ஈ.வே.ரா.: ஒரு முழுமையான பார்வை முயற்சியில்

This entry is part [part not set] of 34 in the series 20051209_Issue

மலர் மன்னன்


ஈ.வே.ரா. பற்றித் ‘திண்ணை ‘யில் எழுதியதைப் படித்துவிட்டு ஆற்றாமையோடும் ஆத்திரத்தோடும் மெயில்கள் வந்துகொண்டிருக்கின்றன. பாராட்டியும் வருகின்றனதான். ஆனால் கவனிக்கப்பட வேண்டியவை ஆற்றாமையையும் ஆத்திரத்தையும் வெளியிடுபவைதாம்.

ஈ.வே.ரா. பற்றிய எனது கருத்துகள் பி.கே.சிவக்குமார் அறிய விரும்பிய, பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஈ.வே.ராவின் ஆதரவு என்ற ஒரு கோணத்திலானவை மாத்திரமே. அவை ஈ.வே.ரா. வின் மீதான என் பார்வையை முழுமை செய்வன ஆகா.

எனக்குத் தெரிந்து, ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல், பிற சிந்தனையாளர்களின் தாக்கம் இன்றிச் சுயமாகச் சிந்தித்துக் கருத்துத் தெரிவித்த சிலருள் ஈ.வே.ரா. முக்கியமானவர். பல தடைகளையும் கடந்து ஒரு மாபெரும் சக்தியாகப் பல தலைமுறைகள், அதிலும் இயல்பாகவே தெய்வ நம்பிக்கையுள்ள மக்கள் மத்தியில் ‘நாத்திகன் ‘ என்ற முத்திரையுடன் அவரால் நடமாட முடிந்ததற்கு அவரது தயக்கங்களோ பிரமைகளோ பிறர் கருத்தை அப்படியே உள்வாங்கி வெளியிடும் கற்றுச் சொல்லி சுபாவமோ இன்றிச் சுய சிந்தனையின் அடிப்படையில் கருத்துகளைத் துணிவுடன் வெளியிட்ட தனித்தன்மைதான் காரணம். இந்த ஆரியதிராவிட சமாசாரத்தில் மட்டுமே, பிறர் கருத்தை, அது தமக்குச் சாதகமாக இருந்தமையால் அவர் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டார். இதனை இப்போதல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பே பல தனிப் பேச்சுகளின்போதும், கூட்டங்களிலும் தெரிவித்திருக்கிறேன். அவர்தான் துவேஷம் பிடித்தவராக இருந்தார் என்றால் நானும் அப்படியிருக்க வேண்டியது அவசியமா என்ன! தமிழ் நாட்டில் தோன்றிய வள்ளலார் உள்ளிட்ட பிற சிந்தனையாளர்கள் அனைவருமே ஏற்கனவே அறியப்பட்ட சிந்தனை முடிபுகளின் தாக்கம் கொண்டவர்கள்தாம். ஈ.வே.ரா. இதற்கு விதிவிலக்கு. ஹிந்து சமூகத்தைப் பிளவுபடுத்தியவர் என்று ஈ.வே.ரா. மீது நான் விமர்சனம் வைப்பதை இத்துடன் இணைத்துக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

குறிப்பாக ஈ.வே.ரா. மிகத் துணிவுடன் வெளியிட்ட ஆண்பெண் உறவு தொடர்பான கருத்துகள் எனக்கு முற்றிலும் உடன்பாடானவையே. அவை புராதன பாரத கலாசாரத்திற்கும் இசைவானவையேயாகும். புத்திர பாக்கியம் இல்லாது போகும்போது தகுதி வாய்ந்த பரபுருஷனைக் கொண்டு அதற்கான முயற்சியில் மனைவியை ஈடுபட ஊக்குவிக்கும் ஒரு சமுதாயத்தில் கற்பு என்பதாக ஒன்று கற்பிக்கப் பட்ட அவசியமேயன்றி, அது பிறழ நேர்வது அப்படியொன்றும் பதறிப்போக வேண்டிய விஷயமல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மனைவியானவளுக்குப் பர புருஷன் மீது கவர்ச்சி ஏற்படுவது சகஜம் என்பதும் புராதன பாரத சமுதாயத்தால் இயல்பாக எடுத்துக்கொள்ள முடிந்திருக்கிறது, அவ்வாறான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சகிப்புத்தன்மையில்லாத பலகீன சொந்தப் புருஷன் அதற்காக மனைவியைத் தண்டித்திருக்கிறான் என்றால் அது வேறு விஷயம். தண்டிக்காமல் இது சகஜம் என்று இருந்துவிட்டுப் போகிற விவேகிகளும் இருந்திருப்பார்கள் என்பதை ஒரு தீரத்தின் மறுதலையைப் (ஜ்யோமிதியில் வருகிற தியரம்) புரிந்துகொள்வதேபோல் புரிந்துகொள்ள வேண்டும்.

