இந்தியா ஏவிய விண்வெளி ஏவுகணைகள், துணைக்கோள்கள்-2

This entry is part [part not set] of 33 in the series 20070405_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


வானை அளப்போம்! கடல் மீனை அளப்போம்!
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்! ……
ஆயுதம் செய்வோம்! நல்ல காயுதம் செய்வோம்!
ஆலைகள் வைப்போம்! கல்விச் சாலைகள் வைப்போம்!

மகாகவி பாரதியார் (பாரத தேசம்)

“முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை! ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்! தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!”

டாக்டர் விக்ரம் சாராபாய், பாரத விண்வெளிப் பயணப் பிதா (1919-1971).

Fig. 1
Launching Indian Rocket

பாரத விண்வெளி ஏவுகணைகளின் ஒப்புமைத் திறன்பாடு

உலகத்தில் விண்வெளித் திட்டங்களை மும்முரமாகச் செய்துவரும் நிர்வாகத் துறைகளான அமெரிக்காவின் நாசா, ஐரோப்பாவில் ஈசா, ஜப்பானில் ஜாக்ஸா [NASA, ESA, JAXA (Japan Aerospace Expolation Agency)] மற்றும் ரஷ்யா, பிரான்ஸ், சைனா, பிரேஸில் ஆகிய நாடுகளின் வரிசையில் இப்போது பாரதமும் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. 2006 நாணய மதிப்பில் அமெரிக்கா: 16 பில்லியன் டாலர், ஐரோப்பா: 3.5 பில்லியன் டாலர், ஜப்பான்: 1.8 பில்லியன் டாலர், சைனா: 1.2 பில்லியன் டாலர், ரஷ்யா: 900 மில்லியன் டாலர், பாரதம்: 700 மில்லியன் டாலர், கனடா: 300 மில்லியன் டாலர், பிரேஸில்: 35 மில்லியன் டாலர் பணத்தை விண்வெளித் தேடலுக்கு நிதி ஒதுக்கு செய்துள்ளன. உலகத்தில் முன்னேறிவரும் நாடுகளில் பாரத தேசம் தற்போது முதன்மையாக விண்வெளிப் பயணத் திட்டங்களில் நாற்பத்தியைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பணி புரிந்து பெரும் சாதனைகளை வெற்றிகரமாக முடித்துத் தன் தலை நிமிர்த்தி வந்திருக்கிறது. ஆசியாவிலே விண்வெளித் திட்டங்களைத் தீவிரமாகச் செய்துவரும் சைனா, ஜப்பான் ஆகிய நாடுகளோடு ஒப்பிட்டால், பாரத நாடு தயாரித்த அசுர விண்வெளி ஏவுகணை GSLV-III [Geostatioanry Satellite Launching Vehicle-III] அவற்றுக்கு ஏறக்குறைய சமமான உந்தாற்றல் உடையதாகக் கருதப்படுகிறது. அத்துடன் பாரதம் ஒருமித்த ஆற்றலில் தயாரித்த ஏவுகணைகள் மற்றவற்றை விட மலிவான நிதியில் ஆக்கப்பட்டவை. நாசா, ஈசா, ஜாக்ஸா ஆகிய உலகப் பெரும் விண்வெளித் துறையகங்கள் துணைக்கோள் ஒன்றை அண்டவெளியில் ஏவிடத் தேவைப்படும் நிதித் தொகையில் பாதி அளவே பாரதம் தனது துணைக்கோள் ஒன்றை அனுப்பச் செலவு செய்கிறது.

Fig. 1A
Indian SLV Rockets

விண்வெளியை நோக்கி ஏவப்பட்ட இந்தியாவின் முதல் ஏவுகணை

அண்டை நாடான சைனாவின் பண்டை கால ஏவுகணைத் தொழில் நுணுக்கத்தைப் பின்பற்றிப் பாரதத்தின் ஏவுகணைப் படைப்புத் திட்டங்கள் உதயமாகின. இந்தியச் சைனா கூட்டுறவின் போது பண்டத் தொழில் நுணுக்கத் துறை மாற்றல் உடன்படிக்கையில் விருத்தியான பட்டுப்பாதைத் [Silkroute] திறமை அது. 1804 ஆம் ஆண்டில் பிரிட்டனை எதிர்த்துப் போரிட்ட மைசூர் மன்னர் திப்பு சுல்தான் முதன்முதல் ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தினார். அதுவே வில்லியம் கங்கிரிவை [William Congreve], காங்கிரிவ் ராக்கெட் கண்டுபிடிக்கத் தூண்டியதாக வரலாற்றில் அறியப் படுகிறது. பாரதம் விடுதலை அடைந்த பிறகு, இந்திய விஞ்ஞானிகளும், பண்டித நேரு முதலாக மற்றும் பிற அரசியல்வாதிகளும் ராக்கெட் பொறித்துறை வளர்ச்சியின் எதிர்கால ராணுவ ஆயுத மேம்பாடுகளை உணர்ந்து அவற்றைத் தொடர்ந்து பேரளவில் விருத்தி செய்தனர். மேலும் ஏவுகணைகள் மூலம் துணைக் கோள்களை விண்வெளியில் அனுப்பி வானிலைத் தொலைத்தொடர்பு, தூர உளவு ஏற்பாடு, அண்டவெளி ஆய்வு போன்ற துறைகளும் முன்னேற்றம் அடைந்தன.

Fig. 2
Indian Satellite Launches

பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு 1962 இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சிப் பேரவையை [Indian National Committee for Space Research (INCOSPAR)] நிறுவனம் செய்து, அதன் அதிபராக டாக்டர் விக்ரம் சாராபாயை நியமித்தார். அதன் திட்டப்படி முதலில் தும்பா பூமத்திய ராக்கெட் ஏவு நிலையத்தை [Thumba Equatorial Rocket Launching Station (TELRS)], விக்ரம் சாராபாய் திருவனந்த புரத்தில் அமைக்க ஏற்பாடு செய்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட தும்பா ஏவுகணை மையம், ராக்கெட் ஏவிடச் சாதகமானப் பூகோளத்தின் மத்திய காந்த ரேகையில் [Earth’s Magnetic Equator] அமைந்துள்ளது! இந்தியாவில் முதன் முதலாக ராக்கெட்டை டிசைன் செய்து, பல்வேறு அங்கங்களை இணைத்து, அதனைச் சோதனை செய்யத் திட்டங்கள் வகுத்தார். அடுத்து செயற்கைத் துணைக்கோள் [Artificial Satellite] ஏவும் திட்டங்களை வகுத்தார். அப்பணிகளில் அவருடன் உழைத்தவர் தற்போதைய இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள். துணைக்கோள்களின் வழியாகக் கல்வியைத் தொலைக்காட்சிச் சாதனங்களின் மூலம் [Satellite Instructional Television Experiment (SITE)] பரப்பிக் கிராமங்களில் பாமர மக்களும் பயில வசதி செய்தார், விக்ரம் சாராபாய். 1963 நவம்பர் 21 ஆம் தேதி சுதந்திர பாரத்ததின் முதல் ராக்கெட் சோடியம் ஆவிப் பளுவுடன் [Sodium Vapour Payload] அண்டவெளியைத் துளைத்துகொண்டு உயரத்தில் ஊடுறுவிச் சென்றது.

Fig. 3
Indian Space Sciences

ஆரம்ப காலத்தில் ஏவிய முதல் ஏவுகணைகள், துணைக்கோள்கள்

அகமதாபாத்தில் நிர்மாணிக்கப்பட்ட பௌதிக ஆராய்ச்சிக் கூடம், விண்வெளிப் பயன்பாடு மையம் [Physical Reseach Laboratory & Space Application Centre], திருவனந்தபுரத்தில் விண்வெளிப் பௌதிக ஆய்வகம் [Space Physics Laboratory], பெங்களூரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பகம் [Indian Space Research Organization] ஆகிய மையங்களில் செயற்கைத் துணைக் கோள்கள் [Satellites], ஏவுகணை வாகனங்கள் [Launch Vehicles], உளவு ராக்கெட்டுகள் [Sounding Rockets] ஆகிய விண்வெளிச் சாதனங்களின் ஆராய்ச்சி, விருத்திப் பணிகள் நிகழ்ந்து வருகின்றன. முதல் துணைக்கோள் ஆரியபட்டா 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி ரஷ்ய ராக்கெட்டில் ஏறிக் கொண்டு போய்ச் சுழல் வீதியில் சுற்றிவர விடப்பட்டது. அடுத்து மூன்று துணைக் கோள்களும் [பாஸ்கரா-I, பாஸ்கரா-II, ஆப்பிள்] ரஷ்ய ராக்கெட் மூலமே [1979-1981] ஆண்டுகளில் எடுத்துச் செல்லப் பட்டன. ஐந்தாவது துணைக் கோள் ரோகினி முதன் முதல் இந்திய ராக்கெட் SLV-3 முன்பகுதியில் வைக்கப்பட்டு விண்வெளியில் விடப்பட்டது.

இஇதுவரை 40(?) துணைக் கோள்களை இந்தியா அண்டவெளியில் ஏவி இருக்கிறது. அவற்றில் 23 துணைக்கோள்களை இந்தியாவில் அமைக்கப் பட்ட நான்கு வித ராக்கெட்டுகள் SLV-3 [Satellite Launch Vehicle-3], ASLV [Augmented Satellite Launch Vehicle], PSLV [Polar Satellite Launch Vehicle], GSLV [Geo-Synchronous Satellite Launch Vehicle] வெற்றிகரமாக விண்வெளியில் தூக்கிச் சென்றுள்ளன. மற்ற 17(?) துணைக் கோள்களை, ரஷ்ய, அமெரிக்க, பிரெஞ்ச், ஈரோப்பியன் ராக்கெட்டுகள் சுமந்து சுழல்வீதிகளில் எறிந்துள்ளன. 1993 இல் ஏவப்பட்ட ஒரே ஒரு துணைக்கோள் [Indian Remote Sensing Satellite (IRS-1E)] மட்டும் சுழல்வீதியைத் தொட முடியாது தவறிப்போய் இழக்கப் பட்டது!


