பூமியின் ஓஸோன் வாயுக் குடையில் போடும் துளைகள் [Holes in the Global Ozone Envelope]

This entry is part [part not set] of 22 in the series 20051006_Issue

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. (Nuclear) கனடா


ஓஸோன் வாயுவின் தீவிரப் பண்புகள்!

ஓஸோன் வாயு நாம் சுவாசிக்கும் பிராண வாயுவின் மூலக்கூறு [Oxygen Molecule] வேறுபட்ட மற்றொரு தோற்றம். ஆங்கிலத்தில் அல்லோடிரோபி [Allotropy] என்று அழைக்கப்படும் அம்மாறுதலில் ஆக்ஸிஜென் மூலக்கூறு O2, ஓஸோன் மூலக்கூறாக O3 வேறு வடிவம் பெறுகிறது. மின்னலடி போன்று மின்னியல் வெடிப்புகள் ஆக்ஸிஜென் மூலக்கூறுகளின் ஊடே புகும் போது, ஓஸோன் வாயு உண்டாகிறது. பேரிடி மின்னல் காலங்களில் வெள்ளைப் பூண்டு போல் மூக்கைத் துளைக்கும் வாயு சில சமயங்களில் நுகரப்படும். அது காற்றில் மின்னல் தாக்கி உண்டான ஓஸோன் வாயுவே! மின்சார யந்திரங்களின் அருகே நுகரப்படும் காரமான வாயுவும் ஓஸோன் வாயுதான். ஓஸோன் வாயு சிறிதளவு கொள்ளளவில் காற்றில் கலந்திருந்தாலும், அது விஷ வாயு போல் தீங்கை அளிக்க வல்லமை உடையது!

ஓஸோனை உற்பத்தி செய்வதற்குப் பேரளவு சக்தி தேவைப் படுகிறது. ஆனால் ஓஸோன் உடைந்து ஆக்ஸிஜெனாக மாறும் போதும் பேரளவு சக்தி வெளியாகிறது. தானாகவே எளிதில் முறியும் ஓஸோன் உடையும் போது கனல் வெளியாக்கும் இயக்கத் தன்மை [Exothermic Reaction] கொண்டது. மேலும் ஓஸோன் ஆக்ஸைடு ஆக்கும் ஒரு தீவிர வாயு [Oxydizing Agent]. அதனால் ஓஸோன் தாவர இனங்களுக்குப் படு சேதத்தை உண்டாக்கும். ரப்பர் பண்டங்களைச் சிறிது சிறிதாய்ச் சிதைத்துவிடும். நகரங்களில் எழும் புகைமூட்டப் [Smog] பிரச்சனைகளுக்கு ஓஸோன் பேரளவு பங்கேற்கிறது! ஆகவே புகைமூட்டம் சூழ்ந்துள்ள பகுதிகளில் தாவரப் பாதிப்புகளுடன் ரப்பர் கலப்புச் சாதனங்களில் சிதைவுகளும் நேர்கின்றன.

பூமிக்குக் குடை பிடிக்கும் ஓஸோனில் விழும் துளைகள்

பூமியின் தட்ப வெப்ப நிலையைக் கட்டுப்படுத்திச் சீராக்கி மனித இனமும், உயிரினமும் பிழைத்துக் கொள்ள உதவுவது, புவியைப் போர்வைபோல் சுற்றி இருக்கும் வாயுக் கோளம். ஒன்பது முதல் பதினைந்து மைல் உயரத்தில் பரிதியிலிருந்து பொழியும் புறயூதா கதிர்வீச்சுகளை [Ultraviolet Radiation] ஆக்ஸிஜென் வாயு விழுங்கி ஓஸோன் பெருத்த அளவில் உற்பத்தியாகி அங்கே சேமிக்கப் படுகிறது. அப்போது வான மண்டலத்தில் ஓஸோனின் பளு 27% பகுதி அளவை நெருங்கி, ஓஸோன் படிவு (Ozone Layer) கோளமாக பூமியைச் சுற்றிலும் உருவாகிறது.

