இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அவமான விதிகள்

This entry is part [part not set] of 26 in the series 20050722_Issue

சல்மான் ருஷ்டி (தமிழில்: ஆசாரகீனன்)


இந்தியா, பாகிஸ்தான் போன்ற குலப்பெருமை மற்றும் அவமானம் (honor-and-shame) ஆகியவற்றை முதன்மைப்படுத்தும் பண்பாடுகளில், ஆணின் கெளரவமானது பெண்களின் பால்-ஒழுக்கத்தைச் சார்ந்தே அமைகிறது. மேலும், பெண்கள் ‘மானபங்கப்படுவது ‘ எல்லா ஆண்களின் கெளரவத்தையும் குறைத்துவிடுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன் முக்தர் மாய் என்ற ஒரு கிராமப் பெண்ணைக் கற்பழித்த, பாகிஸ்தானில் செல்வாக்கு மிக்க மாஸ்டோய் என்னும் பழங்குடியைச் சார்ந்த ஐந்து ஆண்கள் எந்த தண்டனையும் இல்லாமல் விடுவிக்கப்பட்ட வெட்ககரமான நிகழ்வு இத்தகையதே. மாஸ்டோய் இனக் குழுவைச் சார்ந்த ஒரு பெண்ணுடன் சேர்ந்து காணப்பட்ட முக்தரின் உறவினர் ஒருவரைத் தண்டிப்பதற்காக நடத்தப்பட்டதே இந்த ‘மானம் காக்கும் கற்பழிப்பு ‘. இப்போது குற்றவாளிகளின் விடுதலையைப் பாகிஸ்தானின் உச்ச நீதி மன்றம் ரத்து செய்துள்ளதன் மூலம், இந்தத் துணிச்சல் மிக்க பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஏதோ ஓர் இழப்பீடு கிடைத்துள்ளது.

ஆனால், இதற்காகப் பாகிஸ்தான் ஒரேயடியாகப் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. கடந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் 320 கற்பழிப்புகளும், அதே காலகட்டத்தில் 350 கூட்டுக் கற்பழிப்புகளும் நடந்துள்ளதாக பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையம் தெரிவிக்கிறது. வெளியில் சொல்லப்படாத கற்பழிப்புகளின் எண்ணிக்கை இவற்றை விட மிகவும் அதிகம் என நம்பப்படுகிறது. வெளியே தெரிந்த சம்பவங்களிலும் கூட பாதிக்கப்பட்டவர்களுள் மூன்றில் ஒரு பகுதியினரே நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தினர். 39 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர். பழங்குடித் தகராறுகளைத் தீர்த்துக் கொள்ள கற்பழிப்பது என்பது சாதாரணமாக ஏற்கப்பட்டு விட்ட தீர்வாகவே ஆகிவிட்டது எனலாம். தற்கொலை செய்துகொள்வதே கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்குச் சாத்தியமான சிறந்த வழி என்னும் நம்பிக்கை பரவலாகவும் ஆழமானவும் பதிந்திருக்கிறது.

முக்தர் மாயைப் போல மன உறுதி உள்ளவராக ஒரு பெண் இருந்தால், தற்கொலை செய்து கொள்பவர்களோ பல டஜன் பேராவது இருக்கிறார்கள். தைரியமாக நின்று போராடுபவர்களுக்காவது நீதி கிடைக்கும் என்று எதுவும் உத்தரவாதம் உண்டா என்றால் அதுவும் கிடையாது என்பதற்கு ஷஜியா காலித்தின் (Shazia Khalid) சம்பவத்தை உதாரணமாகச் சொல்லலாம். மருத்துவரான ஷஜியா காலித் அவர் வேலை பார்த்து வந்த மருத்துவமனையிலேயே காவல்காரர்களாக இருந்தவர்களால் கடந்த வருடம் கற்பழிக்கப்பட்டார். குற்றம் இழைத்த எவரையும் பாகிஸ்தானிய நீதிமன்றம் தண்டிக்கத் தவறிவிட்டது.

பின்னர் தாம் தொடர்ந்து பலமுறை மிரட்டப்பட்ட காரணத்தால் பாகிஸ்தானை விட்டு தப்பி ஓடிப் போக நேர்ந்தது என்கிறார் டாக்டர் காலித். தாம் வலிந்து துரத்தப்பட்டதாகச் சொல்லும் அவர், தன்னைத் தாக்கியவர்களைத் தண்டித்து நீதி வழங்கவோ அல்லது பின்னர் விடுக்கப்பட்ட மிரட்டல்களிலிருந்து தன்னைப் பாதுகாக்கவோ அரசாங்கம் தவறிவிட்டது என்று தன் அதிருப்தியைத் தெரிவிக்கிறார்.

அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் தலைமையிலான இதே அரசாங்கம்தான் முக்தர் மாயின் கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) முடக்கிவைத்தது. காரணம், அவர் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து, நடந்ததைச் சொன்னால் பாகிஸ்தானுக்கு களங்கம் ஏற்பட்டு விடுமே என்ற அச்சம்தான். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் மேலை நாடுகளின் கூட்டாளியாக விளங்கும் இதே அரசாங்கம், தம் பெண் குடிமக்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் பாலியல் பயங்கரவாதத்தை அனுமதிக்கத் தயாராகவே இருக்கிறது.

