அக்னிப்புத்திரன்
இலங்கைத் தமிழர்ப்பிரச்சினையில் கலைஞர் மீது குறை கூறவும் அவர் உலகத்தமிழர்களுக்கு எதிரானவர் என்பது போலவும் ஒரு மாயப்பிம்பத்தை உருவாக்க இலங்கைப்பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டு தற்போது ஆளாளுக்குக் கட்டுரை எழுதிக் குவித்து வருகிறார்கள். (இவர்கள் எப்போதும் கலைஞரை குறை கூறும் நபர்கள்தாம்! இப்போது இவர்களுக்கு இவ்விவகாரம் கைகளில் கிடைத்திருக்கிறது. தற்போதைய அசாதாரணச் சூழலைச் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள மிகவும் தந்திரமாக முயலுகிறார்கள்)
திமுகவிடமும் கலைஞரிடமும் இப்பிரச்சினையில் இவர்கள் என்னதான் எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெளிவாகக் கூற வேண்டும்.
திமுகவின் அண்மைய கால நடவடிக்கைகளான
1. சர்வகட்சிக்கூட்டம்
2. மத்திய அரசுக்குக் கெடு
3. கொட்டும் மழையில் மனிதச் சங்கிலி போராட்டம்
4. எம்.பிக்கள் ராஜினாமா மிரட்டல்
5. நிதி வசூலித்து உணவுப்பொருட்கள் அனுப்பிவைக்க மேற்கொண்ட அணுகுமுறைகள்
6. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து கோரிக்கையளித்தது அதனைத் தொடர்ந்து சர்வ கட்சித் தலைவர்களோடு கலைஞர் பிரதமரைச் சந்தித்து கோரிக்கையளித்தது
7. சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தீர்மானங்கள் இயற்றியது
8. இந்திய மைய அரசை நிர்ப்பந்தப்படுத்தி இந்திய பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்க கடும் முயற்சி மேற்கொண்டது
9. இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை உருவாக்கிச் செயல்படுவது
என்று எல்லா நிலைகளிலும் கலைஞர் தன்னால் முடிந்தவரை செயல்பட்டிருக்கிறார். உடற்நலக்குறைபாட்டையும் கவனத்தில் கொள்ளாது செயல்பட்டுக்கொண்டும் இருக்கிறார்.
அதிமுக தலைவி செல்வி ஜெயலலிதா இதுவரை இலங்கைப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் ஒரு சிறு துரும்பையாவது கிள்ளிப்போட்டு இருப்பாரா? இவரைதான் ஆட்சியில் அமர்த்த வைகோ துடிக்கிறார், தா.பாண்டியன் தாவிக்குதிக்கிறார், ராமதாசு ராக்கெட் வேகத்தில் அறிக்கை விட்டுத் தூள் கிளப்புகிறார். திருமா திண்டாடித் திணறுகிறார். திமுகவிற்கு மாற்று என்றால் இன்றைய சூழலில் அதிமுகதான் என்பது ஊரறிந்த விஷயம். திமுகவைப் பலவீனப்படுத்தப் படுத்த அதன் பயன் அதிமுகவிற்கே போய் சேரும் என்ற உண்மை எல்லாம் இந்த கபடவேடதாரிகளும் அறியாதவர்கள் அல்ல. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஒத்த கருத்து உடைய திமுகவை எதிர்க்கிறார்கள். அதே சமயம் மாற்றுக் கருத்துக் கொண்ட அதிமுகவை ஆதரித்து கூட்டணி கொள்கிறார்கள். என்னே அரசியல் விநோதம்?
கலைஞர் அவதூறுப்பிரச்சாரக் கட்டுரையாளர்களிடம் என்னதான் எதிர்பார்ப்புகள் இருக்கக்கூடும்?
1. மத்திய அரசுக்கு கொடுக்கும் ஆதரவை திமுக வாபஸ் வாங்கி மத்திய அரசைக் கவிழ்த்து விடுவோம் என்று மிரட்ட வேண்டும்.
