பாரதிதாசன்

This entry is part [part not set] of 29 in the series 20020728_Issue

புதுமைப்பித்தன்


பாரதியார் இன்று நமக்கு வைத்துவிட்டுப் போன சொத்துக்கள் பல. இவற்றில் முக்கியமானவற்றைக் குறிப்பிட வேண்டின் ஞானரதம், குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கனக சுப்புரத்தினம் என்ற பாரதிதாசன் என்று சொல்ல வேண்டும்.

எங்கெங்கு காணினும் சக்தியடா! – தம்பி

ஏழுகடல் அவள் வண்ணமடா

என ஸ்ரீ கனக சுப்புரத்தினம் தமது கன்னிக் கவிதையைக் கொணர்ந்து சமர்ப்பித்த பொழுது, பாரதியாரின் ‘தராசு ‘, ‘எழுக புலவன் ‘ என்று ஆசிர்வதித்தது. அன்று முதல் பாரதிதாசன் ஆகிவிட்ட ஸ்ரீ கனகசுப்புரத்தினம் பாரதி வகுத்த பாதையிலே பல அழகுக் கனவுகளை நிர்மாணித்துத் தந்திருக்கிறார். பாரிச வாய்வும், பக்கவாதமும் போட்டலைக்கும் இன்றையக் கவிதையுலகிலே, அவருடைய பாட்டுக்கள் ஒன்றுதான் நிமிர்ந்து நடக்கின்றன. எனது நண்பர் ஸ்ரீ கனகசுப்புரத்தினம் நம்மிடையே வாழ்பவர் ; நம்மைப் போல, கருத்து விசித்திரங்களும், கருத்து விருப்பு வெறுப்புகளும் ஆணித்தரமான அபிப்பிராயங்களும் கொண்டவர் ; பாரதிதாசன் கவி ; கனவுக் கோயில்களைக் கட்டி நம்மை அதில் குடியேற்றி மகிழ்கிறவர். ‘குள்ளச் சிறு மனிதர்களின் எத்து ‘ நூல் வைத்து அவரது காவிய மாளிகைகளை முழம்போட முயல்கிறவர்களுக்கு, ஸ்ரீ கனகசுப்புரத்தினம், இடை மறித்து நின்று தம் கருத்துகளைக் காட்டி மிரட்டி ஓட்டி விடுவார். பாரதிதாசனைப் பழகி அனுபவிக்க வேண்டுமெனில் ஸ்ரீ கனக சுப்புரத்தினத்தின் கருத்துக்களைக் கண்டு பயப்படுவது விவேகமல்ல ; ‘நட்ட கல்லும் பேசுமோ ‘ என்று பாடியவரை விட இவர் பிரமாதமான தவறு எதுவும் செய்துவிடவில்லை. அவருடைய காவியங்களில், ‘ராமாயணம் என்னும் பெரும் புளுகும் ‘, ‘எங்கள் மடாதிபதி ‘ ‘சைவத்தை ஆரம்பித்த ‘ விமரிசையும் இருந்தால் என்ன குற்றம் ? அவர் கவி.

