பட்டாம்பூச்சிகள் சுதந்திரமானவை

This entry is part [part not set] of 24 in the series 20100108_Issue

நரேந்திரன்


நீண்ட நாட்களுக்குப் பிறகு சமீபத்தில் ‘எக் துஜே கெலியே’ திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வெளிவந்து, கஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பெருவெற்றி பெற்ற திரைப்படம். அன்றலர்ந்த மலர் போல ரத்தி அக்னிஹோத்ரி. நகைப்பூட்டும் பட்டப்பெயர்கள் எதுவுமில்லா, சாதாரண கமலஹாசனும் அதில் நடித்திருக்கிறார். பெரும்பாலான காட்சிகளில் தன் அற்புதமான நடிப்பால் ரத்தி, கமலஹாசனைத் தூக்கிச் சாப்பிட்டிருப்பார். கமலஹாசனுக்கு முதல் இந்திப்படம். குருநாதர் பாலசந்தர் தன் சிஷ்யப்பிள்ளையை இந்திக்கு அறிமுகப்படுத்த மிகவும் மெனக்கெட்டிருப்பது கண்கூடு. இன்றைக்குப் பார்க்கும் போது கதையில்/லாஜிக்கில் ஓட்டைகள் இருப்பது தெரிந்தாலும், சுவாரசியமான திரைக்கதை அமைப்பால் அந்தக் குறைகள் பெரிதாகத் தெரிவதில்லை.

அனேகமாக, இந்தியத் திரைப்படங்களில் முதன் முறையாக கதாநாயகன், கதாநாயகின் தொப்புளில் பம்பரம் விடுவதைக் காட்டிய ‘புரட்சி இயக்குனர்’ பாலசந்தராகத்தான் இருக்க முடியும். சந்தேகமில்லாமல், வக்கிரமான கற்பனைகளை முழுக்குத்தகை எடுத்தவர்கள் தமிழ் சினிமா இயக்குனர்கள். ஓரளவு சுமாரான இயக்குனராக அறியப்படுகிற பாலசந்தரும் இதற்கு விதிவிலக்கில்லை. கேட்டுக் கொண்டிருந்த அண்ணாச்சி, “எளா, தமிளு படத்துல ஈரோ ஈரோயின் தொப்புளுல ஆம்லெட்டேல்லா சுடுகான்!” என்கிறார். கோடம்பாக்கம் ராமர் பிள்ளைகளின் இந்த கண்டுபிடிப்பு உலகிற்கு எவ்வளவு உபயோகமாக இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். பெருமிதமாக இருந்தது. உலகின் எரிபொருள் சிக்கலையெல்லாம் நொடியில் தீர்த்து வைத்து விடலாம் பாருங்கள்! அவனவன் பெண்டாட்டியை நீளவாக்கில் படுக்க வைத்து…..Never mind.

‘எக் துஜே கெலியே’யின் இன்னொரு சிறப்பம்சம் அதன் இசை. லஷ்மிகாந்த் பியாரேலாலின் ‘ஹம் பனே’வும், ‘தேரி மெரி பீச்மே’வும் மறக்கவியலாதவை. எஸ்.பி. பாலசுப்ரமண்யத்திற்கும் இதுவே முதல் இந்திப்படம். மதராஸிகளுக்கு இந்தி உச்சரிப்பு சரியாக வராது என நினைத்து, லஷ்மிகாந்த் பியாரேலால் தனக்கு வாய்ப்பளிக்க மிகவும் தயங்கியதாகவும், பாலசந்தரின் வற்புறுத்தலுக்குப் பிறகே அவரைப் பாடவைத்ததாகவும் எஸ்.பி.பி. சமீபத்திய பேட்டியொன்றில் கூறியிருக்கிறார். அந்தப்படம் வெளிவந்த பிறகு பாலசுப்ரமண்யம் பாடிய பல இந்திப்பாடல்கள் மிகவும் பிரபலமாகின. குறிப்பாக சல்மான்கானுக்குப் பின்னனியாக அவர் பாடிய அனேக பாடல்கள். இந்தி சினிமாவின் சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான அஸ்ரானியும் ‘எக் துஜே கெலியே’வில் நடித்திருக்கிறார். அஸ்ரானி எனக்குப் பிடித்த நடிகர்களில் ஒருவர். கட்கட்டால ருத்ரைய்யா!

