வந்தே மாதரம் பாடலின் அமர வரலாறும், பாடல் மறுப்பின் பின் நிற்கும் தேச விரோத விஷ விருட்சங்களும்

This entry is part [part not set] of 39 in the series 20060825_Issue

ஜடாயு


வந்தே மாதரம் என்றுயிர் போம் வரை
வாழ்த்துவோம் முடி தாழ்த்துவோம்
எந்தம் ஆருயிர் அன்னையைப் போற்றுதல்
ஈனமோ அவமானமோ?
– மகாகவி பாரதி

“வந்தே மாதரம் பாடுவது இஸ்லாத்திற்கு எதிரானது; அதனால் முஸ்லீம்கள் இந்தப் பாடலைப் பாடக் கூடாது” என்பதாக சில ஹைதராபாத் இமாம்களும் [1] , ஜும்மா மசூதியின் ஷாஹி இமாம் புகாரியும் [2] ஃபத்வா, அறிக்கை விட்டபோது, இவர்கள் ஜிகாதி மதவெறியர்கள், மறைமுக தீவிரவாத ஆதரவாளர்கள், இப்படித் தான் சொல்லுவார்கள், இவர்கள் பேச்சைப் பெரிதுபடுத்தக் கூடாது என்றே எண்ணினேன்.

ஏனென்றால், நாட்டின் மிகப் பெரும்பான்மையான தேசபக்த முஸ்லீம்கள் வந்தே மாதர கீதத்தைப் பாடுவதிலும் ஏற்றுக்கொள்வதிலும் எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை. ஏ. ஆர். ரஹ்மான் உணர்ச்சிப் பெருக்குடன் பாடிய “வந்தேஸ. மாதரம் – தாய் மண்ணே வணக்கம்” என்ற பாடல் சுதந்திரப் பொன்விழா ஆண்டில் நாடு முழுதும் மக்களின் தேசபக்தி உணர்வுகளை எழுப்பிற்று. ராணுவத்திலும், மற்ற அரசுத் துறைகளிலும் இருக்கும் பொறுப்பு மிக்க முஸ்லிம் தலைவர்களும், மாட்சிமை பொருந்திய நமது தேசியப் பாடல் பற்றி எதிர்மறைக் கருத்து எதுவும் சொல்லவில்லை.

ஆனால் சமீபத்திய இரண்டு விஷயங்கள் மிகவும் கவலையளிக்கின்றன – 1) மேற்சொன்ன இமாம்களை பெருவாரியான முஸ்லீம் தலைவர்களும், அமைப்புகளும் கடுமையாகக் கண்டித்திருக்க வேண்டும், ஆனால் மௌனம் சாதிக்கிறார்கள். மெதுவாக இந்தக் கருத்து முஸ்லீம் சமூகத்தில் பரவி வருகிறதோ என்று தோன்றுகிறது 2) காங்கிரஸ், SP கட்சிகளின் அபாயகரமான நிலைப்பாடு – “வந்தே மாதரம் பாடுவதில் கட்டாயம் எதுவும் இல்லை, விரும்பினால் பாடலாம்” என்று அர்ஜுன் சிங் பாராளுமன்றத்தில் வெட்கமில்லாமல் வாதிடுகிறார். இந்தியக் குடிமக்கள் தேசத்திற்கு உண்மையாக இருக்கவேண்டும் என்று கட்டாயமில்லை, விரும்பினால் தாராளமாக தேசத்துரோகம் செய்யலாம் என்று அரசு அமைச்சரே சொல்வதற்கு இணையானது இது (பார்க்க [3]).
வந்தே மாதரம் பாட மறுக்கும் சிந்தனைப் போக்குக்குப் பின் எத்தகைய தேச விரோத விஷம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வது அவசியம்.

வரலாற்றுப் பின்னணி:

வந்தே மாதரம் என்பது ஒரு சாதாரணப் பாடல் மட்டுமல்ல. நமது தேசிய எழுச்சியின் அடையாளம் அது. ஒன்றுபட்ட புதிய பாரதத்தின் மலர்ச்சியை கட்டியம் கூறி அறிவித்த போர் முரசம். சுதந்திரப் போராட்ட காலத்தில் ஒவ்வொரு தேசபக்தனின் உயிர்மூச்சாக இருந்த மந்திரச் சொல். நமது தேசபக்தி பாரம்பரியத்தின் ஆன்மாவும், இதயமுமான கீதம் அது.

