ஆய்வுக் கட்டுரை: பாதை மாறிய கொள்ளிடம்

This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue

கோ.தில்லை கோவிந்தராஜன்


தமிழக வரலாற்றில் சிறப்பிக்கப்படும் புண்ணியநதிகளுள் சிறப்புப் பெற்றதுதான் காவேரி நதியாகும். இக்காவிரி நதியினை “காவிரி போற்றுதும் காவிரி போற்றுதும்” என்று சிலப்பதிகாரத்தில் கோவலன் கோலத்தை ஏடு எழுதிய காவியுடுத்திய காவலனாம் இளங்கோவடிகள் வரவேற்கின்றார்.

“காவிரி புடைசூழ் சோனாட்டவர் தாம்பரவிய கருணையங் கடல்
பாவிரி புலவர் பயிலும் திருபனையூர்”
என்ற சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவாரப் பாடல்களினாலும்

“முழங்கு நீர் படப்பைக்
காவேரி கிழவன்மாயா நல்லிசைக்
கிள்ளைவளவனுள்ளி யவற்படர்தும்”
என்ற புறநானூற்று வரிகளினாலும் சோழர் குடியையும் சோழ நாட்டையும் வளம்பெறச் செய்வது காவிரி என்பதை நாம் கண்டுரைக்கலாம்.

கொள்ளிடம்:

திருச்சிராப்பள்ளி மேற்கே குளித்தலை செல்லும் பெரும்பாதையில் பெட்டவாய்தலை என்றும், தற்போது முக்கொம்பு என்றும் அழைக்கப்படும் ஊரிலிருந்து காவிரி, நதியிலிருந்து கிளை நதியாக கொள்ளிடம் பிரிகிறது. இவ்விரு நதிகளும் ஸ்ரீரங்கத்தை தீவுபோல பிரிந்து மீண்டும் வந்து சேர்கிறது. திருமழபாடி கோயில் வழியே செல்கிறது. இந்த ஊர்வழியாக செல்லும்போது இந்த ஆறு பெரிதாக செல்லவில்லை. சுந்தரமூர்த்திநாயனார் காவிரியின் தென்கரைத்தலமான திருவாலம்பொழிலை தரிசித்தபின் காவிரியின் வடகரைஏறி திருமழபாடியை அடைந்ததாக சேக்கிழார் வருணிகின்றார். இவர் கொள்ளிடத்தை காவிரி என்கிறார் போலும்.

கொள்ளிட ஆற்றை தெற்கே பெயர்ந்து அகலப்படுத்தி ஊருக்கு ரட்சை செய்ததாக தெற்றி பெரியானான எதிரிலி சோழ மூவேந்த வேளான் என்பவன் மூன்றாம் ராஜராஜன் கல்வெட்டில் குறிக்கப்படுகின்றான்.1 இதிலிருந்து இந்த ஆறு வெள்ளப் போக்கினால் ஊருக்கு தீங்கு விளைவித்துள்ளது என்பதை அறியலாம்.

சமய இலக்கியத்தில் கொள்ளிடம்

கொள்ளிடம் என்னும் ஆற்றினை தேவாரப்பாடலில் ‘கொள்ளிடக்கரை கோவிந்தபுத்தூரில்’ எனத் திருநாவுக்கரசு நாயனார் சிறப்பிக்கின்றார்.

இக்கொள்ளிட ஆற்றினை சேக்கிழார் தமது பெரியபுராணத்தில் (தடுத்தாட்கொண்ட புராணத்தில்)

“தென்திசை வாயில் கடந்து முன்போந்து
சேட்படு திருவெல்லை யிறைஞ்சிக்
கொன்றை வார்சடையார் னருளையே நினைவார்
கொள்ளிடத் திருநதி கடந்தார்”
என்று சுந்தரர்கொள்ளிடத்தை கடந்தார் என்பதை விவரிக்கின்றார்.

