ஹிந்துக்களைப் பிளவுபடுத்துவது என்பதாலேயே எதிர்க்கப் பட்டது கம்யூனல் ஜி.ஓ.

This entry is part [part not set] of 28 in the series 20060106_Issue

மலர்மன்னன்


இன்றைக்கு பாரதத்தில், முக்கியமாகத் தொழிற் கல்வி சார்ந்த இட ஒதுக்கீடுக் கொள்கையையே மறுபரிசீலனை செய்ய வேண்டிய அளவுக்கு நிலைமை வரவேற்கத்தக்க விதமாக மாறிக்கொண்டிருக்கிறது. இட ஒதுக்கீட்டிற்கு உரிய பிரிவினரைச் சேர்ந்த பலர், அச் சலுகை தேவைப்படாத அளவுக்குக் கூடுதலான மதிப்பெண்களைப் பெற்றுப் பொதுப் பட்டியலைச் சேர்ந்தவர்களின் குறைந்த எண்ணிக்கையிலான இடங்கைளையும் எடுத்துக் கொள்ளும்படியாக முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள்.

இதனை இடஒதுக்கீட்டுக் கொள்கையின் பலனாகக் கருதுவதும் அதன் விளைவான முன்னேற்றம்தான் எனக் காரணம் கண்டுபிடிப்பதும் திட சங்கற்பத்துடன் அயராது உழைத்துப் படித்து முன்னுக்கு வரும் அந்தக் குழந்தைகளின் சுய கவுரவத்தையே அவமதிப்பதாகும்,

அவர்களின் கடின உழைப்பை மலினப் படுத்துவதாகும் என்றே நான் கருதுகிறேன்.

அல்லாடி கிருஷ்ணஸ்வாமி அய்யர் என்கிற வழக்கறிஞர், மிகச் சிறந்த சட்ட நிபுணராக மட்டுமின்றி, பொறுப்புணர்வு மிக்க சமூக நல ஆர்வலராகவும் பணியாற்ற நேரம் ஒதுக்கிய, ஜாதி வித்தியாசமின்றி நம் அனைவரின் மரியாதைக்கும் நன்றிக்கும் உரிய பெரிய மனிதர்தான். அவரை ஏதோ ஜாதி வெறியர் என்பதுபோல் ஒரு சித்திரத்தை மனதில் வரைந்துகொண்டுவிடக் கூடாது. அவர் விரும்பியிருந்தால் அவர் காலத்து வேறு பல மயிலாப்பூர் வழக்கறிஞர்களைப்போல் சிவில், கிரிமினல் என்று தனிநபர் வழக்குகளை எடுத்துப் பெருஞ் செல்வம் சேர்த்து உல்லாசமாக வாழ்ந்து, அவருடைய சந்ததியார் மட்டுமே சந்தோஷப்பட்டுக் கொள்ளுமாறு தம் காலத்தை முடித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர் பொது நல வழக்குகளையும் எடுத்து, எதிர்கால நலன் கருதி, சட்டரீதியாகத் தீவிரமாகப் போராடியவர். சுவாமி விவேகானந்தர் மூலம் பொதுநல ஊழியம் செய்யும் உத்வேகம் கிடைக்கப் பெற்ற பாக்கியசாலி.

உண்மையில், ஹிந்து சமுதாயத்தில் தலித்துகள், தலித்துகள் அல்லாதார் என்ற பிரிவுகள்தான் உண்டு. ஆனால் ஈ.வே.ரா. போன்றவர்களின் கைங்கரியத்தால் இது பிராமணர்-பிராமணர் அல்லாதார் எனச் செயற்கையாகப் பிரிக்கப்பட்டுவிட்டது.

