வரும் காலத்து 10 புதிய தொழில் நுட்பங்கள்

This entry is part [part not set] of 14 in the series 20010115_Issue

எம் ஐ டி ரிவியூ


10 வருடங்களுக்குப் பின்னர் இண்டெர்நெட் என்னும் மின்வலை மிகப்பெரிய விஷயமாக எல்லோராலும் பயன்படுத்தப்படும் என்ற விஷயம் நமக்குத் தெரிந்திருந்தால் நாம் அதற்குத் தயாராக இருந்திருக்கலாம். ஆனால் ஜோதிடத்தின் மூலமாக இதெல்லாம் கண்டுபிடிக்க முடிவதில்லை.

இப்போது எம் ஐ டி டெக்லானஜி ரிவியூவில் ஒரு பத்து விஷயங்களை முன்னோடியாக ஆராய்ந்து இவையெல்லாம் வருங்காலத்தில் நம் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை என்று சிந்தித்து ஒரு 10 கட்டுரைகளை 10 தொழில்நுட்பங்களை விளக்கி அந்த தொழில்நுட்பங்களை தீவிரமாக ஆராயும் 10 தொழில்நுட்பவியலாளர்களைப் பற்றி எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். பெப்ரவரி 2001 இதழில் வெளிவந்த கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து திண்ணையில் வருகிறது.

**

1. மனித மூளை – கம்ப்யூட்டர் இணைப்பு (Brain Machine Interfaces)

மிகுவெல் நிகோலெலிஸ் ( Miguel Nicolelis)

ஆந்தைக்குரங்கு என்று அழைக்கப்படும் இரவுநேரத்தில் வெளிவரும் வகைக் குரங்கு ஒன்றுக்கு பெல்லி என்று பெயர்வைத்திருக்கிறார்கள். ஒரு சட்டைப்பையில் போட்டுவிடலாம். அவ்வளவு சின்னது இந்தவகைக் குரங்கு.

பெல்லியின் தலையில் சின்ன ஓட்டைகள் போட்டு மூளையில் இருக்கும் சில 90 நியூரான்களை தொடுமாறு கம்பிகள் வைத்திருக்கிறார்கள். அந்த கம்பிகளில் எந்த அளவு மின்சாரம் வருகிறது என்று அளக்க அதை ஒரு கம்ப்யூட்டருடன் இணைத்திருக்கிறார்கள்.

பெல்லியின் செரிபரல் கார்டெக்ஸ் (Cerebral Cortex)இன் 4 முக்கியமான பகுதிகளிலிருந்து இந்த மின்சார அளவுகள் ஒரு மானியில் பதிவு செய்யப்படுகின்றன.

பெல்லி ஒரு ஆப்பிள் சாறு கோப்பை நோக்கி தன் கையை நீட்டும்போது, பெல்லியின் மூளை என்ன செய்திகளை பரிமாறிக்கொள்கிறது என்பது கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகிறது.

டியூக் பல்கலைக்கழகத்தின் மூளை நரம்பியல் நிபுணரான மிகுவெல் நிகோலெலிஸ் அந்த பதிவுகளைக் காட்டி, ‘இது உலகத்திலேயே முக்கியமான பதிவுகள் ‘ என்கிறார்.

**

மூளை ஒரு காரியம் செய்யும் போது என்ன மின்சார சிக்னல்களை (செய்திகளை) தனக்குள் பரிமாறிக்கொள்கிறது என்று ஆராய்ந்து, அதனை பயன் படுத்தி, மனித மூளைக்கும், இயந்திரங்களுக்கும் தொடர்பு ஏற்படுத்தி, மூளையில் நினைத்தால் தானாக வெளிப்புறத்தில் நடக்குமாறு செய்வதற்காக, உலகத்தில் ஆராயும் ஒரு சில விஞ்ஞானிகளில் ஒருவர் மிகுவெல் நிகோலெலிஸ்.

எவ்வாறு மூளை , மனித மனம் வேலை செய்கிறது என்பதை ஆராய்வது. அந்த அறிவைக்கொண்டு, மனித மூளைக்குள் வைக்கும் அளவுக்கு சில உள்வைப்பொருள்கள் (implants) தயாரிப்பது. இவ்வாறு மூளைக்குள் வைக்கப்பட்ட உள்வைப்பொருட்கள் மூலம் வெளியே இருக்கும் கம்ப்யூட்டர்களையும் இயந்திரங்களையும் இயக்குவது. இதெல்லாம் இந்த ஆராய்ச்சி மூலம் செய்யக்கூடிய விஷயங்கள்.

நிகோலெலிஸ் இந்த அமைப்பை ‘கலப்பு மனிதமூளை இயந்திர இணைப்புகள் ‘ (Hybrid brain machine interfaces HBMI ) என்று சொல்கிறார்.

எம் ஐ டியின் மனித இயந்திர தொடர்பகத்தின் ( MIT Human Machine Haptics) பரிசோதனைச்சாலையில் நிகோலெலிஸ் வேலை செய்துகொண்டிருந்தபோது, இவர் ஒரு முக்கியமான சாதனையை நிகழ்த்திக் காண்பித்தார். அதாவது பெல்லி தன் கையை நீட்டும்போது ஒரு இயந்திர மனிதன் அதே போல அதே நேரத்தில் கையை நீட்டுமாறு செய்து காண்பித்தார். பெல்லியின் மூளைக்குள் செலுத்தப்பட்ட கம்பிகள் தரும் செய்தியைக் கொண்டு, அந்த செய்தியை கம்ப்யூட்டரில் ஆராய்ந்து அந்த கம்ப்யூட்டரோடு ஒரு இயந்திர மனிதனை இணைத்து, அந்த இயந்திர மனிதனை பெல்லி போலவே செயலாற்ற வைத்தார். எல்லாம் அதே நேரத்தில்.

