காலச்சுவடு பதிப்பகம் ஆகஸ்ட் 2002 வெளியிட இருக்கும் ‘புதுமைப்பித்தன் கட்டுரைகள்’ நூலுக்கு எம். ஏ. நுஃமான் அளித்துள்ள முன்னுரையின்

This entry is part [part not set] of 29 in the series 20020728_Issue

எம். ஏ. நுஃமான்


.3.

புதுமைப்பித்தனின் கட்டுரைகளையும் மதிப்புரைகளையும் ஒன்றாக நோக்கலாம். சிறிதும் பெரிதுமான சுமார் அறுபது கட்டுரைகளும் எழுபது மதிப்புரைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பெரும் பாலும் எல்லாமே இலக்கியம் பண்பாடு தொடர்பானவை. புதுமைப் பித்தனின் கலை இலக்கியக் கோட்பாடுகளையும் விமர்சன நோக்கை யும் நாம் இவற்றின் ஊடாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

கவிதை பற்றிப் புதுமைப்பித்தன் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். கவிதையைப் பொறுத்தவரை புதுமைப்பித்தன் அவர் காலத்தில் மேலோங்கியிருந்த புது விமர்சனத்தினதும் (ழிமீஷ் சிக்ஷீவீtவீநீவீsனீ), இரசனைக் கோட்பாட்டினதும் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தார் என்று தெரிகின் றது. இடைக்காலத் தனிப்பாடல்கள் பற்றிய நயப்புக் கட்டுரைகளில் இது தூக்கலாக வெளிப்படுகின்றது. கவிதையை இலட்சியமயப்படுத்தி மிகை உணர்வுடன் நோக்குகின்ற பார்வை இது. இங்கு கவிதை, கடவு ளின் படைப்புக்குச் சமனாக்கப்படுகின்றது. ‘கடவுள் கனவுகண்டார். இந்தப் பிரபஞ்சம் பிறந்தது. கவிஞன் கனவு கண்டான். இலக்கியம் பிறந்தது’ என்பார் புதுமைப்பித்தன். கவிதை கலையின் அரசி என் பதைப் புதுமைப்பித்தனும் வழிமொழிகிறார். கவிதையின் ஜீவநாடி உணர்ச்சி என்பதைப் பல கட்டுரைகளில் வலியுறுத்துகின்றார். அதை சங்கீதத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும் என்கிறார். ‘கவிதை மனிதனின் உணர்ச்சியில் பிறந்த உண்மை, உள்ளப் பாற்கடலில் பிறந்த அமிர்த கலசம், மனித உள்ளம் யதார்த்த (க்ஷீமீணீறீவீstவீநீ) உலகத்துடன் ஒன்றுபட்டோ பிரிந்தோ கண்ட கனவு, அது உள்ள நெகிழ்ச்சியிலே, உணர்ச்சி வசப்பட்டு வேகத்துடன் வெளிப்படுகிறது. அதுதான் கவிதை’ எனக் கவிதையை உணர்ச்சியை மையமாகக் கொண்டு விபரிக்க முனைகிறார். இதைக் கவிதை பற்றிய உணர்ச்சிக் கொள்கை என விமர்சகர் கூறுவர். தமிழில் டி.கே.சி.யிடம் மிதமிஞ்சிக் காணப்பட்ட இக்கொள்கை புனைகதையில் புதுமைகளைச் சாதித்த புதுமைப்பித்த னிடமும் செல்வாக்குப் பெற்றிருந்தமை வியப்புக்குரியது.