வந்தே மாதர கீதத்தின் முழு வரலாறு பற்றி அறிய, பார்க்க [4]. சில முக்கியமான குறிப்புக்கள்:

1) இந்தப் பாடல் ஆனந்த மடம் என்கிற நாவல் உருவாவதற்கு முன்பே பங்கிம் சந்திர சட்டோபாத்தியரால் எழுதப் பட்டது, பின்னர் இந்த நாவலில் அவரால் சேர்க்கப் பட்டது. 1875-ம் ஆண்டு துர்கா பூஜை விடுமுறைக்காக, பங்கிம் கல்கத்தா நகரிலிருந்து தமது சொந்த ஊரான கந்தலபதா என்ற சிறிய அழகிய கிராமத்துக்குச் சென்றார். தேசம் பற்றிய சிந்தனைகளில் ஆழ்ந்திருந்த அவர் மனத்தை சுற்றிலும் இருந்த பசும் வயல்களும், நதிகளும் கொள்ளை கொண்டன. அந்தத் தருணத்தில் அவரது கவிதையுள்ளத்தில் “ஸுஜலாம், ஸுபலாம்” என்று தொடங்கும் இந்த அமர கீதம் உதயமாயிற்று.

2) 1896 கல்கத்தா காங்கிரஸ் மகாசபையில் “வந்தே மாதரம் நமது தேசிய கீதம்” என்று ரவீந்திர நாதத் தாகூர் முன்மொழிந்தார். இந்த சபையில், அவரே இந்தப் பாடலை உணர்ச்சிப் பெருக்குடன் பாடினார். 1905 வங்கப் பிரிவினையை எதிர்த்து நடந்த போராட்டமே சுதந்திரப் போரின் முக்கியத் திருப்புமுனை. இந்த சமயம், வங்கம் முழுதும் சாதி, மத பேதம் மறந்து அனைத்து மக்களும் வந்தே மாதரம் என்று முழங்கினர். நாடு முழுவதும் இதன் எதிரொலியாக தேசபக்திச் சுடர் பரவியது. எந்த அரசும், கட்சியும், குழுவும் அறிவிக்காமலேயே, மக்கள் தாங்களாகவே வந்தே மாதரத்தை தேசிய கீதமாக ஏற்றுக் கொண்டனர். இந்த வருடம் தொடங்கி, ஒவ்வொரு வருடமும், காங்கிரஸ் மகாசபைகளில் வந்தே மாதரம் அதன் முழுமையான வடிவில் பாடப்பட்டது. இப்பொழுது நாம் பாடும் “தேஷ்” ராகத்தில் அமைந்த இசை அமைப்பு இதே காலகட்டத்தில் தேசபக்தரும். ஹிந்துஸ்தானி இசை மேதையுமான விஷ்ணு திகம்பர் பலூஸ்கரால் உருவாக்கப் பட்டது.

3) 1910-களில் முஸ்லீம் லீக் பெருவளர்ச்சி கண்டது. நாடு முழுவதும் முஸ்லீம் பிரிவினைவாதம் பூதாகாரமாகத் தலைதூக்கத் தொடங்கியது. 1923-ம் ஆண்டு காகிநாடா காங்கிரஸ் மகாசபைக்குத் தலைமை தாங்கியவர் மௌலானா முகமது அலி. வழக்கம் போல இந்தப் பாடலை இசைப்பதற்காக பலூஸ்கர் எழுந்தபோது “நிறுத்துங்கள்.. பாடல் இசைப்பது இஸ்லாமுக்கு எதிரானது” என்று மௌலானா குறுக்கிட்டார். மொத்த சபையும் திடுக்கிட்டது. ஆனால், பலூஸ்கர் அயரவில்லை, “இருக்கலாம், ஆனால் இது மசூதியோ, முஸ்லீம் சமயக் கூட்டமோ அல்ல. காங்கிரஸ் மகாசபை. இந்தக் கூட்டத்திற்கு ஊர்வலமாக நாம் வந்த வழியெங்கும் சங்கீதம் இசைத்ததே, அப்போது ஒன்றும் சொல்லாத தலைவர் , இப்போது நான் நமது தேசிய கீதத்தைப் பாடுவதை ஏன் தடுக்க வேண்டும்? நான் பாடியே தீருவேன்” என்று முழங்கிய பலூஸ்கர் வந்தே மாதர கீதத்தைப் பாடி முடித்தார்.

