சரவணன் கட்டுரை பற்றி மாலன் – ஒரு பின் குறிப்பு

This entry is part [part not set] of 29 in the series 20020728_Issue

கோபால் ராஜாராம் / மாலன்


(சென்ற இதழில் வெளியான மாலன் கடிதத்தை முன்வைத்து, ‘திண்ணை ‘ ஆசிரியர் குழுவினரில் ஒருவரான கோபால் ராஜாராம் மாலனுக்கு எழுதிய, பகுதி தனிப்பட்ட முறையிலான கடிதத்தின் , பொருத்தமான பகுதி இங்கு அவரது அனுமதியோடு பிரசுரிக்கப் படுகிறது. மாலனது சென்ற இதழ் கடிதத்தோடு இந்த இரண்டு பகுதிகளும் பிரசுரிக்கப்படவேண்டும் என மாலன் கேட்டுக் கொண்டபடி இந்தக் கடிதத்தின் பகுதியும், மாலன் பிரசுரத்திற்கென்று எழுதிய பதிலும் இங்கே. – திண்ணை ஆசிரியர் குழு)

அன்புள்ள மாலன்,

வணக்கம்.

உங்கள் கடிதம் கிடைத்தது.

ராஜநாயகம் கட்டுரையைப் பிரசுரிக்கும்போது, அவருக்கு நிகழ்ந்தது அநீதியா என்பது பற்றி விவாதம் ஏற்படவேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். ஜெயமோகன் வாக்கியத்தில் ராஜநாயகம் கண்ட அர்த்தம் இருக்கிறதா என்பதை ஆராயவும், அதனைத் தாண்டி, தளையசிங்கம் பற்றியும், இதனால் தளைய சிங்கம் போன்ற மற்ற ஆளுமைகளையும் பற்றி விவாதங்கள் தொடரவேண்டிய அவசியத்தையும் உணர்ந்ததால் தான் நாங்கள் ஜெயமோகன் கட்டுரையையும், பின்பு ஜெயமோகனைக் கடுமையாக விமர்சித்த ராஜநாயகம் கட்டுரையையும் பிரசுரித்தோம். உங்கள் கட்டுரை, ராஜநாயகத்தின் புரிதலினை அப்படியே எடுத்துக் கொண்டு எழுதியிருந்ததால், அதற்கு மாறான கருத்தாக சரவணனின் கட்டுரையைப் பிரசுரித்தோம். அவதூறு என்ற மிகைபடுத்தப் பட்ட சொற்பிரயோகம் அவருடைய எழுதும் பாணி என்றும் கருதினோம். நாங்கள் கருத்துகளுக்கான மேடையாகவும், அவரவர் பொறுப்பேற்கும் வண்ணம் எழுதவேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் தான் திண்ணையை நடத்தி வருகிறோம். அதனால் தான் அவரவர் மின்னஞ்சல் முகவரியையும் முடிந்தவரையில் தர முயல்கிறோம். இன்னொரு புதைக்கப்பட்ட சிறுபத்திரிகையாய் திண்ணை ஆகிவிடக்கூடாது என்பதனால், பரந்துபட்ட அளவில் அரசியல், விஞ்ஞானம் போன்ற பல தளங்களில் கருத்து வெளிப்பாடு அளித்து வருகிறோம். ஆனாலும் இப்படிப்பட்ட சூடான விவாதங்கள் கருத்து வெளிப்பாட்டைத் தாண்டி தனிப்பட்ட முறையில் செல்வது வருத்தமளிக்கிறது. சிறுபத்திரிகைகளுக்கே உரித்தான சாபக் கேடு போலும் இது. உங்களிடமிருந்து வரும் படைப்புகளின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உண்டு. ஆனால் அதே நேரம் மாற்றுக் கருத்துகளைத் தடை செய்வது – அதன் மொழிக்காக அதை எடிட் செய்வது – என்பது சரியல்ல என்றும் நம்புகிறோம். சரவணனின் கட்டுரையை மீண்டும் படித்தபோது, உங்கள் கருத்தும், ஜெயமோகனின் கருத்தும் பல இடங்களில் ஒத்துப் போவதையும் காண முடிந்தது. உங்கள் கடிதத்தை கடிதமாக வெளியிடலாமா அல்லது, தனிக் கட்டுரையாக வெளியிடலாமா என்று தெரிவியுங்கள்.

அன்புடன்

கோ ராஜாராம்

சூலை 15 2002.

***

பிரசுரத்திற்கு

அன்புள்ள ராஜாராம்,

என்னுடைய கேள்வி மிக எளிமையானது. திண்ணையில் எழுதுபவர்கள் விவாதம் என்ற பெயரில், எதை வேண்டுமானாலும், எந்தச் சொற்களை வேண்டுமானாலும் எழுதலாமா ? அப்படி எழுதும் போது திண்ணையின் நிலை என்ன ?

திண்ணையில் வெளியாகும் கருத்துக்கள், குறிப்பாக தனிமனிதர்கள் மீதான விமரிசனங்களை அவை உண்மையா, மிகைப்படுத்தப்பட்டவையா, உண்மைக்கு மாறானவையா என்று சரி பார்த்துக் கொள்ளும் வாய்ப்பு வாசகனுக்கு இருக்கும் என்று சொல்வதற்கில்லை. அதன் காரணமாக திண்ணையில் வெளியாகும் செய்திகளின் / கருத்துக்களின் நம்பகத்தன்மைக்கு திண்ணை ஆசிரியர் குழுதான் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி அது ஏற்றுக் கொள்கிறது என்ற நம்பிக்கையில்தான் திண்ணையைப் படிக்கிறோம். படித்தவை குறித்துக் கருத்துத் தெரிவிக்கிறோம்.

அந்த வகையில் ‘ தளையசிங்கம் பாலியல் கதைகளுக்காக அடித்துக் கொல்லப்பட்டார் என்ற தொனியும் அவருடைய (ஜெயமோகன்) விமர்சனத்தில் இருப்பதைச் சுட்டிக் காட்டி எழுதுகிறேன் ‘ என்று ராஜநாயகம் திண்ணையில் எழுதும்போது, அதை அதன் முக மதிப்பில் ஏற்றுக் கொண்டு, அதனடிபடையில் கருத்துத் தெரிவித்திருந்தேன் ஜெயமோகன் அப்படி எழுதினாரா என்று உங்களுக்கு சந்தேகம் இருந்திருந்தால். 1) நீங்கள் அதற்கான தரவுகளை நீங்கள் ராஜநாயஹத்திடம் கேட்டுப் பெற்றிருக்க வேண்டும். 2) அல்லது அந்தக் கட்டுரையை நிராகரித்து இருக்க வேண்டும் 3) அல்லது அந்த வரிகளை நீக்கிப் பிரசுரித்திருக்க வேண்டும்.

(ராஜநாயகத்தின் கட்டுரையில் சில பகுதிகள் நீக்கிப் பிரசுரிக்கப்பட்டதாக அவர் எனக்கு எழுதிய கடிதத்தின் மூலமும், காலச்சுவடு இதழில் பிரசுரமாகி உள்ள கட்டுரை மூலமும் அறிகிறேன். ராஜநாயஹத்தின் போதைப்பழக்கம் பற்றிய பகுதியை கட்டுரையில் தக்க வைத்துக் கொண்ட நீங்கள், ஜெயமோகனின் பத்திரிகைக்கு ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து பணம் வருகிறது என்று கதைக்கப்பட்ட பகுதியை நீக்கியிருப்பதில் ஜெயமோகன் மீதான அபிமானம் வெளிப்படுகிறது என்றெல்லாம் நான் உள்நோக்கம் கற்பிக்க மாட்டேன்) இஇவை எதையும் செய்யாத பட்சத்தில் அந்த வரிகளை நம்பித்தான் ஒரு வாசகன் எதிர்வினை செய்யமுடியும்.

அதே போல் நான் ‘ கூசாமல் அவதூறை அவிழ்த்துவிடுகிறேன் ‘ என்று ஒருவர் எழுதினால், என்னுடைய கட்டுரையில் எது அவதூறு என்று நீங்கள் அவரிடம் ஆதாரம் கேட்டிருக்க வேண்டும். அவரால் அதற்கான ஆதாரங்கள் தரமுடியாத பட்சத்தில் அந்த வ்ரிகளை நீங்கள் செம்மைப்படுத்தி எழுதித் தருமாறு அவரைக் கேட்டிருக்க வேண்டும். அது சாத்தியமற்ற பட்சத்தில் அந்தக் கடிதத்தை

நிராகரித்து இஇருக்க வேண்டும்.

அவதூறு என்ற மிகைப்படுத்தப் பட்ட சொற்பிரயோகம் அவருடைய எழுதும் பாணி என்றால், வேறு யாரேனும் ஒருவர், கழிப்பறைச் சொற்களில் ( அதாவது ‘கெட்ட ‘ வார்த்தையில்) ஒருவரைப்பற்றி எழுதி, இஇந்த சொற் பிரயோகங்கள் என் எழுதும் பாணி, என்றால் பிரசுரித்து விடுவீர்களா ? திண்ணையில் வெளியாகும் மொழி நடைக்கு நீங்கள் பொறுப்பில்லையா ?

மீண்டும் சொல்கிறேன். நான் எழுதியதிருப்பதில் எது அவதூறு என்று அந்த நண்பர் ஆதாரத்தோடு சுட்டிக் காட்ட வேண்டும். அப்படிக் காட்ட முடியாத பட்சத்தில் அவர் திண்ணையில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்; தனது கட்டுரையைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆதாரமில்லாது என்னைத் தாக்கியதற்காக திண்ணையும் மன்னிப்புக் கேட்க வேண்டும். அந்தக் கட்டுரையை தனது ஆவணக் களஞ்சியத்திலிருந்து நீக்க வேண்டும்.

இஇவை என் குறைந்தபட்ச demands.Yes. I demand and I don ‘t request.

எவர் வேண்டுமானாலும், எவரைப் பற்றி வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் விவாதம் என்ற பெயரில் எழுதலாம் என்ற அராஜகத்திற்கு ஒரு முடிவு ஏற்பட்டாக வேண்டும்.

மாலன்

Series Navigation

கோபால் ராஜாராம் / மாலன்

கோபால் ராஜாராம் / மாலன்