Fig. 4
GSLV Rocket

செயற்கைத் துணைக் கோள்கள் செய்துவரும் பணிகள்

1983 ஆகஸ்டு 30 ஆம் தேதி அமெரிக்க விண்வெளி மீள்கப்பல் [Space Shuttle] இன்சாட் [INSAT-1B] இந்தியத் துணைக்கோளைத் தூக்கிச் சென்று சுழல்வீதியில் விட்டது. ஏவப்பட்ட பல இன்சாட் வலைப்பணித் துணைக்கோள்களில் [INSAT Network Satellites] அதுவும் ஒன்று. இந்திய தேசியத் துணைக்கோள் தொடர்பு ஏற்பாடு [Indian National Satellite System] உள்நாட்டுத் தொடர்பு, சூழகக் காலநிலைக் கண்காணிப்பு [Meteorology], நேரடித் துணைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பி [Direct Satellite Television Broadcasting] ஆகியவற்றுக்குப் பயன்படுகிறது. இன்சாட் வலைப்பணியில் [INSAT Network] 167 தொலைத் தொடர்பு முனைகள் [Telecommunication Terminals], ஏறக்குறைய 4172 இருவழிப் பேச்சு இணைப்புகளை [Two-Way Speech Circuits] ஏற்படுத்த முடியும். இன்சாட் இணைப்பு இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் கிராமியத் தொலைப்பதிவு ஏற்பாடை [Rural Telegraphy] ஏற்கனவே நிலை நாட்டியுள்ளது. இன்சாட் துணைக்கோள் இணைப்பு, சமிக்கைகளை 650 தொலைக்காட்சி அலை அனுப்பிகளுக்குப் [TV Transmitters] பரிமாறி, 80 சதவீத இந்திய மக்களுக்குக் கலைக் காட்சிகளையும், செய்திகளையும் அனுதினமும் அனுப்பி வருகிறது.

Fig. 5
Space Capsule Recovery
Experiment

குறிப்பாக துணைக்கோள் மூலம் தொடர்பு கொள்ளவும் [Communication through Satellite], காலநிலை முன்னறிவிப்பு செய்யவும் பூகோளச் சூழக ஆய்வு [Meteorology] புரியவும் செயற்கைத் துணைக்கோள்கள் உதவுகின்றன. சூறாவளி, கடற்புயல் கொந்தளிப்பு [Cyclone] போன்றவை கரைப்புற ஊர்களைத் தாக்கும் முன்பே, துணைக்கோள் மூலம் பேரழிவு எச்சரிக்கை விடுக்கும் அபாய அறிவிப்பிகள், கிழக்குக் கடலோர ஊர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடத்தில் அமைக்கப் பட்டுள்ளன. அவை சரியான சமயத்தில் எச்சரிக்கை செய்து, பெரும்பான்மையான மக்களையும், ஆடு மாடு போன்ற விலங்குகளையும் காப்பாற்றி யுள்ளன. அத்துடன் விண்வெளித் தூர உளவு [Remote Space Sensing] வேளாண்மை, நீர்வளம், நிலவளம், தாதுக்கள் [Minerals], வனவியல் [Forestry], சூழக வெளி, [Environment], கடல்துறை வளர்ச்சி [Ocean Development], வெள்ளத்தால் சேதங்கள், மழையற்ற பஞ்சப் பகுதிகளின் விளைவுகள் போன்றவற்றையும் கண்காணிக்க உதவுகிறது. 2002 செப்டம்பர் 12 இல் ஏவப்பட்ட மெட்சாட் [METSAT] துணைக்கோள் முதன் முதல் பூகோளச் சுற்றிஇணைவு மாற்றுச் சுழல்வீதியில் [Geo-synchronous Transfer Orbit] வெற்றிகரமாக எறியப்பட்டது. அது 22,000 மைல் உயரத்தில் சுற்றிவரும் போது பூமியின் ஒரே முகத்தை நோக்கிக் கொண்டு தேவையான வானலைச் சமிக்கைகளை அனுப்பி வரும்! மெட்சாட் மிகுந்த உயரத்தில் பறந்து செல்லும் போது, பூகோளம் முழுவதையும் படமெடுத்துப் பூமிக்கு அனுப்பியுள்ளது!

Fig. 6
Satellite Assembly

+++++++++++++++++++

(தொடரும்)

தகவல்:

1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]
2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad
3. Indian Space Program By: Subhajit Ghosh
4 Chennai Online News Service About Insat 4B Orbiting Satellite [March 14, 2007]
5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]
6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm]
7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]
8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html [Dr. Vikram Sarabhai Space Pioneer]
9. Indian Space Program : Wikipedia WebSite
10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html]
11 New Scientist – India Special: Space Program Presses Ahead By: Anil Ananthaswamy [FEb 19, 2005]
12 An Overview of the Indian Space Program By: N. Clarkson [Jan 14, 2007]

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] April 5, 2007

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா