அஞ்சலி: சீன கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜாவ் ஜியாங்

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

ஆசாரகீனன்


சீன கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர் ஜாவ் ஜியாங் (Zhao Ziyang). இவர் 1989-ஆம் வருடம் சீனாவில் நடந்த ஜனநாயக ஆதரவு மாணவர் புரட்சியை ஆதரித்த காரணத்துக்காக பதவியிலிருந்து நீக்கப்பட்டதோடு, ஜனவரி 17, 2005 அன்று தன் 85-ஆவது வயதில் மரணம் அடையும் வரை 15 ஆண்டுகள் வீட்டுக் காவலிலும் வைக்கப்பட்டிருந்தார்.

தியானமன் சதுக்கத்தில் மாணவர் புரட்சியை சீன அரசு வன்முறையைக் கையாண்டு அடக்கியதை ஒப்புக் கொள்ளாத சீனர்களின் வலிமை மிக்க அடையாளமாகத் திகழ்ந்தவர் இவர். ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதற்காக சீன கம்யூனிஸ்டு கட்சியின் உயர் மட்டத் தலைவர்களை கடுமையாகக் கண்டித்ததோடு, மாணவர் போராட்டமானது எதிர்-புரட்சித் தன்மை கொண்டது என்ற சீன அரசாங்கத்தின் அதிகாரபூர்வமான நிலையை ஒப்புக் கொள்ளவும் மறுத்தவர் ஜாவ் ஜியாங்.

அவர் பொது நிகழ்ச்சி ஒன்றில் கடைசியாகக் கலந்து கொண்டது மே 19, 1989 அன்று. தியானமன் சதுக்கத்தில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த மாணவர்களைச் சந்தித்த நிகழ்ச்சியே அது. தாம் மிகத் தாமதமாகவே அங்கு வந்திருப்பதாகத் தெரிவித்த ஜாவ் ஜியாங், கலைந்து செல்லும்படி மாணவர்களிடம் மன்றாடினார். சீன பொலிட்பீரோ அவரைப் பதவி நீக்கம் செய்தவுடன் அங்கிருந்து நேராக மாணவர்களிடம் வந்த அவர், அரசாங்கம் மாணவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்ற முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அதற்கு அடுத்த நாளே சீனாவில் ராணுவ ஆட்சி அமுல்படுத்தப்பட்டது. ஜூன் 3, 4 தேதிகளில் பீஜிங் நகரில் ராணுவம் மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

டெங் சியாவ்பிங்கின் (Deng Xiaoping) ஆட்சியின் போது 1980-களில் சீனாவில் ஆரம்பிக்கப்பட்ட தீவிரமான பொருளாதார மாற்றங்களின் தலைமை சிற்பியாகத் திகழ்ந்தவர் ஜாவ் ஜியாங். அன்னிய முதலீட்டைக் கவரும் விதத்தில் கடற்கரையோர மாகாணங்களில் புதிய பொருளாதார மண்டலங்களையும் ஏற்றுமதி மையங்களையும் உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றியவர் அவர். இதுவே சீனாவின் இன்றைய பொருளாதாரத்துக்கான வரைபடமாகவும், அடித்தளமாகவும், உலக விற்பனைச் சந்தையில் குறிப்பிடத்தக்க பங்கெடுக்கும் ஒரு நாடாக சீனா மாறுவதற்கான ஆற்றுக்காலாகவும் விளங்குகிறது.

டெங் சியாவ்பிங்கின் பொருளாதார நடவடிக்கைகளில் பெரும்பகுதியை உருவாக்கியவர் ஜாவ் ஜ்ியாங். கடற்கரையோரப் பகுதிகளின் வளர்ச்சி, விவசாயம், விலைவாசி சீர்திருத்தம், தொழில் சீர்திருத்தம் போன்றவற்றுக்காக டெங் பாராட்டப்பட்டாலும், அவை அனைத்தும் ஜாவ் ஜியாங்கின் மூளையில் உதித்தவையே என்று இவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய டேவிட் ஷாம்பா(வ்)க் (David Shambaugh) தெரிவிக்கிறார்.

