பாவண்ணன்
1
எழுபதுகளின் மத்தியில் கன்னட இலக்கிய உலகில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஓரளவுக்கு அதை எழுச்சி என்று சொல்வதும் கூடப்பொருத்தம்தான். முற்போக்கு இலக்கிய வட்டத்திலிருந்து பேரிலக்கியம் ஏதும் தோன்றாமல் சாரமிழந்துகொண்டிருந்த தருணம் அது. கலகக்குரல்கள் ஓங்கி ஒலித்தன. சித்தலிங்கையா என்னும் இளங்கவிஞரின் ‘பறையனின் பாட்டு ‘க்குரல்கள் கர்நாடகத்தின் மூலை முடுக்குகளில் பாடப்பட்டன. அப்பாடல்களில் பச்சையாக முன் வைக்கப்பட்டிருந்த கோபமும் சீற்றமும் இலக்கியவாதிகளின் மனங்களை அதிர வைத்தன. உடனடியாக அப்பாடல்கள் ஒலிநாடாவாக ஆக்கப்பட்டுப் பட்டித் தொட்டிகளெங்கும் விற்கப்பட்டன. எல்லோரும் தம் சொந்தப்பாடல்கள் போல அவற்றைப் பாடினார்கள். அப்பாடல்களின் வரிகள் நரம்புகளை முறுக்கேற்றி முஷ்டிகளை உயர்த்தச் செய்பவையாக இருந்தன. ‘எங்கே வந்தது, யாருக்கு வந்தது நாற்பத்தேழின் சுதந்திரம் ‘, ‘பசியாலே செத்தவரும் பட்டைக்கல் சுமந்தவரும் உதைபட்டு உறங்கியவரும் எங்க ஜனங்க ‘ என்கிற வரிகள் எங்கெங்கும் பாடப்பட்டன. ‘தலித்துகள் வருகிறார்கள், வழிவிடுங்கள் ‘ என்று தீர்மானமாகவே அரசியலை முன்வைத்தவை சித்தலிங்கையாவின் வரிகள். இவற்றை எழுதிய சித்தலிங்கையாவை தலித் கவிஞன் என்றும் இங்கவிதைகளை தலித் கவிதைகள் என்றும் பிறர் அழைத்தார்கள். மெல்ல மெல்ல அந்த அணி பெரிதானது. நிறைய எழுத்தாளர்கள் தோன்றினார்கள். நிறைய படைப்புகள் தோன்றின. இந்த வகை நிலைபெற்றுத் தலித் இலக்கியமானது.
2
தமிழ் இலக்கிய உலகில் தற்சமயம் தலித் இலக்கியம் குறித்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாத விவாதங்களைப் போலவே அப்போது கன்னடத்திலும் நடந்தன. தலித்துகள் பற்றிய சித்திரம் அந்தக் காலத்திலிருந்தே இலக்கியத்தில் இடம் பெற்று வந்தாலும் கூட, அவை அனைத்தையும் தலித் இலக்கியம் என்று சொல்லிவிடும் அல்லது முடிவு கட்டிவிடும் தவறைச் செய்யலாகாது. பிற படைப்பாளிகளின் பார்வையில் தலித்துகள் சித்தரிக்கப்படுவதற்கும், தலித் படைப்பாளியொருவன் தன்னைப் பற்றித் தானே சொல்லிக்கொள்வதற்கும் இடையே நிச்சயமானதொரு வேறுபாடு உண்டு. முற்போக்கு படைப்பாளிகளின் படைப்புகளில் தொடக்கத்திலிருந்தே தலித்துகளுக்கென்று ஒரு இடம் இருந்ததை மறுக்க இயலாது. சுரண்டலைப் பற்றிப் பேசுகிற முற்போக்கு இலக்கியம், சுரண்டப்பட்ட தலித்துகளைப்பற்றிப் பேசாமல் எப்படி இருக்கும் ? முற்போக்குப் படைப்பாளிகளுக்குத் தலித் சமூகத்தின் மீது இருந்த அக்கறையோ நேசமோ குறைத்து மதிப்பிட முடியாதவை. ஆன போதிலும் அவர்களைப் பொறுத்தவரையிலும் ‘தலித்துகள் ‘ என்பவர்கள் அவர்கள் படைப்பு உற்பத்திக்கான கச்சாப் பொருள்தான். தம் படைப்பு நுணுக்கத்தால் ஏனைய விஷயங்களைச் செப்பமுறப் படைத்துக் காட்டியது போலவே இவற்றையும் படைத்துக் காட்டினார்கள். தலித்துகளின் நிலையக் கண்டு