பேசும் செய்தி -2

This entry is part [part not set] of 36 in the series 20061006_Issue

பாஸ்டன் பாலாஜி


1. காந்தி ஜயந்தி தினத்தில் மது விருந்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் செல்ஜா: காந்தி ஜயந்தி தினத்தில் மது சப்ளை செய்யப்பட்ட திருமண விருந்தில் பங்கேற்றார் மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா. இதன்மூலம் சட்டத்தை மீறியதற்கு தார்மிகப் பொறுப்பேற்று அவர் தமது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய லோக தளம் கட்சியின் †ரியாணா மாநிலத் தலைவர் அசோக் அரோரா கோரிக்கை விடுத்துள்ளார்.

அசோக் அரோராவைத் தொடர்பு கொண்டேன். கொட்டித் தீர்த்தார். “காந்தி இறந்த சோகத்தில் நாடே இருள் கவ்வி, சோகத்தில் கவிந்திருக்கும் தினத்தில், தனியொரு மனிதனுக்கு தண்ணியில்லையெனில் இந்த தேசத்தினை அழித்திடுவோம் என்னும் தாபம் உடையவன் நான். கல்யாணம் என்பது துன்பியல் நிகழ்வு. அங்கு மணமக்கள் வருங்காலத்தை நினைத்து மதுவருந்துவது ஒப்புக் கொள்ளக் கூடியதே. ஆனால், அந்த விழாவிற்கு என்னை அழைக்கவில்லையே என்பது எனக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியது” என்று உணர்ச்சிவசப்பட்டார்.

2. திருநாவுக்கரசர்-சுப்பிரமணியசாமி சென்ற சென்னை-மதுரை விமானத்தில் கோளாறு: சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு ஜெட் ஏர் விமானம் மதுரைக்கு புறப்பட தயாரானது. இதில், சுப்பிரமணியசாமி, சந்திரலேகா உள்ளிட்ட 36 பயணிகள் இருந்தனர். விமானம் ஓடு தளத்தில் ஓடிய போது திடீரென்று எந்திர கோளாறு ஏற்பட்டது. ஒரு மணி நேர தாமதத்திற்கு பின்பு பாதுகாப்பாக மதுரைக்கு புறப்பட்டு சென்றனர்.

தோண்டித் துருவி விசாரித்துப் பார்த்துவிட்டேன். சுப்பிரமணிய சுவாமி நிச்சயமாக சொல்லிவிட்டார். விமானம் பழுதானதற்கோ, பயணம் தாமதமாகியதற்கோ தான் நிச்சயம் காரணமல்ல என்று பெருந்தன்மையுடன் சுவாமி மறுத்தவுடன், மூன்று நிருபர்கள் அதிர்ச்சியில் மயக்கமடைந்தனர்.

‘இந்த மாதிரி அசம்பாவிதம் நிகழலாம் என்பதாலேயே நான் அவ்வப்போதுதான் உள்ளதை உள்ளபடியே சொல்கிறேன்’ என்று சுப்பிரமணிய சாமி நகர்ந்தார்.

3. ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கையில் பங்கேற்க ம.பி. அரசு ஊழியர்களுக்கு அனுமதியை ஆட்சேபித்து கலாமுக்கு சோனியா கடிதம்: ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கையில் மத்தியப் பிரதேச அரசு ஊழியர்கள் பங்கேற்க அந்த மாநில அரசு அனுமதியளித்துள்ளதை எதிர்த்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். குஜராத் மாநில அரசும் இதே போன்ற உத்தரவை கடந்த 2000-ம் ஆண்டில் பிறப்பித்தது. காங்கிரஸ் முறையீட்டை அடுத்து அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் தலையீட்டின் பேரில் அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