பக்கவாதத்தால் செயலிழந்த மனிதர்கள் செயலாற்ற இது போன்ற மனிதமூளை-இயந்திர இணைப்புகள் எதிர்காலத்தில் பயன்படுத்தப்படும் என்று நிகோலெலிஸ் கருதுகிறார்.

பக்கவாதத்தால் செயலிழந்த மனிதர்கள், எதிர்காலத்தில், அவர்களது சிந்தனை மூலம் ஒரு சக்கர நாற்காலியை இயக்கவும், அல்லது செயற்கை இயந்திரக்கையை இயக்கவும், ஏன் செயலிழந்த கைககளை மீண்டும் செயலாற்ற வைக்கவும் பயன்படும் என்று கருதுகிறார்.

நிகோலெலிஸ் சொல்வது போல இருதயத்துக்கு பேஸ் மேக்கர் என்னும் சாதனம் துணை செய்வதுபோல மூளைக்கு இந்த கருவிகள் பயன்படும் என்று சொல்லாம்.

எமோரி பல்கலைக்கழகத்தில் மூளை நரம்பியல் நிபுணரான ஃபிலிப் கென்னடி, பக்கவாதத்தால் செயலிழந்த பலபேருக்கு ஒரு கருவியை மூளையில் வைத்து அவர்களால் கம்ப்யூட்டரில் இருக்கும் கர்ஸரை நகரவைக்கப் பழக்க முடியும் என்று காண்பித்திருக்கிறார்.

இந்தக்கருவிகள் மூளையின் செயல்பாடு பற்றி நாம் நன்றாக அறிந்து கொள்ளவும் உதவும்.

இன்னும் நிகோலெலிஸ் மற்றும் பல மூளை நரம்பியல் நிபுணர்களுக்கு மூளையில் இருக்கும் கோடிக்கணக்கான நியூரான்கள் எவ்வாறு செயல்படுகின்றன, அந்த நியூரான்கள் எவ்வாறு செய்திகளை உற்பத்தி செய்கின்றன அவற்றை எப்படி மற்றவைகளுக்குத் தெரிவிக்கின்றன என்பது தெரியாது. எப்படி வண்ணங்கள் நியூரான்களால் அறிந்துகொள்ளப்படுகின்றன, வாசனைகள் எப்படி நியூரான்களால் அடையாளம் கண்டுகொள்ளப்படுகின்றன, எப்படி நுணுக்கமான அசைவுகள் மூலம் கால்பந்தாட்டக்காரர்களின் கால்களை சுழல வைக்கின்றன என்பது எதுவும் தெரியாது.

‘இறுதி வரைபடம் என்று மூளை பற்றிய முழு விவரம் நம்மிடம் இல்லை. குத்துமதிப்பாக இங்கே இது நடக்கின்றது என்பது தெரிகிறது அவ்வளவுதான் ‘ என்கிறார் நிகோலெலிஸ்.

நிகோலெலிஸின் சமீபத்திய பரிசோதனைகள் பல நியூரான்களை ஒன்றுசேர்த்து, மின்சாரக் கம்பிகள் மூலம் வடிகால் கொடுத்து அதன் மூலம் மூளையின் பல்வேறு பகுதிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்று அறிய முயற்சிக்கின்றன.

பெல்லியின் மூளையில் சில நியூரான்களை தொட்டதன் மூலம், பெல்லி ஒரு விஷயம் செய்வதற்கு சில மில்லி வினாடிகளுக்கு முன்பே, அது என்ன செய்யப்போகிறது என்பதை கம்ப்யூட்டரில் அறிந்து கொள்ள முடிகிறது.

இன்னும் பல தடைக்கற்களை தாண்டித்தான், உண்மையிலேயே ஒரு மனித மூளைக்கு ஒரு கருவியை, நம்பிக்கையுடனும், தெளிவுடனும் பொறுத்த முடியும். இன்னும், மனம் கட்டுப்படுத்தும் இயந்திரக்கைகளும், கணிணிகளும் பரிசோதனைச் சாலையில் மட்டுமே இருக்கின்றன.

மூளைக்குள் அறுவை சிகித்சை செய்தே இன்னும் கம்பிகளை சொருகிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு நிறுவனத்தோடு இணைந்து மூளைக்கு வெளியில் ஒரு சில்லு ஒட்டி மூளைக்குள் ஓடும் மின்சாரத் தகவல்களை அறிந்து கொள்ள முடியுமா என்று நிகோலெலிஸ் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த வருடம், நிகோலெலிஸ், டியூக் பல்கலைக்கழகத்தின் புதிய துறை ஒன்றுக்கு உதவி இயக்குனராக ஆகிறார். இந்த புதிய துறை மூளை தொழில்நுட்பம், மூளை கணக்கியல், கணிணி அறிவியல், நியூரான் சில்லு வடிவமைப்பு மற்றும் மூளை அறிவியலுக்கான புதிய மையமாக உருவாகிறது.

இந்த முயற்சி, இன்னும் வளர்ந்து, இந்த மூளைத் தொடர்புக் கருவிகள் பிரபலமாகி, செல்லுலார் தொலைபேசி போலவும் பேஸ்மேக்கர் போலவும் சாதாரண விஷயங்களாக, மூளையை மையமாகக் கொண்டு ஒரு புரட்சியைத் தோற்றுவிக்கும் என்று கருதுகிறார் நிகோலெலிஸ்.

**

அண்டானியோ ரெகாலடோ

**

Series Navigation

எம் ஐ டி ரிவியூ

எம் ஐ டி ரிவியூ