அவர்கள் மனசில் சுரந்த இரக்கமும் பரிவும், அறியாமை காரணமாக அவர்கள் சுரண்டப்படுவதைக் கண்டு அவர்கள் துடித்த துடிப்பும் கோபமும் அவர்களுடைய படைப்புகளில் இருந்தன. கோபம், இரக்கம், பரிவு ஆகிய உணர்வுகளைத் தாண்டி அவர்களால் தலித்துகளைப் பார்க்க இயலவில்லை. நவீன இலக்கிய அறிவோ, முற்போக்கு இலக்கியத்தனமோ அதற்கு இடம் கொடுக்கவில்லை. அபோதுதான் அதுவரை கலையாகச் சேமிக்கப்பட்ட இலக்கிய வகைகளும் உத்திகளும் போதாத நிலையைப் படைப்பாளிகள் உணர்ந்தார்கள். இப்போதாமையைத் தலித் இலக்கியம் நிறைவு செய்யக்கூடும் என்று நம்பினார்கள். தலித்துகளின் கோபமாக அதுரை சித்தரிக்கப்பட்ட வரிகளுக்கும் சித்தலிங்கையா முன்வைத்த கோப வரிகளுக்கும் இருந்த வித்தியாசம் இந்த நம்பிக்கையை வளர்த்தது. அதே கோபம், அதே இரக்கம், அதே பரிவு. ஆனால் தலித்துகளின் குரல்களில் வேறு விதத்தில் ஒலித்தன.
3
சுதந்திரப் போராட்டக் காலத்தில் தீண்டாமை பற்றிய விவாதங்கள் நாடெங்கும் பெரிய அளவில் நடந்தன. மனிதர்களுக்குள்ளேயே ஒரு பிரிவைக் காலம் காலமாகத் தாழ்த்தி தீண்டாமல் ஒதுக்கி வைத்திருக்கும் அநியாயம் எவ்வளவு இழிவு மிக்கது என்ற குரலகள் அரசியல் உலகிலும் இலக்கிய உலகிலும் எழுந்தன. இந்த இழிவுக்கு வழி கோலும் இந்து மதத்தையே உதறுமாறு பல கோபக்குரல்கள் கோரின. தீண்டப்படாதவர்களுக்கு ‘ஹரிஜன் ‘ என்று பெயரிட்டு அழைத்த காந்தியடிகள் இப்பிரச்னையை மதத்தை உதறாமல் அதன் எல்லைகளுக்குள் தீர்த்துவிட ஆசை கொண்டார். காந்தியின் பார்வையில் ஒரு வித கனிவு இருந்தது. சாதி எல்லைகளை வற்புறுத்தும் மதச்சுவரைத் தகர்க்காமல் விடியலில்லை என்று முழங்கினார் அம்பேத்கார். இந்தியாவிலேயே தலித்துகளுக்கு முதலாவதாக இட ஒதுக்கீடு செய்த மாநிலம் கர்நாடகம். தலித்துகளிடையே ஒரு படித்த மத்திய வர்க்கம் உருவாகியபோது, அம்பேத்காரின் கருத்துகளை உடனடியாக அது ஏற்றுக்கொள்ளத் தொடங்கியது. கன்னட இலக்கிய உலகில் தலித் சமூகத்தில் சித்தலிங்கையாவுக்கு முன்னரே சில படைப்பாளிகள் தோன்றியிருந்தாலும்கூட, அவர்கள் எழுத்து முயற்சிகளைத் தலித் இலக்கியம் என்று சொல்லிவிட முடியாது. அவை தலித்துகள் பற்றிய படைப்புகளாக மட்டுமே இருந்தன. தலித் பிரக்ஞை (Dalit sensibility) உள்ள படைப்புகளாகக் கூறி விட முடியாது. முதன் முதலாக அந்தப் பிரக்ஞையோடு தோன்றியது சித்தலிங்கையாவின் எழுத்தேயாகும். சித்தலிங்கையாவின் பாடல்கள் உரத்தகுரல் கொண்ட, நேரிடைத் தன்மை கொண்ட, சித்தரிப்புத் தன்மைகொண்ட, உணர்ச்சிப் பிழம்பான ஒரு சொற்பொழிவை நிகழ்த்துகிற பாங்கிலமைந்தவை. இப்போக்கின் ஈர்ப்பில் லயித்த படைப்பாளிகள் பலர். இவரைத் தொடர்ந்து முள்ளூரு நாகராஜ், அரவிந்த மாளகத்தி, மா.நி.ஜா, முனிவெங்கடபுர, கங்காராம் கண்டாள, சின்னச்சாமி இந்து தர, ஹொன்னபுர ஆகிய படைப்பாளிகளின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்ததாகும்.