எ.து. கெலியே இந்தியில் வெளிவருவதற்கு முன்னதாக, ‘மரோ சரித்ரா’வாக தெலுங்கில் கறுப்பு, வெள்ளையில் எடுக்கப்பட்டு பெருவெற்றி பெற்ற படம். கமலஹாசனும், சரிதாவும் நடித்த அத்திரைப்படம், சென்னை ச•பையர் காம்ப்ளெக்ஸிலிருந்த ‘எமரால்ட்’ தியேட்டரில் ஏறக்குறைய மூன்று வருடங்களுக்கும் மேலாக ஓடியது. சென்னையின் வேலை வெட்டியில்லா காதலர்கள் அடிக்கடி அப்படத்தைப் பார்த்துக் கசிந்துருகிக் கண்ணீர் உகுத்து விட்டு வருவார்கள். ‘ப்ளூ டைமண்’டில் ஒரே திரைப்படத்தைக் காலை ஒன்பது மணியிலிருந்து, இரவு பதினொரு மணிவரை தொடர்ச்சியாக ஓட்டிக் கொண்டிருப்பார்கள். அங்கும் காதலர் கூட்டம் அலை மோதும். இன்றைக்கு ‘ச•பையர்’ தியேட்டர் காம்ப்ளெக்ஸ் சென்னையில் இல்லை. ச•பையரும், ப்ளூ டைமண்டும், எமரால்டும் இல்லாத சென்னை மாற்றுக் குறைந்ததுதான். கால வெள்ளம் இரக்கமற்றது.

*

தமிழ் சினிமா குறித்து சிந்தனை வருவதைத் தவிர்க்க இயலவில்லை. இன்றைய தமிழ் சினிமா, வயிற்றுக் கடுப்பெடுத்தவன் வரைந்த சித்திரம் போன்றது. ஐம்பதாண்டுகளுக்கும் மேலான தமிழ் திரைப்பட உலகம், அதன் ஆரம்ப காலங்களிலேயே தவறானவர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி விட்டது. சினிமா ஒரு ‘விஷ¤வல் மீடியம்’ என்ற அடிப்படை அறிவு கிஞ்சித்தும் இல்லாதவர்கள் அதனை மிகைப்படுத்தப்பட்ட நாடகீயமாக்கியதுடன், அதன் கலைச் சாத்தியங்களை நீர்த்துப் போகச் செய்துவிட்டார்கள். கடந்த ஐம்பதாண்டுகால தமிழ் சினிமாவின் இந்த அழுகலுக்குக் காரணமானவர்கள் இன்றைக்கும் சினிமாவிற்குக் கதை, வசனம் எழுதப் புறப்படும் கொடூரமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அடிப்பொடிகளின் கும்மியொலியுடன். தமிழர்களின் பொறுமை அசாத்தியமானது.

இன்றைக்குத் தயாரிக்கப்படும் எந்தவொரு சராசரி தமிழ் சினிமாவை விடவும் மிகக் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் இரானியத் திரைப்படங்கள் அளிக்கும் அனுபவத்தின் ஒரு சிறு துளியைக் கூட தமிழ் சினிமா அளிப்பதில்லை. கட்டுப்பாடுகளும், அயத்துல்லாக்களும் நிறைந்த இரானில் அற்புதமான திரைப்படங்கள் உருவாகின்றன. அனைத்து சுதந்திரம் அளித்தும் தமிழ் சினிமா துர்நாற்றமெடுக்கிறது. இன்றைய தினம் வெளிவரும் •பிரெஞ்ச், கொரிய, ஜப்பானிய, ஸ்பானிஷ் மொழித் திரைப்படங்கள் கலையின் அத்தனை சாத்தியங்களையும் அள்ளித் தெளிக்கின்றன. புதுமையான கதைகளும், கற்பனையும், செய்நேர்த்தியும் காண்போரை வேறோர் உலகில் சஞ்சரிக்க வைக்கும் திறன்பெற்ற திரைப்படங்கள் அவை. மாறாக தமிழ்சினிமா நகலெடுக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. அதுவும் மிகக் கேவலமாக.

தமிழ் சினிமா பார்ப்பதை அனேகமாக நிறுத்திவிட்டேன். கடந்த பதினைந்து ஆண்டுகளில் நான் பார்த்த தமிழ் திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால், நீங்கள் விட்டாலும் தமிழ் சினிமா உங்களை விடாது. இணையத்திலிருக்கும் தமிழ் தளங்களில் பெரும்பாலானவை தமிழ் சினிமா சார்ந்தவை. மேலும் சினிமா செய்திகள் உங்கள் நண்பர்கள் மூலமாக உங்களை வந்தடைந்து கொண்டே இருக்கும். நான்கு தமிழர்கள் ஒன்று கூடினால் அவர்கள் பேசுவது, விவாதிப்பது எல்லாம் தமிழ்சினிமா பற்றியதாகத்தான் இருக்கும். எங்கோ கண்காணாத இடத்திலிருக்கும், கால்காசு பெறாத தங்கள் அபிமான நடிகனுக்காகச் சண்டையிட்டுக் கொண்டு அடுத்த அரை மணி நேரத்தில் பிரிந்து போவார்கள். இதுபோன்ற ஒரு செயலை மலையாளிகளிடமோ அல்லது தெலுங்கர்களிடமோ கண்டதில்லை. தமிழர்களிடம் மட்டுமே இந்தக் குணம் இருக்கிறது. Something is wrong here. Something is very, very wrong.

