இரா முருகன்
பிரதமர் டோனி பிளேய்ர் அவருடைய ஆட்சிக்காலத்திலே முதல் தடவையாக பிரிட்டாஷ் காமன்ஸ் அவையான நாடாளுமன்றத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறார். தீவிரவாதத்துக்காகக் கைது செய்யப்பட்டவர்களைக் காரணம் காட்டாமல் ஆறு மாதகாலம் காவலில் வைக்க வழிசெய்ய அரசாங்கம் கொண்டு வந்த மசோதா தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.
எலிசபெத் மகாராணியை ‘முதல் இஸ்லாமிய விரோதி ‘ என்று அல் க்வய்தா அறிவித்தது, பிரான்சில் இரண்டாம் தரக் குடிமக்களான சிறுபான்மையினரின் கலவரம் பதினேழு நாளாகத் தொடர்வது என்று காரணங்களை அடுக்கி மசோதாவைச் சட்டமாக்க மீண்டும் அவர் முயற்சி செய்யலாம்.
பத்திரிகைகளும் தொலைக்காட்சி சேனல்களும் ப்ளேயரின் தோல்வியைப் பற்றி விரிவாக விவாதிக்க, ஸ்காட்லாந்தில் யாரும் அதையெல்லாம் குறித்துக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. குளிர்காலம் இன்னும் வராமல் போக்குக் காட்டிக்கொண்டிருப்பது தான் பொதுவான பேச்சு விஷயமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு ஏழு டிகிரி செல்சியஸ், அடுத்த நாள் நல்ல மழை, மூன்றாம் நாள் சூறாவளிக் காற்று, நாலாம் நாள் பளிச்சென்று இளம் வெய்யில் என்று காலநிலை குஷியாக மாறிக்கொண்டிருக்கிறதில் இருக்கிற சுவாரசியத்தைப் பலரும் கண்டுகொள்வதில்லை என்பதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான்.
கில்மோர் தெருவில் பச்சை மிளகாய், படேகர் ஊறுகாய், இந்தி, உருது சினிமா காசெட் மற்றும் பலசரக்கு விற்கும் கடை வைத்திருக்கும் பாகிஸ்தானி நண்பர் உருளைக் கிழங்கு போண்டாவையும் சமோசாவையும் எனக்காக மைக்ரொ அவனில் சூடு படுத்திக்கொண்டே பிளேய்ர், புஷ் மற்றும் உலக அரசியல் தலைவர்களை வன்மையாகக் கண்டிக்கிறார். பாகிஸ்தான் பூகம்ப நிவாரணத்துக்கு உதவி செய்யாமல் இந்த கனவான்கள் கையை இழுத்துக் கொண்டதால் லட்சக் கணக்கில் அங்கே மக்கள் இன்னும் இறப்பது உறுதி என்கிறார் அவர். கடை உண்டியலில் ஒரு பவுண்ட் போட்டு அவர் மன்மோகன்சிங்கைத் திட்டுவதை இப்போதைக்கு நிறுத்தி வைத்தேன்.
டால்ரி தெருவை ஒட்டி கால்டேனியன் தெருவில் அறுநூறு பவுண்ட் வாடகைக்கு வீடு பார்த்தேன். ‘அங்கேயா ? போதை மாத்திரை உபயோகிக்கிறவர்கள் நிறைய உண்டேப்பா. டால்ரி தெருவுக்குத் தெற்கே தோப்புத் தெருவில் வீடு ஏகத்துக்குக் கிடைக்குது. போய்ப்பாரு ‘ என்றார் டாக்சி டிரைவர். கால்டேனியன் தெருவுக்கும் குரோவ் தெருவுக்கும் நடுவே நூறு மீட்டர் கூடத் தொலைவு இருக்காது. டிரக் அடிக்டுகள் எந்த சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு நூறு அடி தாண்டி இந்தாண்டை வருவதில்லை என்பது புரியவில்லை.
எடின்பரோ தெருக்களில் சுமார் பரபரப்பு போக்குவரத்துக்கு நடுவில் டிராபிக் சிக்னலைத் துச்சமாக மதித்து மக்கள் இஷ்டத்துக்குக் குறுக்கும் நெடுக்கும் சாலையைக் கடப்பது நம்ம ஊர் மாதிரித்தான் இருக்கிறது. நேற்று நாலு ஒட்டடைக் குச்சி இளைஞர்கள் சைக்கிளை ஓட்டிக்கொண்டு பிரின்சஸ் தெருவில் குறுக்கே பாய, ப்ரேக் பிடித்து நிறுத்திய பஸ் டிரைவர் சத்தம் இல்லாமல் சாவு கிராக்கி என்று ஆங்கிலத்தில் சொன்னது பஸ் கண்ணாடி தாண்டி எனக்கு அர்த்தமானது.
லோத்தியன் தெரு சினிமா தியேட்டர்களில் இங்கிலீஷ் சினிமா பார்க்க வரும் கூட்டம் பாதிக்கு மேல் சீனர்கள் தான். ரோமன் போலன்ஸ்கியின் புதுப்படமான ‘ஆலிவர் ட்விஸ்ட் ‘ போஸ்டரைப் பார்த்து ஓடியன் தியேட்டரில் நுழைய படம் தியேட்டரை விட்டுப் போயாச்சாம். ‘மிசஸ் ஹெண்டர்சன் பிரசண்ட்ஸ்” படம் பரபரப்பாக எதிர்பார்க்கப் படுகிறது. 1930-களில் தொடங்கி, இரண்டாம் உலக யுத்தம் முடிந்து அப்புறமும் லண்டனில் தொடர்ந்த முழு நிர்வாண நாடகத்தின் திரைப்பதிப்பு இது. ‘நக்னமான பெண் உடலைக் காண் வாய்ப்புக் கிடைக்காமல் யுத்தத்தில் எத்தனையோ இளைஞர்கள் இறந்து போகிறார்களே ‘ என்று வருந்தி அவர்களுக்காகத் தினசரி நடத்தப்பட்டதாம் இந்த நாடகம். அந்தக் காலத்தில் கடுமையாக இருந்த சென்சார்கள் கூட, ‘நிர்வாணமாக ஆடினால்தான் குற்றம். அப்படியே அசையாமல் நின்றால் ஆட்சேபம் இல்லை ‘ என்று சொல்லிவிட்டதால் இந்த நாடகத்தில் அசையாப் பாத்திரங்கள் தான் அதிகம் என்று தெரிகிறது. படம் பார்த்துவிட்டு மீதியைச் சொல்கிறேன்.
எடின்ப்ரோ கோட்டை வரை போகும் லோத்தியன் தெருவில் நிறைய நாடகக் கொட்டகைகளும் உண்டு. அடுத்த மாதம் ‘நட் கிராக்கர் ‘ போன்ற ராயல் பர்மிங்ஹாம் ஆபரா இசைநாடகங்கள் வருவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். வீட்டுக்கு நேர் எதிர் கிங் தியேட்டரில் ஷேக்ஸ்பியரின் ‘ட்வல்ஃத் நைட் ‘ பார்க்க என்னமோ சுவாரசியம் இல்லை. கல்லூரியில் எந்தக் காலத்திலோ கரைத்துப் போட்டிய ட்வல்ஃத் நைட்டே இன்னும் முழுக்க சீரணமாகாமல் எதுக்களிக்கிறது.
லோத்தியன் தெருவில் ‘1853ம் வருடம் முதல் நடக்கும் ‘ வர்த்தக நிறுவனங்களில் என் கவனத்தை ஈர்த்தது சவ அடக்கம் நடத்த ஏற்பாடு செய்யும் அண்டர்டேக்கர் கடை. கடை ஜன்னலில் கலர் கலராக விளம்பரப் புத்தகங்கள். ‘நாலு தினுசான சவ அடக்கத் திட்டங்கள், ‘கல்லறை எழுப்ப எட்டு அழகான அமைப்புகள், ‘சவ அடக்கத்துக்கான சேமிப்புத் திட்டம் ‘, ‘லிமோசின் டாக்சியில், சீருடை அணிந்த டிரைவர் ஓட்டிப் போகும் சொகுசு வசதி ‘ என்று ஆசை காட்டி அழைக்கின்றன இவை. இதில் என் ஓட்டு ‘நாளைய சவ அடக்கம் இன்றைய கட்டணத்தில் ‘ (Tomorrow ‘s funeral at today ‘s rates ‘) விளம்பரத்துக்குத்தான். அரை இருட்டில் மிதந்த கடைக்குள் எட்டிப் பார்த்தேன். இரண்டு சவப் பெட்டிகளுக்கு நடுவே, சின்னக் கண்ணாடியை முகத்துக்கு நேரே பிடித்து உதட்டில் லிப்ஸ்டிக்கை சரிப்படுத்திக் கொண்டு நின்ற இளம்பெண் மனதை விட்டுப் போகமாட்டேன் என்று இன்னும் அங்கேயே நிற்கிறாள்.
எடின்ப்ரோ கோட்டையில் எட்டு மணி நேரம் சுற்றிவந்ததை அடுத்த வாரம் தான் எழுத வேண்டும்.
—-
- பெரிய புராணம் – 65
- கடிதம்
- சுந்தர ராமசாமி நினைவரங்கு
- கடிதம்
- பெங்களூரில் சுந்தர ராமசாமி நினைவு அஞ்சலிக் கூட்டம்
- மலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கிய மாநாடு
- கடிதம்:
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – VI
- சுந்தர ராமசாமி : நினைவின் நதியில்
- ஆறு வாரத்தில் அருமையான உடல்நலம்
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்றக் கட்டடக் கலைச் சிற்பப் படைப்புகள் -7
- இமைகள் உரியும் வரை….
- கீதாஞ்சலி (49) ஒளியின் நர்த்தனம்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- சிறுவட்டம் தாண்டி….
- நான் நான் நான்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஏழாம் காட்சி பாகம்-4)
- நான் காத்திருக்கிறேனடி
- உனக்காகப் பாடுகிற குருவி
- இவ்வாறாக, நான் நூலகர் ஆகிப்போனேன்!
- தனியார் மற்றும் உலகமயமாதலும், இந்திய கலாச்சார, தேசிய பாதுகாப்பு, அரசியல் ஸ்திரதன்மை பின்னடைவுகளும்
- தமிழ் விடுதலை ஆகட்டும்!
- எடின்பரோ குறிப்புகள் – 2
- போட்லாட்ச் (பெரு விருந்து) (potlatch) (அந்தஸ்துக்கான போட்டி) – 1
- மதமாற்ற எண்ணங்களின் மாற்றம்
- நாயகனும் சர்க்காரும்..
- சிந்து மாநிலத்தில் மொழி பிரச்னை
- ஒரு உரையாடலும், சில குறிப்புகளும் -1
- ‘சொல்’’
- கோ பு ர ம் மா று ம் பொ ம் மை க ள்
- ஃபிரெஞ்ச் மொழிக்கதை – அசப்பில் நீயொரு நடிகை
- எம். கோபாலகிருஷ்ணனின் ‘மணற்கடிகை ‘ – காலத்தின் பரமபத விளையாட்டு