தன் எதிர்காலப் பாதுகாப்பு கருதி லவுகீகமான முன் ஜாக்கிரதையுடன் முன்னேற்பாடு செய்துகொள்ள விரும்புபவர்களுக்கேயன்றி மற்றவர்களுக்குத் திருமண பந்தம் என்பது நிஜமாகவே கால்கட்டுதான். பரஸ்பரம் எவ்வித நிர்ப்பந்தமோ சாசுவத ஒப்பந்தமோ இன்றி, விருப்பமுள்ள ஆணும் பெண்ணும் விருப்பமுள்ள காலம்வரை சேர்ந்து வாழ்வதும், அவ்வாறு சேர்ந்து வாழும் காலத்திலுங்கூட எவ்வித லவுகீக ஆதாயத்திற்குமல்லாது குற்ற உணர்வுக்கும் இடமின்றிப் பிறருடன் கூடிக் களிப்பதும் ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கையேயாகும். சாலைப் போக்குவரத்து விதிகளைப் போலவும் எளியோர் மீதான வலியாரின் அத்துமீறல்களுக்குத் தடுப்பாகவுமே காலப் போக்கில் திருமணம், குடும்பம் முதலான கட்டுப்பாடுகள் சமூகத்தில் உருவாயின என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பிறக்கும் குழந்தைகளை ஆளாக்கும் பொறுப்பு சமூகம் முழுமைக்குமானதாக ஒரு நடைமுறை இருக்குமாயின் திருமணம், குடும்பம், தன் மனைவிகுழந்தைகள் என்கிற ப்ரத்தியேக பந்த பாசம் எதற்கும் அவசியம் இல்லது போகும். அப்படியொரு உடோப்பிய சமுதாயத்தில் ஆண்பெண் இருபாலருமே எவ்விதத் தளையுமின்றித் தாம் விரும்பும் பணிகளில் ஈடுபடமுடியும். இந்தச் சிந்தனைப் போக்கை பிளேட்டோவிடமிருந்து பெறாமல் சுயமாகவே வெளியிட்டவர் ஈ.வே.ரா. என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

துரதிர்ஷ்டவசமாகக் கலவியின் பின் விளைவைப் பெண்ணானவள் மட்டுமே எதிர்கொள்ளுமாறு அவளது உடலமைப்பு உள்ளதால் கலவியை அவள் மிகுந்த முன் எச்சரிக்கையோடும் முன்னேற்பாடுகளோடும் எதிர்கொள்வது அவசியமாகிறது. அதேபோலப் பிள்ளை தேவையா இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரமும் பெண்ணிடமே இருப்பதுதான் முறையாக இருக்கும். ஈ.வே.ரா.வின் சிந்தனைத் தடம் இவ்வாறான விவேகமும் துணிவுமுள்ள முடிவுகளுக்கு நம்மை இட்டுச் செல்லும் வல்லமை வாய்ந்ததாக உள்ளது. இதற்கான அங்கீகாரத்தையும் மரியாதையையும் ஈ.வே.ரா.வுக்கு நாம் கொடுத்தேயாக வேண்டும்.

