போப் வாயாலேயே பொய்த்துப் போன புனித தோமையார் கதை

This entry is part [part not set] of 33 in the series 20061221_Issue

ஜடாயு



“நான் ஏசுவினிடத்தில் சத்தியத்தைச் சொல்லுகிறேன். நான் பொய்யுரைக்கவில்லை. புனித ஆவி என் மனச்சாட்சிக்கு நிரூபணம்”
ரோமன்ஸ் 9:1, விவிலியம் ([0])

புனித தோமையார் (செயின்ட் தாமஸ்) அதிக பட்சம் இன்று பாகிஸ்தான் என்றழைக்கப் படும் மேற்கு இந்தியா வரைக்கும் போயிருக்கலாம். அதற்கு மேல் அவர் போனதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. வெகுகாலம் பின்னர் தென்னிந்தியா மற்றும் பல பகுதிகளில் கிறித்தவம் பரவியது, ஆனால் கண்டிப்பாக புனித தாமஸ் அங்கு போகவில்லை. வாடிகனில் தான் சமீபத்தில் ஆற்றிய உரை ஒன்றில், போப் பெனடிக்ட் XI இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் (பார்க்க [1], [2]).

இதைக் கேட்டு பல இந்திய திருச்சபைகள் துணுக்குற்றன. இந்த செய்திக்கு ரொம்ப விளம்பரம் தராமல் அமுக்கியும் விட்டன. இஸ்லாம் பற்றிய போப்பின் உரையை முந்திக் கொண்டு வெளியிட்ட இந்தியப் பத்திரிகைகளும், ஊடகங்களும் இந்திய வரலாறு தொடர்பான போப்பின் இந்த முக்கியமான கருத்தைப் பெரிதாக வெளியிடவே இல்லை! கேரள ஒய்.எம்.சி.ஏ. தலைவர் சன்னி பரியாரம் “போப் தெரியாமல் சொல்லிறார். மிளகு, ஏலக்காய், முந்திரி வாணிகக் கப்பல்கள் அந்தக் காலத்தில் மேற்கிலிருந்து கேரளாவிற்கு நிறைய வந்து கொண்டிருந்தன. அதில் ஒன்றில் ஏறி புனித தாமஸ் வந்தார்” என்று தன் ஆழமான சரித்திர அறிவை வெளிப்படுத்தியயுள்ளார். கேரள பாதிரியார்கள் சங்கத் தலைவர் மறைதிரு. ஸ்காரியா வர்கீஸ் போப்புக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இருக்காதா பின்னே? “புனித தோமையார் கி.பி. 52 லேயே (வாஸ்கோடகாமா இந்தியாவிற்குக் கடல் வழி கண்டுபிடிப்பதற்கு 1400 ஆண்டுகள் முன்பு) கடல் மார்க்கமாக கேரளா வந்தார். அங்கிருந்த நம்பூதிரிகள் உட்பட பல பேரை மதம் மாற்றினார். பின்னர் அப்படியே பொடி நடையாக சென்னை மயிலாப்பூர் வந்து ஏசுவின் நற்செய்தியை வழங்கினார். சின்னமலையில் வாழ்ந்தார். பக்கத்தில் இருந்த பரங்கி மலையில் சில வெறியர்களால் கொல்லப்பட்டார்” இப்படியாக தோமையார் பற்றிய நவரசங்களும் நிறைந்த ஒரு கற்பனைக் கதையை இந்தியா முழுவதும், குறிப்பாக தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் கிறிஸ்தவ மிஷநரிகள் காலம் காலமாகப் பரப்பி வந்துள்ளனர். வரலாற்று ஆதாரங்கள் படி, கிபி. 345-ல் தாமஸ் கானானியஸ் (Thomas Cananeus) என்ற வணிகர் தான் முதன்முதலில் கேரளத்தில் ஒரு சிறிய கிறிஸ்தவ சமூகத்தை ஏற்படுத்தினார். பின்னர் 14-15 ஆம் நூற்றாண்டுகளில் போர்ச்சுகீசியப் படையெடுப்பின் வன்முறைகள், கொள்ளைகளுடன் தான் கிறித்தவம் தமிழகத்தில் பெருமளவில் அறிமுகமாயிற்று. ஆனால், அதற்கு ஒரு தொன்மை வாய்ந்த வரலாறு இருப்பது போலக் காண்பிப்பதற்காக மிக நேர்த்தியாகச் செய்யப் பட்ட புரட்டு இது. இந்தப் புளுகு மூட்டையைப் போட்டு உடைத்து விட்டார் போப்!

