஆனாலும் எங்களுக்குள் மின்னஞ்சல் தொடர்பு இருந்தது. ஒருவர்

முகத்தை ஒருவர் பார்க்காவிட்டாலும் அவருடைய விஞ்ஞானக் கட்டுரைகளை அவ்வப்போது படித்துவிட்டு பாராட்டி எழுதுவேன்.

சமீபத்தில் இந்தக் கட்டுரைகள் எல்லாம் தொகுக்கப்பெற்று ஒரு புத்தகமாக வந்திருக்கிறது. தனித் தனிக் கட்டுரைகளாகப் படித்தபோது கிடைத்த

திருப்தி வேறு ஆனால் புத்தக ரூபமாக பார்த்தபோது கிடைத்த சந்தோசமே தனி. கட்டுரைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவும், ஒன்றையொன்று

ரவி புரிந்துகொள்ள உதவுவதாகவும் அமைந்திருக்கின்றன. குவாண்டம் கனியிலிருந்து கைப்பிடியளவு கனிவரை, மரபு மாற்றப்பட்ட உணவிலிருந்து

மின்புத்தகங்கள்வரை, யாகூவிலிருந்து நகலாக்கம்வரை அறிவியலின் பல எல்லைகளையும் தொடும் கட்டுரைகள் அறிவுக்கு விருந்தாகக் கிடைக்கின்றன.

முற்றிலும் பரிச்சயமில்லாத ஒரு புதிய உலகத்தை காட்டுவதாக இவை அமைந்திருக்கின்றன.

அறிவியலில் இதற்கு முன்னர் தமிழில் கட்டுரைகள் எழுதப்படவில்லையா ? ஏன் இல்லை. ஆனால் வெங்கட்ரமணனின் இந்தக் கட்டுரைகள் முழுக்க

முழுக்க வித்தியாசமானவை. அவை நுனிப்புல் மேயும் தன்மையானவை அல்ல. எடுத்துக்கொண்ட விஷயத்தை ஆழமாக நோக்குபவை. ஒரு அறிவியல்

மாணவனின் நுட்பமான கேள்விகளுக்கான பதில்களைக் கொண்டவை. இவற்றின் வீச்சு அகலமானது. ஆனால் அதே சமயம் விஞ்ஞான அறிவு

இல்லாதவர்களுக்கும் புரியும்படியாக எளிய தமிழில் எழுதப்பட்டவை. குறைந்த பட்சம் அவர்களுடைய ஆர்வத்தை தூண்டுபவை.

தமிழில் இவை முன்னோடி என்று கருதுவதற்கு சில காரணங்களைச் சொல்லலாம்:

1) அறிவியலின் சிக்கலான பிரச்சனைகளை, கண்டுபிடிப்புகளை ஆழமாகச் சொல்லுபவை.

2) விஞ்ஞான அறிவு இல்லாதவர்களுக்குகூட புரியும்படியாக இலகுவான நடையில் எழுதியிருத்தல்.

3) மற்றக்கட்டுரைகள் போல விஞ்ஞானப் பதங்களை அப்படியே ஆங்கிலத்தில் தந்து வாசகரை குழப்பியடிக்காமல் தேர்ந்த பொருத்தமான தமிழ்

வார்த்தைகளை பயன்படுத்துதல்.

4) பொருளின் கடுமை வாசகருக்கு களைப்பு ஏற்படுத்தாமல் நகையுணர்வோடு அவற்றை விளக்கிச் சொல்லல்.

5) வார்த்தைச் சிக்கனம். திருப்பிச் சொல்லாமல் அளவோடு விளங்கப்படுத்துதல்

6) தற்பொழுது உலகில் ஏற்படும் மாற்றங்களை, கண்டுபிடிப்புகளை சுடச்சுட தருதல்.

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

கனி பாவிப்பாளர்களை குலை நடுக்கவைக்கும் ஒரு குழு இருக்கிறது. மற்றவர்களுடைய கனிகளை நாசம் செய்வது இவர்கள் தொழில்.

என்னுடைய கம்புயூட்டருக்குள் இவர்கள் இரண்டுமுறை புகுந்து என் தரவுகளை எல்லாம் அழித்துவிட்டார்கள். என்னுடைய முகம்கூட இவர்களுக்கு

எப்படி இருக்கும் என்று தெரியாது. என்னை இல்லாமல் அழித்துவிடுவதுபோல இவர்கள் செயல் இருந்தது. மற்றவர்களுக்கு இன்னல் கொடுத்து அவர்கள்

அவஸ்தையில் இன்பம் கொள்வது அவர்களுக்கு பிடிக்கும். இதனால் அவர்களுக்கு ஒரு சதம்கூட பிரயோசனமில்லை. இவர்களை hackers என்று

சொல்வார்கள்.