ஈ.வே.ரா.விடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய மிக அவசியமானதொரு விஷயம் பாஷையிடம் எவ்வித பலவீனமும் கொள்ளாமலிருப்பது. அவருக்கு பாஷை ஒரு கருவி என்பதற்குமேல் பெரிய பிரமை ஏதும் இருக்கவில்லை. அப்படியிருந்தும் ஹிந்தியை அவர் எதிர்த்தது ஒரு முரண்தான். ஆங்கிலத்தோடு ஹிந்தியையும் ஒரு கருவியாக மேற்கொண்டு முன்னேறுமாறு அறிவுறுத்துவதுதான் அவருடைய கோட்பாட்டிற்குப் பொருத்தமாக இருந்திருக்கும். துணிவுக்குப் பெயர்பெற்ற அவர் ஹிந்திக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்திருந்தால் பல தலைமுறைத் தமிழர்கள் அகில பாரத அடிப்படையில் பெரும் சக்தியாக உருவெடுக்க முடிந்திருக்கும். தமிழ் நாட்டில் முதன்முதலில் ஹிந்திக்கு வழியமைத்துக் கொடுத்தது ஈ.வே.ரா.தான் என்பது எத்தனைபேருக்குத் தெரியும்ஹ ஈரோட்டில் ஹிந்தி வகுப்பு நடைபெறக் கடந்த நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஏற்பாடு செய்தவர் ஈ.வே.ரா.தான்.

ஈ.வே.ரா. மேடைப் பேச்சில் வெகு சமர்த்தர். மணிக்கணக்கில் ஆயாசமின்றிப் பேசுவார். ஒரு கருத்திலிருந்து மறு கருத்துக்குக் கேட்பவர் உணராதவாறு லாகவமாகத் தாவுவார். அலுப்பு சலிப்பில்லாமல் அவர் பேசுவதை நாமும் அவ்வாறே சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருக்கலாம். அவர் திட்டும்போதுகூடக் கேட்பவர்களுக்குக் கோபம் வராதது ஒரு ஆச்சரியம். அவரும் கல் வீச்சு. அழுகல் முட்டை வீச்சு ஆகியவற்றை எதிர்கொண்டவர்தாம். ஆனால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அத்தகைய தாக்குதல்கள் நின்றுவிட்டன. ஜோடனைகள் இன்றி நேரடியாக எழும் இயற்கையான, சொற்களைத் தேடி நிரப்பாத பேச்சின் காரணமாகவே அது மிக சக்திவாய்ந்ததாகவும் கேட்பதற்குச் சலிப்பூட்டுவதாக இல்லாமலும் இருந்தது(ஆனால் இன்றைய கணினி யுகத்திற்கு அம்மாதிரியானா விஸ்தாரப் பேச்செல்லாம் ஒத்துவராதுதான்).

இதேபோல ஈ.வே.ரா.வின் எழுத்து உரைநடையும் எவ்வித வெளித் தாக்கங்களும் இன்றி அவரது சுய வெளிப்பாடாக அமைந்து அதன் காரணமாகவே வசீகரமான தனிதன்மையுடன் விளங்கியது.

பல வருஷங்களுக்குமுன் ஒருமுறை மத்திய அரசு வெளியீடான ‘ திட்டம் ‘ மாத இதழின் அலுவலகத்தில் அப்போதைய ஆசிரியர் சொக்கு சுப்பிரமணியனின் அறையில் நான்,