சிறுகதை பற்றிப் பேசும்போது புதுமைப்பித்தன் மிகவும் யதார்த்த வாதியாகவும் கலகக்காரனாகவும் இருக்கிறார். இதுபற்றி ஏற்கெனவே சற்று விரிவாகப் பேசினோம். காஞ்சனை, ஆண்மை ஆகிய நூல் களுக்கு எழுதிய முன்னுரைகளில் தன் சிறுகதைக் கொள்கை பற்றி அழுத்தமாகக் கூறியிருக்கிறார். சிறுகதை பற்றிய அவரது கொள்கைக் கும் கவிதை பற்றிய கொள்கைக்கும் இடையே நீண்ட இடைவெளி இருப்பதாக எனக்குத் தோன்றுகின்றது. இரண்டு இலக்கிய வடிவங் களுக்கும் இடையே உள்ள வேறுபாடு மட்டும் இதற்குக் காரணம் அல்ல. கவிதை பழமையான இலக்கிய வடிவம் என்ற வகையில் கவிதை பற்றிய பாரம்பரியச் சிந்தனையின் தாக்கம் நவீன எழுத்தாளர் கள் பலரிடமும் வலுவாக இருந்தது. புதுமைப்பித்தன் தன்னளவில் வித்தியாசமான கவிதைகள் பலவற்றை எழுதியிருந்தபோதிலும் கவிதை பற்றிய பார்வையைப் பொறுத்தவரை இந்த உணர்ச்சிக் கொள்கையிலிருந்து அவராலும் விடுபட முடியவில்லை. (கு. அழகிரி சாமியும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவர்).

புதுமைப்பித்தனின் கட்டுரைகள் பற்றிப் பேசும்போது 1937இல் தழுவல், மொழிபெயர்ப்பு பற்றிய விவாதத்தில் புதுமைப்பித்தனின் நிலைப்பாட்டைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. புதுமைப் பித்தன் தழுவலை முற்றாக நிராகரித்து மொழிபெயர்ப்பை மட்டும் ஆதரித்துப் பேசியிருக்கிறார். தழுவலை வெறும் திருட்டு என்று அவர் முத்திரை குத்தியிருக்கிறார். இது இன்னும் சற்று ஆழமாக விவா திக்கப்பட வேண்டிய விசயம். தழுவலில் பல வகைகள் உண்டு. புதுமைப்பித்தன் ஒருவகை பற்றி மட்டுமே பேசுகிறார். ‘அதாவது ஒரு குறிப்பிட்ட அன்னிய நாட்டுக் கதையின் முக்கிய சம்பவங்களை வைத்துக்கொண்டு ஏறக்குறைய அதைப் போல ஒரு கதையை ஷோடித் தல்’, பிற மொழிக் கதையின் ஊர்ப்பெயர், பாத்திரப் பெயர், பண்பாட்டு அம்சங்களை மாற்றி மூல ஆசிரியரின் பெயர் குறிப்பிடாமல் சொந்தக் கதை போல் எழுதுதல், இதையே புதுமைப்பித்தன் தழுவல் என்று சாடுகிறார். இலக்கியத் திருட்டு என்கிறார். புதுமைப்பித்தன் காலத்தி லும் அதற்கு முன்பும் இத்தகைய தழுவல்கள் நிறைய செய்யப்பட்டி ருக்கின்றன. கல்கியை இதற்காகப் புதுமைப்பித்தன் உக்கிரமாகத் தாக்கியும் இருக்கிறார். ஆனால், புதுமைப்பித்தனே இத்தகைய தழு வல்கள் சிலவற்றைச் செய்திருப்பது இப்போது தெரியவந்துள்ளது. புதுமைப்பித்தன் பிறர்மீது சுமத்திய திருட்டுப் பழியை அவரே சுமக்க வும் நேர்ந்துள்ளது. இந்த விவாதத்தின்போது புதுமைப்பித்தன் தன் தழுவல் விளையாட்டுகளையும் வெளிப்படுத்தியிருக்கலாம். ‘நானும் இத்தகைய தழுவல்கள் சிலவற்றை (பத்திரிகைத் தேவைக்காகச்) செய் திருக்கிறேன். ஆனால், நான் அவற்றை எனது படைப்புகள் என்றோ, நல்ல இலக்கிய முயற்சிகள் என்றோ ஒப்புக்கொள்ள மாட்டேன்’ என்று கூறியிருக்கலாம். ஆனால், புதுமைப்பித்தன் எச்சந்தர்ப்பத்திலும் தன் தழுவல் முயற்சிகள் பற்றிக் கூறியதில்லை. அதற்கு அவர் உரிமை கோர முயன்றதும் இல்லை என்பது நம் கவனத்துக்குரியது. அவற் றுக்குச் சொந்தம் கொண்டாடவோ, தன் படைப்புகளுடன் அவற்றை யும் சேர்த்துக்கொள்ளவோ அவர் விரும்பியதில்லை என்றே தோன்று கின்றது. ஆயினும் பதிப்பாளர்களின் சிரத்தையின்மையால் திருட்டுப் பழியைப் புதுமைப்பித்தனும் சுமக்க நேர்ந்தது.

