வெள்ளைத் திமிர்

This entry is part 26 of 49 in the series 19991203_Issue

அ. மார்க்ஸ்


அய்ரோப்பிய அனுபவம் பற்றிய அவரது கட்டுரையிலிருந்து…

குளிர் வசதி செய்யப்பட்ட அறை. கம்ப்யூட்டர், பாக்ஸ், செராக்ஸ் கருவிகள் புடை சூழ சொகுசு நாற்காலியில் உட்கார்ந்திருந்தான் அந்த பிரெஞ்சுக்காரன். நடுவிலிருந்து கண்ணாடித் தடுப்பிலுள்ள சிறிய வட்டத் துளை வழியே குனிந்து பேசிக்கொண்டு நம்மவர்கள்.

பிரெஞ்சுத் தூதரகத்தில் விசா வழங்கும் பகுதி பாண்டிச்சேரியில் மட்டுமல்ல, பெர்ன்னிலும், பிராங்க்பர்ட்டிலும் கூட இப்படித்தான். விடிகாலையில் சென்று ‘கியூ ‘வில் நிற்கவேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு கதவைச் சாத்திவிடுகிறார்கள்.

சென்னையிலுள்ள ஜெர்மன் தூதரகத்தில் நம்மை உள்ளே விடுவதுகூட இல்லை. வாசலிலேயே நிறுத்தி வைத்து, போன் மூலம் அதிகாரியைக் கேட்டுவிட்டு, பெரும்பாலானோரை வெளியே அனுப்பிவிடுகின்றனர்.

சென்னை அமெரிக்கத் தூதராலயத்தின் முன் நீண்ட கியூ வரிசை வெயிலில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

அமெரிக்க-அய்ரோப்பிய தூதராலயங்கள் ‘விசா ‘ எடுக்க வருபவர்களை இப்படிக் கேவலப்படுத்துவதன் பிண்னணி என்ன ?

கண்ணாடித் தடுப்பின் முன் ‘விசா ‘வுக்காக காத்திருப்போரின் தோலின் நிறம்தான். அய்ரோப்பாவில் எந்த நாட்டிலும் நுழைவதற்கு வெள்ளைத்தோலர்களுக்கு ‘விசா ‘ தேவையில்லை. ஆசியர், ஆப்ரிக்கர், இசுலாமியர், லத்தீன் அமெரிக்கர், முன்னாள் சோஷலிச நாட்டினர் – இவர்களுக்கு மட்டுந்தான் ‘விசா ‘. இவர்கள்தான் கண்ணாடித் தடுப்பின் முன் காத்துக்கிடப்பவர்கள். புதுவை பிரெஞ்சுத் தூதராலய அதிகாரிக்கு ஒரு பெரிய அய்யம் வந்துவிட்டது. நான் படித்ததும் சொல்லிக் கொடுப்பதும் ‘பிசிக்ஸ் ‘. பேசப்போவது தமிழ் இலக்கியம் பற்றி. இது எப்படிச் சாத்தியம் ? அவன் திரும்பத் திரும்பக் கேட்டான். எனது எம்.எஸ்.ஸி, எம்.பில் பட்டங்களை பலமுறை வாசித்துப்பார்த்தான். மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டான்.

நான் தமிழில் புத்தகங்கள் எழுதியிருக்கிறேன் என்றேன். காட்டச் சொன்னான். கையில் இல்லை. ‘நிறப்பிரிகை ‘ இதழ் ஒன்றைக் கொடுத்தேன். அதில் என் பெயர் இருக்கிறதா எனத் தூதராலயத்தில் பணிபுரியும் தமிழ்ப்பெண் ஒருவரைக் கூப்பிட்டுக் கேட்டான். ‘அ.மா ‘ என்ற பெயர் அவனுக்குத் திருப்தி அளிக்கவில்லை.