சா. கந்தசாமி, புதுச்சேரியிலிருந்து வந்திருந்த காரை சிபி ஆகியோர் பேசிக்

கொண்டிருந்தபோது, அண்ணாவின் தமிழ் உள்ளே புக முடியாமல் தடுப்பதும் சலிப்பூட்டுவதுமாகும், ஆனால் ஈ.வே.ரா. வின் தமிழ் சுயமானதும் படிக்கச் சுவாரசியமானதும் ஆகும் என்று நான் சொன்னதை கந்தசாமி முழுமனதோடு உடனே ஆமோதித்தார். மற்றவர்கள் விக்கித்துப் போனார்கள் (சொக்கு சுப்பிரமணியன் ‘திட்டம் ‘ இதழின் ஒவ்வொரு மாதமும் மிகப் பிடிவாதமாக அட்டைக்கு ஆதிமூலத்தை விட்டுச் சித்திரம் வரையச் செய்தவர். அவர் பணிமாற்றலாகி அந்த இடத்திற்கு சு. சமுத்திரம் வந்ததும் ஆதிமூலத்தின் அருமையான சித்திரங்களை ஏந்திவரும் பெருமையினை ‘திட்டம் ‘ இழந்தது. கணையாழியில் நான் எழுதிய ‘அற்ப ஜீவிகள் ‘என்ற சிறுகதையை அந்த மாதச் சிறந்த சிறுகதையாக இலக்கியச் சிந்தனைக் கூட்டத்தில் தேர்வு செய்தவரும் சொக்கு சுப்பிரமணியன்தான். பிற்பாடு அச் சிறுகதையை1979ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக 1980ல் பி. எஸ். ராமையா இலக்கியச் சிந்தனையின் ஆண்டு விழாக் கூட்டத்தில் தேர்வு செய்தார். கூட்டத்திற்கு வந்திருந்த கோமல் ஆச்சரியப் பட்டார்: ‘ராமையாவின் ரசனைக்கு அவர் ஏதேனும் குடும்ப உறவுச் சிக்கல் சம்பந்தமான கதையைத்தான் தேர்வு செய்திருக்க வேண்டும். ஒருவேளை வயதின் முதிர்ச்சியால் ‘அற்ப ஜீவிகள் ‘ அவரை அதிகம் பாதிப்படையச் செய்திருக்கும்! ‘ இந்த அற்ப ஜீவிகளைத்தான் திண்ணையில் பாவண்ணனும் தமக்குப் பிடித்த சிறுகதைகளின் வரிசையில் ஒன்றாக வித்தியாசமான முறையில் விரிவாக மதிப்பீடு செய்திருந்தார். அவரது மதிப்பீடுகளின் தொகுப்பும் பிறகு காலச் சுவடு வெளியீடாக 2004ல் வெளியானது).

குறுக்கீடுகளான இச்செய்திகளையெல்லாம் வேண்டுமென்றேதான் திணிக்கிறேன். திசைமாறிப் போவதால் அல்ல. ஏனெனில் எப்பொழுதேனும் எவருக்கேனும் இத்தகவல்கள் ஆய்வுக்கான சான்றுகளாகப் பயன்படக் கூடும்.

ஈ.வே.ரா. பற்றிச் சிலாகித்துப் பேசுவதற்கு இன்னும் பல விஷயங்கள் இருக்கவே செய்கின்றன. பொதுப் பணத்தைக் கையாள்வதில் இருந்த பொறுப்புணர்ச்சி, வயதில் மிக இளையவர்களையும் தனிப்பட்ட சந்திப்புகளின்போது மிகுந்த மரியாதையுடன் நடத்துவது, பொது இடத்தில், பொது நிகழ்ச்சிகளில் மற்றவர்களுடன் பங்கேற்கும்போது தமக்கு ஒத்துவராததாக ஏதும் நடந்தாலும் கண்ணியத்துடன் அதற்கு அனுசரித்துப் போவது, தமது கருத்தை இடம், பொருள், ஏவல் தெரியாமல் ஜம்பமாகப் பேசுவதைத் தவிர்ப்பது, இவையெல்லாம் அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒழுக்கங்கள். ஈ.வே.ரா மற்றவர்களும் கலந்துகொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கையில் பிறர் மனம் புண்பட நடந்தறியார். புண்படுத்துவதற்கு அவர் தமது தனிக் கச்சேரிகளைத்தான் பயன்படுத்திக் கொள்வார்.

ஒரு சுவையான சம்பவத்தையும் பதிவு செய்துவிடுகிறேன்:

சென்னை சிந்தாதிரிப்பேடை மீரான் சாகிபு தெருவில் ஈ.வே.ரா.வை என் வாழ்நாளில் ஒரேமுறையாகச் சந்தித்த சமயம் என்னைச் சிறு பையன் என்றே சொல்லலாம். அப்படியிருந்தும், ‘வாங்கையா ‘ என்று வாய்நிறைய வரவேற்று, ‘இருங்கையா ‘ என்று உட்காரவைத்து, ‘என்ன சாப்பிடுவீங்க ‘ என்று உபசாரம் செய்து கூடவே ‘தம்பி என்ன ஜாதிஹ ‘ என்றும் மெதுவாகக் கேட்டறிந்து, அதன் பிறகே சம்பாஷணையைத் தொடங்கினார். தேசத் துரோகத்தின் உச்ச கட்டமாகத் தேசியக் கொடியை எரிக்கும் போராட்டத்தை அவர் அறிவித்திருந்த சமயம் அது. அப்படியொரு போராட்டம் நடந்தால் அது திராவிடக் கழகத்தினர் நீங்கலாக மக்கள் அனைவர் மனதிலும் ஆறாத ரணமாகத் தங்கி விடும் என்று பேச்சுவாக்கில் சொன்னேன் அதைச் சொல்வதற்காக நான் போகவில்லை என்றாலும். நான் சொன்னதை ‘அப்படியா ‘ என்று அவர் கேட்டுக் கொண்டாரேயன்றி ‘இதைச் சொல்லத்தான் வந்தாயா ‘ என்று அதட்டல் போடவில்லை. நான் அவரிடம் சென்றது ‘தினத் தந்தி ‘க்காக ஆதித்தன் (ஆர் விகுதியெல்லாம் பிற்பாடு ஒட்டிக்கொண்ட சமாசாரம்!) சோதனை ஓட்டமாக என்னை அனுப்பியதால் கிடைத்த வாய்ப்பு (அந்தச் சோதனையோட்ட நிருபர் வேலை அந்த ஒரு ‘அஸைன்மென்டோ ‘டு முற்றுப் பெ ற்றுவிட்டது. ‘தினத் தந்தி ‘யின் பாணிக்கு நான் சரிப்பட மாட்டேன் என்பது ஆதித்தனால் அந்த ஒரே அஸைன்மென்டில் முடிவு செய்யப்பட்டது! எனக்கும் அதில் முழு உடன்பாடே, ஏமாற்றமில்லை! அந்த ஒரு நாள் வேலைக்கு எனக்கு பஸ் சார்ஜுக்காகவும் ஒரு வேளை டிபனுக்காகவும் பெரிய மனது பண்ணி இரண்டரை ரூபாய் கொடுத்தார்கள்! அய்ம்பது காசுக்கு ஒரு தரமான ஹோட்டலில் சாப்பாடே சாப்பிட முடிகிற காலம். காபி இரண்டணா, இரண்டு இட்லி சாம்பார் இரண்டணா, பசியடங்கவில்லையெனில் மேலும் ஒரு மசால் தோசை நாலணா என்று எட்டணாவில் காலைப் பலகாரத்தை முடித்துக்கொள்ள முடிகிற காலம். ஒரு ரூபாய்க்குள் இனிப்பு, காரம், காபி என்று கொண்டாடிவிடலாம். பஸ் கட்டணங்களோ அரையணா, முக்காலணா, ஒரணா, இரண்டணா சமாசாரங்கள்தான். ஆனால் சமயங்களில் அது கூட இல்லாமலோ அல்லது மிச்சம் பிடித்துவைக்கவோ நடந்தே செல்வதுண்டு! ).

அந்தச் சந்திப்பின்போது ஈ..வே.ரா.வின் குண நலனைப் புலப்படுத்தும் இன்னொரு சுவையான சம்பாஷணையும் நடந்தது. நான் விடைபெற்றுப் புறப்படுகையில், ‘ ‘தம்பி, நீங்க உங்க ஆதித்தனோட தைரியமாப் பேசறதுண்டா ? ‘ ‘ என்று கேட்டார், ஈ.வே.ரா.

‘ ‘எதுக்காகக் கேக்கறீங்க அய்யா ? ‘ ‘ என்றேன். அன்றைக்குத்தான் வேலைக்குச் சேர்ந்து, சோதனை ஓட்டமாக வந்திருக்கிற கற்றுக்குட்டி நிருபன் ( கப் ரிப்போர்ட்டர்) என்று சொல்லிக்கொள்ள என் சுயகவுரவம் இடங்கொடுக்கவில்லை. இள வயது அல்லவாஹ இப்போதென்றால், ‘ ‘ அய்யா, நான் வெறும் பயலுங்க. இப்பத்தான் உள்ளற நுழைஞ்சிருக்

கேனுங்க; அவர் எதிர நிக்கவே கொஞ்சம் தயார் பண்ணிக்க வேண்டிய ஆளுங்க நானு ‘ ‘ என்று கூச்சப்படாமல் கூறியிருப்பேன்!

‘ ‘ நானு சொல்லுறதை அப்பிடியே உங்க ஆதித்தங் கிட்டப் போயி சொல்லுவீங்களா ? ‘ ‘

ஒவ்வொரு முறையும் ‘உங்க ‘ என்பதை மிகவும் அழுத்தமாக உச்சரித்தார். ஆனால் அதில் தொனித்த சினம் அப்போது உறைக்கவில்லை.

‘ ‘ என்ன சொல்லணும் அய்யா ? ‘ ‘ அவர் ஏதோ தகவல் சொல்லிவிடப் போகிறார், அதனை எடுத்துப் போய்த் தெரிவிப்பதன் மூலம் எனக்கு ஒரு முக்கியத்துவம் ஆதித்தன் மனதில் உருவாகிவிடும் என்று உள்ளூர மகிழ்ந்தேன்.

‘ ‘இப்பிடியொரு பத்திரிகை நடத்துறதைவிட ஆந்திராவிலேருந்தும் கேரளாலேருந்தும் நாலஞ்சு குட்டிங்களக் கொண்ணாந்து வெச்சுக் கிட்டுத் தொழில் பண்ணிப் பொழைக்கலாம்னு நான் சொன்னதா அவர் கிட்டப் போயிச் சொல்லுங்க ‘ ‘ என்றார் ஈ.வே.ரா.

ஈ..வே.ரா எதனால் அப்படிச் சொல்ல நேர்ந்தது என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

ஏதோ வழக்கிற்காக மணியம்மை ஒரு நீதிமன்றத்திற்கு வந்தது பற்றிய செய்தி முதல் நாள் தினத் தந்தியில் வெளியாகியிருந்தது. அதில், ‘மணியம்மை கருப்பு ஜாக்கெட்டும் கருப்புச் சேலையும் அணிந்து வந்திருந்தாள் ‘ என்று குறிப்பிட்டிருந்தார்கள். கவனியுங்கள், ‘ ‘ர் ‘ ‘ அல்ல, ‘ ‘ள். ‘ ‘ அந்த நாளில் எந்தப் பெண்மணியாக இருந்தாலும் கூசாமல் ‘ ‘அவள் ‘ ‘ என்றுதான் தினத் தந்தியில் எழுதுவார்கள். அதேபோல் எந்தப் பெண்மணியைப் பற்றி எழுதுவதானாலும் அவரது உடையலங்காரம் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். இவையெல்லாம் ஆதித்தன் தன் ஆசிரியப் பிரிவினருக்கு விதித்திருந்த நிலைத்த நடைமுறை விதிகள்! இப்போதெல்லாம் ‘ஸ்டைல் ஷீட் ‘ என்று சொல்கிறோமே, அது மாதிரி!

மணியம்மை பற்றிய செய்தி வந்திருந்த விதம் காரணமாக உண்டான எரிச்சலில்தான் ஈ.வே.ரா. அவ்வாறு கூறினார். பின்னாளில் ப்ரெஸ் ரூம் அரட்டையின்போது இதனை சக நிருபர்கள் அனைவரிடமும் நான் சொல்லப் போக, நாளடைவில் அவரவரும் அச் சம்பவத்தைத் தமது அனுபவமாகவே சொல்லி மகிழலானார்கள். நிருபர்கள் வட்டாரத்தில் இது சகஜம்தான். இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயமும் உள்ளது.

பத்திரிகையின் மீது தமக்கு உள்ள எரிச்சலை வந்திருக்கும் அதன் நிருபர் மீது அனைவர் முன்பாகவும் காட்டிச் சிறுமைப் படுத்துவது கருணாநிதி போன்றவர்களின் சுபாவம். ஆனால்

ஈ.வே.ரா. அவ்வாறு என்னிடம் நடந்துகொள்ளவில்லை.

பின்னாளில் ஹிந்து முன்னணி கோபால்ஜியிடம் (ஸ்ரீ ராம கோபாலன்) தனியாகப் பேசுகையில், ‘ ‘ காந்தியை நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதைப் போல ஈ.வே.ரா. வையும் விட்டுவிடலாம். அதன் மூலம் ஹிந்துக்கள் மத்தியிலிருந்து இந்த பிராமணர்பிராமணர் அல்லாதார் பிளவைக் கொஞ்சங் கொஞ்சமாக அகற்றிவிடலாம் ‘ ‘ என்று சொன்னேன்.