மூலத்தைக் குறிப்பிடாமல் தன் சொந்தக் கதை போல் பிறமொழிக் கதை ஒன்றைத் தழுவி எழுதுவது அதனுடைய இலக்கியத் தாரதம்மி யம் எப்படி இருந்தாலும் நேர்மைக் குறைவான காரியம் என்பதில் ஐயம் இல்லை. ஆனால், மொழிபெயர்ப்புக்கும் தழுவலுக்கும் எல்லாக் காலத்திலும் இடம் இருந்தே வந்திருக்கின்றது. கம்பராமாயணம் வால் மீகியின் மொழிபெயர்ப்பல்ல. அது ஒருவகையில் தழுவலே. மூலக் கதையை எடுத்துக்கொண்டு கம்பன் தன் சொந்தப் போக்கில் அதைப் படைத்திருக்கின்றான். முற்காலங்களில் நடந்த மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் இத்தகையன என்றே சொல்ல வேண்டும். இது புதுமைப் பித்தன் கூறும் திருட்டுத் தழுவல் அல்ல. நெகிழ்ச்சியான அல்லது சுயாதீன மொழிபெயர்ப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம். மூலப் படைப்பை அல்லது அதன் ஒரு பகுதியை மறுவிளக்கம் கொடுப்பதற் காகத் தழுவுவதும் தழுவலின் பிறிதொரு வகை எனலாம். பாரதியின் பாஞ்சாலி சபதம், புதுமைப்பித்தனின் சாப விமோசனம் போன்றவை இதற்கு நல்ல உதாரணங்கள். ஒரு ஊடகத்தைப் பிறிதொரு ஊடகத் துக்கு மாற்றுவதுகூடத் தழுவல்தான். ஒரு சிறுகதை அல்லது நாவலைத் திரைப்படமாக்குவதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அவ்வகையில் சத்யஜித் ராயின் பதேர் பாஞ்சாலி ஒரு அற்புதமான தழுவல். புதுமைப்பித்தன் பாராட்டும் பாரதிதாசனின் புரட்சிக்கவியும் ஒரு நல்ல தழுவல்தான். இவற்றிலெல்லாம் மூல ஆசிரியரும் மூலப் படைப்பும் மூடிமறைக்கப்படுவதில்லை என்பதே இங்கு முக்கியமானது. புதுமைப்பித்தன் தழுவல் இலக்கியத்தைச் சாடும்போது இவற்றை அதற்குள் உள்ளடக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

புதுமைப்பித்தன் கட்டுரைகளில் எனக்குச் சற்று ரச மட்டமாகத் தோன்றுவது கல்கி பற்றிய அவரது காட்டமான கருத்துகள்தான். தீவிரமான விமர்சன எல்லைகளைத் தாண்டிச் செல்லும் எழுத்து இது. பிற்காலத்தில் தமிழகச் சிறு சஞ்சிகைகளில் வளர்ந்த வசை மரபுக்கு ஒரு முன்னோடியைத் தேட வேண்டுமானால் புதுமைப்பித்தனின் கல்கி பற்றிய எழுத்துகளைச் சொல்லலாம் என்று தோன்றுகின்றது.

புதுமைப்பித்தனின் மதிப்புரைகளில் தீவிரமான எள்ளலும் குத்தலும் ஆங்காங்கே பளிச்சிட்டாலும் அவை அவரது இலக்கியக் கொள்கை சார்ந்த, அளவுகோல் சார்ந்த உறுதிப்பாட்டின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. ஒரு மதிப்புரையாளனுக்குப் புதுமைப்பித்தன் கொடுக்கும் வரைவிலக்கணத்துக்குள்ளேயே அவர் இருக்கிறார் என்பதை அவரது பெரும்பாலான மதிப்புரைகளின் தீவிரம் வெளிக்காட்டுகின்றது. மதிப்புரையாளர்களிடம் எதிர்பார்க்க வேண்டியது பற்றி அவர் கூறு கிறார் : ‘நல்ல இலக்கியத்தைக் காணும்பொழுது அதைத் தெரிந்து கொள்ளவும் பரிச்சயம் செய்துவைக்கவும் அவனிடம் திராணி வேண் டும், அப்படியே போலியைக் காணும்போது யார் வந்து நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் அது போலி என்று சொல்லுவதற்கு நெஞ்சு அழுத்தம் கொண்டிருக்க வேண்டும்; இது போதும்.’