முதன் முதலில் வந்தே மாதரத்திற்கான இஸ்லாமிய எதிர்ப்பு எப்படி ஆரம்பித்தது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. 1923 வரை வந்தே மாதரம் பாடி வந்த முஸ்லீம்களிடம், திடீரென்று 1923-ல் ஒரு மௌலானா “இசை” இஸ்லாமுக்கு எதிரானது என்று காரணம் காட்டி அதை எதிர்க்கிறார்! இத்தகைய பிரசாரம் இந்த வருடம் உருவானதன் நோக்கம் வேண்டுமென்றே முஸ்லீம்களிடம் பிரிவினை எண்ணத்தை விதைப்பது. பாரதப் பண்பாடு, கலாசாரம், தேசபக்தி எல்லாமே இஸ்லாமுக்கு எதிரானது என்ற கருத்தை மெல்ல மெல்ல உருவாக்கி தேசப் பிரிவினைக்கு வித்திடுவது. வேண்டுமென்றே இதை இஸ்லாமிய சமய நம்பிக்கை என்ற போர்வையில் செய்வது. இல்லையென்றால், இவ்வளவு நாள் எல்லா முஸ்லீம்களும் பாடி வந்த தேசபக்திப் பாடல் திடீரென்று எப்படி “இஸ்லாமுக்கு எதிரானதாக” ஆகும்?? 1923-ம் ஆண்டு, குர்-ஆனில் “வந்தே மாதரம் பாடுவது தவறு” என்று புதிதாக ஒரு அத்தியாயம் சேர்க்கப் பட்டதா என்ன?

4) இப்படி ஆரம்பித்த இந்த எதிர்ப்பு தேச விரோத, பிரிவினைவாத முஸ்லீம் தலைவர்களால் வேண்டுமென்றே தூபம் போட்டு வளர்க்கப் பட்டது. முக்கியமாக, முஸ்லீம் லீக் கட்சி இதில் முன் நின்றது. முதலில் இசை, பிறகு பாடல் வரிகள், பிறகு துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி பற்றி குறிப்பு, ஆனந்த மடம் நாவலின் கதைக் கரு என்பதாக ஒவ்வொன்றாகக் காரணம் காட்டப் பட்டது. அநியாய ஆட்சிக்கெதிரான போராட்டம் “ஆனந்த மடம்” நூலின் கதைக்கரு. வங்காளத்தின் சில மாகாணங்களை ஆண்ட முஸ்லீம் கொடுங்கோல் மன்னர்களை எதிர்த்து “பைராகிகள்” என்ற புரட்சிப் படையினர் தொடுத்த போர் கதைக் களம். இது சில கொடுங்கோல் மன்னர்களுக்கெதிரான மக்கள் போரே தவிர, இஸ்லாமுக்கு எதிரான சமயப் போர் அல்ல – இந்த அடிப்படையில் தான் ராணி துர்காவதி, வீர சிவாஜி, குரு கோவிந்த சிங் போன்ற மன்னர்கள் அந்தக் கால கட்டத்திலும், இன்றும் சுதந்திர வீரர்கள் என்றே அறியப்படுகின்றனர். ஆனால் தேச விராதிகள் இஸ்லாமுக்கு எதிரானது என்பதாக இதைச் சித்தரித்தனர்.

5) 1930-களில், காங்கிரஸ் முஸ்லீம் பிரிவினைவாதத்தை ஏற்கும் நிலைக்குத் தள்ளப் பட்டது. அபுல் கலாம் ஆசாத், சுபாஷ் சந்திர போஸ், ஆசார்ய நரேந்திர தேவ் அடங்கிய குழு தேசிய கீதத்தைப் பரிசீலிப்பதற்காக அமைக்கப் பட்டு, இந்தப் பாடலின் முதல் பத்தி எல்லாரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருப்பதால், முதல் பத்தியை தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தது. காந்திஜியும் இதை ஆதரித்தார். 1947-ல் நாட்டைத் துண்டாடுவதற்கு முன்பு, தேசபக்தியின் அடித்தளமாக இருந்த இந்தப் பாட்டைத் துண்டாடுவது நடந்தேறியது! இதன் பிறகு, எல்லா காங்கிரஸ் கூட்டங்களிலும், தேசிய கீதமாக ஏற்கப்பட்ட முதல் பத்தி பாடப் பட்டு வந்தது.

6) ஆனால், தேச விரோதிகள் அப்போதும் எதிர்ப்பை நிறுத்தவில்லை. முதல் பத்தியும் இஸ்லாமுக்கு எதிரானது என்ற பிரசாரம் தொடர்ந்து வந்தது. 1947 பிரிவினை, வன்முறை மற்றும் பயங்கரங்கள் இன்னும் மறக்கப் படாத நிலையில், 1950ல் இந்தியக் குடியரசு பற்றிய தீர்மானம் தொடர்பான சர்ச்சைகளில் தேசிய கீதம் பற்றியும் விவாதிக்கப் பட்டது. அப்போது பிரதமராக இருந்த நேருவும், வேறு சிலரும் ராணுவ இசைக் குழுக்களில் (military bands) இசைப்பதற்கு வந்தே மாதரம் கடினமானது என்று சொத்தைக் காரணம் கூறினர். இதைப் பொய்யாக்கும் வகையில், மாஸ்டர் கிருஷ்ணா ராவ் பாரத பாரம்பரிய இசையின் அடிப்படையில் வந்தே மாதரத்திற்கான கம்பீரமான ராணுவ மெட்டை அமைத்து அதை ராணுவ இசைக் குழுக்களை இசைக்க வைத்தார்!

7) இங்கிலாந்தின் 5-ம் ஜார்ஜ் மன்னரை வரவேற்பதக்காகத் தான் எழுதிய பாட்டு என்று ரவீந்திர நாதத் தாகூரே ஒப்புக் கொண்ட “ஜன கண மன” என்ற பாடலின் முதல் பத்தியும் 1930-களில் பிரபலமாகி வந்தது (இது முற்றிலும் உண்மை, முதல் அடியில் வரும் “ஜன கண மன அதி நாயக” என்ற வரியும், 6-ம் அடியில் வரும் “ஜய ராஜேஷ்வர” என்ற தொடரும் இதை உறுதி செய்கிறது). வந்தே மாதரம் சொன்னவர்களை சிறையில் அடைத்த பிரிட்டிஷ் அரசு, இந்தப் பாடலை மக்கள் பாடுவதை ஊக்குவித்துப் பரிசளித்து வந்தது என்பதே இதற்கு அத்தாட்சி. நாட்டைப் போற்றி எழுதப் பட்டதாக இன்று நம்பப் படும் இந்த ஒரு பாடல் தான் வரலாற்றில் “மன்னன்” என்றும் “நாயகன்” என்றும் பாரத தேசத்தை ஆண்பாலில் விளிக்கும் முதலும் முடிவுமான பாடலாக இருக்கும்! 100 ஆண்டுகளுக்கும் மேலாக நம் நாட்டில் வழங்கி வரும் எல்லா தேசபக்திப் பாடல்களுமே “அன்னை” “தாய்” “பாரத மாதா” என்று தான் தேசத்தை உருவகிக்கின்றன! ஏன், தாகூரே எழுதிய வேறு பல தேசபக்திப் பாடல்களுமே தேசத்தை அன்னை என்று தான் அழைக்கின்றன (உ-ம்: “அயி புவன மன மோகினி” என்ற தாகூரின் மிகப் பிரபலமான பாடல்).

8) இப்படித் தான் நாட்டின் இயல்பான தேச பக்தி உணர்வுடன் ஒட்டாத, தொடர்பில்லாத “ஜன கண மன” பாடல் தேசிய கீதமாயிற்று. இதை ஆவணப் படுத்தும் அரசியல் சாசனம், இந்த தேசிய கீதத்திற்கு சரிநிகரான, சிறிதும் குறையாத மதிப்புடன், தேசியப் பாடலாக “வந்தே மாதரம்” இருக்கும் என்றும் கூறுகிறது. ஆகாசவாணியிலும், தூர்தர்ஷனிலும், தினந்தோறும் வந்தே மாதரம் ஒலி/ஒளி பரப்பப் படுவதற்கும் காரணம் இது தான். வந்தே மாதரம் இன்றும் ஒவ்வொரு தேசபக்தனின் இதயகீதமாகவே இருந்து வருகிறது.

