இயற்பியல்::2005 புதிய இணையதளம்

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

வெங்கட்ரமணன்.


http://iyarpiyal.org

2005 ஆம் ஆண்டை இயற்பியல் ஆண்டாக அறிவிக்கலாம் என்று ஐரோப்பிய இயற்பியல் சமூகம் கூறியது, தொடர்ந்து அமெரிக்க இயற்பியல் சமூகமும் (American Physical Society) அமெரிக்க இயற்பியல் கழகமும் (American Institute of Physics) இணைந்து இயற்பியல் ஆண்டாக அறிவித்தன. இந்த அறிவிப்புகள் பரவலாக வரவேற்பைப் பெற்று ஐக்கிய நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முழுவதும் இயற்பியலின் வெற்றிகள் கொண்டாடப்படும்.

இயற்பியல் ஆண்டு ? ஏன் ?

அப்படியென்ன இயற்பியல் பெரிய வெற்றியைச் சாதித்துவிட்டது என்று சிலர் கேட்கலாம்; அதற்குப் பதில் சொல்வது ஒன்றும் கடினமான காரியம் இல்லை. இன்றைக்கு நீங்கள் துய்க்கும் அத்தனை – மீண்டும் சொல்கிறேன் அத்தனை, எல்லா, சகலம், அனைத்துஸ கருவிகளும் இயற்பியலின் வெற்றிதான். பதினெட்டாம் நூற்றாண்டு தொடங்கி வரும் நூற்றாண்டிலும் இயற்பியல்தான் பிற அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிகோலியிருக்கிறது என்றால் அது மிகையில்லை. இப்பொழுது பரவலாகத் துய்க்கப்படும் தொழில்நுட்பங்களைப் பார்க்கலாம். நீங்கள் பயன்படுத்தும் கணினியின் மையமாக இருக்கும் நுண்செயலி இயற்பியலின் வெற்றி (குறைகடத்திகள்), தகவல் புரட்சியை நடத்தும் இணையத்தின் முதுகெலும்பான ஒளியிழைகள் இயற்பியலின் வெற்றி, அவற்றினூடு செய்திகளைக் கடத்தும் லேசர்கள் இயற்பியல் சாதனை, இன்னும் இன்றைக்குப் பயன்படும் விவசாயம் தொடங்கி விண் ஆய்வு ஈடாக (இடையில் வேதியியல், உயிரியல், நிலவியல், வானியல், விண்கோளியல், பிரபஞ்சவியல், மருத்துவக் கருவிகள், உயிர்த்தொழில்நுட்பம், தகவல் நுட்பம், கணினிகள் என்று விரியும்) எல்லாமே முதன் முதலில் இயற்பியலாளர்கள் வரையறுத்தவை அல்லது வடிவமைத்தவைதான். இத்தனைக்கும் முதுகெலும்பாக இருக்கும் இயற்பியலில் அருமையும் அதன் அழகியலும் பலருக்கும் தெரிவதில்லை. எனவேதான், இவற்றை எடுத்துச் சொல்லும் முகமாக 2005 ஆம் ஆண்டு இயற்பியல் ஆண்டாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏன் 2005 ?

சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பாக சுவிஸ் நாட்டில் காப்புரிமை அலுவலகத்தில் ஒருவர் வேலை செய்துவந்தார். அவர் இயற்பியலில் மூன்று முக்கிய கண்டுபிடிப்புகளைப் பதிப்பித்தார், எனவேதான் 2005. எந்த அளவுக்கு முக்கியம் ? – இன்றைக்கு நாம் வாழும் விதத்தையே இந்த மூன்று புரிதல்களும் மாற்றியிருக்கின்றன. நீங்கள் ஊகித்திருக்கக் கூடும் – ஆமாம், அந்த மனிதரின் பெயர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின். அந்த மூன்று கண்டுபிடிப்புகள்;

1. ஒளி சில சமயங்களில் தொடர்ச்சியான அலையைப் போலவும் சில சமயங்களில் குறிப்பிட்ட சக்திகளை மாத்திரமே கொண்ட துகளைப் போலவும் செயல்படுகிறது. – அதாவது ஒளிக்கு அலை-துகள் இருமைப் பண்பு (Wave-Particle Duality) இருக்கிறது.

2. மூலக்கூறு மற்றும் அணுக்களின் அடிப்படையிலாக வெப்பத்தின் ப்ரொனியன் இயக்கத்தை விளக்குதல் (Molecular theory of Brownian motion). இது அப்பொழுது நிச்சயமற்றிருந்த அணுக்களின் இருப்பை இன்னும் உறுதிப்படுத்தியது.

3. விசேடச் சார்நிலைக் கோட்பாடு (Special Theory of Relativity). “அசையும் பருப்பொருட்களின் மின்னியக்கவியல்” என்ற ஆய்வுரை காலம், தொலைவு, பொருண்மை, சக்தி இவற்றுக் கிடையேயான தொடர்பை விளக்கியது. (ஈர்ப்பு விசையைப் பற்றி ஐன்ஸ்டைன் இந்த இடத்தில் பேசவில்லை – எனவேதான் இது விசேட சார்நிலை என்று பெயரிடப்பட்டது – பொதுமைச் சார்நிலை அல்ல). இந்தக் கருத்துகளின் அடிப்படையில் காலம்-வெளி இவற்றுக்கிடையேயான தொடர்பும், சக்தி – பொருண்மை இவற்றுக் கிடையேயான தொடர்பும் நிறுவப்பட்டது.

இவற்றைத் தவிர 1905ஆம் ஆண்டின் பின்பகுதியில் ஐன்ஸ்டைன் மிகப் புகழ்பெற்ற E=mc2 என்ற சக்திக்கும் பொருண்மைக்குமான தொடர்பு (Mass-Energy Equivalence) சமன்பாட்டை வெளியிட்டார். அதன் பின்விளைவாக இன்றைக்கு நாம் அணுவைப் பிளந்து சக்தி பெறுவதும், அதன் துஷ்பிரயோகமாக நகஸாகி, ?ிரோஷிமா என்ற இரண்டு வடுக்களையும் நாம் துய்க்கிறோம்.

இயற்பியல் 2005: இணையதளம்

2005-ஆம் ஆண்டு முழுவதும் உலகெங்கும் இயற்பியல் தொடர்பான சொற்பொழிவுகள், மாணவர்களுக்கான போட்டிகள் என்று இயற்பியலைப் பற்றிய புரிதலை முன்னெடுத்துச் செல்ல உத்தேசித்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்தவரை இந்தியாவிலோ, இலங்கையிலோ இதைப் பற்றி அமைப்பு ரீதியாக அதிகம் கவலைப்பட்டதைப் போலத் தோன்றவில்லை. எனவே இது எம்மாலான சிறு முயற்சி. (இதில் நீங்களும் பங்குபெறலாம்). மேலதிகத் தகவல்களை விரைவில் இங்கே இடுவோம். அந்த நேரத்தில் மேற்சொன்ன மூன்று விஷயங்களைப் பற்றியும் அதையும் தாண்டி பொதுவில் இயற்பியல் பற்றியும் நாம் நிறையக் கற்றுக் கொள்ள முயற்சிப்போம்.

இத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். இதன் துவக்க வேலைகளை நான் செய்திருந்தாலும் இதை ஒரு பொதுத்தளமாகத்தான் உண்டாக்கியிருக்கிறேன். இதில் ஆர்வமுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் பங்கெடுக்க முடியும்.

வலைப்பதிவு

தளத்தின் மையமாக வலைப்பதிவு இருக்கும். இங்கே தினசரி இயற்பியல் குறித்த செய்திகள், விளக்கங்கள் உள்ளிடப்படும். இது ஒரு குழுப்பதிவு என்று சொல்லத்தேவையில்லை.

மன்றம்

ஊடாடல் மையமாக மன்றம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் முக்கிய அம்சமாக கேள்வி-பதில் பகுதி இடம் பெறும். இயற்பியல் குறித்த சந்தேகங்களை யார் வேண்டுமானாலும் கேட்கலாம். விளக்கம் சொல்லவும் யார் வேண்டுமானாலும் முன்வரலாம். இதைத் தவிர இந்தத் தள அமைப்பு, கல்விக்கருவிகள் போன்றவற்றைப் பற்றியும் உரையாடலாம்.

படத்தொகுப்புகள்

சுவாரசியமான படங்கள் இங்கே தொகுக்கப்படும். வரலாற்று ரீதியாக இயற்பியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞானிகள் குறித்த படங்கள் உள்ளிடப்படும். (தளத்தின் இடவசதி கருதி, சில படங்கள் மாத்திரமே உள்ளிடப்படும்.

தற்சமயம் ஆல்பர் ஐன்ஸ்டைனின் சில சுவாரசியமான படங்கள் இடப்பட்டுள்ளன.

விக்கி

இயற்பியல்.ஆர்க் தளத்தின் இன்னொரு முக்கிய பகுதி பலர்கூடி ஆவணங்களை உருவாக்க உதவும் விக்கி. இணையத்திற்கான html ஆவணங்களை வடிப்பதில் பரிச்சயமில்லாதவர்கள்கூட மிகச் சுலபமாக இணையப் பக்கங்களை உருவாக்க விக்கி உதவுகிறது. சற்று பெரிய கட்டுரைகளை எழுதுபவர்கள் விக்கியைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவார்கள்.

இயற்பியல்::2005 கொண்டாட்டங்களை அறிமுகப்படுத்தவும், இந்தத் தளத்தின் நோக்கங்களை வரையறுக்கவும் முதல் பக்கம் அமைக்கப்பட்டுள்ளது. பிற தமிழ் சஞ்சிகைகள், இணைய தளங்களில் வரும் செய்திகளும் திரட்டப்படுகின்றன. உதாரணமாக, தாகூர்-ஐன்ஸ்டைன் இருவருக்கும் இடையே இசையைப் பற்றிய உரையாடல் இப்பொழுது இடம்பெறுகிறது.

செய்திகள்

அன்றாடம் உலக அளவில் என்னென்ன முன்னேற்றங்கள் நடக்கின்றன என்பதைத் தெரிவிக்க பல முன்னணி இயற்பியலாளர் கழகங்களிலிருந்து செய்தியோடைகள் திரட்டப்படுகின்றன.

Physics Web, Institute of Physics (UK), Physics Today (American Institute of Physics), Optics.org (Optical Society of America), Nanotechweb.org போன்றவற்றின் செய்தியோடைகள் தற்சமயம் திரட்டப்படுகின்றன.

தொடர்புக்கு

தள நிர்வாகியைத் தொடர்பு கொள்ள நேரடி மின்னஞ்சல் வசதி செய்யப்பட்டிருக்கிறது. எரிதங்களைத் (Spam) தவிர்க்க இது உதவும் என்று நம்புகிறேம்.

இந்தத் தளத்தின் முக்கிய நோக்கம் அறிவுப் பரவலாக்கம். அந்த வகையில் இதை மாணவர்களிடம் எடுத்துச் செல்வது மிகவும் முக்கியம். இதைத் தமிழகம் மற்றும் இலங்கைப் பள்ளிகளில் அறிமுகப்படுத்த யோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

ஆர்வமுள்ள குழுமங்கள் மன்றங்கள், தனிநபர்களுக்கு இந்த அறிவிப்பை முற்செலுத்த வேண்டுகிறேன்.

தளத்தின் உள்ளடங்களை விரிவுபடுத்த அனைவரையும் வரவேற்கிறேன்.

அன்புடன்

வெங்கட்ரமணன்

டொராண்டோ, கனடா

vvenkat@sympatico.ca

Series Navigation

வெங்கட்ரமணன்

வெங்கட்ரமணன்