.4.

புதுமைப்பித்தன் எழுத்துகளின் பதிப்பு முயற்சிகள் பற்றிச் சிறிது கூற வேண்டும். அதற்கு முன்னுரையாகத் தமிழில் பதிப்பு முயற்சிகள் பற்றிச் சில வார்த்தைகள்.

தமிழில் பதிப்பு முயற்சிகளுக்கு ஒரு வளமான பாரம்பரியம் உண்டு. ஆறுமுக நாவலர், சி. வை. தாமோதரம் பிள்ளை, உ. வே. சாமி நாதையர், எஸ். வையாபுரிப் பிள்ளை போன்றோர் மூலம் தொடர்ந்த இப்பதிப்பு மரபு ஆரோக்கியமானது. பழைய ஏடுகளைத் தேடி, பல பிரதிகளுடன் ஒப்புநோக்கி, பிழைகள் நீக்கி, தகுந்த குறிப்புகளுடன் இவர்கள் பதிப்பித்த நேர்த்தியும், நேர்மையும், அவர்கள் காட்டிய அறிவுசார் அக்கறையும் இந்த ஆரோக்கியத்தின் அடிப்படை. பண்பாடு சார்ந்த கடப்பாடு அவர்களை இதில் ஈர்த்தது. அவர்களது பதிப்புகள் நம்பகமான செம்பதிப்புகள் என்பதில் இரு கருத்துகள் இல்லை.

ஆனால், கடந்த சில தசாப்தங்களில் புத்தக வெளியீடு லாபமீட்டும் வியாபாரமாக மாறிய சூழலில் பதிப்பு முயற்சியிலும் நூல் வெளி யீட்டுத் துறையிலும் பல கோளாறுகள் தோன்றியுள்ளன. மறைந்த எழுத்தாளர்களின் நூல்கள் மீண்டும் வெளியிடப்படும்போது அவை முதற் பதிப்புகளாகவே வெளிவரும் அதிசயம் இங்குதான் நிகழ்கின் றது. 1940களில் வெளிவந்த க.நா.சு.வின் நூல்கள் எல்லாம் சமீபத்தில் முதற் பதிப்புகளாக வெளிவந்ததை உதாரணமாகச் சொல்லலாம். நூலக விற்பனைக்காக இந்த உத்தி கையாளப்படுவதாகச் சொல்லப் படுகின்றது. ஆனால், இது ஒரு வரலாற்று மோசடி என்பது உணரப்படு வதாக இல்லை. பல எழுத்தாளர்களின் படைப்புகளை அல்லது கட்டு ரைகளைத் தொகுத்து வெளியிடுபவர்கள் தான்தோன்றித்தனமாக நடந்துகொள்கின்றனர். எழுத்தாளர்களின் சம்மதம் பெற வேண்டும் என்ற கடப்பாட்டுணர்வு பெரும்பாலோருக்கு இருப்பதில்லை. தகவல் பிழைகள், அச்சுப் பிழைகளோடு புத்தகங்களை வெளியிடுகிறார்கள். இதுபற்றிய அக்கறை பெரும்பாலோருக்கு இருப்பதாகத் தெரிய வில்லை. துரதிர்ஷ்டவசமாக, தமிழ்ச் சூழலில் பதிப்பித்தல் என்பது ஜீuதீறீவீsலீவீஸீரீ, மீபீவீtவீஸீரீ என்ற இருவேறு பொருள்களிலும் பயன்படுத்தப் படுவதால் பல கோளாறுகள் நிகழ்கின்றன. வெளியீட்டாளர், பதிப் பாளர் (ஜீuதீறீவீsலீமீக்ஷீ) அல்லது பதிப்பாசிரியர் (மீபீவீtஷீக்ஷீ) இருவரதும் பணிகள் வேறு. வெளியீட்டாளர் நூல்களைத் தெரிந்து, அச்சிட்டு வெளியிடு பவர். பதிப்பாசிரியர் நூலை வெளியீட்டுக்காகத் தயாரிப்பவர். பண் டைய நூல்கள் அல்லது மறைந்த எழுத்தாளர்களின் ஆக்கங்களைப் பதிப்பிக்கும்போது, இவருடைய பணி பெரிது. உ. வே. சாமிநாதையரை ஒரு பதிப்பாசிரியராக நினைத்துப் பார்க்கும்போது அவரது உழைப்பு, அறிவு நாட்டம் என்பன நம் மனதில் தோன்றும். ஆனால், தமிழ்ச் சூழலில் சில வெளியீட்டாளர்கள் தங்களைப் பதிப்பாசிரியர்களாகவும் கருதிக்கொள்வதனால் நேரும் அனர்த்தங்கள் பல. மறைந்த எழுத் தாளர்களின் நூல்கள் மனம்போன போக்கில் பதிப்பிக்கப்பபடுகின்றன. பாரதி நூல்களுக்கு நிகழ்ந்தவை நமக்குத் தெரியும். எனது அனுபவம் ஒன்றையும் இங்கு பதிவு செய்வது பொருத்தமானது.

பேராசிரியர் கைலாசபதி மறைந்த இரண்டாவது ஆண்டில் அவரது மனைவியாரின் வேண்டுகோளுக்கு ஏற்ப சித்திரலேகா மெளனகுருவும் நானும் பாரதி ஆய்வுகள் என்ற தலைப்பில் பாரதி பற்றிக் கைலாசபதி எழுதிய கட்டுரைகளை எல்லாம் தேடித் தொகுத்து, கைலாசபதியின் வேறு நூல்களில் பாரதி பற்றி இடம்பெறும் குறிப்புகள் பற்றிய விபரங் களையும் தொகுத்து, பதிப்பாசிரியர்கள் என்ற வகையில் சற்று விரி வான ஆய்வுபூர்வமான பதிப்புரை ஒன்றும் எழுதி அதை வெளியிட ஒப்புக்கொண்டிருந்த தமிழகத்தின் பிரபலமான வெளியீட்டு நிறுவனம் ஒன்றுக்கு (என்.சி.பி.எச்) அனுப்பினோம். அவர்கள் தாங்கள்தானே பதிப்பகத்தார், இவர்கள் இருவரும் எப்படி பதிப்பாசிரியர்களாக இருந்து பதிப்புரை எழுதலாம் என்று நினைத்துவிட்டார்கள் போலும். பதிப்பாசி ரியர் என்ற ஸ்தானத்தில் இருந்து எங்களை நீக்கி, நாங்கள் எழுதிய பதிப்புரையின் இறுதியில் ‘இக்கட்டுரைகளைத் தொகுத்து அருளிய திருமதி சித்திரலேகா மெளனகுரு, திரு. எம் ஏ. நுஃமான் ஆகியோருக் கும் எமது நன்றி உரியது’ என்று ஒரு வரி எழுதி, கீழே பதிப்பகத்தார் என்று போட்டதோடு எங்கள் பதிப்புரையையும் உழைப்பையும் இலகு வாகத் தமது உடைமையாக்கிக்கொண்டார்கள். இதை இட்டு அழு வதா, சிரிப்பதா, ஆத்திரப்படுவதா ? ஐயோ தமிழ்ப் பதிப்புலகே என்று அமைதி கண்டோம்.

இத்தகைய பதிப்புத் துறைக் குழறுபடிகளால் பாதிப்பு எழுத்தாள ருக்குத்தான். அப்படி மிக மோசமாகப் பதிக்கப்பட்ட எழுத்தாளன் புதுமைப்பித்தன் என்பதை அண்மைக் காலத்தில் நடைபெற்ற புதுமைப் பித்தனின் ‘இலக்கியத் திருட்டு’ பற்றிய சர்ச்சை நமக்கு உணர்த்தியது.