வந்தே மாதர கீதத்தின் ஆதார சுருதி :

நம்மைத் தாங்கி வளர்க்கும் இந்த பூமியைப் பெண்மையின், தாய்மையின் உருவமாகக் கருதி போற்றுவது தொன்றுதொட்டு வரும் பாரதப் பண்பாட்டின் கூறுகளில் ஒன்று. “இந்த பூமி என் தாய், நான் அவள் அன்பு மகன்” (மாதா பூமி: புத்ரோSஹம் ப்ருதிவ்யா) என்று வேத ரிஷி உரைத்தார். “நிலமென்னும் நல்லாள்” என்று குறள் கூறுகிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட தேசிய மறுலர்ச்சியில், பாரதத்தின் பழம்பெருமைகளைப் பற்றிய பெருமிதமும், இதன் தொடர்ச்சியாகவே, இந்த பாரத தேசம் என் தாய் என்னும் உணர்வும் பிறந்தது. தாயன்பும், தாய் மண்ணின் மீதான பாசமும் இயற்கையாக, ரத்தத்தோடு ஊறிய உணர்ச்சிகள் – இந்த உணர்ச்சிகளே நாடு முழுமைக்குமான தேச பக்தியாக முகிழ்த்து எழுந்தன! இந்த எழுச்சியின் முழுமையான வெளிப்பாடாகவே “வந்தே மாதரம்” என்ற அமர கீதம் சுதந்திரப் போராட்ட காலத்தில் அறியப் பட்டது, இன்றும் அறியப் படுகிறது. இந்தப் பாடலின் அடிப்படை உணர்ச்சி தாய்ப்பாசத்தையும், இயற்கையின் மீதான நன்றியுணர்வையும், தேசபக்தியையும் பாரதப் பண்பாட்டிற்கு உகந்த வகையில் ஒன்றிணைப்பது தான். எந்த விதமான சமய தத்துவமும் அல்ல.

ஒரு சமயம் இந்தப் பாடலின் ஆங்கில மொழியாக்கத்தைப் படித்த எனது சில அமெரிக்க நண்பர்கள் இயற்கையையும் தாய்மையையும் போற்றும் உன்னதமான உணர்வுகள் இந்தப் பாடலின் அடிநாதமாக இருப்பதை வியந்து பாராட்டினார்கள்.

நாம் தேசியப் பாடலாக ஏற்றுள்ள முதல் பத்தியின் மொழியாக்கம் –

“தாயே வணங்குகிறோம்
இனிய நீர்
இன்சுவைக்கனிகள்
தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை
மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்

வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்
இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்
எழில்மிகு புன்னகை
இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்
எங்கள் தாய்
சுகமளிப்பவளே
வரமருள்பவளே
தாயே வணங்குகிறோம்”

(முழுப்பாடல்: திண்ணையில் ஜடாயுவின் மொழியாக்கம் – http://www.thinnai.com/?module=displaystory&story_id=30308151&format=html)

இந்த முதல் பத்தி மட்டுமே தேசியப் பாடலாக ஏற்கப் பட்டுள்ளதால், மற்ற வரிகள் பற்றிய சர்ச்சைக்குக் கூட இடமில்லை. இருந்தாலும் கடைசி அடியில் வரும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி பற்றிய குறிப்புக்கள் எதிர்ப்பாளர்களால் சுட்டிக் காட்டப் படுகின்றன. வலிமை, செல்வம், கல்வி இவற்றின் உருவகமாகவே இந்தத் தேவியர் இங்கு குறிப்பிடப் பட்டனர். பாரதியின் பாஞ்சாலி சபதத்தில்
“தேவர்கள் பூச்சொரிந்தார் ஓம்
ஜய ஜய பாரத சக்தி என்றே”
என்று வருகிறது. பெண்மை, சக்தி, தாய்மை – போற்றுதலுக்குரிய இவை அனைத்தையும் ஒன்றாகக் கண்ட சிந்தனையே இவற்றில் தென்படுகிறது. பாரத வரைபடத்தின் நடுவில் சிங்கத்தை அரவணைத்தபடி புன்முறுவல் பூக்கும் தேவி வடிவில் வரையப் பட்ட “பாரத மாதா” சித்திரங்கள் இதே உணர்வை ஓவியத்தின் வாயிலாக வெளிப்படுத்த எண்ணிய ஒரு அழகிய முயற்சி, அவ்வளவு தான். இதை உருவ வழிபாடு என்று கொச்சைப் படுத்துவது கலையுணர்வு இல்லாமையின் அடையாளம். முதன் முதலில், பாரத அன்னை ஓவியம் தீட்டியவர் ரவீந்திரநாதத் தாகூரின் சகோதரரும், வங்கத்தின் பெரும்புகழ் பெற்ற ஓவியருமான அவனீந்திரநாதத் தாகூர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

