இலை போட்டாச்சு! – 22 – பிசி பேளா ஹ¥ளி பாத் (சாம்பார் சாதம்)

This entry is part [part not set] of 32 in the series 20070322_Issue

பாரதி மகேந்திரன்


பிசி பேளா ஹ¥ளி பாத் (சாம்பார் சாதம்)

தேவைப்படும் பொருள்கள்

பச்சரிசி – 200 கி
துவரம் பருப்பு – 200 கி
புளி – எலுமிச்சை யளவு
வற்றல் மிளகாய் – 5, 6
பச்சை மிளகாய் – 5, 6
தனியா (கொத்துமல்லி விதை) – 2 கைப்பிடி
கடலைப்பருப்பு – 3 மே.க.
கடுகு – 1 தே.க.
வெந்தயம் – அரைத் தே.க.
தேங்காய்த் துருவல் – ஒரு பெரிய தேங்காய்க்குர்¢யது
பெருங்காயப் பொடி – 1 தே.க.
உப்பு – ஒன்றரை / 2 மே.க.(தேவைப்படி)
நல்லெண்ணெய் – 100 கி
நெய் – 1 மே.க. (விரும்பினால் மட்டுமே)
கரம் மசாலாப் பொடி – 1 மே.க.
கறிவேப்பிலை – 4 / 5 ஆர்க்குகள்
கொத்துமல்லித் தழை – 4 மே.க.

காய்கறிகள்:- வெங்காயம், அவரைக்காய், முருங்கைக்காய் (5 அல்லது 6) முள்ளங்கி,பீன்ஸ் போன்றவை தலா 100 கிராம். வெங்காயம் மட்டும் கால் கிலோவுக்கு மேலும் போடலாம். சுவை கூடும். வெங்காயம் மட்டுமே போட்டுச் சிலர் செய்வதுண்டு. இக்காய்களின் அளவுக்கேற்ப உப்பின் அளவும் அதிகமாகும். கவனம் தேவை. வெங்காயம் தவிர, பிறவற்றைச்
சமைப்பானில் சிறிதளவு உப்புப் போட்டு வேக வைக்கவும்.
முதலில் அரிசியையும் துவரம் பருப்பையும் ஒன்றாய்க் கலந்து களைந்து, நான்கு மடங்குத் தண்ணீர் ஊற்றிச் சமைப்பானில் வேக விடவும். பிறகு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகைப் போட்டு, அது பாதிப் பங்கு வெடித்ததும் கடலைப் பருப்பைப் போட்டுக் கிளறவும். அது முக்கால் பங்கு சிவந்ததும் வெந்தயத்தைப் போடவும். வெந்தயம் முக்கால் பாகம் சிவந்த பின் மிளகாய்வற்றலைப் போட்டுக் கிளறி, எல்லாம் நன்கு சிவந்தபின் தேங்காய்த் துருவலை அதில் கொட்டிக் கிளறவும். தேங்காயும் நன்றாய்ச் சிவப்பது நல்லது. சாம்பார் ஊசிப்போவது தள்ளிப் போகும். அதன் பின் மசாலாப் பொடியைப் போட்டுக் கலந்து எல்லாம் சூடு ஆறியதும் மின் அம்மியில் போட்டு மையாக அரைக்கவும். சிலர் கொப்பரைத் தேங்காயைப் பயன்படுத்துவார்கள்.

பிறகு, ஊற வைத்த புளியை நன்றாய் 3, 4 கிண்ணங்களின் அளவுக்குக் கரைத்துக் கொள்ளவும். பின், கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகைப் போட்டு அது வெடித்த பின் பச்சை மிளகாய், கறிவேப்பிலை,வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் முக்கால் வாசி வதங்கிய பின் அதில் புளிக்கரைசலையும் உப்பையும் போட்டுக் கொதிக்க விடவும். புளியின் பச்சை வாசனை அடங்கியதும், அரைத்து வைத்துள்ள மசாலாவை அதில்கொட்டிக் கொதிக்கவைக்கவும். இக்கலவை தளதளவென்று கொதிக்கத் தொடங்கிய பிறகு, வேகவைத்துள்ள காய்களை அதில் சேர்த்துப் பெருங்காயப் பொடியையும் ஆய்ந்து வைத்துள்ள கொத்துமல்லித் தழைகளையும் போட்டுக் கிளறியபின், வெந்துள்ள சாதம்-துவரம்பருப்புக் கலவையில் சாம்பாரைக் கொட்டிக் கலந்து பரிமாறவும்.

காய்கள் பல சேர்ந்துள்ளதால் இதற்குத் தொட்டுக்கொள்ளக் கறியோ கூட்டோ தேவையில்லை. அப்பளம் பொரித்துக்கொள்ளலாம். தயிர்ப் பச்சடி வகைகளில் ஏதேனும் ஒன்றைத் தயாரித்துக்கொள்ளலாம். மீதமுள்ள நல்லெண்ணெய்யைச் சாதத்தில் கொட்டிக் கலக்கவும். விருப்பப்பட்டால், நெய்யையும் ஊற்றிக் கலக்கலாம்.

காய்களைத் தனியாக வேகவைப்பதற்குப் பதிலாய்ச் சிலர் அரிசி-பருப்புக் கலவையிலேயே அவற்றையும் சேர்த்து வேக வைப்பார்கள். எல்லாம் அவரவர் வசதிப்படி.


mahendranbhaarathi@yahoo.com

Series Navigation

பாரதி மகேந்திரன்

பாரதி மகேந்திரன்