கே டானியல்
பஞ்சமருக்குப் பின்னால் என்னால் எழுதப் பட்ட கோவிந்தன், அடிமைகள், கானல், பஞ்ச கோணங்கள், தண்ணீர் ஆகியவைகளும், முருங்கையிலைக் கஞ்சி, மையக் குறி, சொக்கட்டான் ஆகிய தொடர் நாவல்களும், உருவத்தைப் பொறுத்த மட்டில் எனது பஞ்சமரின் பிறப்பிலிருந்து அந்த வழியைப் பின்பற்றியவைகளே ஆகும்.
எம்மையும் எம்மைச் சுற்றியும் சதா பல்வேறுபட்ட சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் நாளாந்த நிகழ்வுகளுக்கூடாக சுழி ஓடிச் செல்வதுவே வாழ்க்கையாகி விட்டது. பெருமளவில் இந்தச் சுழி ஓட்டத்தையே சரிவரச் செய்து முடிப்பதில் தான் மனிதனின் கவனமெல்லாம். பல காரியங்கள் அவன் கவனத்தை ஈர்ப்பதில்லை. எல்லாவற்றையும் அவன் தேவையெனக் கருதுவதில்லை.
என்னுடைய நாவல்களைப் படிப்பவர்கள் ஒவ்வொன்றிலும் பல புதிய புதிய நிகழ்ச்சிகளைக் காண்பார்கள். அவைகளைப் பெடிக்கும் போது தான் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் உள்ள கனதியைப் புரிந்து கொள்வதாகப் பலர் கூறுகின்றனர். இதிலிருந்து ஒரு உண்மையை என்னால் கற்றுக் கொள்ள முடிகிறது. அதாவது ‘என்னால் கிரகிக்கப் படும் சம்பவங்கள் உண்மை நிகழ்ச்சிகளாக இருப்பதால் தான் அதை எழுத்தில் படிக்கும் போது அது மற்றவர்களுக்குக் கனதியைக் கொடுக்கிறது ‘ என்பதாகும்.
‘சமூகத்தில் பல உண்மைகள் அன்றாடம் நடக்கின்றன. அந்த உண்மைகள் எல்லாவற்றையும் எழுத்தில் கொடுத்து விட வேண்டுமா ? ‘ என்ற ஒரு கேள்வி இயல்பாகவே உங்கள் மனதில் எழ இடம் இருக்கிறது. இதற்கு நான் ஒரு வரையறை வைத்திருக்கிறேன். ‘தனி மனிதனதும் அல்லது அதற்கும் மேலாக முழு உலகத்தினதும் பொதுவான மனுசீக உணர்வினை இலேசாகவேனும் தட்டி விடக் கூடிய நாதக் கூறுகளைக் கொண்டவைகளாக எவை எனக்குப் படுகின்றனவோ அவற்றை மட்டுமே எழுத்துருவில் வடிப்பது ‘ என்பதாகும்.
இருபது ஆண்டுகளுக்கு முன் நான் ‘ அசை ‘ என்ற சிறுகஹை ஒன்றினை எழுதினேன். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் ‘பொன்னம்மாள் ‘ என்ற ஒரு விபச்சாரியின் கதை அது. அவளுக்கு நடு வயதாக இருக்கும் போது நான் அவளைக் கண்டிருக்கிறென். பேசியிருக்கிறேன். அவளையும் அவளின் வாழ்க்கை முறைகளையும் அவதானித்திருக்கிறேன். பெரிதும் பொய்க் கலப்பின்றி அவளின் வாழ்க்கயிஅ எழுத முற்பட்டு, அதை எழுதிப் பிரசுரித்த பின் ‘அந்தக் கதையில் சற்றேனும் பொய்க் கலப்பில்லை ‘ என்று அவளுடன் நெருக்கமாகப் பலர் கூறிய போது நான் பெரிதும் ஆச்சரியப் பட்டேன். உண்மைகளை, உண்மையின் படி ஒரு விபச்சாரியின் வாழ்க்கையை எழுதும் போது எப்படி எல்லாம் எழுதியிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல: ஆனால் இன்று வரை அந்தக் கதையில் விரசம் இருந்தது என்று யாரும் குறிப்பிட்டுச் சொன்னதாக எனக்கு நினைவில்லை. அந்த விபச்சாரியின் வாழ்க்கையில் எதைச் சொல்லுவது என்பதில் என்னை வழி நடத்தியது, ‘ எதைச் சொல்லுவது ‘ என்பதில் நான் வைத்துள்ள கொள்கையே ஆகும்.