சொல்லப் போனால் ஆதாரபூர்வமான வரலாற்று ஆய்வுகள் புனித தாமஸ் இந்திய வருகையை ஒரு போதும் ஏற்றுக் கொண்டது கிடையாது. இது பற்றி ஈஷ்வர் சரண் மிகத் தெளிவான விளக்கங்களுடன் “The Myth of St. Thomas and the Mylapore Siva Temple” என்ற நூலை எழுதியிருக்கிறார் (பார்க்க http://www.hamsa.org). 24 பகுதிகளைக் கொண்ட இந்த நூலில் ஆர்ச்பிஷப் அருளப்பா, ஆச்சார்யா பால், டாக்டர் தெய்வநாயகம், எஸ்.ஏ.சைமன் இவர்களது புனித தோமையார் கதை பற்றிய ஒவ்வொரு பொய் வாதத்திற்கும் திட்டவட்டமான பதில் அளித்துள்ளார்.

இதன் உச்சமாக புனித தோமையரை திருவள்ளுவருடன் தொடர்பு படுத்தும் பெரிய ஊழல் 80களில் நடந்தது. தெய்வப் புலவர் திருவள்ளுவரின் குறள் “உலகப் பொதுமறை” என்று அறியப் பட்டதும் இதற்குத் தோதாகப் போயிற்று. அவர் சைவரா, வைணவரா, சமணரா என்ற உண்மையான, இலக்கியத் தனமான வாதங்களின் நடுவில் இப்படி ஒரு விஷயம் நுழைக்கப் பட்டது. “தோமையரு சாந்தோம்ல இருந்தாரு, வள்ளுவரு மயிலாப்பூர்ல. இரண்டு பேரும் கடற்கரையோரமா அப்படியே பேசிகிட்டே போவாங்க ! தோமயரு ஏசு பிரான் பத்தி வள்ளுவருக்கு சொன்னாரு, பைபிள்ள இருக்கறத அப்படியே வள்ளுவரு எழுதிப்புட்டாரு” என்று ஒரு கிறித்தவத் தமிழாசிரியர் காட்டுக் கத்தல் கத்திச் சொன்னது இன்றும் என் நினைவில் நிழலாடுகிறது ! இதற்காகப் பல வரலாற்று ஆதாரங்களைத் திரிக்கவும், புரட்டவும் தமிழ் அறிஞர் என்று அறியப் பட்ட கணேச அய்யருக்கு ரூ. 14 லட்சம் லஞ்சம் மறைதிரு. அருளப்பா குழிவினரால் வழங்கப் பட்டதும் 1986ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் (வழக்கு எண்:100087/82) அம்பலப் படுத்தப் பட்டது. தமிழரின் பண்பாட்டுப் பெட்டகமான திருக்குறளை கூசாமல் கிறிஸ்தவத்திலிருந்து காப்பியடித்தது என்று நிறுவ முயன்ற மிஷநரி கயமைத் தனம் இதில் வெளியாயிற்று. (பார்க்க: [3])

இன்று பரங்கி மலை என்று அழைக்கப் படும் இடம் 1910களில் கூட “பிருங்கி மலை” என்று அழைக்கப் பட்டதற்கான கல்வெட்டு ஆதாரம் உள்ளது. புனித தோமையார் தன் கையாலேயே உருவாக்கிய சிலுவை என்று காட்டப்படும் அழகிய சிலுவை உருவம் விஜயநகர காலத்திய தமிழர் சிற்பக்கலையுடன் வடிவமைக்கப் பட்டது என்று நிறுவப் பட்டு விட்டது (பார்க்க [4]). சாந்தோம் மாதா கோவில் சுற்றுப் புறத்தில் 11-ஆம் நூற்றாண்டு சோழர் காலக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. திருஞான சம்பந்தரின் பூம்பாவைப் பதிகத்தில்
‘மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்’
என்ற குறிப்புப் படி கடற்கரையில் இன்றைய சாந்தோம் சர்ச் இருக்கும் இடத்தில்தான் அன்றைய கபாலி கோயில் இருந்தது,16’ம் நூற்றாண்டில் (1566 ல்) இது இடிக்கப்பட்டு சர்ச் கட்டப்பட்டது என்பதற்கான பல ஆதாரங்களையும் ஈஷ்வர் சரண் தன் நூலில் தருகிறார்.