‘ ‘தமிழ் இலக்கியத்தில் மரபும் நவீனத்துவமும் ‘ என்கிற என்ன பேசப் போகிறாய் ? சுருக்கமாகச் சொல் ‘ ‘

திடாரெனக் கேட்டுவிட்டான். ஆங்கிலத்தில் வேறு பதில் சொல்லியாக வேண்டும். ‘தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகாலப் பாரம்பரியமுடையது. இது தமிழ் நவீனமயமாதலின் மீது சில சாதகமான விளைவுகளையும் சில பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. இவைகளைப்பற்றித்தான் பேசப்போகிறேன் ‘

‘சாதகம் பாதகம் – ஒவ்வொன்றிற்கும் ஒரு உதாரணம் சொல் ‘

என் பதில் அவனுக்குத் திருப்தி அளிக்கவில்லை. அரியலூருக்குப் போய் எனது கல்லூரியிலிருந்து ஒரு என்.ஓ.சி வாங்கி வரச் சொன்னான். தமிழ்நாடு அரசிடமிருந்து கவர்னரின் பெயரால் கல்வித்துறை செயலரிடமிருந்து வாங்கியிருந்த என்.ஓ.சியைக் காட்டினேன்.

‘இது போதாது. போய் உன் பிரின்ஸிபாலிடம் வாங்கி வா ‘

‘பிரின்ஸிபாலையும் விட கல்வித்துறையின் மிகப் பெரிய அதிகாரியிடம் வாங்கியிருக்கிறேன். பிரின்ஸிபாலின் ஒப்புதல் பெற்றுத்தான் இது கொடுக்கப்பட்டுள்ளது ‘

‘இல்லை, பிரின்ஸிபாலிடம் வாங்கி வா ‘

‘நாளை என் பிளைட். இனி போய் வாங்கி வர முடியாது ‘

‘பாக்ஸில் வாங்கு ‘

‘அரியலூருக்கு பாக்ஸ் வசதி கிடையாது. அதோடு பாக்ஸில் எல்லாம் எங்கள் அதிகாரிகள் அனுப்பமாட்டார்கள் ‘

‘நீ பிரின்ஸிபாலிடம் வாங்கி வந்தால்தான் உனக்கு இன்று விசா ‘

***

அவன் சொன்னால் சொன்னதுதான். அவன் எதைக் கேட்கிறானோ அதை கொடுத்தாகவேண்டும். இதைத்தான் அவர்கள் ‘Rule of Law ‘ என்கிறார்கள். பெர்ன்னில் உள்ள பிரெஞ்சுத் தூதராலயத்தில் சென்று ‘விசா ‘வுக்கு முயற்சித்தபோது பிரின்ஸிபாலிடமும் ஒரு சான்றிதழை வாங்கி வைத்திருந்தேன். அங்கேயிருந்த பிரெஞ்சுக்காரன் சொன்னான்.

‘பாண்டிச்சேரியிலுள்ள பிரெஞ்சுத்தூதராலயத்தில் உனக்கு ‘விசா ‘ கொடுக்கலாம் என்று சான்றிதழ் தந்தால்தான் கொடுக்க முடியும் ‘

‘அதற்கு கால அவகாசமில்லையே ‘

‘அது உன் பிரச்னை ‘

***

ப்ராங்க்பர்டில் உள்ள பிரெஞ்சுத் தூதரகத்தில் எல்லாம் பெண் அதிகாரிகள்தான். கொஞ்சம் சாத்தியமாகிறமாதிரி அவள் ஒரு நிபந்தனை விதித்தாள். ப்ராங்க்பர்டில் உள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து ஒரு என்.ஓ.சி வாங்கி வரச் சொன்னாள்.

இந்தியத் தூதரகத்தில் தமிழர்கள் எல்லாம் அந்நியர்களாய் நிற்க வேண்டிய அவலம். எல்லாம் இந்திக்காரர்கள். இரண்டு முறை அலைய வைத்து ஆறு டொச் மார்க் கட்டணம் பெற்றுக் கொண்டு அந்தக் கடிதத்தை தந்தார்கள்.

கடிதத்தைப் பரிசீலித்துவிட்டு அந்த பிரெஞ்சு அதிகாரி கேட்டான், ‘பிரான்ஸில் இருக்க உனக்கு எத்தனை நாள் விசா வேண்டும் ? ‘

‘இரண்டு நாள் போதும் ‘

‘மூன்று நாள் தருகிறேன். இரண்டு நாள் பிஸினஸ். பாரிசைச் சுற்றிப்பார். அழகிய நகரம். ‘ஈபல் டவர் ‘ கேள்விப்பட்டிருக்கிறாய் அல்லவா ? ‘

***

ஊடகம், டிஸம்பர் 94 *** திண்ணை, நவம்பர் 14, 1999 ***

Thinnai 1999 December 3

திண்ணை

Series Navigation<< புலம்பல்இன்டெர்நெட்டில் திவசம் >>

அ. மார்க்ஸ்

அ. மார்க்ஸ்