பதினைந்து, பதினாறு வருடங்களுக்கு முன்பு மும்பையில் ரிலீசான ‘ரோஜா’ திரைப்படம் குறித்து, மிகவும் கறாரான விமர்சகர்கள் என அறியப்பட்ட ‘டைம்ஸ் ஆ•ப் இண்டியா’ பத்திரிகை மிகவும் புகழ்ந்து எழுதியிருந்தது. அதனடிப்படையில் ரோஜாவைப் பார்த்தேன். பாதகமில்லை. அனேகமாக ஒரு தேசியப்பிரச்சினையைக் குறித்து நேரடியாக எடுக்கப்பட்ட மிகச்சில திரைப்படங்களில் ஒன்றாக அது இருக்க வேண்டும். ஏ.ஆர். ரெஹ்மானுக்கு மிகச் சிறப்பான ஆரம்பத்தை அளித்த திரைப்படம். சுஜாதாவின் பாதிப்பு அதில் அதிகம் என்று நினைக்கிறேன். அதன் பின்னர் ‘தெனாலி’. கடலூரில் ஏதோ ஒரு தியேட்டரில் பார்த்ததாக நினைவு. படம் துவங்கிய சிறிது நேரத்திலேயே அது பில் முர்ரே நடித்த ஒரு ஹாலிவுட் படத்தின் நகல் என்று தெரிந்து போனது.

சராசரி தமிழனைப் போலவே எனக்கும் கமலஹாசனைக் குறித்தான பிம்பம் இருந்ததுண்டு. அவரின் படங்கள் அத்தனையும் அப்பட்டமான தழுவல்கள் என்று தெரிந்ததும் அந்த பிம்பம் கலைந்து போனது. எனக்கு மிகவும் பிடித்தமான அவரின் ‘ராஜ பார்வை’யே கூட ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் (Butterflies are free) நகல்தான் எனத் தெரிந்ததும் வந்த எரிச்சலுக்கு அளவேயில்லை. இருந்தாலும் ராஜபார்வையில் நிறைய கலையம்சங்கள் இருந்தன என்பதனையும் மறுப்பதற்கில்லை (இளையராஜாவின் ‘அந்தி மழை’யை மறந்தார் மனிதரோ?). பத்து வருடங்களுக்கு முன்பு அவரின் ‘ஹே ராம்’ என்ற படத்தை டெட்ராயிட்டில் ரிலீஸ் செய்தார்கள். நிறைய எதிர்பார்ப்புகளுடன் போனதற்கு மண் விழுந்தது. படு திராபை. அரைமணி நேரத்தில் தியேட்டரை விட்டு ஓடி வந்து விட்டேன். Yet another Kamaal Gassan movie!

கடைசியாக நான் பார்த்த தமிழ்ப்படம் ‘பிதாமகன்’. எங்கள் ஊரைச் சுற்றியுள்ள பகுதியகளில் எடுக்கப்பட்ட படம் என நணபர் ஒருவர் கூறியதால் அதனைப் பார்க்க வேண்டியதாயிற்று. பயங்கரம். வேறொன்றும் கூறுவதற்கில்லை. அதில் நடித்தவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிட்டியதாக அறிந்தேன். மிகை நடிப்பின் மீதான காதல் இன்னும் தமிழர்களை விட்டு விலகவில்லை. இயல்பாக நடித்தல் என்ற ஒன்று இருப்பதனை தமிழர்களும், தமிழ்திரையுலகமும் இன்றுவரை அறிந்திருக்கவில்லை. என் காலத்திற்கு முந்தையவர் என்றாலும், எனக்குத் தெரிந்து இயல்பாக நடித்த, நடிக்கத் தெரிந்த ஒரே நடிகர் எஸ். வி. ரங்காராவ் மட்டும்தான். I’m not kidding. அவரும் தெலுங்கர்!

இவ்வளவுதான் நான் கடந்த பதினைந்து ஆண்டுகளில் கண்ட தமிழ் திரைப்படங்கள். நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்.

