எரி செல் (fuel cell) உபயோகப்படுத்தலில் ஜப்பான் முன்னணியில் இருக்கிறது.

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue


ஜப்பானிய நிறுவனங்கள் எரிசெல் உபயோகத்திலும் எரிசெல் தொழில்நுட்பத்தை வியாபாரப்படுத்தலிலும் எரிசெல் மாதிரி வடிவங்களை கொண்டுவருவதிலும் முன்னணியில் இருக்கின்றன. சமீபத்தில் மடிக்கணினி (laptop computers)க்காகவும், ஊர்தொலைபேசி (mobile phones) களிலும் இந்த எரிசெல் தொழில்நுட்பம் கொண்ட பாட்டரிகளை அறிமுகப்படுத்தியிருக்கின்றன.

எரிசெல் பாட்டரிகளில் இருக்கும் முக்கிய பயன்பாடு இவற்றின் நீண்ட ஆயுள். சாதாரண பாட்டரிகள் 2 மணி நேரமே ஒரு மடிகணினியை இயக்கும் சக்தி கொண்டவை. இதே பருமனுள்ள ஒரு எரிசெல் ஐந்து அல்லது ஆறு மடங்கு சக்தி கொண்டதாகவும், அந்த அளவு அதிக நேரம் ஒரு மடிக்கணினியை இயக்கக்கூடியதாகவும் இருக்கும்.

‘மெத்தனால் எரிசெல்கள் கொண்ட மடிக்கணினிகள் ஜப்பானில் வந்து ஆறு மாதத்திலிருந்து ஒருவருடத்துக்குப் பிறகே இவை ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்படுகின்றன ‘ என்று ஒரு பிரெஞ்ச் நிபுணர் கூறுகிறார். இந்தத் துறையில் ஜப்பானிய ஆராய்ச்சி அமெரிக்க ஆராய்ச்சியை விட மூன்று வருடம் முன்னேறியதாகவும், ஐரோப்பாவை விட ஐந்து வருடம் முன்னேறியதாகவும் இருக்கிறது.

ஜப்பானிய கார் நிறுவனங்களான ஹோண்டா மற்றும் டோயோட்டா ஆகியவை உலகத்தின் முதன் முதல் எரிசெல்லால் சக்தி கொடுக்கப்படும் கார்களை உருவாக்கி சந்தைக்குக் கொண்டுவந்தன. இவற்றின் அதிகமான விலையும், ஹைட்ரஜனை வெகுதூரம் கொண்டுசெல்வதற்கு பிடிக்கும் செலவும், இவற்றை தினசரி வாழ்க்கைக்கு வெகுதூரத்தில் வைத்திருக்கின்றன.

1839இல் பிரிட்டிஷ் இயற்பியலாளரான வில்லியம் குரோவ் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த எரிசெல் தொழில்நுட்பம் ஹைட்ரஜனையும் ஆக்ஸிஜனையும் கலந்து தண்ணீர் உருவாக்கும்போது உருவாகும் மின்சாரத்தை எடுப்பதில் தோன்றியது.

அமெரிக்க ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ் அவர்கள் இந்த பிப்ரவரியன்று 1.7 பில்லியன் டாலர் இந்த ஹைட்ரஜன் ஆராய்ச்சிக்கு ஐந்துவருட காலங்களில் செலவிடப்போவதாகத் தெரிவித்திருக்கிறார்.

மின்சார சக்கர வண்டிகளில் எரிசெல்லை உபயோகப்படுத்துவற்கு ஏராளமான வாய்ப்பு இருக்கிறது என்றும், பல மருத்துவ சாதனங்களிலும், டிஜிட்டல் காமெராக்களிலும் இவை உபயோகப்படுத்தப்படலாம் என்றும் அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

டோஷிபா மற்றும் என்.ஈ.ஸி நிறுவனங்கள் கூற்றின் படி, இப்படிப்பட்ட எரிசெல் பாட்டரிகள் ஊர்தொலைபேசிகளுக்கும், மடிக்கணினிகளுக்கும் இன்னும் இரண்டு வருடங்களுக்குள் வியாபார ரீதியில் கிடைக்கும். இது ஜப்பானியர்களை இப்படிப்பட்ட ஒரு தொழில்நுட்பத்தை முதன் முதலில் சந்தைக்கு கொண்டுவருபவர்களாக ஆக்கும்.

டோஷிபாவின் எரிசெல் பாட்டரியின் மாதிரி வடிவமைப்பு மார்ச்சில் காட்டப்பட்டது. இது 2.75 மில்லிமீட்டர்கள் கொண்டதாகவும், 75 மில்லிமீட்டர் நீளம் கொண்டதாகவும், 900 கிராம்கள் எடை கொண்டதாகவும் இருந்தது. இதற்குள் 72 கிராம் கார்ட்டிரிஜ்களில் 50 கியூபிக் செண்டிமீட்டர் அளவுள்ள எரிபொருள் (மெத்தனால்) இருந்தது.

அதற்குப்பின்னர், டோஷிபா ஊர்தொலைபேசிகளுக்கும், பிடிஏ எனப்படும் கைக்கணினிகளுக்கும் உபயோகமாகும் சிறிய எரிசெல் பாட்டரியை கொண்டுவந்தும் இருக்கிறது.

இது 25சிசி கொண்ட மெத்தனால் உடையதாக, 20 மணிநேரம் இப்படிப்பட்ட கருவிகளை இயக்கக்கூடியதாக இருக்கிறது.

சூன் மாதத்தில் என்.ஈ.ஸி நிறுவனம் மடிக்கணினிகளுக்கான எரிசெல் பாட்டரியை அறிமுகம் செய்தது. இது வரும் வருடமே சந்தைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து சுமார் 40 மணி நேரம் மடிக்கணினிக்கு சக்தி கொடுக்கக்கூடிய எரி செல் பேட்டரி 2005இல் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற புதன் கிழமை ஹிட்டாச்சி நிறுவனம் மெத்தனால் எரிசெல் பாட்டரியை உருவாக்க உழைத்துக்கொண்டிருப்பதாக அறிவித்தது.

மோட்டரோலா மற்றும் டுராசெல் நிறுவனங்கள் இணைந்து எரிசெல் ஆராய்ச்சியில் இறங்கியிருக்கின்றன. ஆனால் இவற்றின் ஆராய்ச்சி நோக்கு வாகங்களுக்கானது. இந்த துறையில் அமெரிக்காவும் ஜப்பானும் போட்டிப்போட்டுக்கொண்டு முன்னணிக்கு வர உழைத்துக்கொண்டிருக்கின்றன.

ஆனால், உலக வெப்பமாதலுக்கும் சுற்றுச்சூழல் மாசுவுக்கும் எதிராக இந்த எரிசெல் தொழில்நுட்பத்தை முன்னுக்குக் கொண்டுவருவதில் நிறைய பிரச்னைகள் உள்ளன.

தற்போது உற்பத்தி செய்யப்படும் அனைத்து ஹைட்ரஜனும் இயற்கைவாயுவிலிருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. ஆகையால் இந்த தொழில்நுட்பம் மாறாத வரையில் இதனால் உலகவெப்பமாதலோ அல்லது சுற்றுச்சூழல் மாசுவோ கட்டுப்படப்போவதில்லை.

தண்ணீரிலிருந்து ஹைட்ரஜனை உற்பத்தி செய்து அதனை ஒரு எரிசெல்லாக ஆக்குவதே எங்களது இறுதி நோக்கம் ‘ என்று கென் இசிரா ஓடா என்ற யோகோஹோமா பல்கலைக்கழக பேராசிரியர் கூறுகிறார். ***

Series Navigation

செய்தி

செய்தி