எனது சிருஷ்டிகளில் நான் பார்த்துப் பேசிப் பழகாத பாத்திரங்களை நான் உள்ளடக்குவதில்லை. எனது படைப்புகளில் கற்பனைப் பாத்திரங்கள் இருப்பதே இல்லை. இதனால் பாத்திரப் படைப்புகளில் அதிகம் சிக்கலும் சிரமமும் ஏற்பட்டதில்லை.
எனது பஞ்சமரில் சின்னாச்சி என்ற ஒரு பாத்திரம் வருகிறது. அந்தச் சின்னாச்சி எனது பிறந்த ஊரில் எனது வீட்டுக்குப் பக்கத்தில் குடி இருந்தவள். பஞ்சமர் எழுதத் தொடங்கி அது முடிவுக்கு வந்த காலப் பகுதிக்குள் அந்தச் சின்னாச்சியை நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்திருக்கிறேன்; பேசியிருக்கிறேன்.
பஞ்சமரில் எந்த இடத்திலும் அந்த சின்னாச்சியின் தோற்றத்தை, நான் தனியாக்ச் சித்தரிக்கவில்லை. அவளின் வழமையான அன்றாட நினைவுகளைப் பிசக்கின்றிச் சித்தரித்ததின் மூலம் அவளின் தோற்றத்தை வாசகர்கள் மனதில் படிய வைத்ததுடன் , அவளின் மேல் ஆசிரியனாக எனது எந்தத் தலையீடும் செலுத்தாமல் பேச வைத்த தன் மூலமே அவளைப் பரிபூரணமான ஒரு கிராமத்துச் சின்னாச்சியாக ஆக்கி விட்டேன். ‘என்னடா மோனே, என்னை வச்சுக் கதை ஒன்று எழுதியிருக்கியாம். அதில் என்றை குறுநாட்டுச் சீலை கொய்யகத்தைக் கூட அச்சுப் பிசகாமல் எழுதி இருக்கிறாய் என்று பொடியள் கதைக்கிறான்கள் ‘ இப்படி அந்தச் சின்னாச்சியே என்னிடம் வாய் விட்டுக் கேட்கும் அளவுக்கு அவளை நான் வென்று விட்டதில் எனக்குப் பரம திருப்தி.
ஒரு நாவலில் காட்டப் படுவதான காலம், அந்தக் காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வு முறை, பேச்சு முறை, பழக்க வழக்கங்கள் நாவலின் கால நகர்ச்சியின் புலப் பாடுகள் , இயல்பான நடை முறைகளோடு, அந்த நாவலை நிலையியலிலிருந்து இயங்கியல் வரை இட்டு வருதல், அந்தக் கால நடை முறைகளுக்கேற்ப உலக வியாபகமான பரிமாண வளர்ச்சிக்கு அதன் பாத்திரங்களின் வர்க்க குணாம்சங்களை வெளிக்கொண்டு வருதல் ஆகியவைகளில் நான் தவறியிருக்கிறேனா என்பதனை நாவல் அச்சுக்குப் போகுமுன் , பலரிடம் அதைப் படிக்கக் கொடுத்து படிப்பவர்களின் அபிப்பிராயங்களையும், உள்வாங்கிக் கொள்ளுவதில் நான் தவறுதில்லை. அச்சு ஏறுவதற்கு முன் அவைகளைப் படிப்பதற்கு 75 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் ஒரு குடும்பப் பெண், ஒரு உயர் பள்ளி மாணவன், ஒரு உடல் உழைப்பாளீ, வர்க்க சமூக அமைப்பினைத் தெளிவுறப் படித்த ஒருவர் உட்பட குறைந்தது எட்டுப் பேர்கள் வரையிலாவது இருப்பர்.
இவை எல்லாவற்றையும் தொகுத்து மொத்தமாக்ச் சொன்னால், ஒவ்வொரு படைப்பிலும் டானியல் என்ற பெயர் ஒரு சம்பிரதாயத்திற்காகவே அன்றி வேறு எதற்காகவும் அல்ல. உண்மையாகவே இவைகளின் எஜமானர்கள் நான் மேலே குறிப்பிட்டவர்களே ஆகும்.
‘ எனது நாவலின் மாந்தர்களே அதற்கான மொழியையும் , கருவூலங்களையும் உடை நடை பாவனைகளையும் தருவதோடல்லாமல், தாங்களாகவே உருவத்தையும் அமைத்துக் கொள்கின்றனர். கடைசியில் குறிப்பிடப் பட்ட வாசகர்கள் சரி, பிழைகளைப் பார்த்துக் குறிப்பிட்டுக் கொடுக்கின்றனர்! ‘ என்று தான் கூறலாம்.