விவசாய சங்கத்தலைவர் ஆறுபாதி கல்யாணம் அவர்களுடன் பேட்டி 2 – தொடர்ச்சி

This entry is part [part not set] of 24 in the series 20070215_Issue

துகாராம்


7: திண்ணை : விவசாய விலைபொருட்கள் கொள்முதலில் விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன?

ஆறுபாதி கல்யாணம் :
1. டெல்டாவின் முக்கிய பயிரான நெல்லுக்கு ஆண்டு முழுவதும் அரசின் நிரந்தர கொள்முதல் பாதுகாப்பு ஏற்பாட்டை உருவாக்க வேண்டும். தமிழக அரசு “இணை கொள்முதல்” (parallel procurement) அமலாக்க வேண்டும்.
2. தமிழகம் முழுவதும் சுமார் 100 லட்சம் டன்கள் நெல் உற்பத்திஆவதால், இதில் 50 லட்சம் டன்களுக்கு அரசு கொள்முதல் பாதுகாப்பு அளித்து நெல் உற்பத்தி ஆகும் அனைத்து மாவட்டங்களிலும் கொள்முதல் செய்யவேண்டும். தமிழ்நாட்டின் பொது வினியோகத் தேவையை நெல் அதிகம் உற்பத்தியாகும் பகுதிகளிலிருந்து கொள்முதல் செய்து கொள்ள முடியும். பஞ்சாப் மாநிலம், அரிசி, கோதுமை கொள்முதலில் மாநிலத்தில் விவசாயத்தில் 90% அளவிற்கு கொள்முதல் பாதுகாப்பளிப்பதுபோல இங்கும் கொள்முதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
3. மத்திய அரசு குறைந்த பட்ச நெல்விலைக்கும் மாநிலத்தில் உற்பத்தி செலவிற்கு கட்டுப்படியாகும் விலைக்கும் உள்ள இடைவெளியை மாநில அரசு ஆதரவு விலை அல்லது ஊக்கத்தொகையாக வழங்கவேண்டும்.
4
விவசாயிகளின் அனைத்து இதர விளை பொருட்களுக்கும் வெளிச்சந்தை விலைச்சரிவை தடுக்க மாநில அரசின் வெளிச்சந்தை விலை பாதுகாப்பு திட்டம் (state government market intervention scheme) அமுல் படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு ஆண்டுக்கு பட்ஜெட்டில் ரூ100 கோடி மத்திய அரசிடம் ரூ100 கோடி என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கீடு பெற்று 5 ஆண்டுகளில் ரூ 1000 கோடி நிதியம் இதற்காக உருவாக்கப்பட்டு விவசாயிகளின் அனைத்து விளைபொருட்களுக்கும் வெளிச்சந்தை விலைச்சரிவிலிருந்து பாதுகாக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

8. திண்ணை : தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் ஊழல் முறைகேடுகள் நடப்பதாக விவசாயிகள் கூறுகிறார்களே?.

ஆறுபாதி கல்யாணம் :
தமிழ்நாடு உகர்பொருள் வானிபக்கழகத்தின் ஊழல் முறைகேடுகளை முற்றிலுமாக களையவேண்டும். நெல் கொள்முதலின் போது விவசாயிகளிடம் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத பணப்பிடித்தம் முறைக்கேடுகள் முற்றிலும் களையப்படவேண்டும். மேலை நாடுகளில் உள்ளதுபோல நவீன சேமிப்பு முறையை உருவாக்குதல், தற்போதைய 23 ஆலைகளின் அரவைத்திறனை குறைந்த விலையில் இருமடங்கு ஆக்குதல், தினசரி 1000 டன்களை அரவை செய்யும் நவீன அரிசி ஆலையை டெல்டாவின் மையப்பகுதியில் நிறுவுதல், போன்றவைகளை சுமார் 250 கோடியில் செய்தால், ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ரூ 1000 கோடி அளவுக்கு ஏற்படும் உணவு தான்ய இழப்பை தடுக்க முடியும். ஆண்டுக்கு சுமார் ரூ 2800 கோடி அளவுக்கு வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்த முடியும்.