இந்த உத்தரவை குறித்து பிறப்பு சான்றிதழ் பெறக் காத்திருந்த அப்பாவிசாமியிடம் கருத்து சேகரித்தோம்: “அரசு ஊழியர்கள் நடவடிக்கையில் இறங்குவார்களா? அவர்கள் எந்தக் காலத்தில் எதைத்தான் நகர்த்தி இருக்கிறார்கள்! ஒரு புழு, பூச்சி மேலே ஊர்ந்தால் கூட, ஒன்றும் அறியாமல் உறங்கும் அப்பாவிகளுக்கு அனுமதி வழங்குவதால் சேதம் எதுவும் விளையாது. இந்த அனுமதிக்கு எதிராக கடிதம் வரைந்ததற்கு பதிலாக, அரசாங்கத்திற்கான நடவடிக்கைகளில் பங்கேற்க அரசு ஊழியர்களுக்கு உத்தரவு வழங்க சோனியா கடிதம் போட்டிருக்கலாம்”.

4. ரஷிய அதிகாரிகளை ஜார்ஜியா விடுவித்தது: ஜார்ஜியா நாட்டில் உளவு பார்த்தனர் என்கிற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு ரஷிய ராணுவ அதிகாரிகளை ஐரோப்பிய பாதுகாப்பு நிறுவனமான OSCE இடம் ஜார்ஜிய அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷார·ப் உடனடியாக ஜார்ஜிய அதிபர் மிகைல் சாக்சவிலியைத் தொடர்பு கொண்டு பேசினார். ஒட்டுக் கேட்டதில்…

“நீ அவர்களை உடனடியாக ரஷியாவிடம் அனுப்பியிருக்கக் கூடாது. ஐந்து பில்லியன் டாலர்களை அமெரிக்காவிடமிருந்தும் ஒரு மில்லியன் டாலாராவது ப்யூடினிட்மிருந்தும் கறந்த பிறகே அனுப்பித்திருக்க வேண்டும். போனால் போகிறது… கவலைப் படாதே சகோதரா! இன்றே ஒரு புத்தகம் எழுத ஆரம்பி! நானே தலைப்பு எடுத்துக் கொடுக்கிறேன். ‘வேவு ஓநாய்களும் உள்நாட்டு குள்ள நரிகளும்’ என்று பெயர் வைத்துக் கொள். அமெரிக்கா எப்படி உன்னை மிரட்டியது, அப்கேசியா கலகம் எவ்வாறு புஸ்வாணமானது, ரஷியாவின் அணுகுண்டை ஜார்ஜியா எப்படி கண்டுபிடித்தது என்று ஒவ்வொன்றாக எழுது!”

அதற்கு மேல் அவர் சொன்ன திரைக்கதை போரடித்ததால், அமெரிக்கா ஒட்டுக்கேட்காமல் இணைப்பைத் துண்டித்து விட்டது. முழுவதும் தர இயலாமைக்கு வருந்துகிறேன்.

5. அமெரிக்க விமான நிலையத்தில் தமிழில் செல்பேசியவர் விமானத்தை விட்டு இறக்கிவிடப்பட்டார்: சியாட்டிலில் வசிக்கும் தமிழரை தொடர்பு கொண்டு பேசினோம். அமெரிக்காவின் அதிகாரபூர்வ மொழியான ஸ்பானிஷில் கதைக்காததுதான் ஆதாரமான பிரச்சினை என்றார்.

“திராவிடக் கட்சிகள் ‘†¢ந்தி எதிர்ப்பு போராட்டம்’ செய்ததால், பிற மொழிகளைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை தமிழர்கள் இழந்து வருகிறோம். நான் சந்தேகத்திற்குட்பட்டதற்கு மூல காரணமாக தமிழக ஆட்சியாளர்களைக் குற்றஞ்சாட்டுகிறேன். அவர்கள் மட்டும் ஆளாவிட்டால் தூய தமிழில் பேசி, கைதாகிய பிறகும் ஆங்கிலம் கைகொடுக்காமல், சிறையில் இருந்தே கடிதம் தீட்டி காவியம் படைத்திருப்பேன்” என்று உற்சாகமாக முடித்துக் கொண்டார்.

Series Navigation

பாஸ்டன் பாலாஜி

பாஸ்டன் பாலாஜி