“புனித தோமையரை வெறியர்கள் ஈட்டியால் குத்திக் கொன்றனர்” என்பது இந்துக்களின் மீது வேண்டுமென்றே துவேஷத்தையும், வெறுப்பையும் உருவாக்குவதற்காகப் புனையப் பட்ட கதை என்று சென்னை ராமகிருஷ்ண மடத் துறவி சுவாமி தபஸ்யானந்தர் இது தொடர்பாக எழுதிய இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில் குறிப்பிடுகிறார். (பார்க்க [5]). “The Legend of a Slain Saint to Stain Hinduism” என்ற அந்தக் கட்டுரையில் இவ்வளவு நூற்றாண்டுகளுக்குப் பிறகும் தோமையார் பயன்படுத்திய கைத்தடி, அவரைக் கொன்ற ஈட்டி இவையெல்லாம் செல்லரித்துப் போகாமல் இருப்பது எப்படி என்று? என்று எழுப்பிய சாதாரணக் கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை. இந்தக் கொலையைப் பற்றி ஒவ்வொரு முறையும் சொல்லும்போதும், உணர்ச்சியையும், அனுதாபத்தையும் கிளப்பி இந்துக்களை சாத்தானின் தூதுவர்கள் என்று சித்தரிக்கிறார்கள். பரங்கி மலையில் புனித தாமஸை நாமம் போட்ட அந்தணர் ஈட்டியால் குத்திக் கொல்வதாக ஒரு சித்திரம் உள்ளதாம். சைவத்தையும், வைணவத்தையும் ஒரே அடியில் சாத்தானாக்க நல்ல யுக்தி இது! இதற்கு முந்தைய புராணத்தில் தோமையாரை டோபிக்கள் கொன்றுவிட்டதாகவும் எனவேதான் அவர்கள் கால் வீங்கிவிட்டதாகவும் இந்த கால்வீக்கத்துக்கு பெயரே தோமை வீக்கம் என்றும் கதை விட்டுக் கொண்டிருந்ததாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன்.
வாடிகனிடம் இது பற்றி 1996ல் ஈஷ்வர் சரண் விசாரித்தபோது புனித தாமஸ் தொடர்பான எந்த வரலாற்று ஆவணமும் தங்களிடம் இல்லை என்று அவருக்கு வாடிகன் திருச்சபை அதிகாரபூர்வமான கடிதம் அனுப்பியது [6]. என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா அவரது ஆதாரங்களை ஏற்றுக் கொண்டு, தங்களது அடுத்த பதிப்புகளில் புனித தாமஸ் பற்றிய தகவல் வெளியாகும்போது இந்த விவரங்களும் சேர்க்கப் படும் என்று அறிவித்துள்ளது [7]. ஆனால், இந்தியாவில் புனித தோமையார் பற்றிய இந்த பொய்க்கதை பாடப் புத்தகங்களிலும், வெகுஜன ஊடகங்களிலும் ஆணியடித்தது போல பரப்பப் பட்டு விட்டது. சென்னை பற்றிய எல்லா “டூரிஸ்ட்” புத்தகங்களிலும் செயின்ட் தாமஸ் மவுன்ட், சின்னமலை இவை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்கள் என்ற பட்டியலில் இடம் பெற்று, இந்தக் கதை வரலாறாகவே சொல்லப் படுகிறது. போப் அறிக்கை வந்த நவம்பர் 22 க்கு அடுத்த வாரமே, ஜூனியர் விகடனில் (6/12/06 – பக்கம் 42) முடிந்த முடிபாய் இப்படி எழுதியிருக்கிறார்கள்:
“கிபி.52’ம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை புரிந்த ஏசுவின் நேரடிச்சீடர் புனித தோமையார் இந்த மலையில் (St.Thomos Mount) வைத்துதான் கிபி.72’ம் ஆண்டு வெறியன் ஒருவனால் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டார்”
“வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி” என்று போப்பே இந்தக் கதை பொய் என்று சொல்லியும், இந்த வரலாற்றுத் தவறுக்கு மன்னிப்புக் கோரும் வாய்ப்பாக இதைக் கருதாமல் போப் சொன்னது தவறு என்று சொல்லும் போக்கு தான் இங்குள்ள மிஷநரிகளிடம் இருக்கிறது, இது துரதிர்ஷ்டவசமானது.