9. திண்ணை : எரிபொருள் எத்தனால் கரும்புக்கு அதிக விலை கேட்பது எதனால்?

ஆறுபாதி கல்யாணம் :
உலகச்சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் பேரல் 70 அமெரிக்க டாலருக்கும் மேல் ஆகி இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 2002-03இல் ரூ 80,000 கோடியாக இருந்த அன்னிய செலாவணி தற்போது ரூ 20,0000 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் கரும்பிலிருந்து சர்க்கரை மட்டுமின்றி நேரிடையாக எத்தனால் உற்பத்தி செய்து பெட்ரோலில் 24%மும் டீசலில் 15சதமும் கலந்து பல ஆண்டுகளாக வாகனங்கள் இயக்கப்படுகிறது. தற்போது முழுமையான எக்தனாலிலும் 85 சதவீத எத்தனால் 15% பெட்ரோல் சேர்த்து ஈ-85 ரக இயந்திரங்களும் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படுவதுபோல இங்கும் பயன்படுத்தப்படவேண்டும்.

இதனால், நாட்டில் ரூ 50000 கோடிக்கு மேல் அன்னிய செலாவணி மிச்சப்படுவதுடன் கரும்பிற்கு அதிகவிலை இயற்கையை மாசுபடுத்தாத எரிபொருள் பெட்ரோல் டீசல் விலை குறையும். நலிவடைந்துள்ள சர்க்கரை ஆலைகளை காப்பாற்ற முடியும். இதனை மத்திய அரசிடம் வற்புறுத்தவேண்டும். தமிழ்நாட்டு சர்க்கரை ஆலைகளை முழுமையாக கரும்பின் அனைத்து உப பொருட்களையும் பயன்படுத்தும் வகையில் நவீனப்படுத்த வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் கரும்புக்கு டன்னிற்கு ரூ 2000 கொடுப்பது எளிதாகும்.

10 திண்ணை : உள்நாட்டு மதுவான “கள்” அனுமதிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறதே.

ஆறுபாதி கல்யாணம் :
தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு அமுல் படுத்தமுடியாமல் வெளிநாட்டு மதுவகைகளை அனுமதிக்கும்போது தென்னை விவசாயிகள் நலன், பனை விவசாயிகள் நலன் காக்க உடல் நலத்துக்கு கேடு விளைவிக்காத கள்ளையும் அனுமதிக்க வேண்டும். இதன் மூலமே கள்ளச்சாராயம் ஒழியும். அரசிற்கு வருவாய் பெருகும்.

11. திண்ணை : பயிர் காப்பீடு பற்றி?

ஆறுபாதி கல்யாணம் :
தற்போதைய வேளாண் பயிர்காப்பீட்டு திட்டத்தின் (National Agriculture Insurance Scheme)பெரிய அளவிலான குறைபாடுகளை போக்கி, ஒவ்வொரு தனிப்பட்ட விவசாயியின் நஷ்டங்களையும் ஈடு செய்யும் வகையில் “முழுமையான பயிர்க்காப்பீட்டு திட்டம்” அமுலாக்கப்படவேண்டும். தமிழகத்தில் தற்போது உற்பத்தி ஆகும் அனைத்து பயிர்களும் அவைகளின் முழு பரப்பளவும் “பயிர் காப்பீடு” எனும் பாதுகாப்பு வளையத்துள் கொண்டுவந்து இயற்கை இடர்ப்பாடுகளில் விவசாயிகள் பேரிழப்பை சந்தித்து நஷ்டப்பட்டு சாவதை தடுக்க வேண்டும்.

12 திண்ணை : விவசாயிகளுக்கு அளிக்கும் இலவச மின்சாரத்தை தொடர வேண்டும் என்று கோருகிறீர்களா?

