வாரபலன் – குறும்பட யோகம்

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

மத்தள ராயன்


இந்த கிறிஸ்துமஸ் சீசனின் இங்கிலாந்தில் சக்கைப்போடு போடுகிற புத்தகத்தின் பெயர் Eats, shoots and leaves.

நிறுத்தக் குறிகள் (punctuation) பற்றிய இந்தப் புத்தகம் கோவிந்தா மஞ்சள், பச்சை அட்டையோடு பார்க்கப்

பரிதாபமாக இருக்கும். டபிள்யூ.எச்.ஸ்மித் போன்ற பெரிய புத்தகக் கடைகளில் இதைப் படியேற்றவே யோசிப்பார்கள்.

ஆனால் என்ன, இப்போ இதுதான் பெஸ்ட் செல்லர்.

இந்தத் தலைப்புக்குப் பின்னால் ஒரு ஜோக் உண்டு.

ஒரு பாண்டா கரடி (panda) ஓட்டலுக்குச் சாப்பிடப் போனதாம். சாப்பிட்டு முடிச்சதும், வெயிட்டர் பில் கொண்டு வந்து

வைத்தாராம். கரடி துப்பாக்கியை எடுத்து கல்லாவில் உட்கார்ந்திருந்த முதலாளியைச் சுட்டுவிட்டு அது பாட்டுக்கு

வெளியே கிளம்பியதாம். ஏன் இப்படிச் செஞ்சேன்னு கேட்டாங்களாம். ஒரு அகராதியைத் தூக்கி அவங்க மேலே

விட்டெறிந்து ‘பாண்டா ‘ வுக்கு என்ன விளக்கம் போட்டிருக்கு இதிலே பாருங்க என்றதாம் கரடி.

புத்தகத்தில் இப்படி இருந்தது –

Panda – Eats, shoots and leaves

அது இப்படி இருந்திருக்க வேண்டும் –

Panda – Eats shoots and leaves

******************************************

பங்க்சுவேஷன் தவிர எழுத்தைப் பாதிக்கிற இன்னும் சில விஷயங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

அவசரமாக எழுதும்போது சில தடவை விபரீத விளைவுகள் ஏற்பட்டு விடுவது உண்டு.

‘செருப்பைக் கழற்றிச் சாப்பிட உட்கார்ந்தான் ‘ இன்னோரன்ன விஷயங்கள் இவை.

எழுதும்போது எதைக் கவனிக்கிறோமோ இல்லையோ, முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது – சில சொற்கள் புழக்கத்தில் சிறப்புப் பொருள் பெற்றிருக்கும். அவற்றை நீக்குவது நல்லது – இப்போதெல்லாம் எல்லோரும் ‘கடையில் போய்ப் பொருள் வாங்கினான் ‘ என்றுதான் எழுதுகிறோம். முப்பது வருடம் முன்னால் ?

‘கிசு கிசு ‘ தான் தற்போதைய வழக்கு. நம் முன்னோர்கள் குசுகுசுவென்று தான் பேசினார்கள்.

‘நான் அந்தப் பெண் கவிஞரோடு உரையாடிக் கொண்டிருந்தேன் ‘.

பழைய தமிழில் உரையாடுதல் என்பதைச் ‘சல்லாபம் ‘ என்பார்கள். உ.வே.சா கூட இப்படித்தான் எழுதினார் என்று வீம்புக்கு எழுதினால் பெண் கவிஞர் மான நஷ்ட வழக்குப் போட்டு வக்கீல் நோட்டாஸ் அனுப்பி விடுவார்.

ஒரு பழைய புத்தகத்தில் படித்தது – ‘நாங்கள் பண்டரிபுர யாத்திரை போனபோது, நான்காம் நாள் ராத்திரி ஒரு சத்திரத்தில் தங்கியிருந்தோம். நிறையப் பெண் அடியார்கள் உள்ள இன்னொரு கோஷ்டியும் அங்கே தங்கியிருந்தது. எல்லோரும் சேர்ந்து ராத்திரி முழுக்கப் பஜனை செய்து கொண்டிருந்தோம் ‘.