1919-ல் பிறந்த அவர், 1932-ல் கம்யூனிஸ்டு இளைஞர் அணியின் உறுப்பினர் ஆனார். ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் சீன கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்தார். ஜப்பானுடனான போரின் போது ராணுவத்தின் நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்திருந்தாலும், டெங்கைப் போலவோ அல்லது மாஒவைப் போலவோ ஜாவ் ஜியாங் ராணுவ நடவடிக்கைகள் எதிலும் பங்கு பெற்றதில்லை. அவர் பொருளாதாரத்தில் முறையான பயிற்சி பெறாதவர் என்றாலும் தம் வெற்றிகரமான பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக டெங்கின் கவனத்தைப் பெற்றார்.

மாஒவின் சோசலிசக் கனவின் காரணமாக புதிய கம்யூனிச சீனாவில் தனி நில உடைமை ஒழிக்கப்பட்டு பொது நிலப் பண்ணைகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் மாஒவின் வற்புறுத்தல் காரணமாக இவற்றில் நகைப்புக்குரிய வகையில் நடத்தப்பட்ட பெரும் தவறான பரிசோதனைகளின் காரணமாக, 1958-60களில் சீனாவில் வரலாறு காணாத பஞ்சம் ஏற்பட்டது. உணவு உற்பத்தியில் ஏற்பட்ட பெரும் சரிவினாலும், தன் தவறை ஒப்புக் கொள்ளத் தயாரில்லாத சீன கம்யூனிஸ்டு கட்சியின் இறுமாப்பு நடத்தையினாலும், உணவு வினியோக முறைகளில் நடந்த பெரும் முறைகேடுகளாலும் – கிராமங்களைப் பட்டினி போட்டு நகரங்களுக்கு உணவுப் பொருட்கள் திருப்பப்பட்டன. ஆனால் இதில் எதுவும் புதிதில்லை. மேதை லெனின், பெருநாயகர் ஸ்டாலின், அதிபுரட்சியாளர் துரோத்ஸ்கி ஆகிய புரட்சியின் முத்தெய்வங்கள் அவர்கள் காலத்து ரஷ்யாவை இப்படித்தான் ஆண்டனர். அப்போது ரஷ்யாவின் மையத்தில் ஒரு பெரும் திரளான மக்கள் கூட்டம் பட்டினியால் செத்து, ரஷ்யாவில் பல பத்தாண்டுகளுக்கு மக்கள் தொகை அதிகரிக்கவே இல்லை. அதையொத்த ஒரு நிலை சீனாவிலும் எழவும், உலக புரட்சித் திலகம் மாஒவின் ஆட்சியில் பெரும் திரளான மக்கள் கூட்டம் பட்டினியால் மடிந்தது. இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் மூன்று கோடி மக்கள் பட்டினி கிடந்து மாண்டனர்.

1962-ல் குவாண்டாங் மாகாணத்தின் தலைமை அதிகாரியாக இருந்த ஜாவ் ஜியாங் பொது நில முறையை ஒழித்து நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைத்து தனி நபர் உணவு உற்பத்தியை ஊக்குவித்தார். இத் திட்டம் பெற்ற வெற்றி காரணமாக நாளடைவில் விவசாய விளைச்சலைப் பெருக்க உதவும் முன்மாதிரியாக சீனா முழுவதும் இது பின்பற்றப்பட்டது.

எனினும், அரசியல் ரீதியாக இது ஜாவ் ஜியாங்குக்கு எந்த நன்மையையும் உண்டாக்கவில்லை. மாஒவைத் தவிர வேறு எவராவது சிறப்புள்ளவராகத் தெரிய வரலாமா ? அது ஒரு பெரும் எதிர்ப் புரட்சித்தனமான தவறு அல்லவா ? 1967 கலாச்சார புரட்சியின் போது, மீள்பார்வை (revisionist) சிந்தனையாளர் என்று குற்றம் சாட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் கட்டாய உழைப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டார். மங்கோலிய தன்னாட்சிப் பகுதியின் அதிகாரியாக 1971-ல் நிகழ்ந்த இவருடைய அரசியல் மறுபிரவேசத்தின் மூலம் மறு-பிறப்பெடுத்த மாஒயிஸ்ட்டாக (born-again Maoist) உருவெடுத்தார். தனியார் துறையையும் பொருளாதார சலுகைகளையும் எதிர்த்துப் பேசினார்.