புதுமைப்பித்தனுடைய எழுத்துகள் அவரின் மறைவுக்குப் பின்னர் வெவ்வேறு வெளியீட்டாளர்களால் வெளியிடப்பட்டபோது பிழைகளும் தவறுகளும் மலிந்திருந்தது மட்டுமன்றி ஒரு தீவிர வாசகனுக்கு, இலக் கிய மாணவனுக்கு வேண்டிய தகவல் எதையும் தரவில்லை. உதார ணத்துக்கு ஒன்றைச் சொல்லலாம். 1954இல் ஸ்டார் பிரசுரம் புதுமைப் பித்தன் கட்டுரைகள் நூலை வெளியிட்டது. இதில் புதுமைப்பித்தனின் முன்னுரை ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இந்த முன்னுரையுடன் பார்க்கும்போது இத்தொகுப்பு புதுமைப்பித்தனே தொகுத்தது, அதை வெளியிடுமுன் அவர் மறைந்துபோனார், இப்போது ஸ்டார் பிரசுரம் அதை வெளியிட்டுள்ளது என்ற எண்ணம்தான் வாசகனுக்குத் தோன் றும். நான் அவ்வாறுதான் நினைத்திருந்தேன். இப்போது ஆ. இரா. வேங்கடாசலபதி பதிப்பித்துள்ள புதுமைப்பித்தன் கட்டுரைகளுள் இடம் பெற்றுள்ள முன்னுரையைப் பார்த்தபோது, எனக்கு ஐயம் தோன்றியது. ஸ்டார் பிரசுரம் வெளியிட்ட நூலில் இந்த முன்னுரையின் முதல் இரண்டு பந்திகள் மட்டும் உள்ளன. இத்தொகுப்பில் உள்ள முன்னுரை யில் மூன்று பந்திகள் உள்ளன. விசாரித்தபோது 1947இல் நமது இலக் கியம் என்ற தலைப்பில் வெளிவந்த புதுமைப்பித்தன் கட்டுரைகளுக்கு அவர் எழுதிய முன்னுரை அது என்று தெரியவந்தது. ஸ்டார் பிரசுரத் தார் அதன் கடைசிப் பந்தியை நீக்கிவிட்டு அதைத் தங்கள் தொகுப்பில் சேர்த்திருக்கிறார்கள். இதுபற்றி ஒரு குறிப்புத்தானும் எழுத வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றவில்லை என்பது வியப்பூட்டுகின்றது.

1953இல் ஸ்டார் பிரசுரம் வெளியிட்ட புதிய ஒளி பல குழப்பங் களுக்குக் காரணமாக அமைந்தது பற்றி வாசகர் அறிவர். புதுமைப்பித் தனின் தழுவல் கதைகளை ஆராய்ந்து பாராமல் அவரது சொந்தக் கதைகளுடன் சேர்த்து வெளியிட்டதால் வந்த குழப்பம் இது. 1988இல் ஐந்திணைப் பதிப்பகம் புதுமைப்பித்தனின் படைப்புகளை எல்லாம் நூலுருவாக்கும் முயற்சியை மேற்கொண்டது. 15 ஆண்டுகளுக்கு முன் அது ஒரு பாராட்டத்தக்க முயற்சியே. ஆவலுடன் வரவேற்றோம். ஆயினும் பதிப்பு நோக்கில் பதிப்புச் செம்மையை அவர்களும் கருத் தில் கொள்ளவில்லை. பேசிஸ்ட் ஷடாமுனி முதல் பதிப்பாகவே வெளி வந்துள்ளது. அதன் முதல் வெளியீடு பற்றிய குறிப்புகளைத் தர அவர் கள் முயலவில்லை. புதுமைப்பித்தன் படைப்புகள் முதல் தொகுதியில் (சிறுகதைகள்) புதுமைப்பித்தனின் முன்னுரை ஒன்று இடம்பெற்றுள் ளது. இது அவருடைய ஆண்மை தொகுதிக்கு எழுதிய முன்னுரை என்ற குறிப்பைத் தரவேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை. காஞ்சனைக்கு எழுதிய முன்னுரை மட்டும் தேதியுடன் தரப்பட்டுள்ளது. கதைகள் பிரசுரமான ஆண்டுகள் பற்றிய விபரம் தர வேண்டும் என்ற அக்கறை இருந்ததாகத் தெரியவில்லை. வாசகரின் உடனடித் தேவையை இத்தகைய பதிப்புகள் நிறைவு செய்யலாம். ஆனால், இலக்கிய விமர்சன, இலக்கிய வரலாற்று நோக்கிலும் ஆய்வு நோக்கி லும் இவை பயனுடையவையல்ல.