இப்போது நிச்சயம் வார்த்தையை மாற்றித்தான் எழுத வேண்டும்.

ஆங்கிலத்திலும் இப்படி உண்டு. சார்லஸ் டிக்கன்ஸ் நாவல்களில் பேசினான் என்பதற்கு ‘he ejaculated ‘ என்று சாதாரணமாக வரும். இப்போது அப்படி எழுத முடியாது.

‘Testing and validation ‘ தான். ‘testing cum validation ‘ எழுத யோசிக்க வேண்டியிருக்கிறது – இணையத்தில் மஞ்சள் தளங்கள் உபயத்தால்.

எங்கள் செம்மண் சீமைப் பக்கம், நகரத்தார் இனப் பெண்களில் ‘உண்ணாமலை ‘ என்ற பெயர் சர்வ சாதாரணம்.

‘உண்ணாமுலை ‘ என்ற பராசக்தியின் திருநாமம். ‘முலை ‘ என்றாலே ஏதோ கெட்ட வார்த்தை என்ற நினைப்பால் இப்படிப் பெயர் மாற்றம்.

இது தவிர, புரியாமலேயே நடக்கிற பெயர் மாற்றமும் உண்டு. ‘ ஒப்பிலியப்பன் ‘ ஆன பெருமாளுக்கு ‘உப்பிலியப்பன் ‘ என்று பெயர் கொடுத்ததோடு மட்டுமில்லாமல், அவருக்கு உப்பு இல்லாமல் நைவேத்தியமும் நடத்துகிறவர்கள் நாம்.

இரு மொழியாளர்களாகவோ, மும்மொழியாளர்களாகவோ இருக்கும்போது ஏற்படும் மொழி அதிர்ச்சி கொஞ்சம் வித்தியாசமானது.

தமிழில் முச்சந்தி, நாற்சந்தி எல்லாம் உண்டு. ஓர் இலக்கியப் பத்திரிகைக்குச் ‘சந்தி ‘ என்று பெயர் சூட்டலாம் என்று யோசனை வந்தபோது, கூட இருந்த மலையாளி நண்பர் சிரித்தார் பாருங்கள் (மலையாளத்தில் அது – கடைசி வரியைப் பார்க்க).

அதே போல் தெலுங்கில் மரியாதையாக ‘ரண்டி ‘ என்று கூப்பிடலாம். இந்தியில் ‘ரண்டி ‘ என்று ஒரு பெண்ணிடம் சொன்னால், கன்னத்தில் அறை விழும்.

தில்லியைச் சேர்ந்த நண்பர்களுக்கு (பெண்களும் அடக்கம்) பிராஜக்ட் மேனேஜ்மெண்ட் வகுப்பு எடுக்கும்போது, ஹிஸ்டோகிராம், ஆர்கனைசேஷன் சார்ட் எல்லாம் விலாவாரியாக விளக்கினேன். காண்ட் சார்ட் வந்தபோது பெயரை மாற்றிச் சொல்ல வேண்டி வந்தது.

மும்பையில் என் மனைவியின் பள்ளித் தோழியான மராத்திப் பெண்ணின் பெயரை இங்கே எழுத முடியாது. பூக் கிண்ணம் என்ற அழகான பொருள் தரும் பெயர். தமிழில் ? ‘கால் கழுவி வந்தான் ‘ என்ற இடக்கரடக்கலில் வருவது.

********************************************

கன்னடக் கலைப்பட இயக்குனர் கிரிஷ் காசரவள்ளியை கெளரி ராம்நாராயண் கண்ட குறும் பேட்டி இந்து – மெட்ரோப்ளஸ் இணைப்பில் வெளியாகியுள்ளது.

http://www.hindu.com/mp/2003/12/11/stories/2003121100960100.htm

முத்திரை பதித்த படங்களான கடஸ்ரார்த்தா, தாய் சாகேபா பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். ‘தபரண கத ‘யை கெளரி மட்டும் கட்டுரையில் நினைவு படுத்துகிறார். அவரைத் தவிர சாருஹாசன் நினைத்துக் கொள்வார். (தேசிய விருது சாருஹாசனுக்கு வாங்கித் தந்த படம் அது).