ஆனால் இந்த மாறுதல் உண்மையான ஒன்றல்ல. ஒரு வழியாக இரட்டை நாக்குத் தன்மை என்பது கம்யூனிஸ்டுகளின் பிறவி குணம், அவர்களால் உண்மை என்பதைப் பேசவோ அல்லது பார்க்கவோ முடியாது என்பதை உணர்ந்து கொண்டு, வேறு வழியில்லாமல் அந்த உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் சிறப்பான பேச்சு ‘நாணயத்தை’த் தாமும் கடைப் பிடிக்கத் தொடங்கினார் என்று சுட்டவே முந்தைய வரியில் மறு-பிறப்பெடுத்த மாஒயிஸ்டாக உருவெடுத்தார் என்று எழுதினேன்.

ஜாவ் ஜியாங், 1975-ல் சிசுவான் மாகாணத்தில் மீண்டும் தம் நிலச் சீர்திருத்தங்களை கொண்டு வந்ததோடு, தொழில் துறையின் மீதான கட்டுப்பாடுகளையும் தளர்த்தினார். உற்பத்திப் பொருட்களுக்கான விலையை நிர்ணயிக்க விவசாயிகளையும் தொழிற்சாலைகளையும் அனுமதித்ததன் மூலம் பெரும் உற்பத்திப் பெருக்கத்தை ஏற்படுத்தினார். 1979-ல் மாஒ மண்டையைப் போட்ட பின் சீனாவுக்கு விடிவு காலம் முதல் முறையாகத் துவங்கியது. பதவிக்கு வந்த டெங், சீனப் பொருளாதாரத்தை முன்னேற்ற பழம் பஞ்சாங்க மார்க்சிய கொள்கைகளை விட, கவைக்குதவாத தத்துவரீதியான பரிசோதனைகளை விட, நடைமுறையில் சாத்தியமாகும் தீர்வுகளையே விரும்பினார். 1980-ல் ஜாவ் ஜியாங் துணைப் பிரதமராக ஆக்கப்பட்டார். அதே ஆண்டிலேயே அவர் பிரதமராகவும் ஆகிவிட்டார்.

அரசாங்கத்தின் தலைமைப் பதவியில் அமர்ந்ததன் மூலம் சீனப் பொருளாதாரத்தின் பொறுப்பாளராக ஆகிவிட்ட அவர் டெங்கின் ஆசியுடன் தீவிர பொருளாதார சீரமைப்புகளை மேற்கொண்டார். ஜாவ் ஜியாங் 1987-ல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்றதன் மூலம் டெங்கின் வாரிசாகவும் ஆனார்.

எனினும், பொதுச் செயலாளர் பதவிக்குத் தான் தகுதியுடையவர் தானா என்பது பற்றி அவருக்கு சந்தேகம் இருந்தது. ‘பொருளாதார விவகாரங்களைக் கவனிப்பதற்கே நான் மிகவும் பொருத்தமானவன் ‘ என்று ஓர் அமெரிக்கத் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டார். 1987-ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசும் போது சோசலிசத்தின் ஆரம்ப கட்டத்திலேயே சீனா இருப்பதாகச் சொன்ன அவர் உற்பத்தியைப் பெருக்க பல விதமான பொருளாதார பரிசோதனைகளை சீனா மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் சொன்னார். பரிணாம ரீதியான சோசலிச கட்டமைப்புக்கு உட்பட்டு சந்தைப் பொருளாதாரத்தைப் பரிட்சித்துப் பார்க்க இதுவே காரணமாயிற்று.

அவரது கொள்கைகள் காரணமாக மார்க்சிய சிந்தையாளர்களும் பழமைவாதிகளும் (உண்மையைச் சொன்னால் இரண்டுக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை. மார்க்சியவாதி என்றாலே பழமைவாதி என்றுதானே பொருள் ? வேறு எந்தப் பழமைவாதி அன்று சீனாவில் ஆட்சியில் இருந்த கூட்டத்தில் இருந்திருக்க முடியும் ?) அவருக்கு எதிரிகளாயினர். 1988-ல் ஏற்பட்ட பணவீக்கம் மற்றும் ஊழல்களுக்கு காரணமாக ஜாவ் ஜியாங்கைக் காட்ட முயன்றனர். அரசியல் ரீதியாக அவர் மேற்கொண்ட தாராள நடவடிக்கைகள் காரணமாகவும் எதிரிகள் அவரை மேலும் வசை பாடினர். ஜனநாயகத்தைக் கட்டி எழுப்புவதும் சட்டத்தின் ஆட்சியை மலர வைப்பதுமே இந்த அரசியல் தாராள நடவடிக்கைகளின் குறிக்கோளாக அமைபவை என்று ஜாவ் ஜியாங் கருதினார்.

1989-ல் அவருடைய அதிகாரம் மிகவும் வீழ்ச்சியடைந்தது. டெங்கின் அனுமதியைப் பெறாமலேயே, மே மாதம் 4-ம் தேதி தியானமன் சதுக்கத்தில் மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து அவர் பேசினார். மேலும், அந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே சோவியத் தலைவர் மிகாயில் கோர்பசேவை பீஜிங் நகரில் சந்தித்துப் பேசினார். இச் சந்திப்பு இந்த இருவருமே ஒத்த கருத்துடைய சீர்திருத்த சிந்தனையாளர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தியது.

அந்த சந்திப்பின் போது, கிட்டத்தட்ட பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டதாகக் கருதப்பட்ட டெங்கின் அங்கீகாரம் இல்லாமல் சீனாவின் மத்தியக் குழு எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுக்க முடியாது என்ற உண்மையை அவர் கோர்பசேவிடம் சொன்னதன் மூலம் அதை வெளியுலகின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். டெங்கின் அதிகாரம் பற்றி வெளிப்படையாக எவரும் பேசக்கூடாது என்ற மரபை அவர் உடைத்ததோடு, மாணவர்கள் கோரும் சீர்திருத்தங்களை சீன அரசாங்கம் ஒப்புக் கொள்ளாமல் இருப்பதற்கு டெங்கே காரணம் என்றும் ஜாவ் ஜியாங் உணர்த்தினார்.

இதன் காரணமாக டெங், ஜாவ் ஜியாங்கின் அதிகாரத்தையும் பதவியையும் பறித்தார். ஒரு மாதம் கழித்து அவர் வீட்டுக் காவலிலும் வைக்கப்பட்டார். ஜாவ் ஜியாங் பற்றிய அவதூறான செய்திகள் மட்டுமே பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன. எனினும், அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

எனினும், தம் கருத்துகள் சரியானவையே என்பதில் சாகும் வரை உறுதியாக இருந்தார் ஜாவ் ஜியாங். கடந்த 15 ஆண்டுகளில் தம் நிலைப்பாட்டிலிருந்து அவர் சிறிதும் விலகவில்லை. வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தாலும், 1998-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் சீனாவுக்கு வந்திருந்த போது, சீன அரசாங்கம் தியானமன் சதுக்கத்தில் மேற்கொண்ட அடக்குமுறையை மறு ஆய்வு செய்வதோடு அது ஒரு மாபெரும் தவறு என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும் கடிதம் ஒன்றை வெளியிட்டார். அக் கடிதம் வெளிநாட்டு பத்திரிகைகளில் மட்டுமே பிரசுரமானது, சீனாவின் பத்திரிகைகளிலும் பிற ஊடகங்களிலும் தடை செய்யப்பட்டது.

ஜாவ் ஜியாங்கின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த வரும் சாதாரண சீன மக்கள் காவல் துறையின் கடுமையான கண்காணிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஷாங்கை (Shanghai) நகர அரசு கட்டிடம் ஒன்றின் முன் வேறு ஒரு காரணத்துக்காக கூடியவர்களுள் சிலர் ஜாவ் ஜியாங்கின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துப் பேசிய காரணத்தால், நூற்றுக் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் சிலர் காவல் துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டனர் என்று நியூயார்கில் இருக்கும் சீன மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

(நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. சில வசைகள் சொந்தச் சரக்கு என்பதைச் சொல்லவும் வேண்டுமா ?)

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்