ஹிந்து சமுதாயத்தில் பிற்பட்டோர், மிகுதியும் பிற்பட்டோர் என்கிற பிரிவெல்லாம் கிடையாது என்பதுதான் உண்மை. தாழ்த்தப்பட்டோர், தீண்டத் தகாதோர் என்ற ஒரு பிரிவு மட்டுமே அதில் உண்டு. கல்வி, வேலை வாய்ப்பில் சலுகை என்பதற்காக மிகவும் செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்தப் பிற்பட்டோர், மிகப் பிற்பட்டோர் பிரிவுகள், ஹிந்து சமூகத்தைப் பல கூறுகளாகப் பிரித்துப் போடவும், எந்த விவகாரம் என்றாலும் அவரவர், அவரவரின் ஜாதி நல அடிப்படையில் அணுகும் மனப் போக்கு உருவாகவுமே உதவியிருக்கின்றன. மற்றபடி, தலித்துகள் அல்லாதோர் அனைவருமே ஒதுக்கீடு அவசியமின்றி, இயல்பான கால வளர்ச்சியின் போக்கில் கல்வியிலும், உத்தியோக வாய்ப்புகளிலும் திறமையின் அடிப்படையில் முன்னேற முடிந்திருக்கும்.

இன்று பாரதம் முழுவதுமே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஜாதிக் கண்ணோட்டம் உருவாகிவிட்டிருக்கிறதே, இதன் ஊற்றுக் கண் எது ? காலப் போக்கில் ஜாதி உணர்வு மங்கி, யார், எந்த ஜாதி என்கிற பிரக்ஞையே இல்லாத நிலைமை அல்லவா பரிணாமம் அடைந்திருக்க வேண்டும் ? மாறாக, ஐம்பது அறுபது ஆண்டுகளுக்குமுன் கூட இல்லாத அளவுக்கு இன்று ஜாதிச் சங்கங்களும் கட்சிகளும் உருவாக என்ன காரணம் ? இது சீரான சமூக முன்னேற்றத்திற்கு முரணான பின்னடைவே அல்லவா ? இதற்குக் காரணம் நமது சமுதாயத்தில் துரதிர்ஷ்ட வசமாகத் தொலைநோக்குப் பார்வையற்ற ஈ.வே.ரா. போன்றவர்களின் செல்வாக்கு மிகுந்து போனதுதானே ?

கசப்பான உண்மைதான். ஆனால் என்ன செய்ய, பெரும்பாலான உண்மைகள் கசப்பானவையாகவும் சுடுபவையாகவும்தான் உள்ளன. அதனால்தான் அவற்றைத் தொடுவதற்குப் பலரும் தயங்கிப் பின்வாங்குகிறார்கள். அல்லாடி கிருஷ்ணஸ்வாமியைப் போல ஒரு சிலர்தான் எதிர்கால சமூக ஒற்றுமை கருதித் துணிவுடன் உண்மையை எடுத்துக் கூறிப் போராட முன் வருகிறார்கள், சுய

நலம் பிடித்த மேல் ஜாதி வெறியர் எனத் தமக்குப் பட்டங் கட்டுவார்கள் என்பது தெரிந்தேதான்! பாருங்களேன், கற்பக வினாயகம் கூட என்னை ஒரே வார்த்தையில் அடித்து விடவில்லையா, கருவிலே திருவுடையவன் என்று! இது எவ்வளவு சுலபமான மடக்கிப் போடும் சவுகரியம்! ஆதாரங்கள் வேண்டாம், ஆராயும் திறன் வேண்டாம்; ‘கருவிலே திரு, ‘ அந்தவொரு சொற்பிரயோகமே போதும், எதிராளியின் வாயை அடைக்க!

ஆனால் கருவிலே திருவென்பது உயர் கல்வி, பெரிய உத்தியோகம், சொத்து சுகம் எனும் லவுகீக சமாசாரம் அல்ல, அது ஆன்மிக நுட்பம் சார்ந்தது. அந்த விதத்தில் நிச்சயமாகக் கருவிலே திரு உடையவன்தான், அதிலென்ன சந்தேகம் ? என் பாட்டன், முப்பாட்டன் அனைவருமே வம்ச விருத்திக்கென ஒரு பிள்ளை பெற்றபின் பெருஞ் செல்வம், காடு கழனி, வீடு, மனை

எல்லாம் துறந்து, சிவபெருமானே செவியிலே மந்திரச் சொல் ஓதி, ஆவியினை ஒடுங்கப் பண்ணும் மகாஸ்மசானமாகிய, காசி மாநகரத்திற்குப் பெரும் வேட்கையுடன் போய்ச் சேர்ந்தவர்கள்தாம்!