ஆறுபாதி கல்யாணம் :
தற்போது தமிழ்நாட்டின் வேளாண் உற்பத்தி மற்றும் உணவு உற்பத்தியின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் முக்கிய ஆதாரமாக நிலத்தடி நீர் பாசனம் அமைந்துள்ளது. மொத்த நீர் பாசன பரப்பு 30 லட்சம் கெக்டேர்களில் சுமார் 15 லட்சம் கெக்டேர்கள் கிணறு மற்றும் வடிமுனைக்குழாய் மூலம் பாசனம் உள்ளதால், தற்போது விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வரும் முழுச்சலுகை மின்சாரத்தை இனியும் “இலவச மின்சாரம்” என அழைக்காமல், “வேளாண் உற்பத்தி மின்சாரம்” (Agriculture production power) என அறிவித்து ஏற்கெனவே சுயநிதி மின்சாரம் பெற்றுள்ள விவசாயிகள் உள்பட அனைவருக்கும் “வேளாண் உற்பத்தி மின்சாரம்” வழங்கவேண்டும்.

ஒருங்கிணைந்த கலப்பு பண்ணை விவசாயத்தில் உள்நாட்டு விவசாய நிலங்களில் குட்டை குளங்கள் அமைத்து மீன் உற்பத்தி செய்வதை விவசாயமாக அங்கீகரித்து இதற்கும் முழுச்சலுகை வழங்கவேண்டும். தேசிய விவசாயிகள் ஆணையம் மீன் வளர்ப்பை விவசாயமாக அங்கீகரிக்கவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

13 திண்ணை : மாநில விவசாயிகள் ஆணையம் அமைத்தல் () விவசாய புள்ளி விபரங்கள் சேகரித்தல், விவசாயிகளின் நலன் காத்தல் பற்றி?

ஆறுபாதி கல்யாணம் :
தமிழ்நாட்டில் தற்போதைய 2001 மக்கள்தொகை கணக்கீட்டின்படி 86 லட்சம் விவசாய தொழிலாளர்களும் 51 லட்சம் விவசாயிகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான விவசாய தொழிலாளர்கள், நீர் பிரச்சனை பிற தொழில்களில் கிடைக்கும் அதிக ஊதியம் இவைகள் காரணமாக விவசாயத்தொழிலை கைவிட்டு சென்றுகொண்டுள்ளனர். இதன் காரணமாக விவசயம் செய்வதற்குரிய தொழிலாழளர்கள் கிடைக்காமல் விவசாயம் செய்வதே கேள்விக்குரியாகியுள்ளது. விவசாயிகளும் விவசாயம் தொடர் நஷ்டப்படும் தொழிலாக மாறிவிட்ட நிலையில் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள் 1970இல் தமிழ்நாட்டின் மொத்த சாகுபடி பரப்பளவு 74.50 லட்சம் கெக்டேர் என்பது 2002-03இல் 52 லட்சம் கெக்டேர்களாக குறைந்ததற்கு விவசாயம் நஷ்டப்படும் தொழிலாக ஆனதே காரணமாகும். 1980-81இல் மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் வேளாண்மை துறையின் பங்களிப்பு 25% என்றிருந்தது தற்போது 17%க்கும் கீழ் குறைந்துள்ளதும் விவசாயத்துறையின் சரிவைக்காட்டும் ஆதாரமாகும்.

இதனைத் தடுக்க ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநிலத்தில் விவசாயம், விவசாயிகளின் பொருளாதாரம், வாழ்க்கை நிலை, விவசாயத் தொழிலாளர்களின் பொருளாதாரம், வாழ்க்கை நிலை குறித்து தனி விவசாய நிலைக்கணக்கீடு (Agriculture Status Statistics) எடுக்கப்பட வேண்டும். இதனடிப்படையில் விவசாயிகளைக் காப்பாற்ற திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். விவசாயிகளின் நலன் பாதுகாப்புத் திட்டங்களில் சிறு விவசாயிகள் பெரு விவசாயிகள் என பாகுபடுத்தாமல் அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவதாக அமைக்கவேண்டும்


தொடரும்

Series Navigation

துகாராம்

துகாராம்