அடுத்து வருவது இதையும் விட மோசமான செய்தி. பாகிஸ்தானால் என்ன முடியுமோ, அதை இந்தியா இன்னும் கூடுதலாகவே செய்ய முடியும் என்று தோன்றுகிறது. இம்ரானா வழக்கு என இப்போது அறியப்படும் சம்பவத்தில், வட இந்தியாவிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண் தன்னைத் தன் மாமனார் கற்பழித்ததாகச் சொல்கிறார். செல்வாக்கு மிக்க தாருல்-உலூம் என்ற இஸ்லாமிய அமைப்பு, அவர் தன் கணவரை விட்டு நீங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. ஏனெனில், அவருடைய கணவரைப் பொறுத்தவரை இம்ரானா ஒரு ‘தவிர்க்கப்பட வேண்டியவராக ‘ (தூய்மையற்றவராக) ஆகிவிட்டார். தேவ்பந்திப் பாதையை ஏற்கும் ஒரு மதபோதகரோ, ‘இந்த பாலுறவு விருப்பப்பட்டு நடந்ததா அல்லது கட்டாயத்தாலா என்பது ஒரு பொருட்டே அல்ல ‘ என்கிறார்.

டெல்லிக்கு வடக்கே 90 மைல் தொலைவில் இருக்கும் தேவ்பந்தி கிராமத்தில் உள்ள தாருல்-உலூமில் இருந்துதான் அதி-பழமைவாதமான தேவ்பந்திப் பாதை தோன்றியது. இதன் மதப்பள்ளிகளிலேயே (மதராஸா) தலிபான்கள் பயிற்சி பெற்றனர். இன்று உலக அளவில் இதுவே மிகவும் அடிப்படைவாத, குறுகிய நோக்குள்ள, தூய்மைவாதக் கடுமை கூடிய, இறுகிய, ஒடுக்குமுறை மிகுந்த இஸ்லாமியப் பிரிவாகும். இது வெளியிட்ட மத அறிவிப்பு (ஃபத்வா) ஒன்றில், 9/11 தாக்குதலுக்கு யூதர்களே காரணம் என்று சொல்லியது. தலிபான்கள் மட்டுமல்ல, வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் செய்தியாளர் டேனியல் பெர்லைப் படுகொலை செய்தவர்களும் தேவ்பந்தி மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களே.

ஷரியா சட்டத்துக்கு தாருல்-உலூம் அளிக்கும் மிக இறுக்கமான விளக்கங்கள் பிரசித்தி பெற்றவை என்பதோடு, பலராலும் பின்பற்றப்படுபவை – அதன் தீர்ப்புக்கு இந்தியாவில் பெரும் எதிர்ப்புக் கிளம்பிய போதிலும், பாதிக்கப்பட்ட இம்ரானா அந்தத் தீர்ப்பை ஏற்று அதன்படி நடப்பதாகச் சொல்லுமளவுக்கு, கற்பனை செய்யக் கூட முடியாத அளவில் நிர்ப்பந்திக்கப்பட்டார். ஓர் அப்பாவிப் பெண் தன் கணவனுடைய தந்தை செய்த குற்றம் காரணமாக, தன் கணவனை விட்டுப் பிரியப் போகிறாள்.

ஒரு மதப்பள்ளிக்கு இத்தகைய தீர்ப்பை எல்லாம் வழங்கும் அதிகாரம் எப்படிக் கிடைத்தது ? இந்தக் கேள்விக்கான பதில் முஸ்லிம் தனிநபர் சட்ட அமைப்பு என்ற விதிமுறைகளிலிருந்து பிறழ்ந்த ஒன்றில் அடங்கி இருக்கிறது – இந்திய முஸ்லிம்களுக்கு என்று நாட்டின் பொதுச் சட்டத்துக்கு இணையான இன்னொரு தனித்த சட்ட அமைப்பு இருக்கிறது. இதன் காரணமாகவே இம்ரானா போன்ற பெண்கள் முல்லாக்களின் தயவில் வாழ வேண்டியிருக்கிறது. இந்த விஷயத்தில் எவரையும் குழப்பத்தில் ஆழ்த்தும் அளவு வரலாற்றுச் சிக்கல்கள் இருக்கின்றன – அதனால்தான் ஒரு ஜனநாயக நாட்டில், ஒரே ஒரு, முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட பொதுவான சட்ட அமைப்பே இருக்க வேண்டும் என்று சொல்பவர் எவரும் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்றும், தீவிர நிலைப்பாடு கொண்ட இந்து தேசியவாதிகளுக்கு ஆதரவானவர் என்றும் பழி சாட்டப்படுகிறார்.