எதிர்ப்பு வாதத்தின் விபரீத பரிமாணங்கள்:

தேசியப் பாடலின் மொழியாக்கத்தைப் பார்த்தோம். மண்டையை உடைத்துக்கொண்டு தேடினாலும், இதில் இஸ்லாமுக்கு எதிராக என்ன இருக்கிறது என்று புரியவில்லை. முகமது நபி தேவதூதர் இல்லை என்றும், அல்லா கடவுள் இல்லை என்றும் ஏதாவது இருக்கிறதா? “மாதரம்” (தாயே) என்ற சொல் தான் இருக்கிறதே தவிர கடவுள், தெய்வம் என்று எந்தச் சொற்களும் கூட இல்லை. இது ஒரு சமய சார்புடைய பாடல் என்று கருதுவதற்கு முகாந்திரமே இல்லை.

அப்படியானால், “தாயை வணங்குவது” என்பதே இஸ்லாமிற்கு எதிரானதா? இஸ்லாம் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகள் முன்பிருந்தே “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்றல்லவா பாரதப் பண்பாடு கூறி வருகிறது? ஒருவேளை, பெண்மையையும், இயற்கையையும் போற்றுவது இஸ்லாமிற்கு எதிரானதா? “அல்லா” என்ற ஒற்றைச் சொல்லில் அடங்கும் ஆண் கடவுள் மற்றும் தெய்வீகம் பற்றிய ஒரு குறுகிய அராபியக் கருத்து மட்டுமே (சமய அடிப்படையில் மட்டுமல்ல, எந்த அடிப்படையிலும்) போற்றுதலுக்கும், வணங்குதலுக்கும் உரியதா? இது ஒரு காட்டுமிராண்டித் தனமான, வெறித்தனமான நிலைப்பாடு அல்லவா? கொஞ்சம் சிந்தியுங்கள் – “இஸ்லாமுக்கு எதிரானது” என்று இமாம்கள் கூறும் இந்த சொத்தை வாதத்தை வைத்து வந்தே மாதரம் பாட மறுப்பவர்களை அங்கீகரித்தால் எதையெல்லாம் அங்கீகரிக்க வேண்டும்?

1) வந்தே மாதரத்திற்குக் கூறியது அப்படியே தமிழ்த்தாய் வாழ்த்திற்கும் பொருந்தும். “நீராரும் கடலுடுத்த நில மடந்தை” (“ஸமுத்ர வஸனே தேவி” என்ற பூமி ஸ்துதியின் பொருளும் இதே) என்று பூமித்தாயைத் தானே அதில் போற்றுகிறோம்? “தரித்த நறும் திலகமுமே” – திலகம் வைத்துக் கொள்வது இஸ்லாமிற்கு எதிரானதில்லையா? “அத்திலக வாசனை போல்” என்று தமிழ்த்தாயை இந்தப் பாடல் போற்றுகிறதே? “வந்தே” என்ற சொல்லுக்கு ஈடானது “வாழ்த்துதுமே” என்ற தமிழ்ச் சொல். என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழ் நாட்டு இமாம்களும், மௌல்விகளும்? உடனடியாக, முஸ்லீம்கள் யாரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடக் கூடாது என்று ஃபத்வா விட வேண்டாமா? சிறுபான்மை சேவக தி.மு.க. அரசு உடனே அதை ஏற்றுக்கொண்டு “ஆமாம், ஆமாம், முஸ்லீம்கள் பாட வேண்டாம்” என்று சொல்லி தன் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்த வேண்டாமா? நாகூர் ரூமி உடனே இதற்கு வக்காலத்து வாங்கி பல அரபு மேற்கோள்களுடன் ஒரு புத்தகம் எழுத வேண்டாமா?