பூமியைப் போர்வை போல் போர்த்தி யிருக்கும் ஓஸோன் வாயு, பாதிப்புகள் விளைவிக்கும் பரிதியின் தீவிரமான புறவூதாக் கதிர்களை [Ultraviolet Rays] 95%-99% வடிகட்டி பூமியில் உயிரினங்களைப் பாதுகாக்கிறது. ஓஸோன் படிவு அமைப்பில் ஓட்டைகள் விழுந்தால், வடிகட்டப் படாது செல்லும் புறவூதா கதிர்கள் உயிரினத்தின் [மனிதர், விலங்குகள்] செல்களை [Cells] முறிப்பதுடன், தோல் புற்றுநோய், கண்படல நோய் [Eye Cataract] போன்றவை உண்டாகக் காரண மாகிறது. மேலும் தாவர இனங்களும் பாதிக்கப்பட்டு, அவற்றின் இனவிருத்தி விதைகள் உண்டாவதைக் குன்றச் செய்கின்றன.

சிஎஃப்சி எனப்படும் [Chloro Fluro Carbons (CFC)] சில ஆர்கானிக் இரசாயனக் கலவைப் பண்டங்கள் ஆவியாகி, பூமிக்கு அதிக உயரத்தில் போய் சேர்ந்து கொண்டு, பரிதியின் ஒளியால் முறிக்கப்பட்டு, குளோரின் அணுவாகவும், ஃபுளுரின் அணுவாகவும் பிரிகின்றன. அந்த அணுக்கள் ஓஸோன் மூலக்கூறுகளை உடைத்து வெறும் ஆக்ஸிஜென் மூலக்கூறுகளாக மாற்றி ஓஸோன் திணிவைக் குன்றச் செய்கின்றன. தொழிற்சாலைகள் வெளிவிடும் கழிவு வாயுக்களிலும், இரசாயன ஆவித்திரவ வீச்சுகளிலும் [Aerosol Sprays] CFC வெளியாகி மேலே சென்று வான மண்டலத்தில் உள்ள ஓஸோன் பந்தலில் ஓட்டைகளைப் போடுகின்றன. 2003 செப்டம்பரில் அண்டார்க்டிகா பகுதியில் விண்வெளித் துணைக்கோள்கள் [Sattelite] மாபெரும் ஓஸோன் துவாரத்தைப் படமெடுத்தது. அமெரிக்கா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குளோரின், புரோமின், ஃபுளூரின் [Chlorine, Bromine, Fluorine] வெளியாக்கும் இரசாயனப் பண்டங்கள் கட்டுப்பாட்டு விதியில் பாதுகாக்கப் பட்டுள்ளன. அவ்விதம் ஆசியக் கண்டங்கள் கட்டுப்பாடு செய்துள்ளனவா என்பது சரிவரத் தெரியவில்லை.

பூமிக்கு 15 மைல் உயரத்தில் இருக்கும் ஸ்டிராடோஸ்பியர் [Stratosphere] வாயு மண்டத்தில் ஓஸோன் சேமிப்பு ஏன் குறைந்து வருகிறது என்பதன் காரணம் இன்னும் பூரணமாக அறியப்பட வில்லை! உலக ரீதியில் கடந்த 20 ஆண்டுகளாக ஓஸோன் திணிவு 3% குறைந்துள்ளதாக அறியப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகர்ப் பரப்பில் 8% சுருங்கி யுள்ளதாகக் காணப்படுகிறது. அண்டார்க்டிகா பகுதியில் கடந்த 25 ஆண்டுகளில் உலகின் எல்லாப் பகுதிகளையும் விட மிகுதியாக 50% குன்றி யுள்ளதாகக் கணக்கிடப் பட்டுள்ளது. பூகோளம் சூடேற வாயுப் புகைமூட்டம் காரணமாவது போல், உயிரினச் செல்கள் சிதைவுக்கும், தாவரங்களின் தளர்ச்சிக்கும் ஓஸோன் வாயுக் குறைவு உதவுகிறது என்பதை அறிந்து, அதைத் தடுக்க முயல்வதில் உலக மாந்தர் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

தகவல்:

1. The World Book Encyclopedia of Science, Chemistry Today (1989)

2. Reader ‘s Digest How in the World, Breaking Down the Ozone Layer (1990)

3. General Chemistry By James Brady (1990)

4. Atmospheric Ozone: An Update By: E. Linacre & B. Geerts (April 2000)

[This article was published in the Tamil Monthly Environmental Magazine: “VanagamE, VaiyagamE” by the Managing Editor: Vagai Selvi in September 4th week 2005]

****

S. Jayabarathan (jayabarat@tnt21.com) October 5, 2005 [Revised]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா