ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)
கடல் ஆரவாரமற்று அமைதியாக இருந்தது; வெள்ளை மணல்களை வெகு அரிதாகவே சிற்றலைகள் தொட்டன. விரிந்த வளைகுடாவைச் சுற்றி, வடபுறம், நகரம் இருந்தது. தெற்கே, ஈச்ச மரங்கள் கடலைத் தொடுமளவு நெருங்கி நின்றன. ஆழமற்ற நீர்ப்பரப்பினுள் நின்ற மணல்மேட்டிற்குப் பின், ஆழம் நிறைந்த கடலிலே சுறாக்கள் தென்பட ஆரம்பித்தன. அவற்றுக்குப் பின்னே மீனவர்களின் – வலிமையான கயிற்றினால் கட்டப்பட்ட மரத்துண்டுகளாலான – கட்டுமரங்கள் தெரிந்தன. அவை ஈச்ச மரங்களுக்கு தெற்கேயிருந்த ஒரு சிறு கிராமத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தன. சூரிய அஸ்தமனம் மிகவும் சிலாகிக்கத்தக்கதாய் இருந்தது; அது எல்லோரும் எதிர்பார்க்கக் கூடிய திசையிலே நிகழவில்லை – மாறாக கிழக்கிலே நிகழ்ந்தது; அது ஒரு நேரெதிர் சூரிய அஸ்தமனம் ஆகும். மிகப்பெரிய மற்றும் பல வடிவங்களாலான மேகங்கள், நிறமாலையின் எல்லா நிறங்களாலும் ஒளியூட்டப்பட்டிருந்தன. அது ஒரு மிகவும் அருமையான -அதே நேரத்தில், காண்போருக்கு ஏறக்குறைய ஒருவிதமான அவஸ்தையை உண்டாக்குகிற காட்சி. கடல்நீர் ஒளிமிகுந்த நிறங்களையெல்லாம் உள்வாங்கி, பின் அவற்றால் தொடுவானத்திற்கு ஒரு கண்கவரும் நேர்த்தியான பாதையமைத்திருந்தது.
வெகுச்சில மீனவர்கள் நகரத்திலிருந்து தங்கள் கிராமத்திற்கு திரும்பி நடந்துபோய்க் கொண்டிருந்தார்கள். ஆனால், கடற்கரை ஏறக்குறைய வெறிச்சோடி, நிசப்தமாயிருந்தது. ஒற்றை நட்சத்திரம் மேகங்களுக்கு மேலே தெரிந்தது. நாங்கள் திரும்பி நடந்தபோது, ஒரு பெண்மணி எங்களுடன் சேர்ந்தபடி, முக்கியமான விஷயங்கள் குறித்தெல்லாம் பேசத் தொடங்கினார். அவர் ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் அவ்வமைப்பின் உறுப்பினர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து வாழ்விற்கு அடிப்படையான நற்பண்புகளைத் தியானித்து, பண்படுத்தி வளர்ப்பதாகவும் அவர் சொன்னார். அங்கே, ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும், ஒரு நற்பண்பு தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்குப் பின் வருகிற நாட்களில் அது பண்படுத்தி வளர்க்கப்பட்டு, நடைமுறையில் செயல்படுத்தப்பட்டது. அவருடைய நடத்தை மற்றும் பேச்சிலிருந்து, அவர் சுயக்கட்டுப்பாட்டைக் (self-discipline) கற்றுத் தேர்ந்தவர் என்றும், ஆனால் அவரின் மனநிலையுடனும், நோக்கங்களுடனும் இணங்காதவர்களிடம் ஓரளவு சகிப்புத்தன்மையற்றவர் என்றும் தோன்றியது.