ஏனெனில், ஈ.வே.ராவை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள விரும்பாத பிராமணர் அல்லாதாரிடையேகூட, ஈ.வே. ரா.வால்தான் தமது சமூக அந்தஸ்து உயர்ந்திருப்பதாகவும், கல்வி, அரசுப் பணிகளில் வாய்ப்ப்பும், பதவி உயர்வும் தமக்குச் சாத்தியமாகியிருப்பதாகவும் ஓரு தவறான எண்ணம் ஆழமாகப் பதிந்துபோய்விட்டிருக்கிறது. அதன் காரணமாக அவர்களுக்கு அவர்மீது ஓர் அபிமானமும் உருவாகியுள்ளது (ஏதோ ஈ.வே.ரா.தான் துணிமணி எடுத்துக் கொடுத்து, தையற்காரரிடம் அளவும், கூலியும் கொடுத்த மாதிரி, ‘ ‘இண்ணிக்கி நாம எல்லாம் சட்டைபோடறம்னா அதுக்குப் பெரியார்தான் காரணம் ‘ ‘ என்று தி.க., தி.மு.க. வகையறா பேச்சாளர்கள் பலர் மேடையில் பேசக் கேட்டிருக்கிறேன். அப்பாவித் தமிழர்களும் அதைக் கேட்டுத் தலையை ஆட்டிக்கொண்டிருப்பார்கள்! ஈ.வே.ரா.வுக்கு பிராமணர் மற்றும் தலித் அல்லாத பிற ஜாதியினரைக் கடைத்தேற்றுவதைவிட, பிராமணர்களை நசுக்குவதில்தான் சொந்தக் கோபதாபங் காரணாமாக ஆர்வம் அதிகமிருந்தது என்பதை அவர்கள் அறியார் ). ஈ.வே.ரா.வின் இவ்வாறான பிம்பத்தை அவ்வளவு எளிதில் தகர்க்க முடியாது. அதற்கு பதில் சமரசம் செய்துகொண்டுபோய்விடலாம் என்பது என் அபிப்பிராயம். மேலும், ஈ.வே.ரா.வைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம் என்று நான் கூறியதற்கு இன்னொரு சந்தேகத்தின் பலனை அவருக்குக் கொடுக்கத்தக்க காரணமும் இருந்தது.

ஒருமுறை நாகை பாட்சா என்கிற முகமதிய தி.க. பேச்சாளர் ஹிந்து சமய நம்பிக்கைகளைக் கிண்டல் செய்து பேசத் தொடங்கியபோது மேடையிலிருந்த ஈ.வே.ரா. உடனே குறுக்கிட்டு ‘ ‘அதையெல்லாம் பேச நாங்க இருக்கிறோம். நீங்க உங்க மதத்தில இருக்கிற கோளாறுங்களப் பத்தித்தான் பேசணும் ‘ ‘ என்றார், கடுமையாக. இப்படியொரு விவேகமும் ஈ.வே.ரா.வுக்கு இருந்ததை கோபால்ஜியிடம் குறிப்பிட்டு, இதற்காகவே அவரைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம், அதன் பயனாக பிராமணர் அல்லாதார் பலரையும் ஹிந்து முன்னணியின் பக்கம் வரவழைத்துவிடலாம் என்று சொன்னேன். அதே சமயம் பல்வேறு சமயங்களில் ஈ.வே.ரா. முகமதிய சமயத்தைப் பெரிதும் சிலாகித்துப் பேசியிருப்பதையும் அறிந்துள்ளேன்.

வரலாற்றுப் பார்வையோ, எதிர்கால தேசநலன் பற்றிய கவலையோ கலாசார அக்கரையோ, சிந்தனா சுதந்திரத்திற்கு பங்கம் விளையக் கூடும் என்ற விழிப்புணர்வோ சிறிதுமின்றி முகமதிய மதத்திற்குச் சாதகமான மதமாற்றத்தைக் கூட அவர் ஒருமுறைபரிந்துரைத்ததாக ஞாபகம். ஈ.வே.ரா.வுக்கு இவையெல்லாம் உறைக்காமல் போனதில் எனக்கு வியப்பு இல்லை. ஹிரணியனுக்கு எப்போதும் ஸ்ரீமந் நாராயணன் நினைவாகவே இருந்ததுபோல அவருக்கு எந்நேரமும் ‘ ‘பார்ப்பான் ‘ ‘ ஞாபகம். ஆனால் எதையும் ஆராய்ந்து அலசுவதில் சமர்த்தர்கள் என்று தம்மைச் சிலாகித்துக்கொள்ளும் நம் நாட்டு ‘ஏர் கண்டிஷன் அறை, ஸ்காட்ச் விஸ்கி ‘ இடதுசாரிகளுக்கும் அல்லவா இதுபற்றிய பிரக்ஞையே இல்லாது போயிருக்கிறது!