கோட்டைப் பவுன் உருக்கிச் – செய்த

குத்து விளக்கினைப் போன்ற குழந்தைகளைப்

பார்க்கத் தெரியாத ரஸிகர்களைக் ‘குருடேயும் அன்று நின் குற்றம் ‘ என்று அவ்வையுடன் சேர்ந்தே ஆசிர்வதிக்க வேண்டியிருக்கிறது. பாரதிதாசன் கட்டி வைத்துள்ள கவிதைக் கோயிலிலே எத்தனையோ ஆயிரக்கால் மண்டபங்கள் உண்டு. அவற்றின் நடுநாயகமாக விளங்குவது என நான் கருதுவது, புரட்சிக் கவி என்ற அவரது பாட்டு. கதை எல்லாம் பழைய கதைதான் ; ஆனால் பழசு என்று சொல்லிவிட்டால் போதுமா ? ‘முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழம் பொருளாய் பின்னைப் புதுமைக்கும் பெயர்த்தும் பெற்றியதாக ‘ உள்ள மனுஷ இதிகாசக் கருத்து. விஷயம் தெரிந்த விவேகிகள், பில்ஹணீயத்தின் கருத்துதானே என்று அதைத் தாண்டிச் சென்று விடுவார்கள். அரசன், கவி. என்னதான் கவிராயர்கள் தம்மைப் புவியரசர்களுக்கு மேல் எனக் கற்பனை பண்ணிக் கொண்டிருப்பதை, அந்தப் புவியரசர்கள் புன்சிரிப்புடன் சகித்துக் கொண்டிருந்தாலும், தம் நெஞ்சை, அந்தஸ்தைத் தொடும் காரியத்துக்குள், கவிராயர்கள் பிரவேசித்துவிட்டால், தமது சுய உருவைக் காட்டி விடுவார்கள் என்பதுதான் ஆதாரக் கருத்து. பழைய பில்ஹணீயம் உருவாகும் காலத்திலே பிராமணர்கள் பூலோகப் பிரம்மர்கள், பிரபிக்கப்பட்டு வந்தார்கள். பிராமணனைக் கொல்வது பஞ்சமா பாதகங்களில் ஒன்று என்று நம்பப்பட்ட காலம். தன் அந்தஸ்துக்காக ஆசைக் குமரியின் வாழ்வையே பாழ்படுத்திவிடத் துணிந்த மன்னனைப் பிரம்மஹத்தி தோஷம் என்ற பயந்தான் தடுக்கிறது. அந்த நாகரிகம் இன்று நம் ஏட்டில் பார்த்து நுகரும் ஒரு விவகாரம். இன்றைய நாகரிகத்தில் பிராம்மணர்களும், மன்னர்களும் தம் பழைய அந்தஸ்துகளை இழந்துவிட்டார்கள். தன்னுடைய அந்தஸ்துக்காக ஒருவனை உயிர் வதை செய்யத் துணியும் மன்னனுக்கு ராஜ்யத்தில் இடமில்லை என்பதுதான் இந்தப் புதிய புரட்சிக் கவியின் ஆதாரக் கருத்து. களவையும் நிலவையும் பற்றிப் பாடிக்கொண்டிருந்த கவிஞன், பிரெஞ்சுப் புரட்சிக்கு உதய கீதம் பாடிய ரூஸோவைப் போல கனல் விடுகிறான். ‘அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே ‘ என்று கொண்டு பட்டினத்தார் தம் வீட்டுக்குத்தான் நெருப்பு வைக்கப் பார்க்கிறார். புரட்சிக் கவியான உதாரனது பேச்சு – வீண் கருவம், டம்பம், வரம்பற்ற தன்னிச்சை, கொலை வெறி, அந்தஸ்து என்ற உச்சாணிக் கொப்பு என்ற உழுத்துப்போன கருத்துக்களைச் சுட்டுச் சாம்பலாக்குகிறது. கூளங்கள் கொதித்தெழுந்து உயிர்வதைக்குத் துணிந்திட்ட மன்னனைத் தேடி வரும்போது மன்னன், இன்றைய வள முறைப்படி, நாட்டை விட்டு வெளுயேறி விடுகிறான். ஓடிப்போன ராஜா மான்டிகார்லோவில் பந்தயக் குதிரை வளர்க்கிறாரா அல்லது ஹாலிவுட் அழகியை மணக்கிறாரா என்று நாம் தேடிச் சென்று கொண்டிருக்க வேண்டாம். ஓடிப்போகிற ராஜ ‘க்கள் அப்படித்தான் செய்வார்கள். பழைய பில்ஹணீயத்துக்கும், இந்தப் புதிய புரட்சிக் கவிக்கும் இவ்வளவுதான் ஒற்றுமை, இவ்வளவு வேற்றுமை. இவை இரண்டும் இரண்டு விதமான மனப்பக்குவங்களைக் காண்பிக்கிறது. நாம் வெகு நேரமாகப் புரட்சிக் கவியின் முற்றத்தில் நின்றே பேசிக்கொண்டிருந்துவிட்டோம். காவியத்தைப் பார்ப்போம். அதிலே வரும் ஒவ்வொரு பாத்திரமும் பச்சைத்தமிழன் ; சாயச்சரக்கல்ல ; மழை பெய்த மூன்றாம் நாள் சாயம் விட்டுப் போகும் பண்ருட்டிப் பொம்மை அல்ல.

அரசன் தனது மகளான அமுதவல்லிக்கு, அகத்தில் எழுந்த கவிதையை, புறத்தில் பிறர்க்குப் புலப்படுத்துவதற்குச் செய்யுள் இலக்கணம் கற்பித்துக் கொடுக்க, நல்லதொரு ஆசான் வேண்டும் என அறிவிக்கிறான். அமைச்சனின் சிபாரிசுப்படி உதாரன் என்ற உயர் கவிஞன் அமர்த்தப் படுகிறான். கவியின் வாலிபத்தையும் கன்னியின் மனசையும் சேரவொட்டாமல் தடை செய்துவிட, அமைச்சனுடைய குள்ளத்தனமான யோசனை கையாளப்படுகிறது. உதாரன் குருடனெனவும், அமுதவல்லி பெருநோய் கண்டவள் எனவும் சொல்லி இடையில் ஒரு திரையிடுகிறார்கள்.

