ஒருவழியாக நாம் சாப்பிடும் உணவுப்பொருள்களைச் சாப்பிட்டு சக்தி பெறும் இயந்திர மனிதனையும் கண்டுபிடித்தாய்விட்டது.
டாம்பா நகரத்தில் இருக்கும் தென் ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் Gastronome என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த இயந்திர மனிதன் ஒரு மீட்டர் நீளமாகவும் 12 சக்கரங்களில் செல்லும் மாதிரிக்கு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திர மனிதனுக்குள் ஈ-கோலி நுண்ணுயிரிகளைக் கொண்டு இயங்கும் ஒரு எரிபொருளை மின்சாரமாக மாற்றும் என்ஜின் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஈ-கோலி பாக்டிரீயாக்கள் சர்க்கரையை குளூக்கோஸாகவும் குளூக்கோஸை மறுபடியும் உடைத்து எலக்ட்ரான்களை வெளிப்படுத்துகின்றன. இந்த எலக்ட்ரான்கள் ஒரு பேட்டரியில் சேமிக்கப்பட்டு இயந்திர மனிதனுக்கு மின் சக்தியாக உபயோகப்படுகிறது.
இந்த ஈ கோலி என்ஜின் சாதாரண தோசை இட்லியைக்கூட சாப்பிட்டு மின்சாரம் பண்ண உபயோகப்படுத்தலாம். ஆனால் இன்னும் இந்த இயந்திரமனித மலத்தை எப்படி வெளியே அனுப்புவது என்று திட்டமிடவில்லை இவர்கள்.
இந்த சாப்பாடு சாப்பிடும் இயந்திர மனிதனைக் கண்டுபிடித்த இயந்திரவியல் உதவிப்பேராசிரியரான ஸ்டூவர்ட் வில்கின்ஸன், இந்த முறையை வைத்து புல்லைத் தின்று சக்தி பெற்று புல்வெட்டும் இயந்திரம் பண்ணலாம் என்று கூறுகிறார். வேடிக்கைக்குச் சொல்லவில்லை இவர்.
ஆதாரம் – எம்ஐடி டெக்லானலி ரிவியூ- பெப்ரவரி 2001.
http://www.eng.usf.edu/%7ewilkinso/gastrobotics/page22.html