காசரவள்ளி அடுத்த படமாக, கன்னட எழுத்தாளர் வைதேகியின் சிறுகதையை எடுக்கப் போகிறாராம். சினிமா சினிமா என்று சுவாசிக்கிற ஒரு செவிலி பற்றிய படம். சினிமாவில் பார்ப்பதை வைத்து கிராமப் பிரச்சனைக்கு எல்லாம் தீர்வு சொல்கிறாளாம் அந்த பிரசவ ஆஸ்பத்திரி ஆயா.

கன்னட இலக்கியத்திலும் மாஜிக்கல் ரியலிசம் இருப்பது தெரிகிறது.

கூடவே வுடி ஆலனின் ‘ஈஜிப்ஷியன் ரோஸ் ‘ நினைவு வருகிறது. அது கற்பனையே நிஜமென்று நினைக்கும் ஹலுசினேஷன் வகையானது. மாந்திரீக யதார்த்தத்திலிருந்து கொஞ்சம் வேறுபட்டது. அது நிற்க. யார் இந்த வைதேகி ?

அவரைப் பற்றிக் கூடுதல் தகவல் அறிய கெளரி ராம்நாராயணைக் கூப்பிட்டேன். புதுவையிலே இருக்கேன், வந்து சொல்றேன் என்றார்.

**********************************************8

நிதி நிறுவனம் கோவிந்தாவாவது பனகல் பார்க் பக்கம் மட்டும் நடக்கும் சமாச்சாரம். மேற்கத்திய நாடுகளில் இப்போதெல்லாம் பெரிய வங்கிகள் செக்யூரடைசேஷன் என்ற வழியில், மொத்தக் கடனையும் கூறு போட்டுச் சிப்பமாக்கிப் பங்குச் சந்தையில் விற்றுவிடுகிறார்கள் – முக்கியமாக வழித்தோன்றல்கள் மூலம் (credit derivatives).

வராக் கடன் எல்லாம் இப்படிச் சிதறுகாயாக வேறு பலர் மண்டையை உடைக்க, வழங்கிய வங்கியும், வாங்கி ஏப்பம் விட்ட நிறுவனமும் பிழைத்துக் கொள்கின்றன. வேர்ல்ட்காம் கம்பெனி மோசடி போன்ற சந்தை விபத்துகள் நிகழ்ந்தும் பெரிய வங்கிகள், முடியே போச்சு என்று பின்புற மண்ணைத் தட்டிக்கொண்டு தாக்குப் பிடிக்க இதுவும் ஒரு காரணம்.

பேசல் கமிட்டி (அத்தியாயம் ரெண்டு) என்று சர்வதேச அளவில் நிபுணர்கள் கூடி நிதி நிறுவனங்கள் தங்கள் கடன் நிலுவை, அந்நியச் செலாவணி, பங்குச் சந்தை சில்லுண்டி, பேருண்டி யாவாரம் போன்றவற்றில் எதிர்ப்படும் அபாயங்களைச் சமாளிக்க விதிமுறைகளைக் கொண்டு வந்திருக்கிறர்கள். சந்தை ஒழுங்கு என்ற market discipline பேசல் பரிந்துரைகளைத் தாங்கிப் பிடிக்கும் மூன்று தூண்களில் ஒன்று. கடனாக வழங்கிய தொகைக்கு அடமானமாக வைத்த சொத்துக்கு முடி வெட்டுவதில் தொடங்கி (hair cut for the collaterals) நீளும் இவற்றை விவரித்தால் நண்பர்கள் பிய்த்துக் கொண்டு கிளம்பி விடுவார்கள்.