மன்னவன் ஆணைப்படி – கன்னி

மாடத்தைச் சேர்ந்ததொரு

பன்னரும் பூஞ்சோலை…நடுப்

பாங்கிலோர் பொன்மேடை

அன்னதோர் மேடையிலே – திரை

ஆர்ந்த மறைவினிலே

மின்னொளி கேட்டிருப்பாள் – கவி

வேந்தன் உரைத்திடுவான்.

இவ்வாறு யாப்பிலக்கணம் கேட்டு வரலானாள் அமுதவல்லி. விழி அற்றவனைப் பார்ப்பது அபசகுனம் என்றிருந்தாள் அவள் ; பெருநோயை நினைத்து உதாரனும் பார்க்கவில்லை. இவ்வாறிருக்கையிலே இவர்களிடையே கிடந்த திரைச் சீலையைக் கிழித்தெறிந்தது பெளர்ணமி நிலா. நிலாவைக் கண்டு பாடினான் உதாரன். திரைச் சீலைக்குள் நிற்கும் தன்னை உவமித்ததுபோல அமுதவல்லி நினைத்துக் கொள்ளும்படி இருந்தது அந்தப் பாட்டு.

நீலவான் ஆடைக்குள் உடல்மறைத்து

நிலாவென்று காட்டுகிறாய், ஒளுமுகத்தைக்

கோலமுழுவதும் காட்டிவிட்டால் காதல்

கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ ? வானச்

சோலையிலே பூத்ததனிப் பூவோநீ தான்

சொக்கவெளிளிப் பாடற்குடமோ, அமுதவூற்றோ

காலைவந்த செம்பருதி கடலில்மூழ்கி

கனல்மாறிக் குளிரடைந்த ஒளுப்பிழம்போ!

‘அந்தி இருளாற் கருகும் உலகு கண்டேன்

அவ்வாறே வான்கண்டேன் : திசைகள் கண்டேன் :

பிந்தியந்தக் காரிருள் தான் சிரித்ததுண்டோ

பெரும் சிரிப்பின் ஒளுமுத்தோ நிலவேநீ தான்

சிந்தாமல் சிதறாமல் அழகைஎல்லாம்

சேகரித்துக் குளிரேற்றி ஒளுயும்ஊட்டி

‘இந்தா ‘வென்றே இயற்கை அன்னைவானில்

எழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணந்தானோ

என்று சாதகப்புள் மாதிரி உதாரன் தன்னை மறந்து பாடுகிறான். ‘ஏதடா குருடனாச்சே ‘ என்று பிரமிக்கிறாள் அமுதவல்லி. திரைக்சீலை விலகுகிறது. பயமறியாது சிரிக்கின்றன இரண்டு இளம் நெஞ்சுகள். உதாரன் முதலில் தடுத்துத்தான் பார்க்கிறான். ஆனால் அது தனது நெஞ்சத்தையே பொய்த்துப் பேசும் சமத்காரம். அவன் சொல்லுகிறான் :

நன்று மடமயிலே, நான் பசியால் வாடுகிறேன் :

குன்றுபோலன்னம் குவிந்திருக்கு தென்னெதிரில்!

உண்ணமுடியாதே ஊராள்வோன் கூர்வாளும்

வண்ணமுடிச் செல்வாக்கும் வந்துமறிக்குதடி!

வேல்விழியால் என்னை விலாப்புறத்தில் கொத்தாதே!

பால்போல் மொழியால் பதைக்கஉயிர் வாங்காதே!

காதல் நெருப்பால் கடலுன்மேல் தாவிடுவேன்

சாதி எனும் சங்கிலி என் தாளைப் பிணிக்குதடி!

பாளைச் சிரிப்பில்நான் இன்று பதறிவிட்டால்

நாளைக்குவேந்தன் எனும் நச்சரவுக்கென் செய்வேன் ?

என்று சொல்லித் தடுக்கிறான். அதற்கு அமுதவல்லி சொல்லுகிறாள் :

வாளை உருவிவந்து மன்னன் எனதுடலை

நாளையே வெட்டி நடுக்கடலில் போடட்டும்

வேறு கதியறியேன், வேந்தன் சதுர்வருணம்

சீறும்எனில் இந்தவுடல் தீர்ந்தபின்னும் சீறிடுமே.

பிறகு

இன்பவுலகில் இருவர்களும் நாள் கழித்தார்

பின்பொருநாள் அந்தப் பெருமாட்டி அங்கமெல்லாம்

மாறுபடக் கண்டு மனம்பதறித் தோழியர்கள்

வேறுவழியின்றி வேந்தனிடம் ஓடி

அறிவிக்கிறார்கள். அரசனே நேராக வந்து ஒளுந்திருந்து பார்க்கிறான். மண்டையிலே ஆயிரந்தேள் கொட்டியதுபோல மனமுடைந்தான். உதாரனைக் கைப்பிடியாகப் பிடித்து வரும்படி காவலரை ஏவுகிறான். கடுஞ்சினத்துடன்,

வாள் பிடித்தே புவி ஆளுமரசர் என்

தாள் பிடித்தே கிடப்பர்! – அட

ஆள்பிடித்தால் பிடி ஒன்றிருப்பாய், என்ன

ஆணவமோ உனக்கு ?