எந்த இஸ்லாமிய தேசத்திலாவது இடது சாரிகள் நடமாட்டமோ அவர்கள் தைரியமாகத் தம் கருத்தைப் பேசுவதற்கான அனுமதியோ இருப்பதாகக் கூறமுடியுமாஹ மதச்சார்பின்மை என்கிற நடைமுறையும், கருத்தை வெளியிடும் சுதந்திரமும் பாரதத்தில் ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக இருக்கும்வரைதான் செல்லுபடியாகும் என்கிற சாமானிய அறிவுகூட அவர்களுக்கு இல்லாமற் போவானேன் ? வங்க தேசத்தில் முஜீப் மதச்சார்பின்மை என்பதை வாயளவில்கூட அனுசரிக்கமுடியாமற் போன வயணம் என்ன ? மாஸ்கோ, பீஜிங் எல்லாம் போக நம் தேசத்து இடதுசாரிகளுக்குக் கூடுதலாக ரியாதும் வந்து சேர்ந்துகொண்ட விசித்திரம் என்ன ? ஒருவேளை மாஸ்கோ கைவிட்டுப் போனதால் ‘ ‘வாலு போச்சு கத்தி வந்தது ‘ ‘ என்கிற கதையாக ரியாது கிடைத்திருக்கிறதா ? ஒருவேளை காலங்கடந்தபின் சுய பரிசீலனை செய்துகொண்டு ‘ ‘ வரலாற்றுப் பிழை செய்துவிட்டோம் ‘ ‘ என்று ரகசியத் தீர்மானம் நிறைவேற்றிக் கொள்வார்களாயிருக்கும். பகிரங்க நடமாட்டந்தான் நின்றுபோய் விட்டிருக்குமே அப்போது அவர்களுக்கு (நாத்திகம் பேசி நாத்தழும்பேறிய தி.க.வினர் கதியும் அதுதான்! இன்று ஊருக்கு ஊர் நின்ற கோலமும் அமர்ந்த கோலமுமாயிருக்கும் ஈ.வே. ரா.வின் சிலைக்குத்தான் முதலில் உலை வைக்கப்படும்! ‘ ‘எங்கள் தலைவர் ஹிந்துக் கடவுளைத்தான் இல்லவே இல்லை என்று சொன்னார் ‘ ‘என மன்றாடினாலும் பலன் இருக்காது!)!

இடதுசாரி சிந்தனையாளன், சிறந்த படைப்பாளி சாதத் ஹாசன் மான்டோ பாரதத்தைவிட்டு பாகிஸ்தானுக்குப் போய்ப் பட்ட அவஸ்தைகள் தெரியுமா நம்மூர் இடதுசாரிகளுக்குஹ இதில் இடதுசாரி சிந்தனையாளர்கள் என்கிற தற்பெருமை வேறு!

ஈ.வே.ரா. பிளவுபடுத்தும் சக்தியாக இராமல், காலாவதியாகிப்போன சடங்காசாரங்களை நல்லெண்ணத்துடன் விமர்சிப்பவராகவும் தேசப்பிரிவினைக்குத் தூண்டாதவராகவும் இருந்திருப்பின், அவரை ஆரிய சமாஜம் நிறுவிய சுவாமி தயானந்த சரஸ்வதிக்கு இணையான சீர்திருத்தவாதியாகவே ஹிந்து சமயமும் சமூகமும் மகிழ்வுடன் ஏற்றிருக்கக் கூடும். ஏனென்றால் பெருந்தன்மையும், எதையும் எதிர்கொள்ளும் திராணியும் உள்ளவை

ஹிந்து சமயமும் சமூகமும்!


Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்