அமெரிக்காவில் போன வருடம் வோர்ல்ட்காம் மூழ்கியபிறகு, சர்பான்ஸ் ஆக்ஸ்லி சட்டம் (Sarbanes-Oxley Act 2002) இயற்றப்பட்டது.நிறுவனங்கள் நிதி நிலைமை பற்றி வெளியிடப்படும் அறிக்கை நேர்மையின் அடிப்படையில் அமையாவிட்டால் நடத்துகிறவர்களை இடுப்புக்குக் கீழ் பிடித்துக் கொ-டையை நெறிக்கவும், தில்லுமுல்லுக்களை உள்ளே இருந்தே பார்க்க வாய்ப்புக் கிடைத்த நல்லோர் ‘ஐயய்யோ டுபாக்கூர் வேலை பண்றான்யா..ஓடியாங்க ‘ என்று கூச்சல் போட்டால் (whistle blowers) அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவுமாக ஏற்படுப்படுத்தப்பட்ட சட்டம் இது.

இந்தியாவில் விசிலடித்தால் வீட்டுக்கு ஆட்டோ வரும்.

**************************************************

தமிழில் குறும்படங்கள் எத்தனை இதுவரை தயாரித்திருப்பார்கள் ?

முப்பது ? நூற்றுப் பதினெட்டு ? முன்னூத்திருபத்து நாலரை ?

நிச்சயமாக இந்த எண்ணிக்கை நாலு இலக்கத்தை எட்டியிருக்காது என்று தோன்றுகிறது.

எழுத்தாளர் சிவகாமி ஒரு குறும்படம் எடுத்திருக்கிறார். கி.ரா கதையொன்று – யார் இயக்கம் என்று நினைவில்லை).கிராமத்து அப்புராணி இளைஞனின் கோவணத்தை உருவி விட்டுச் சிரிக்கிற பெண் பற்றியது – படமானது நினைவிருக்கிறது. காலஞ்சென்ற மோனிஷா நடித்த படம்.

லெனின் இயக்கிய ‘நாக் – அவுட் ‘ கூட நினைவு வருகிறது. ஞாநியின் மகன் மனுஷ்நந்தன் இயக்கிய அசோகமித்திரன் சிறுகதைகள் அடிப்படையிலான குறும்படங்களை ஏழெட்டு வருடம் முன்னால் திரையிட்டார்கள்.

அம்ஷன் குமார் படங்களை லண்டன் விழாவில் பார்த்தது பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். எழுத்தாளர் வெங்கடேஷ், ஆதவன் பற்றி ஆவணப் படம் எடுக்க உழைத்துக் கொண்டிருக்கிறார்.

குறும்படங்கள் எவ்வளவு நன்றாக இருந்தாலும் அவற்றை வெளியிட தியேட்டர் கிடைக்காது என்பதால் தேடிப் போய்த்தான் பார்க்க வேண்டும். இந்தியாவில் மட்டுமில்லை, இங்கிலாந்திலும் இதே நிலைமை தான்.

என்னத்தை விழா ஏற்பாடு பண்ணி, என்னத்தைக் கூட்டம் சேர்த்து, என்னத்தைப் பேசி …

பார்த்தார்கள் துரைகள். சுளுவாக ஒரு வழி கண்டுபிடித்தார்கள்.

என்னவாக்கும் அது ?

ஓடு சலூன் கடைக்கு.

நம்ம ஊர் சலூனில் கத்திரி அழைப்புக்காகக் காத்திருக்கும்போது நமக்கு என்னவெல்லாம் கிடைக்கும் ? பழைய ராணி, சினிக்கூத்து, முந்தாநாள் தினத்தந்தி, பிரதமர் தேவே கெளடா என்று கட்டுரை வந்திருக்கும் புத்தம்புது இந்தியா டுடே. தவிர வானொலியில் நைண்டி எய்ட் பாய்ண்ட் த்ரீ மிர்ச்சி சுசித்ராவின் மெஷின் கன் பேச்சு.

பிரிட்டாஷ்காரர்கள் சுபாவமாகவே நிறையப் பேச மாட்டார்கள். பக்கத்துப் பக்கத்து நாற்காலியில் உட்கார்ந்து முப்பது வருஷம் குப்பை கொட்டி ரிடையர் ஆனாலும், யாராவது ஒருத்தர் பரஸ்பர அறிமுகப்படுத்தி வைக்கவில்லை என்றால் முப்பது வருஷமும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ள மாட்டார்கள் என்று சொல்வார்கள் (இப்போ இல்லை அப்படி).