இதில் சேண்படு திருவெல்லை என்பது தில்லையின் நாற்புறமும் சூழ்ந்த நான்கு எல்லையாவன கிழக்கு கடலும், தெற்குக் கொள்ளிடத் திருநதியின் வடகரையும், மேற்கு நாகச்சேரியும், வடக்குத் திருமலைமுத்தாறுமாம். இதில் கொள்ளிடம் ஆறு கலங்கொள்ளிடம் என்ற பெயர் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. சோழமன்னர்கள் கடலிலிருந்து தமது நாட்டிற்குள் மரக்கலங்கள் வருவதற்காக அமைத்ததால் இப்பெயர் பெற்றது. அகலமும் ஆழமும் பெற அமைந்ததால் இப்பெயர் பெற்றது. கலங்கொள்ளிடம் என்பது முதற்குறையாகக்கொள்ளிடம் என வழங்கப்படுகின்றன.2

இக்கொள்ளிடம் தற்போது சிதம்பரத்தை அடுத்துள்ள சிற்றூர் ஆகிய வல்லம்படுகை வழியாக அகலம் குறைந்து குஞ்சரமல்லன் வாய்க்கால் என்ற பெயராய் வங்கக்கடலில் சங்கமாகின்றது.3

கோப்பெருஞ்சிங்கனும் கொள்ளிடமும்

பல்லவ அரசர்கள் வழிவந்த கோப்பெருஞ்சிங்கன் 6வது ஆட்சி ஆண்டு கல்வெட்டு ஒன்றில் ‘திருச்சிற்றம்பலத்து மங்கலத்து இராமதேவ மங்கலத்தும் புதுக்கொள்ளிட ஆற்றுக்கு வடக்கரைப்பட்ட நடுவில் காட்டு இவன் காணியான கொல்லையில் என்று குறிக்கப்படுகின்றன.4 மேலும் இவன் ஆட்சிக்கலாத்தில் 10வது ஆட்சி ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில்

“ஜெயங்கொண்ட சோழப்பட்டிணத்துப் பிடாகை அளக்குடியில் அம்பலவதிக்கு கிழக்கும் ஜெயங்கொண்ட சோழ வாய்க்காலுக்கு வடக்கு” எனக் குறிப்பிட்டு இருக்கிறது.5

மேற்சொல்லப்பட்ட கல்வெட்டுக்களில் காணப்படும் நடுவில்காடு/ஜெயங்கொண்ட பட்டிணம் இரண்டு ஊர்களும் தற்போது தீவுகளாகக் காட்சியளிக்கின்றன. ஜெயங்கொண்டப்பட்டிணம் பிடாகையான அளக்குடி என்பது தற்போது புதுக்கொள்ளிடத்தின் வெள்ளப்பெருக்கினை சந்திக்கும் ஓர் ஊராகும். இவ்வூருக்கு வடக்கே திரும்பிக் கிழக்காக இவ்வாறு செல்கிறது. அளக்குடியிலிருந்து ஜெயங்கொண்டப்பட்டினம், நடுவில்க்காடு ஆகிய ஊருக்கு ஆற்றைக் கடந்து செல்லலாம். இவ்வூர் கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டில் குறிக்கும் புதுக்கொள்ளிடம் என்பதற்கு முன்பாகவே ஒரே நிலப்பகுதியாக மூன்று ஊர்களும் இருந்திருக்க வேண்டும்.

சோழரின் வணிகத்துறையில் கொள்ளிடம்

சோழர் காலத்தில் வணிக்கத்தலமாக விளங்கிய வங்கக்கடலை ஒட்டியுள்ள தீவன தேவிக்கோட்டையும், கொடியம்பாளையமும் ஒரே பகுதியாக இருந்திருக்க வேண்டும். கொடியம்பாளையம் தற்போது ஒரு பகுதி கடலை ஒட்டியுள்ளது. இதனை அடைய மகேந்திரப் பள்ளியிலிருந்துக் கொள்ளிடம் ஆற்றைக் கடந்து கோட்டை மேடு பகுதியை அடைந்து பின்னர் கொடியம்பாளையத்தை அடைய வேண்டும். தேவிக்கோட்டை என சோழர் காலத்தில் வழங்கப்பட்ட ஊர் கோட்டைமேடு என்று அழைக்கப்படுகிறது.

திருஞானசம்பந்தரும் மகேந்திரப்பள்ளியும்

திருஞானசம்பந்தர் மகேந்திரப்பள்ளியைப் பற்றிய தம்பாடல் அடியில் கூறும்போது
“திரைதரு பவளமுஞ்சீர் திகழ் வயிரமும்
கரைதரு மகிலொடு கணவளை புகுதரும்
வரைவிலா லெயிலெய்த மகேந்திரப் பள்ளியுள்
அரவரை யழகனை யடியிணை பணியேனே”
என்றும்,

“நித்திலத் தொகைப்பலம நிரைதருமலரெனச்
சித்திரப் புணரி சேர்ந்திடத் திகழ் திருந்தவன்”
என்றும் குறிப்பிடுகிறார்.
எனவே, கடற்கரையொட்டி இக்கோயில் இருந்திருக்க வேண்டும் என்பதை உணரலாம்.