2) தமிழ் மறை என்று நாம் எல்லாரும் ஏற்றுக்கொண்ட திருக்குறள்? “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” என்பது இஸ்லாமிற்கு எதிரானது, அதை மாற்றி “அலிஃப் முதல எழுத்தெல்லாம் அல்லாஹு முதற்றே உலகு” என்று மாற்றித் தான் படிப்போம் என்றாலும் மற்ற குறள்களை என்ன செய்வது? “தீதின்றி வாழும் திரு”, “செய்யவள்”, “தாமரையினாள்” – லட்சுமியைப் பற்றி எத்தனை இடங்களில் வருகிறது? இஸ்லாமுக்கு எதிரான இந்த நூலை முஸ்லீம்கள் படிக்க வேண்டும் என்று அரசு கட்டாயப் படுத்தலாமா – கூடவே கூடாது ! திருக்குறளே இல்லாத தமிழ்ப்பாட நூல்களில் சிலம்பும், கம்பராமாயணமும், திருமுறைகளும் எதற்கு? தூக்கு இவை எல்லாவற்றையும் !

3) தேசியக் கொடியில் புத்த மதத்தின் சக்கரம் இருக்கிறது. தேசியச் சின்னத்தில், சிங்கம், எருது, குதிரை – அது போக “சத்யமேவ ஜயதே” என்ற வேத வாக்கியம் வேறு. முதலில் சின்னங்களைப் போற்றுவது என்பதே இஸ்லாமுக்கு எதிரானது – அதிலும் இதெல்லாம் உருவ வழிபாட்டுக் காஃபிர்களின் சின்னங்கள். எனவே, தேசிய சின்னங்களைப் போற்றுவது இஸ்லாமுக்கு எதிரானது!

4) இப்படி, இந்த இமாம்கள் கூறும் “இஸ்லாமுக்கு எதிரான” விஷயங்களுக்கு ஆமாம் ஆமாம் என்று தலையாட்டி பாராளுமன்றத்தில் பேசும் அர்ஜின் சிங், இந்த தேசத் துரோகத்துக்கு வக்காலத்து வாங்கி திண்ணையில் கட்டுரை எழுதிய கற்பக விநாயகம் – இந்தக் காஃபிர்கள் உயிரோடு இருப்பதே இஸ்லாமுக்கு எதிரானது அல்லவா? அர்ஜுன் சிங்கும், க.வி.யும் ஜிகாதிகளின் கையால் மரணத்தை ஏற்றுக் கொண்டு ஜஹன்னும் (இஸ்லாமிய நரகம்) போகத் தயார் தானா?

இதெல்லாம் விபரீதமான கற்பனை போலத் தோன்றலாம். வந்தே மாதரத்தை எதிர்க்கும் இமாம்களிடம் போய் இதில் வரும் ஒவ்வொரு கேள்வியையும் கேட்டுப் பாருங்கள் – பதில்கள் எப்படி வருகின்றன என்று. பாரதப் பண்பாடு என்பதே இஸ்லாமுக்கு எதிரானது என்ற முடிவில் தான் அது வந்து நிற்கும். ஏழாம் நூற்றாண்டு அராபியப் பாலைவனத்தின் கற்பனைகளுக்கு எட்டாத எந்த விஷயத்தையும் “இஸ்லாமுக்கு எதிரானது” என்ற ஒற்றை வாதத்தின் மூலம் அவர்கள் நிராகரிப்பார்கள் (ஆனால் அதி நவீன துப்பாக்கிகள், வெடி மருந்துகள், எறி குண்டுகள், ராக்கெட்டுகள் எல்லாம் இஸ்லாமிற்கு எதிரானவை அல்ல –அவையெல்லாம் ஜிகாதில் துணை புரிவதற்காக அல்லாவால் அனுப்பப் பட்டவை!!)