யார்க்ஷையர் சலுன் கடையில் முடி வெட்டக் காத்திருக்கும் ஆண்களும், முடிக்குச் சாயம் தோய்க்க, தோய்த்த சாயம் உலரக் காத்திருக்கும் பெண்களும் தேமேன்னு தேவுடு காப்பதைப் பார்த்திருக்கிறேன். (நான் கடை வாசலில் கடைக்கு ஆள் பிடிப்பது போல் நின்று கொண்டு குளிர் காய்ந்தபடி தெரு விநோதத்தில் மூழ்கியிருப்பதும், முடி திருத்தும் அம்மணி தோளில் தட்டி உள்ளே கூட்டிப் பொவதும் வாடிக்கை).

இப்போது சலூன் கடையில் செலவழிக்கும் பொழுது உருப்படியாகப் போகக் குறும்படத் தயாரிப்பாளர்கள் புண்ணியத்தில் ஒரு வழி பிறந்திருக்கிறது. இந்த மாதக் கடைசியில் இங்கிலாந்தில் அறுநூறு முடி திருத்தகங்களில் குறும்படங்களைத் தொடர்ந்து திரையிட ஏற்பாடு செய்யப் போகிறார்கள்.

நம் ஊரிலும் இது மாதிரி நடந்தால் நண்பரும் சிகையலங்கார நிபுணருமான ஜோசப்பிடம் ‘காதுப் பக்கம் கொஞ்சம் போல விட்டுட்டு வெட்டுங்க. க.நா.சு பத்தி ஏதோ புதுப்படம் வந்திருக்காமே ? ஓட விடுங்க. முடிக்கு ஷாம்பு போட வெதுவெதுப்பா வெந்நீர் ரெடியா ? ‘ என்று விசாரிக்கலாம்.

இரண்டு கேள்விகள் –

முடி வெட்டிக்கொள்ள அவசியமில்லாத நண்பர்கள் குறும்படம் பார்க்க என்ன செய்வது ?

ஒரே குறும்படத்தைத் திரும்பத் திரும்பப் பார்க்க வாய்க்கிற முடிதிருத்தும் தொழிலாளிகள் மனநிலை எப்படி இருக்கும் ?

***********************************************

காலையில் அலுவலகம் போகும் போதும் இரவில் வரும்போதும் வானொலியில் கேட்டுக் கிரகித்தது –

1) இன்று டிசம்பர் பதினொன்றாம் தேதி.

2) பிறந்த நாளைக் கொண்டாடத் தமிழகமே தயார்.

3) முக்கியமான அரசியல் தலைவர்களும், திரைப்பட நட்சத்திரங்களும் சின்னத்திரையிலும், வானொலியிலும் அவரைப் பற்றிக் கருத்துப் பகிர்வுக்கு வரப் போகிறார்கள்.

4) தமிழர்கள் எல்லோரும் அவ்விதமே தங்கள் அன்பையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கக் கோரப்படுகிறார்கள்.

5) பிறந்தநாள் இன்றைக்கு இல்லை. நாளை – டிசம்பர் 12ம் தேதி.

6) சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் அது.

7) டிசம்பர் பதினொன்றாம் தேதியின் சிறப்பு – அது சூப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு முந்தைய நாள்.

8) சுப்பிரமணிய பாரதியார் என்பவர் துருவப் பிரதேசத்தில் பிறந்து இன்யூட்கள் மொழியில் ஏதோ எழுதி சஹாரா பாலைவனத்தில் எழுநூறு வருடம் முன்னால் ஒட்டகம் மிதித்து இறந்து போனவர். அவருக்கும் தமிழ்நாட்டுக்கும்

எந்தத் தொடர்பும் இல்லை.

*************************************************

இந்த வாரச் செய்தித் தலைப்பு –

‘டொனால்ட் ரம்ஸ்பெல்ட் ஈராக் போனார். சவ அடக்கத்தில் நாலு பேர் சாவு ‘

கனகுஷியோடு திறந்து பார்த்தேன். சவ அடக்கம் வேறு யாருக்கோவாம்.

*********************************************

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்