ஹிந்து சமூகத்தில் ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்டு வந்துள்ளவர்கள், நியாயப்படிச் சலுகைகள் பல தந்து முன்னேற்றப்பட வேண்டிய பிரிவினர், தலித்துகள்தான்; அவர்களுக்குப் போய்ச் சேரவேண்டிய பங்கு குறைந்து போய்விடலாகாது என்கிற கவலையின் காரணமாகத் தான் கம்யூனல் ஜி.ஓ. என்கிற ஆணையை எதிர்த்து அல்லாடி போன்றவர்கள் வாதாடினார்கள். ஹிந்து சமுதாயம் பிளவுபடும் ஆபத்தையும் கூடவே உணர்ந்ததாலும்தான். உச்ச நீதி மன்றமும் அதில் உள்ள நியாயத்தைக் கண்டு கொண்டதால் கம்யூனல் ஜி. ஓ. செல்லாது எனத் தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குக் கூடவா உள்நோக்கம் இருக்கக் கூடும் எனச் சந்தேகிப்பது ? நீதிபதிகள் தவறான முடிவுக்கு வந்திருக்கலாம் எனக் கூறுவதில் தப்பில்லை. அதற்குக் கூடுதல் அமர்வு பெற்று மறு விசாரணை செய்ய வழியும் உண்டு. ஆனால் அதற்குப் பதில் தேர்தலில் வாக்குகளைப் பெறும் அரசியல் உள்நோக்கமானது சட்டத் திருத்தம், புதிய சட்டம் என்றெல்லாம் கொண்டுவரச் செய்துவிட்டது என்பதுதானே உண்மை நிலவரம் ? தீர்ப்பு சாதகமாக இல்லையேல் சட்டத்தையே திருத்து, அல்லது புதிதாகவே ஒரு சட்டம் இயற்று! எண்ணிக்கை பலம்தான் இருக்கிறதே! நீதிபதிகள் சட்டப்பிரகாரம்தானே தீர்ப்புச் சொல்லியாக வேண்டும் ? அவர்களாகவே சட்டம் இயற்றிக் கொண்டு தீர்ப்பு எழுத முடியாதே! இதுதான் அன்றிலிருந்து இன்றுவரை, ஷாபானு வழக்கின் தீர்ப்பு உள்பட சமீபத்து இட ஒதுக்கீடு சட்டம் வரை நடந்து வருகிறது. தேசத்தின் ஆரோக்கியமான மனித வள மேம்பாடு பற்றி யாருக்கென்ன கவலை ? யோசிக்கும் வேளையில் எல்லாம் வாக்கு வங்கி அரசியல் என்னும் சுலப கணிதத்தில் போய் முடிவதாய் அமைந்தது.

கம்யூனல் ஜி. ஓ. என்கிற பிளவு சக்தி ஏற்பாடு பற்றி விரிவாகவே எழுதலாம்தான். அதற்கு அவகாசம் தேவை. பழைய குப்பைகளையெல்லாம் வேறு கிளறியாக வேண்டும். முடிந்தால் பிறகு வைத்துக் கொள்ளலாம். நண்பர் கற்பக வினாயகத்திற்குப் பதில் சொல்வதற்காக அல்ல. சரியான தகவல்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்காகத்தான். ஒருவிதத்தில் எதிர்வினைகள் எழுவதால்தான் விஷயத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள வாய்ப்பும் கிட்டுகிறது. எனவே எதிர்வினை செய்வோர் நம் நன்றிக்குப் பாத்திரமானவர்களே.