அல்லது
2. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத் திமுக ஆட்சியை விட்டு இறங்கிப் போராட வேண்டும்.
இவைதாம் இவர்கள் அதிகபட்சமாகத் திமுகவிடமும் கலைஞரிடமும் எதிர்பார்ப்பவையாக இருக்கக்கூடும்.
சரி, இப்படி நடந்தால் என்ன நடக்கும்?
மத்திய அரசு பதவிக்காலம் முடியும் இத்தருணத்தில் ஆதரவு வாபஸ் என்ற மிரட்டல் எல்லாம் இனி எடுபடாது. இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்றத்தேர்தல் வர உள்ள இந்த நிலையில் காங்கிரஸை பகைத்துக்கொள்ள நேரிடும். திமுக இடத்தை தட்டிப்பறிக்க அதிமுகவின் தலைவி செல்வி ஜெயலலிதா தவமாய்த் தவம் கிடக்கிறார். கூட்டணி மாற்றத்துக்குத்தான் இது வாய்ப்பளிக்கும்.
தினம் தினம் அறிக்கை விட்டு இலங்கைப்பிரச்சினையில் சூடு கிளப்பும் ஐயா இரமாதாஸ் அவர்கள் தமது அன்பு மகன் அன்புமணியை இன்னும் மத்தியில் அமைச்சராக நீடிக்க வைத்திருப்பது கூர்ந்து கவனிக்கத்தக்து. ஒரு இரண்டு மாதம் காலம் கூட பதவியை இழக்க விரும்பாமல் கடைசி வரை பதவிச்சுகம் அனுபவிக்க ஆசைப்படும் நிலையில் இலங்கைத் தமிழர்ப்பிரச்சினையில் நீலிக் கண்ணீர் வடித்து அறிக்கையும் அறிவிப்பும் வெளியிடுவது அப்பாவித் தொண்டர்களை வேண்டுமானால் ஏமாற்றலாம் நடப்பு அரசியலை நன்கு புரிந்து வைத்திருக்கும் நமது மக்களை ஏமாற்ற முடியாது. கடைசி வரை காங்கிரஸ் வசம் ஒட்டிக்கொண்டு இருந்து விட்டு அப்படியே காங்கிரஸை அதிமுகவிடம் ஓட்டிக்கொண்டு போவது மருத்துவரின் மகா மெகத் திட்டமாக இருக்கக் கூடும்.
இவர் கதை இப்படி என்றால் “புரட்சிப்புயல்” வைகோ கதையோ வேறு நிலையில் செல்லுகிறது.
“போர் என்றால் பொதுமக்கள் சாகக்தான் செய்வார்கள், அந்நிய நாட்டுப்பிரச்சனையில் நம் தலையீடு கூடாது.” அதிமுக தலைவியின் அகங்காரக் கூற்றாக அண்மையில் நாளிதழ்களில் வெளிவந்த செய்தி இது. இந்தத் தலைவிக்குத்தான் “புரட்சிப்புயல்” வெஞ்சாமரம் வீசி, அவரை அடுத்து ஆட்சி பீடம் ஏற்றுவதற்குப் பம்பரமாய்ச் சுற்றிச்சுழகிறது.
அப்படியே எதிர்பாராதவிதமாக ஏதோ ஒரு சூழலில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புரட்சிப்புயல் வைகோ மீண்டும் உள்ளே செல்லத்தான் அதிக வாய்ப்புள்ளது. இத்தனை ஆண்டுகள் அரசியல் செய்தும் இப்படி ஒரு அரசியல் மாமண்டூகமாகப் புரட்சிப்புயல் திரிவதுதான் வேதனையிலும் வேதனை! வேடிக்கையிலும் வேடிக்கை!
அடுத்து இவர்கள் அனைவரின் எதிர்பார்ப்பும் என்னவாக இருக்கக்கூடும்?
இலங்கைப் பிரச்சினையைக் காரணம் காட்டி திமுக அரசு பதவி விலக வேண்டும் என்பதே!