புதுமைப்பித்தன் பற்றிய அக்கறையும், வாசிப்பும், விமர்சன முயற்சிகளும் பெருகிவரும் இன்றைய சூழலில், புதுமைப்பித்தனின் எழுத்துகளுக்கு ஒரு செம்பதிப்புத் தேவை என்பது பரவலாக உணரப் பட்ட நிலையில், காலச்சுவடு பதிப்பகம் அதைக் கையேற்றது மகிழ்ச் சிக்குரியது. இன்றைய தமிழ் வெளியீட்டுச் சூழலில் க்ரியா, விடியல், காலச்சுவடு போன்ற சில வெளியீட்டு நிறுவனங்களே தரமான நூல் களைச் செம்மையாக வெளியிட வேண்டும் என்ற அக்கறை காட்டு கின்றன. ஏற்கெனவே காலச்சுவடு வெளியிட்டுள்ள புதுமைப்பித்தனின் அன்னை இட்ட தீ, புதுமைப்பித்தன் கதைகள் இரண்டும் பதிப்புத் துறையில் பெரிய சாதனைகள் என்பதில் ஐயமில்லை. ஓர் ஆய்வாளன் என்ற வகையில் இவற்றின் முக்கியத்துவத்தையும் இதற்குப் பின்னால் இருந்த உழைப்பையும் என்னால் உணர முடிகின்றது. கண்ணனின் தீவிர அக்கறையும் வேங்கடாசலபதியின் கடின உழைப்பும் இவற்றைச் சாத்தியமாக்கியுள்ளன.

புதுமைப்பித்தன் எழுத்துகளின் செம்பதிப்பு வரிசையில் இப்போது வெளிவரும் இந்த இரண்டாவது தொகுதியில் அவரது அல் – புனை கதை எழுத்துகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை தொகுக்கப் படாத சில புதிய கட்டுரைகளையும் மதிப்புரைகளையும் சலபதி கண் டெடுத்திருக்கிறார். நான்கு கட்டுரைகள் தவிரப் பிற கட்டுரைகள் எல்லா வற்றுக்கும் முதல் வெளியீட்டு விபரங்கள் கண்டறியப்பட்டு அவை காலவரிசையில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. பேஸிஸ்ட் ஷடாமுனி, கப்சிப் தர்பார், அதிகாரம் யாருக்கு ? என்பன முதல் பதிப்போடு ஒப் பிடப்பட்டுப் பிழைகள் நீக்கப்பட்டுள்ளன. ஸ்டாலினுக்குத் தெரியும் புதுமைப்பித்தனின் கையெழுத்துப் படியோடு ஒப்புநோக்கப்பட்டுத் திருத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் இது ஒரு நம்பகமான செம்பதிப்பு என்பதில் ஐயம் இல்லை.

புதுமைப்பித்தன் எழுத்துகளைத் தேடுவதில் சலபதியின் கடின உழைப்பை நான் அறிவேன். ஈழகேசரி யில் (ஆண்டுமடல், ஏப்ரல் 1938) பிரசுரமான புதுமைப்பித்தனின் ‘சினிமா உலகம்’ என்னும் தலைப்பிலான கட்டுரை ஒன்று இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. (இதன் மொழி நடையைப் பார்க்கும்போது இது உண்மையில் புதுமைப் பித்தனுடையதுதானா என்ற ஐயம் எனக்கு எழுந்தது.) இதுபோல் பழைய ஈழகேசரி இதழ்களில் புதுமைப்பித்தன் ஏதாவது எழுதியி ருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் அவற்றைத் தேடி அவர் இலங் கைக்கே வந்தார். இரண்டு நாட்கள் ஈழகேசரி யின் பழைய பக்கங்களை ஒவ்வொன்றாகப் புரட்டிப் பார்த்தார். ஒன்றும் கிடைக்கவில்லை. ஓர் ஆய்வாளன் என்ற வகையில் அது அவருக்கு ஏமாற்றம் அளிக்க வில்லை. பதிலாக ஈழகேசரி யில் புதுமைப்பித்தனின் வேறு எழுத்துகள் எதுவும் பிரசுரமாகவில்லை என்பதைக் கண்டுபிடித்த திருப்தியோடு அவர் நாடு திரும்பினார்.