*

தமிழ்சினிமாவின் கடந்த முப்பதாண்டுகளில் நிகழ்ந்த ஒரே அற்புதம் இளையராஜா மட்டுமே. தமிழ்நாட்டில் பிறக்கும் அதீத திறமைசாலிகளுக்கு நிகழ்வதுதான் அவருக்கும் நடந்தது. தமிழர்கள் அவரின் முக்கியத்துவத்தை உணர்ந்தார்களுமில்லை; அவருக்கு உரிய மரியாதையை அளித்தார்களுமில்லை. தமிழ்நாட்டில் போலிகளுக்கே முதலிடம் என்ற எழுதப்படாத சட்டத்தின்படி இளையராஜா பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். தன் இசையால் இரு தலைமுறைகளைக் கட்டிப்போட்ட அவருக்கே அந்தக் கதியென்றால்….அவரை முழுமையாக உணர்ந்தவர்கள் மலையாளிகள் மட்டும்தான். கொஞ்சம் அசந்தால் அவரை கேரளாவிற்குக் கடத்திக் கொண்டு போய்விடவும் தயங்கமாட்டர்கள். எச்சரிக்கை.

சமீப காலங்களில் இளையராஜா சிறிது விரக்தியிலிருக்கிறாரோ என எண்ணத் தோன்றுகிறது. அதிலும் ஒரு மேடையும், மைக்கும் கைக்குக் கிடைத்தால் அவர் செய்யும் சேட்டைகள் ரசிக்கத் தக்கனவாக இல்லை. சமீபத்திய உதாரணம், பழசி ராஜா வெளியீட்டு விழா. தமிழ்நாட்டின் மேடைகள் கோமாளிகளுக்கு உரித்தானவை. கையில் மைக் கிடைத்தவுடன் பிலாக்கணம் பாடவும், ஒப்பாரி வைக்கவும், கண்ணீர் சிந்தி கழுத்தறுக்கவும்….இன்னபிறவுக்கும் கோமாளிகளால் உபயோகப்படுத்தப்படுவை. ‘இளையராஜா’விற்கு அது தகுதியானதில்லை என யாரேனும் அவருக்கு எடுத்துச் சொன்னால் நல்லது. இத்தனை கால கடின உழைப்பிற்குப் பின் சொல்லிழுக்குப் பட்டு சோகாக்க வேண்டியதன் அவசியம்தான் என்ன?

*

தமிழர்களின் கலாச்சாரத்தையும், வாழ்க்கை முறையையும், வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் பிரதிபலிக்கும் விதமாக எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படம் இன்றுவரை ஒன்று கூட இல்லை. நீண்ட யோசனைக்குப் பிறகு பாலசந்தரின் ‘தண்ணிர் தண்ணிர்’ நினைவுக்கு வருகிறது. அவ்வளவுதான். தமிழ்சினிமாவினால் அதன் சமுதாயத்திற்கு எந்தவிதமான உபயோகமும் இல்லை என்றே கூறலாம். கூட்டம் கூட்டமாக அரிவாள்களைத் தூக்கிக் கொண்டு ஓடுவது மட்டுமே தமிழ்க் கலாச்சாரமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மலையாள திரைப்பட உலகம் நமக்கு நேரெதிரானது. அற்புதமான திரைப்படங்கள் கடந்த இருபது வருடங்களில் மலையாளத்தில் வெளியாகியிருக்கின்றன. தமிழ்சினிமா இயக்குநர்கள் கதைகளை நம்பாமல், ஹீரோக்களை நம்பிக் கொண்டிருப்பதால் இந்த அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கேரளத்தின் ஒரு எம்.டி. வாசுதேவன் நாயர் போலவோ அல்லது லோகிததாஸ் போலவோ ஒரு நல்ல கதை, திரைக்கதையாசிரியர்கள் தமிழ் சினிமாவில் இல்லவே இல்லை. தங்கள் மண்ணின் மகத்துவம் அறிந்து அதனைப் பிரதிபலிக்கும் விதமாகப் படமெடுக்கும் அடூர் கோபாலகிருஷ்ணன், சத்யன் அந்திக்காடு, பத்மராஜன், ஹரிஹரன் போன்ற இயக்குநர்களோ இங்கே உருவாகவே இல்லை. எனக்குத் தெரிந்து பாலசந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்றவர்கள் அதனை ஓரளவிற்கு மாற்ற முயன்றார்கள். பாரதிராஜாவைக் கூட அதில் சேர்த்துக் கொள்ளலாம். சிறிது காலத்திற்குப் பின்னர் கோடம்பாக்கம் மீண்டும் போலிகளிடம் மண்டியிட்டுவிட்டது. திறமையான, கற்பனைவளமும் திறனும் பெற்ற கதாசிரியர்கள், இயக்குநர்கள் கோடம்பாக்கத்தில் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு யார் வாய்ப்பளிப்பார்கள்? குப்பையில் கிடக்கும் மாணிக்கமாகக் கிடந்துவிட்டுப் போய்விட வேண்டியதுதான். ஆம்; கோடம்பாக்கம் போலிகளின் கூடாரம்.

தமிழ் சினிமா தன் இயல்பை மாற்றி கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்