1980களில், ஷா பானு என்ற விவாகரத்து செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கு ‘அன்றாடச் செலவுக்கான பணம் ‘ தரப்படவேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொன்னது. ஆனால், இஸ்லாமிய சட்டத்தில் ஜீவனாம்சத்திற்கு வழி இல்லை என்பதால், தாருல்-உலூம் போன்ற இந்தியாவின் பழமைவாத இஸ்லாமியவாதிகள் இந்தத் தீர்ப்பை எதிர்த்தனர். இது முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் தலையிடுவதாகச் சொல்லி போராட்டங்களை நடத்த அகில இந்திய முஸ்லிம் சட்ட அமைப்பு என்ற ஒன்றைத் தொடங்கினர். இந்திய அரசாங்கமும் பின்வாங்கி, விவாகரத்தான முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் தர மறுக்கும் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தனர். ஷா பானு விவகாரத்துக்குப் பின்னர், இஸ்லாமிய மதபோதகர்களின் வலிமையைத் தட்டிக் கேட்கும் துணிவு எந்த ஓர் இந்திய அரசியல்வாதிக்கும் ஏற்படவில்லை.

இம்ரானாவின் வழக்கைப் பொறுத்தவரை தாருல்-உலூமின் தீர்ப்பை வேறு பல முஸ்லிம் அமைப்புகளும், முஸ்லிம் அல்லாத அமைப்புகளும், இதர தனிநபர்களும் எதிர்த்துள்ள போதிலும், அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் அதை ஆதரித்துள்ளதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் முலாயம் சிங் யாதவ் தாருல்-உலூமின் ஃபத்வாவை ஆதரித்துள்ளது அதிர்ச்சிதரக் கூடியது. லக்னெளவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘இம்ரானா வழக்கில் முஸ்லிம் மதத் தலைவர்களின் முடிவு ஆழ்ந்த யோசனைக்குப் பின்னரே எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும், மதத் தலைவர்கள் நன்கு கற்றறிந்தவர்கள் என்பதோடு முஸ்லிம் சமூகத்தையும் அதன் உணர்வுகளையும் நன்றாகப் புரிந்து கொண்டவர்கள் ‘ என்றும் சொல்லியுள்ளார்.

இது ஒரு கோழைத்தனமான அறிக்கை. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நிலவி வரும் கற்பழிக்கும் ‘பண்பாடு ‘ என்பது ஆழமாக வேர்விட்டுள்ள சமூகப் பிறழ்வுகளிலிருந்து தோன்றுவது. இந்தப் பண்பாட்டின் ஊற்றுக் கண்களாக உள்ளவை குலப்பெருமை மற்றும் அவமானம் போன்ற மதிப்பீடுகளை மையமாகக் கொண்டு என்றும் மாறாத மூர்க்கத் தன்மையுடன் இருக்கும் ஒழுக்க விதிகளே. கற்பழிக்கப்பட்ட பெண்கள் மரங்களில் தூக்குப் போட்டுக் கொண்டு தொங்கவும், நதிகளில் தங்களை மூழ்கடித்துக் கொள்ளவும் இந்த விதிகளின் கருணையற்ற தன்மையே காரணமாகின்றது. இது மாற இன்னும் பல தலைமுறைகள் ஆகும் என்றாலும், மாற்றாகச் சட்டம் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ய வேண்டும்.

முக்தர் மாயின் விஷயத்தைப் பொறுத்தவரையில் பாகிஸ்தானின் உச்சநீதி மன்றம் ஒரு சிறிய ஆனால் முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது; இனிமேலாவது காவல் துறையினரும், அரசியல்வாதிகளும் பாதிக்கப்பட்டவர்களை வேட்டையாடுவதை விட்டுவிட்டு, கற்பழித்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை, ஒரு நவீன, மதசார்பற்ற ஜனநாயக நாடு என்று தன்னை அழைத்துக் கொள்ளும் எந்த நாடும் தன் நீதி அமைப்பை மதசார்பற்றதாகவும், அனைவருக்கும் பொதுவான ஒன்றாகவும் ஆக்க வேண்டும் என்பதையும், இருண்ட கால நிறுவனங்களான தாருல்-உலூம் போன்றவை பெண்களின் வாழ்வின் மீது செலுத்தும் எந்த வகை அதிகாரத்தையும் அவற்றிடமிருந்து ஒட்டுமொத்தமாகப் பறிக்க வேண்டும் என்பதையும், ஒரு வகுப்புவாதி என்று பழிக்கப்படும் ஆபத்து இருப்பதையும் மீறி நான் ஒப்புக் கொள்ளவே வேண்டியிருக்கிறது.

(ஜூலை 10, 2005 நியூயார் டைம்ஸ் நாளிதழில் சல்மான் ருஷ்டி எழுதிய தலையங்கக் கட்டுரை. ருஷ்டியின் புதிய நாவல் ‘Shalimar the Clown ‘ செப்டம்பர் 2005-ல் விற்பனைக்கு வருகிறது. இந்தக் கட்டுரை சம்மந்தமான சில கருத்துகளை வரும் வாரங்களில் எழுத இருக்கிறேன். – மொழிபெயர்ப்பாளர்)

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்