இந்தத் தேடல் முக்கியமானது. இந்தத் தேடலின் காரணமாகத் தான் புதுமைப்பித்தன் கதைகள் தொகுப்புக்கு எழுதிய பதிப்புரையில் புதுமைப்பித்தன் எழுதாத கதை என்று அவர் குறிப்பிட்ட சாளரம் அவர் எழுதியதுதான், அது சிறுகதையல்ல கட்டுரைதான், பித்தன் என்பது புதுமைப்பித்தனின் புனைபெயர்களுள் ஒன்றுதான் என்பதை உறுதிப்படுத்தி அதை இப்போது இத்தொகுப்பில் சேர்த்திருக்கிறார். எனினும் ‘சாளர’த்தை ஒரு கட்டுரையாகக் கொள்வதில் எனக்குத் தயக்கம் இருக்கிறது. அது கதை, கட்டுரை என்பவற்றின் எல்லைக் கோடுகளைத் தாண்டிய எழுத்து என்று சொல்லத் தோன்றுகின்றது. திருக்குறள் குமரேச பிள்ளையை ஸ்டார் பிரசுரம் புதுமைப்பித்தன் கதை களில் சேர்த்திருக்கிறது. சலபதி அதை இக்கட்டுரைத் தொகுதியில் சேர்த்திருக்கிறார். அது நிச்சயமாகச் சிறுகதையல்ல. ஒரு நடைச்சித்தி ரம். புதுமைப்பித்தன் காலத்தில் இத்தகைய நடைச்சித்திரங்களில் சிலர் ஈடுபாடு காட்டினார்கள். திருக்குறள் குமரேச பிள்ளை யில் கட்டுரையின் குணாம்சமே மேலோங்கி இருக்கிறது. அவ்வகையில் அதை இத் தொகுப்பில் சேர்த்துக் கொண்டது பொருத்தமானதே.

காலச்சுவடு பதிப்பகம் புதுமைப்பித்தனின் எழுத்துகள் எல்லாவற் றையும் வெளியிடும் உரிமையை அவரது குடும்பத்திடம் வாங்கிய நிகழ்வு அண்மையில் பெரிய சர்ச்சைக்கு ஏதுவாக அமைந்தது. புதுமைப்பித்தனின் எழுத்துகளை நாட்டுடைமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை இதன் அடியாக எழுந்தது. புதுமைப்பித்தன்மீது கொண்ட அக்கறையே இதற்குக் காரணம் என்று தோன்றவில்லை. இதற்குப் பின்னால் வேறு அரசியல் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். புதுமைப்பித்தன் எழுத்துகள் நாட்டுடைமையாக்கப்படுவதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்க முடியாது. அவை நாட்டுடைமையாக் கப்பட்டுள்ள இன்றைய நிலையிலும் அவரின் எழுத்துகளுக்கு ஆய்வு பூர்வமான ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு செம்பதிப்பு வேண்டும் என்பதை இலக்கியப் பிரக்ஞையுடைய யாரும் மறுக்கமாட்டார்கள் என்று நாம் நம்பலாம். சிலவேளை ஒழுங்கு, செம்மை என்பவற்றைப் பாசிசத்தின் அடையாளங்களாகக் காணும் கட்டுடைக்கும் யந்திரப் பார்வையில் இதுவும் ஆபத்தானதாகத் தோன்றக்கூடும். அதுபற்றி நாம் செய்வதற்கு எதுவும் இல்லை.

புதுமைப்பித்தனின் ஏனைய எழுத்துகளும் விரைவில் செம்பதிப்பாக வெளிவர வேண்டும் என்பதே எமது விருப்பம். காலச்சுவடு பதிப்பகம் அதை நிறைவேற்றும் என்று நம்புகிறேன். புதுமைப்பித்தன் பற்றிய விருப்புவெறுப்பற்ற புறநிலையான ஆய்வுகளுக்கு அது வழிவகுக்கும்.

எம். ஏ. நுஃமான் 01.07.2002

தமிழ்த்துறை

பேராதனைப் பல்கலைக்கழகம்

பேராதனை, இலங்ை

Series Navigation

எம். ஏ. நுஃமான்

எம். ஏ. நுஃமான்