ஆனால் வெங்கட்ரமணனின் கட்டுரையைப் படித்தால் இவர்களில் இரண்டு வகை இருப்பது தெரியவரும். Hackers என்றால் தமிழில் கொந்தர்கள்;

இவர்கள் நலம் விரும்பிகள். Crackers என்றால் பிளவர்கள்; இவர்கள் தீயவர்கள். மற்றவர்களை நாசப்படுத்துவதே இவர்களின் குறிக்கோள். மாறாக

கொந்தர்கள் அதி புத்திசாலிகள். செய்வன திருந்தச் செய்து உன்னதத்தை தேடுவதே அவர்களின் லட்சியம். கம்புயூட்டர் நுட்பத்தின் இன்றைய அதி உச்ச

வளர்ச்சிக்கு அவர்களே காரணம். அவர்கள் இல்லாமல் மின்னஞ்சல் இல்லை; கனிகள் இல்லை; இணையம் என்ற மாபெரும் தொழில்நுட்ப சாத்தியம்

இல்லை. இன்றைக்கு எங்கள் வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்திருக்கும் தகவல் பெருவெள்ளம் இல்லை. இதற்கெல்லாம் காரணம் கொந்தர்கள்.

‘கொந்தரைப் போற்றுதும் ‘ என்று கட்டுரையை முடிக்கிறார் வெங்கட்ரமணன்.

ஆனால் இந்த தொகுப்பில் இருக்கும் அத்தனை கட்டுரைகளுக்கும் சிகரம் வைத்ததுபோல அமைந்திருப்பது ‘காமஞ் செப்பாது கண்டது மொழிமோ ‘

என்ற கட்டுரை. நான் படித்த பல அறிவியல் கட்டுரைகளில் இது என்னை மிகவும் கவர்ந்தது. அது சொல்ல வந்த விடயமும் அதைச் சொன்ன முறையும் மிக

சிறப்பாக அமைந்திருந்தது. ஒரு அறிவியல் கட்டுரையை எப்படி எழுதவேண்டும் என்பதற்கு இது சிறந்த ஓர் உதாரணம் என்றுகூடச் சொல்லலாம்.

இறையனாருடைய ‘கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி ‘ பாடலுடன் கட்டுரை தொடங்கி உண்மையை கண்டடையும் அறிவியல் வழி என்ன

என்பதை ஆராய்கிறது:

1) பிரபஞ்சத்தின் ஒரு கூற்றினை உற்று நோக்கல் (observation)

2) அதைப்பற்றி ஒரு தற்காலிக விளக்கத்தை உருவாக்கல். இதற்கு கற்பிதம் (hypothesis) எனப்பெயர்.

3) அந்தக் கற்பிதத்தைக் கொண்டு பிரபஞ்சத்தின் வேறொன்றை அனுமானித்தல் (prediction)

4) அந்த அனுமானத்தை ஆய்வுகளைக் கொண்டு சோதித்தல் (அல்லது/மற்றும்) மீள்காணல். அதன் முடிவுகளுக்கு ஒப்ப கற்பிதத்தை மாற்றியமைத்தல்.

5) அனுமானம் – ஆய்வுகளை திரும்பத் திரும்பச் செய்து கற்பிதத்தை சுத்திகரித்து திறமான கோட்பாடு (theory) ஆக்கல்.

6) அவ்வாறு கிடைத்த கோட்பாடை ஒரு குறிப்பிட்ட அறிவியல் விதியாக மாற்றுவது.

அறிவியல் வழி என்பது உண்மையின் ஓயாத தேடுதல். காய்தல் உவத்தல் இன்றி தேடுவதுதான் ஒரு விஞ்ஞானிக்கான பயிற்சி. உண்மை ரந்தரமானது

அல்ல. அதன் திறம் காலந்தோறும் கூர்மைப்பட்டு வருவது. அறிவியல் மெய்காணல் வழியின் அற்புதமான சக்தி. ‘கொங்குதேரும் தும்பியாய் அறிவியலார்

மெய்காண அலைகிறார்கள்; காமம் செப்பாது கண்டது மொழிதல் அவர்கள் கடமையாகிறது. ‘

நவீன அறிவியல் வளர்ச்சிக்கு மையத் தத்துவமாக இருக்கும் காய்தல் உவத்தலில்லாத மெய்காணல் முறையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட

ஒரு தமிழ் பாடல் மூலம் விளக்குகிறார் வெங்கட்ரமணன்.

தமிழுக்கு ஓர் அஸ’மோவ் கிடைத்துவிட்டார். ஒவ்வொரு கட்டுரையும் இரத்தினக் கல்போல செதுக்கி செதுக்கி ஒளிவிடும்படி அருமையான தமிழில்

எழுதப்பட்டிருக்கிறது. ஆங்கில அறிவியல் சொற்களுக்கு மிகப் பொருத்தமான தமிழ் பதங்களை காணும்போது இன்ப அதிர்ச்சி கிடைக்கிறது. பூவைத்

தேடி தும்பி அலைவதுபோல வாசகர்கள் தேடித்தேடி படிக்கவேண்டிய அவசியமான புத்தகம் இது.

குவாண்டம் கனி

வெங்கட்ரமணன்

விலை: ரூ 55.00

கிடைக்குமிடம்:

United Writers

130/2 அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை – 86

Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்