அப்புறம் இந்தச் சட்டை மாட்டிக்கொள்கிற, மாட்டிவிடுகிற விவகாரம். ஆண்டவன் அருளால் நம் தேசத்தில் வருடத்தில் பெரும்பாலான பகுதி மேல் ஜாதி கீழ் ஜாதி, ஏழை பணக்காரன் என்கிற வேறுபாடுகள் இன்றி அனைவருமே சட்டை போட்டுக்கொள்ளத் தேவை இல்லாததாகத்தான் உள்ளது. முக்கியமான தருணங்களில் தலித்துகள் தவிரப் பிறர் மேல்உடம்பைச் சட்டை அல்லது துண்டால் மறைத்துக் கொள்வதற்குத் தடை ஏதும் இல்லாத நிலைமைதான் இருந்து வந்துள்ளது. எனவே தேவையின்றி எவரும் அனைவருக்கும் சட்டை மாட்டிவிடும் வேலையை ஈ.வே.ரா.வுக்குக் கொடுக்க வேண்டாம் என்றுதான் சொல்ல வந்தேன். ஈ.வே.ராவுக்கே இந்த குளிக்கிற, சட்டை மாட்டிக் கொள்கிற சமாசாரங்கள் எல்லாம் அறவே பிடிக்காது. நாள் கணக்கில் குளிக்காமலும் சட்டை மாட்டிக் கொள்ளாமலும் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த சுகவாசி அவர். அவர் மீது இந்த விஷயத்தில் எனக்குப் பொறாமையே உண்டு! ஐரோப்பியப் பயணத்தின்போது நிர்வாணர் குடியிருப்பு எனப்படும் நியூடிஸ்ட் காலனியைக் கண்டதும் அகமகிழ்ந்து தாமும் அங்கிருந்தோருடன் உற்சாகமாகச் சங்கமித்தவர் ஆயிற்றே அவர்!

ஈ.வே.ரா.வால் பெரும் பயன் பெற்ற வீரமணியும் மணியம்மையும் அவரது அந்திமக் காலத்தில் எப்படியெல்லாம் நடந்துகொண்டனர் என்பதை விவரிக்க மனம் துடிக்கிறதுதான். ஆனால் அதற்குத் துணிந்து சாட்சியம் சொல்லக் கூடியவர்கள் இறந்துபட்டார்கள். விடுதலையில் பணி செய்த, திருவல்லிகேணியில் ‘பராசக்தி ஏஜன்சீஸ் ‘ என்ற பெயரில் தனியாகப் பத்திரிகைகளின் முகவராய்த் தொழில் செய்த நண்பருங்கூட கதை கதையாகச் சொல்லி வருந்துவார். ஆனால் அவரும் அற்ப ஆயுளில் இறந்து போனார். ஆகையால் மரியாதைக்குரிய ஈ.வே.ரா.வின் பெயர் சொல்லிப் பிழைப்போரின் முகமூடிகளைக் கிழித்தெறியும் வாய்ப்பினை இழந்தேன். விடுதலை சம்பந்தமாவது ஈ.வே.ரா.வின் வழியில் மனதில் பட்டதைப் பேசுவதற்கு உரிய துணிவினைப் பெறுவாராயின் ஆதாரங்களுடன் அந்தச் சம்பவங்கள் பற்றிப் பேசுவது எனக்குச் சாத்தியமாகும் (சம்பந்தமாவது இருக்கிறாரா என்பதை அறியேன்).

கடலூர் கி. வீரமணி, சிறு பையனாகத் தி.க. கொள்கைகள் என்று சொல்லப்படும் துவேஷப் பிரச்சாரத்தை மனப்பாடம் செய்து மேடைகளில் ஒப்பித்து, இடஒதுக்கீடுகளுக்கெல்லாம் அவசியமின்றி ஈ.வே.ராவின் அபிமான புத்திரனாகக் கல்வி கேள்விகளில் நல்ல

வாய்ப்புகளை யெல்லாம் பெற்று முன்னுக்கு வந்தவர்தான். ஈ.வே.ரா. புண்ணியத்தில் இன்று ‘கல்வி ‘ எனப்படும் ஒரு மாபெரும் நுகர்பொருள் வியாபார சாம்ராஜ்ஜியத்தையே கட்டியாண்டு வருகிறார். தேவைப்படும் சமயங்களில் ‘தந்தை ‘ வழியில் ஆட்சியாளர் எவராயினும் அவருடன் சமரசம் செய்துகொண்டு சவுக்கியமாக இருந்துவருகிறார். ஈ.வே.ரா. பேச்சைக் கேட்டுத் தெருத் தெருவாகச் சுயமரியாதைப் பிரச்சாரம் செய்து ரத்தம் கக்கிச் செத்துப் போனவர்களுடைய சந்ததியாரின் நிலைமைதான் என்ன ஆயிற்றென்று தெரியவில்லை!

—-

malarmannan97@yahoo.co.uk

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்