தோமையார் மரணத்தை மட்டுமல்ல, ஏசுவின் மரணம், ரத்தம் இவற்றைக் குறியீடுகளாக்கும் இறையியலிலேயே அதற்கு ஒரு கொலையாளியைக் காரணமாக்கும் துவேஷம் கலந்திருக்கிறது. இந்து ஆன்மிக நோக்கில் பார்த்தால் இது இன்னும் தெளிவாகத் தெரிகிறது. இது தொடர்பாக சுவாமி ரங்க நாதானந்தா “நாங்கள் போற்றும் ஏசு” (பார்க்க [8]) என்னும் நூலில் கூறுகிறார் :

“தெய்வ அவதாரங்களில் ஒருவர் என்று இந்துக்கள் கண்டுணர்ந்து போற்றத் தகுந்த பல அம்சங்கள் ஏசு கிறிஸ்துவின் வாழ்விலும், உபதேசங்களிலும் உள்ளன. அவரது வாழ்வு இனிமையும், மென்மையும், துயரமும், சோகமும் இழைந்து ஆன்மீகத்தால் நிரம்பியது. ஆனால், இந்துக்களாகிய நமக்கு அவரது முடிவு என்பது ஒரு சோகம், அவ்வளவு தான். ஆன்மிகம் ததும்பும் அழகுணர்ச்சி எதுவும் அதில் இல்லை. நமது தெய்வ அவதாரங்களான ஸ்ரீராமன், ஸ்ரீகிருஷ்ணன் இவர்களது வாழ்க்கை முடிவுகளும் பெரும் சோகம் ததும்பியதாகவே இருந்தன. ஆனால் அந்த முடிவுகள் மீது நாம் சமயத்தைக் கட்டமைக்கவில்லை. இந்த மரணங்களை இயற்கை நியதியாக ஏற்றுக்கொண்டு அவர்களது வாழ்வின் அற்புதமான தருணங்களின் மீதே நம் சமயம் கட்டப் பட்டிருக்கிறது. ஏசு என்பவர் சிலுவையில் அறையப் படாமலே இருந்தாலும், அவரது வாழ்வும், உபதேசமும் இந்துக்களுக்குப் பிரியமானதாகவே இருக்கும். ஆனால் கிறிஸ்தவ மதத்திற்கும், மேற்குலகிற்கும், இந்த சிலுவையில் அறைந்தல் என்ற துன்பியல் நிகழ்வு இல்லாமல், “ரத்தம் தோய்ந்த” தியாகம் இல்லாமல், ஏசுவின் வாழ்க்கை சாதாரணமானதாகவும், சக்தியற்றதாகவுமே தோற்றமளிக்கிறது. கிரேக்க துன்பியல் காவியங்களின் மரபில் தோய்ந்த மேற்குலகம் கிறிஸ்தவத்திற்கு இந்தத் தன்மை அளித்தது போலும்! ஆனால் இந்து மனத்திற்கோ வாழ்வு முழுவதும், உலகம் முழுவதுமே பிரபஞ்ச வடிவிலான இறைவனின் தெய்வ லீலை என்பதாகவே தோன்றுகிறது”.

போப்பே சொன்னபிறகு, இனிமேலும், கொலைக்கதை கலந்த இத்தகைய துவேஷப் பிரசாரம் தேவை தானா? இந்திய கிறிஸ்தவ போதகர்கள் தான் சொல்ல வேண்டும்.

http://jataayu.blogspot.com

சுட்டிகள்:
[0] ““I am telling the truth in Christ, I am not lying, my conscience testifies with me in the Holy Spirit” – Romans 9:1
[1] http://www.zeenews.com/znnew/articles.asp?rep=2&aid=337251&sid=REG
[2]http://www.cybernoon.com/DisplayArticle.asp?section=fromthepress&subsection=inbombay&xfile=November2006_inbombay_standard11461
[3] http://www.hamsa.org/arulappa.htm
[4] http://arvindneela.blogspot.com/2006/12/1_16.html
[5] http://www.hamsa.org/StThomas_Chapt_3.htm
[6] http://www.hamsa.org/vatican.htm
[7] http://www.hamsa.org/britannica.htm
[8] “The Christ We adore”, Swami Ranganathananda, Sri Ramakrishna Math

Series Navigation

ஜடாயு

ஜடாயு