4.
கோபக்கார இளைஞர்களின் குரல்கள் கன்னடத் தலித் இலக்கியத்தின் ஒரு பதிவு என்றால், தலித் இளைஞர்களின் ஆன்மீகத் தேடலை இன்னொரு பதிவாகச் சொல்லலாம். இரண்டு போக்குமே இணையான சாதனைகளை நிகழ்த்தியுள்ளன. முதல் அணியினரைப் போல கோபம் பிரதானமாகிக் கொட்டப்படுவதில்லை. படைப்பின் ஊடே கரைத்து வைக்கப்படுகிறது. இது முதல் வித்தியாசம். இரண்டாவது வித்தியாசம் இவர்களுக்கிருந்த அதிக பட்ச தலித் பிரக்ஞை. சாதி மறுப்பாளர்களால் மூட நம்பிக்கை என்று முட்டாள்தனமாவை என்று ஒதுக்கப்பட்ட சடங்குகள், புராணங்கல், கதைகளில் இருந்து இரண்டாம் அணிக்காரர்கள் பல விஷயங்களைப் புதிய பரிமாணங்களில் எடுத்தாண்டார்கள். சரித்திரத்தையும் புராணத்தையும் தன் பார்வையில் மறுபடி தீட்டிப் பார்க்கிற வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்தது. காலம் காலமாக வந்த நம்பிக்கைகளை அறிவுப்பூர்வமாகவும் கலாப்பூர்வமாகவும் மறுமதிப்பீடு செய்தார்கள். ஏழ்மையையும் தீண்டாமையையும் இயற்கையின் பின்னணியிலும் மனித உறவுகளின் பின்னணியிலும் மனித உறவுகளின் பின்னணியிலும் புதுவிதமாகப் புரிந்துகொள்ள முயன்றது இரண்டாம் அணி. வேதனையோடும் கோபத்தோடும் வாழ்வைச்சித்தரித்த முதல் அணிக்கு மாறாக, பெரும் சிதைவுகளுக்கிடையேயும் கப்பாற்றி வைத்திருக்கிற சந்தோஷங்கள், சிரிப்புகள் வழியாக வாழ்வைச் சித்தரிக்க முயன்றது. இத்தகு படைப்புகள் தலித் இலக்கியத்திற்குப் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது. இந்த அணியின் பிரதான எழுத்தாளர் தேவனூரு மகாதேவ. அவருடைய ஒடாலாள, குசுமபாலை ஆகிய நாவல்கள் கன்னட நாவல் உலகத்திற்கே பெருமை சேர்த்தவை. இவற்றின் புதிய மொழியமைப்பையும் கதை அமைப்பையும் கண்டு பல எழுத்தாளர்கள் வியந்து பாராட்டுகிறார்கள். கே.பி.சித்தையா, கோவிந்தையா, மொகள்ளி கணேஷ் ஆகியோரை இந்த இரண்டாம் அணிக்காரர்கள் என்று குறிக்கலாம்.
5.
தலித் இலக்கியத்தின் சாத்தியப்பாடுகளைத் தமிழ் உலகிற்குள் விரிவுபடுத்தும் ஆவலின் காரணாய்த்தான் கன்னட உலகின் போக்குகளை இரண்டு அணிகளாய்ப் பிரித்துச் சொல்லப்பட்டுள்ளது. ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போலத்தான் தலித் இலக்கியத்தின் இரண்டு முகங்களாக இந்த வகைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றிற்கிடையே எந்த பிரிவோ முரணோ இல்லை. சித்தலிங்கையா, தேவனூரு மகாதேவ இருவருமே கன்னட தலித் இலக்கியத்திற்கு அடித்தளமிட்ட முன்னோடிகள். இருவருமே முக்கியமானவர்கள்.
***
நன்றி: தலித் கலை இலக்கியம் அரசியல், 1996
***
- கன்னட தலித் இலக்கியம் – சில முன்னோடிகள் பற்றிய குறிப்புகள்
- பூட்டுகள்
- இந்த வாரம் இப்படி
- மறுப்புவாதமும் இஸ்லாமிய ஆக்கிரமிப்புகளும்
- மதம்
- 12. மின்வாணிபம் – ஒரு அறிமுகம்
- இரகசியங்களை வெளியில் காட்டி விற்கமுடியுமா ? ஒருபெங்குவின் தமிழ் கற்றுக்கொள்கிறது – 6
- கவிதை கவிஞன் நான்
- கன்னட தலித் இலக்கியம் – சில முன்னோடிகள் பற்றிய குறிப்புகள்