சரி ஆட்சியை திமுக கைவிட்டுவிட்டால் மட்டும் இப்பிரச்சினையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து இலங்கைப்பிரச்சினையைத் தீர்த்துவிடுமா? அப்படியே இந்தியா தலையிட்டாலும் இனவாத இலங்கை அரசு பணிந்து விடுமா? இப்படி பல்வேறு பிரச்சினைகள் சிக்கிக் தவிக்கும் இப்பிரச்சினையில் கலைஞரை மட்டும் குறை கூறுவதே இலட்சியமாகக் கொண்டு கட்டுரை புனைவதும் அவரைத் திட்டி தீர்ப்பதையும் நடுநிலை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். திமுக தமிழகத்தில் ஆட்சியில் இருப்பதால்தான் இந்த அளவுக்காவது இலங்கை இனவாத அரசு அடக்கி வாசிக்கிறது என்று இலங்கைத் தமிழர்களே கூறுகிறார்கள்.
சரி திமுகவிடம் இருந்து ஆட்சி மாறி அதிமுகவிடம் சென்றால் மட்டும் கலைஞரை விட செல்வி ஜெயலலிதா இப்பிரச்சினையில் அதிக அக்கறை காட்டி தமிழர்களைக் காப்பாற்றி விடுவாரா?
யார் யாரைவிட தமிழர் நலனில் அக்கறை மிகுந்தவர்கள் என்பதை நாடு நன்கு அறியும்.
இலங்கைப்பிரச்சினையில் அரசியல் ரீதியாக பல முறை பலத்த பாதிப்புக்குள்ளான இயக்கம் திமுகதான் என்பதை மனசாட்சியுள்ளவர்கள் மறுக்க மாட்டார்கள். மறைக்கவும் மாட்டார்கள். இவர்களின் உள்நோக்கம் இலங்கைப் பிரச்சினையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு திமுகவையும் கலைஞரையும் பலவீனப்படுத்த வேண்டும் என்பதே!
தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்!
– அக்னிப்புத்திரன்
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865)காட்சி -3 பாகம் -4
- நிறைவுக்காக
- வார்த்தை பிப்ரவரி 2009 இதழில்
- கலில் கிப்ரான் கவிதைகள்<< என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே ! >> கவிதை -1 (பாகம் -3)
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் !அகிலக் கதிர்கள் (Cosmic Rays) பூமியைச் சூடேற்றுமா ?(கட்டுரை 51)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -23 << என் மௌனப் பசிகள் ! >>
- குறுங்கதைகள்
- சை.பீர்முகம்மது
- செய்திகள் மட்டுமே சித்திரமானால் – ஸ்லம்டாக் மில்லியனர் குறித்து
- அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்- 2 வ. உ. சிதம்பரம் பிள்ளை
- அவரும் இவரும் நீயும்!
- வேத வனம் விருட்சம் 23
- ‘போல்’களின்றி…
- நாற்காலிகள்…
- மும்பை அரோரா ஞாயிறுகள் – நான் கடவுள்
- சங்கச் சுரங்கம் -2 : குறிஞ்சிப் பாட்டு
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் 40. சாலை இளந்திரையன்
- விஸ்வரூபம்
- இடைவெளி
- கடவுள்
- இலங்கைத் தமிழன் – நேற்று இன்று நாளை
- கண்ணீரின் குரல்கள்
- உன் பழைய கவிதைகள்
- என் சின்னமகள் மற்றும் மனைவியின் விமர்சனக் குறிப்புகள்
- இலங்கைப்பிரச்சினையில் கலைஞர் மீது குறை சொல்வதா?
- மனிதனின் நீர் சார்ந்த வாழ்வியல் கோலங்களும், ஊடகங்களும், வந்து சென்ற சுனாமியும் !
- ஸ்கொட்டிஸ் வேட்டைக்காரரின் நாய்
- இணையத்தில் தமிழ்
- சாபம்
- மோந்தோ-4
- நினைவுகளின் தடத்தில் – (25)
- காதல் ஒரு விபத்து
- நடிகன்