மீள்வதற்கோ இந்தத் தீமை புரிந்தனை

வெல்லத் தகுந்தவனோ – இல்லை

மாள்வதற்கே இன்று மாள்வதற்கே

என்று மன்னன் கர்ஜிக்கிறான்.

அதற்கு உதாரன் தனது குற்றத்தைச் சமத்காரமாக ஒப்புக்கொள்கிறான்.

மாமயில் கண்டு மகிழ்ந்தாடும் முகில்

ஆர்க்கும் மலைநாடா – குற்றம்

ஆம் என்று நீ யுரைத்தால் குற்றமே, குற்றம்

அன்றெனில் அவ்விதமே!

கோமகள் என்னைக் குறைஇரந்தான் அவள்

கொள்ளைவனப்பினிலே – எனைக்

காமனும் தள்ளிடக் கால் இடறிற்று

கவிழ்ந்த வண்ணம் விழுந்தேன்!

இவன் பேச்சு அரசனது கோபத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது. சேதி கேட்டு அமுதவல்லி ஓடிவருகிறாள். ‘சாதி வருணக்கரிசனம் இருந்தால், இலக்கணம் சொல்லிக் கொடுக்க அவனை அமர்த்துவதேன் ? ‘ என்று கேட்கிறாள். கவிஞன் பக்கத்தில் சென்று நிற்கிறாள். அவளை இழுத்துத் தள்ளிவிட்டு, உதாரனை அழைத்துச் செல்லக் கட்டளை இடுகிறான். அதிலும் என்ன சமத்காரம் பாருங்கள் :

நின்றகொலைஞர் உதாரனையும் ‘நட

நீ ‘ என்ற தட்டினர்….

அச்சமயம் மந்திரி ஒருவன் மகளை மட்டுமாவது கொல்லவேண்டாம் என்கிறான். ‘நீதி நன்று மந்திரியே ‘ என்று சிரிக்கிறாள் அமுதவல்லி.

மன்னன் கர்ஜிக்கிறான் :

‘என் ஆணை மறுப்பீரோ சபையில் உள்ளீர்!

இசைகிடைந்த என் செங்கோல் தன்னை வேற்றார்

நான் நாணும் படிசும்மா இருப்பதுண்டோ ?

பிழைபுரிந்தால் சகியேன் நான்! உறுதிகண்டார்

என் ஆணை ; என் ஆணை! உதாரனோடே

எதிரிலுறும் அமுதவல்லி இருவர் தம்மை

கல்மீதிலே கிடத்திக் கொலை செய்வீர்கள்

கடிது செல்வீர்! கடிது செல்வீர் ‘……

அமுதவல்லியும் சொல்கிறாள் :

அவையினிலே அசைவில்லை பேச்சுமில்லை

அச்சடித்த பதுமைகள் போல் இருந்தார் யாரும் –

இருந்திங்கே அநீதியிடை வாழவேண்டாம்

இறப்புலகில் இடையறா இன்பம் கொள்வோம் ;

பருந்தும் கண்மூடாத நரியும் நாயும்

பலிபீட வரிசைகளும்கொடு வாள்கட்குப்

பொருந்தட்டும், கொலைசெய்யும் ஏதேச்சை மன்னன்

பொருந்தட்டும், பொதுமக்கள் ரத்தச்சேற்றை

அருந்தட்டும்……

கொலைக்களத்துக்கு உதாரனும் அமுதவல்லியும் இழுத்துவரப்படுகிறார்கள். வேடிக்கை பார்ப்பதற்காக நாட்டு மக்கள் வீடுபூட்டி வந்திருக்கிறார்கள். தலைப்பாகை அதிகாரி கொடுத்த வசதியை உபயோகித்து, உதாரன் பேசுகிறான். அவன் மனசு எரிமலைபோல் கொப்புளிக்கிறது. புரட்சிக் கனலை அவன் நினைவறிந்து ஏற்றினானோ என்பது சந்தேகம். அவன் பேச்சு ஊரைச் சுட்டது. ஊரில் உள்ள உளுத்த கருத்துக்களைச் சுட்டது. அவனுடைய பேச்சே தமிழ் இலக்கிய வரிசையிலே உயர்ந்த ஸ்தானம் வகிக்கிறது.

( நன்றி : புதுமைப்பித்தன் கட்டுரைகள், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை. 1954 )

தகவல் உள்ளீடு : குடந்தை எல். செளந்தரராஜன்

Series Navigation

புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன்