The Hitchhiker ‘s Guide to the Galaxy எழுதிய டோக்ளஸ் ஆடம்ஸ் மறைவு

This entry is part [part not set] of 18 in the series 20010513_Issue


ஒரு அறிவியல்கதையாகவும், ஒரு கேலிச்சித்திரமாகவும், நகைச்சுவையாக எழுதப்பட்ட The Hitchhiker ‘s Guide to the Galaxy என்ற புத்தகத்தை எழுதிய பிரித்தானியரான டோக்ளஸ் ஆடம்ஸ் தன் 49ஆவது வயதில் சாண்டா பார்பரா என்ற கலிபோர்னிய நகரத்தில் மே 12ஆம் தேதி 2001இல் மாரடைப்பால் மறைந்தார்.

The Hitchhiker ‘s Guide to the Galaxy என்பது பிரிட்டிஷ் பிராட்கேஸ்டிங் கார்பரேஷனில் தொடராக 1978இல் வெளிவந்தது. கிரகங்கள் கிரகங்களாகப் போகும் இரண்டு பிரயாணிகளின் நகைச்சுவை பயணக்கட்டுரை போல வந்தது. பேரண்டத்தில் ஒரு ரோடு போடுவதற்காக, ரோட்டின் நடுவே இருக்கும் நாம் இருக்கும் பூமி அழிக்கப்படுவதிலிருந்து இந்தக்கதை ஆரம்பிக்கிறது.

இது பின்னர் ஒரு புத்தகமாக வந்து 140 லட்சம் பிரதிகள் விற்றது. பிறகு இது ஒரு தொலைக்காட்சி தொடராகவும் வந்தது.

இதன் வெற்றிக்குப் பின்னர், இதன் தொடராக, ‘பேரண்டத்தின் முடிவில் இருக்கும் உணவுவிடுதி ‘, ‘வாழ்க்கை, பேரண்டம், அப்புறம் எல்லாமும் ‘, ‘பார்ப்போம், மீன்களுக்கு மெத்த நன்றி ‘ என்ற புத்தகங்களும் வெளிவந்தன.

இந்த புத்தகங்களில் மறக்கமுடியாத ஜேஃபாட் பீபிள்ப்ராக்ஸ், மார்வின் என்ற இயந்திரமனிதன் போன்ற குணச்சித்திரங்களும், கேலியும் இருக்கின்றன. ஒரு இடத்தில் ‘வாழ்க்கை, பேரண்டம், மற்றும் எல்லாவற்றுக்கும் முக்கியமான முக்கியமான கேள்விக்கான பதிலும் இருக்கிறது. பதில் 42.

ஆடம்ஸ் தனியாக இளம்பருவத்தில் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்தபோது இந்தக் கதையைப் பற்றிச் சிந்தித்ததாகச் சொன்னார்.

‘1971இல் ஐரோப்பாவில் ஹிட்ச்ஹைக்கர் கைட் டு ஈரோப் என்ற புத்தகத்தின் பிரதியோடு அலைந்துகொண்டிருந்தேன். ஒரு சமயம் தனியாக ஒரு புல்வெளியில் படுத்துக்கொண்டிருந்தேன். நன்றாகக் குடித்திருந்தேன். மல்லாக்கப்படுத்து வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தேன். யாராவது ஹிட்ச்ஹைக்கர் கைட் டு காலக்ஸி யாராவது எழுத வேண்டும் என்று நினைத்தேன். அப்போது நான் தான் பின்னால் அதை எழுதப்போகிறேன் என்று நினைத்துப்பார்க்கவில்லை ‘ என்றார்

இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான புத்தகங்களில் 24ஆவதாக, வாட்டர்ஸ்டோன் புத்தகமையம் செய்த ஆய்வில் வந்தது.

இவர் பிபிஸி நிறுவனத்தில் வெகுகாலம் பணி செய்தார். இவர் டிஜிட்டல் வில்லேஜ் என்ற நிறுவனத்தையும் தொடங்கினார். ஹிட்ச்ஹைக்கர் நாவலை திரைப்படமாக திரைக்கதை எழுத வெகுகாலம் முயற்சி செய்து வந்தார். அந்த நாவலை திரைப்படமாக்குவது எளிதல்ல என்று சொல்லிவந்தார்.

ஆடம்ஸ் ஜேன் பெல்சன் என்ற வக்கீலை 1991இல் திருமணம் செய்தார். இவருக்கு போல்லி என்ற ஒரு மகள் இருக்கிறார்.

Douglas Adams site: http://www.douglasadams.com

Hitchhiker ‘s Guide: http://www.h2g2.com

Series Navigation

செய்தி

செய்தி