இந்த தேச விரோத சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்:

இப்படி ஜிகாதி இஸ்லாமிய மத வெறியர்கள் (சுருக்கமாக, இஸ்லாமிஸ்டுகள்) ஆட்சேபம் தெரிவிப்பதற்கெல்லாம் அரசும், சமுதாயமும் வளைந்து கொடுத்தால் அது அவர்களை மகிழ்விக்கும், வழிக்குக் கொண்டு வரும் என்று நினைப்பது இமாலயத் தவறு. பாரதம் போன்ற ஷரியத் சட்டம் நடைமுறையில் இல்லாத ஒரு சுதந்திர நாட்டில், இஸ்லாமிஸ்டுகளை உண்மையில் கோபப் படுத்துவது நம் கருத்துக்களோ, நடைமுறைகளோ அல்ல. அந்தக் கருத்துக்களையும், நடைமுறைகளையும் அடக்கி, ஒடுக்கி, அழிக்கும் அதிகாரம் தம்மிடம் இல்லை என்பது தான்! ஏனென்றால், இஸ்லாமிஸ்டுகளின் உண்மையான நோக்கம் ஷரியத் சட்டப்படி இயங்கும் ஒரு அரசை உருவாக்கி அதில் அதிகாரம் செலுத்துவது. அப்படி ஆனவுடன் எதைத் தடை செய்யலாம், எதை அனுமதிக்கலாம் என்பதை அவர்களே முடிவு செய்யும் அதிகாரம் வரும், அப்போது மட்டுமே அவர்கள் திருப்தியடைவார்கள்.

The real gripe Jihadi Islamists have in non-Muslim countries is
about power, not any matters of religious belief or custom.

“ஒரு பாடலைப் பாடினால் தான் தேசபக்தனா – இல்லை என்றால் கிடையாதா” என்று வெற்று வாதம் செய்யும் அறிவு ஜீவிகளும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பாடலைப் பாட மறுப்பதற்காகக் கூறும் காரணம் பகுத்தறிவின் (rationality) பால் பட்டதல்ல. மாறாக குருட்டு நம்பிக்கை (irrationality)யின் உச்சக் கட்டமான மதவெறி மற்றும் அதிகார வெறி சார்ந்தது.

தேசபக்த முஸ்லீம்கள் இதை உணர வேண்டும். பாரதப் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தோடு இஸ்லாமியக் கருத்தியலைப் பிணைக்கும் முயற்சிகளை அவர்கள் ஊக்குவிக்க வேண்டும். இதற்கு எதிராக, வேண்டுமென்றே பாரதப் பண்பாட்டிற்கு எதிரானதாக இஸ்லாமிய சமயக் கோட்பாடுகள் அனைத்தையும் சித்தரிக்கும் சூழ்ச்சிகளையும், நாச வேலைகளையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசியல் சட்டப்படி, வந்தே மாதர கீதத்திற்கு எதிராகப் பேசுவது “தேசிய சின்னங்களை அவமதித்தல்” என்ற சட்டப் பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றம். இந்தக் குற்றம் புரிந்த இமாம்களையும், மௌல்விகளையும் பிடித்துச் சிறையிலடைத்துத் தண்டிக்க வேண்டும். அவர்களுக்கு நேர்முக, மறைமுக ஆதரவு அளிக்கும் தேச விரோதிகளை சமுதாயம் இனங்கண்டு புறக்கணிக்க வேண்டும்.

வெந்தே போயினும் நொந்தே மாயினும்
நந்தேசத்தர் உவந்தே சொல்வது
வந்தே மாதரம்!
– மகாகவி பாரதி

ஜடாயு (http://jataayu.blogspot.com)

[1] ஹைதராபாத் இமாம்கள் அறிக்கை: http://timesofindia.indiatimes.com/articleshow/1629373.cms
[2] இமாம் புகாரி அறிக்கை: http://timesofindia.indiatimes.com/articleshow/1910451.cms
[3] அரசியல் கட்சி நிலைப்பாடுகள்:
http://timesofindia.indiatimes.com/articleshow/1913479.cms
http://timesofindia.indiatimes.com/articleshow/1906196.cms
http://timesofindia.indiatimes.com/articleshow/1914104.cms
[4] வந்தே மாதரம் – மூலம், மொழிபெயர்ப்புகள், வரலாறு :
http://www.freeindia.org/vmataram/

Series Navigation

ஜடாயு

ஜடாயு