கொள்ளிடத்தின் தென்புறமாகத் தற்போது காட்சியளிக்கும் கோயிலடிப்பாளையம் என்று வழங்கப்பெறும் மகேந்திரப்பள்ளிக்கோயில் மகேந்திரவர்மனால் கட்டப்பட்டதாகும். கோயிலில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன எனவும் இக்கோயில் கரக்கோயிலாகும்.6

தற்பொழுது பல மாற்றங்களுடன் காணப்படும் இக்கோயில் கொள்ளிடத்தின் வெள்ளப்போக்கின் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இருக்க வேண்டும். நான் என்னுடன் பயின்ற ஆசிரியர் பயிற்சி மாணவர்களுடன் கள ஆய்வு செய்தபோது, கோட்டை மேடு என்ற தீவில் தொடக்கப்பள்ளியின் பின்புறத்தில் ஆலமரத்தடியின் கீழ் கோட்டை சுவரின் (செங்கல் கட்டிடம்) சிதைந்த ஒரு பகுதி காட்சியளிக்கின்றது. அதன் அருகில் சூலசின்னங்கள் பொறிக்கப்பட்ட சில கருங்கற்கள் காணப்பட்டன. சில கோயிற்வடிவமைப்புக் கற்களும் கிடப்பதைத் காணமுடிகிறது.

கோட்டை மேட்டிலிருந்த விஜயகோதண்டராமர் என்னும் விஷ்ணு கிரகத்தை தற்போதுள்ள மகேந்திரப்பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றிருக்க வேண்டும்.7

பாசனத்தந்தை ஆர்தர் காட்டனும் கொள்ளிடமும்..

கி.பி.1836இல் சர் அர்தர்க்காட்டன் என்பவரால் 67 மைல் மேலணை கட்டப்பட்டுள்ளது. மூன்று பழைய தடுப்பணைகளில் இரண்டு லால்பேட்டையிலும், ஒன்று வீரநத்தத்திலும் கட்டப்பட்டுள்ளன. 1835-1870 வரை பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டன. ஏரியில் வழியும் நீர் பழைய கொள்ளிடம் வழியாக பசுமுத்து ஓடை வழியாக வெள்ளாறு மற்றும் பரங்கிப்பேட்டையில் கடலோடு கூடுகிறது.8

கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் பழைய கொள்ளிடத்திலிருந்து புதுக்கொள்ளிடம் வேறுபடுத்திக் குறிக்கப்படுவதனால், ஆறு தமது அதிகப்படியான வெள்ளப்போக்கினால் தமது பாதையை மாற்றிக் கொண்டிருக்கலாம் என்பதை நன்கு உணரமுடிகிறது.

அடிக்குறிப்பு:

1.திருமழபாடி /பக்.18/19 எஸ்.இராமச்சந்திரன்.

2.திருத்தொண்டர்புராணம் பக். 304/305. சி.கோ.சுப்பிரமணியமுதலியார்.

3.பழைய கொள்ளிடம் ‘குஞ்சரமல்லன்’ வாய்க்கால் அல்லது மண்ணியாறு என்று சோழர் காலத்தில் வழங்கப்பட்டது. பிற்கால சோழர் சரித்திரம், பாகம் – 1

4.South Indian Inscriptions Vol.XII No.149,Annual Report of Epigraphy 296/1913.

5.S.I.I. Vol.XII No.327,160 ARE 327/1913.

6.மகேந்திரவர்மன், மயிலை சீனி வேங்கடசாமி.

7.அளக்குடியைச் சேர்ந்த விஜயராகவநாயுடு என்பவர் இக்கோயிலை மகேந்திமர பள்ளிக்கு மாற்றினார் என்று பெரியவர் இராமகிருஷ்ணநாயுடு கூறினார்.

8.Gazeetter of India, Madras South Arcot Pages 168,183,188,190-91 Footnote I notes on irrigation South Arcot District dated 18th July,1953 by V.N.Kudva.

thillai.g@gmail.com

Series Navigation

கோ. தில்லை கோவிந்தராஜன்

கோ. தில்லை கோவிந்தராஜன்