நற்பண்பு என்பது இதயத்தைச் சார்ந்தது – மனத்தை அல்ல. மனமானது நற்பண்பைப் பண்படுத்தி வளர்க்கும்போது, அது ஒரு கபடம் நிறைந்த திட்டமிடல் ஆகும்; அது ஒரு தற்காப்பு – சூழ்நிலைக்கேற்ப புத்திசாலித்தனமாக அனுசரித்துப் போதல். சுய-பூரணத்துவம் (Self-Perfection) என்பதே நற்பண்பை மிகவும் நிராகரித்தல் ஆகும். பயம் இருக்கிற இடத்திலே நற்பண்பு எப்படி இருக்க முடியும் ? பயமானது மனத்தைச் சார்ந்தது – இதயத்தை அல்ல. பயமானது தன்னை – நற்பண்பு, கெளரவம், இணக்கம், தொண்டு மற்றும் இன்னபிற என்று பலவிதமான வடிவங்களில் மறைத்துக் கொள்கிறது. உறவுகளிலும், மனத்தின் செயற்பாடுகளிலும் பயம் எப்போதும் உயிர் வாழ்கிறது. மனமானது அதன் செயற்பாடுகளில் இருந்து தனித்துப் பிரிந்த ஒன்றல்ல – ஆயினும் மனம் தன்னைப் பிரித்துக் கொள்கிறது; அதன்மூலம் மனமானது தனக்குத் தொடர்ச்சியையும் நிலையானத்தன்மையையும் (permanence) அளித்துக் கொள்கிறது. ஒரு குழந்தை பியானோவைப் பழகுவது போல – தன்னை மேலும் நிரந்தரமாக்கிக் கொள்ளவும், வாழ்க்கையைச் சந்திப்பதற்கு வலுவாக்கிக் கொள்ளவும், அல்லது தான் எதை மிகவும் உன்னதம் (the highest) என்று நினைக்கிறதோ அதை அடைவதற்காகவும் – மனம் மிகவும் தந்திரத்துடன் நற்பண்பைப் பயில்கிறது. வாழ்க்கையைச் சந்திக்க நிச்சயம் குறை காணக்கூடிய பலவீனம் (vulnerability) வேண்டும் – சுய-உறையிலிடப்பட்ட (self-enclosing) நற்பண்பு என்கிற மதிப்பிற்குரிய சுவர் அல்ல. மிகவும் உன்னதமான ஒன்று அடையப்பட முடியாதது; அதை அடைய எந்த வழியும் இல்லை; அதை அடைய கணக்கிடப்பட்ட படிப்படியான வளர்ச்சி முறைகள் இல்லை. உண்மை தானாக வரவேண்டும், நீங்கள் உண்மைக்குப் போக முடியாது, உங்களின் பண்படுத்தி வளர்க்கப்பட்ட நற்பண்பு உங்களை உண்மைக்கு அழைத்துச் செல்லாது. நீங்கள் எதை அடைகிறீர்களோ, அது உண்மை அல்ல; மாறாக அது உங்களின் சொந்த சுயப்-பிதுக்கமான (self-projected) ஆசைதான். ஆனால், உண்மையில் மட்டும்தான் பேரானந்தம் இருக்கிறது.
தன் சுய-சாசுவதமானத் தன்மையில் (self-perpetuation) இயங்குகிற மனத்தின் தந்திரமான பொருந்திப்போதல் (adaptability), பயத்தை நிலைநிறுத்துகிறது. இந்தப் பயம் தாம் மிகவும் ஆழமாக நிச்சயம் புரிந்து கொள்ளப்பட வேண்டும் – எப்படி நற்பண்புடையவராயிருத்தல் என்பதல்ல. ஓர் ஆழமற்ற மனம் நற்பண்பைப் பயிற்சி செய்யலாம்; ஆனால் அது அப்போதும் ஆழமற்றதாகவே இருக்கிறது. அப்போது – நற்பண்பு என்பது மனத்தின் ஆழமற்றத்தன்மையிலிருந்து ஒரு தப்பித்தலே ஆகும்; ஆழமற்ற மனமானது அப்படிச் சேகரிக்கிற நற்பண்புகளும் ஆழமற்றவையாகவே இருக்கும். இந்த ஆழமற்றத் தன்மையைப் புரிந்து கொள்ளாவிட்டால், அப்புறம் எப்படி உண்மைநிலையைப் (reality) புரிந்து கொள்ள முடியும் ? ஓர் ஆழமற்ற நற்பண்புடைய மனமானது எப்படி, அளவிடமுடியாத்தன்மைக்குத் தன்னைத் திறந்து வைக்க இயலும் ?
மனத்தின் இயக்கத்தைக் கிரகித்துக் கொள்ளும்போது – ‘நான் என்கிற நிலை ‘யைப் (self) புரிந்து கொள்ளும்போது – அங்கே நற்பண்பு பிறக்கிறது. நற்பண்பு என்பது சேகரித்து வைக்கப்பட்ட எதிர்ப்பல்ல.; அது தன்னிச்சையான விழிப்புநிலையும், எதுவொன்றைக் குறித்தும் ‘இது என்ன ‘ என்று புரிந்து கொள்ளுவதுமாகும். மனம் எதையும் புரிந்து கொள்ள முடியாது; அது புரிந்து கொள்ளப்பட்ட விஷயங்களைச் செயலாக மாற்றக் கூடும்; ஆனால், அதற்குப் புரிந்து கொள்கிற திறமை இல்லை. புரிந்து கொள்வதற்கு முழுமையான அங்கீகரித்தலும், ஏற்றுக் கொள்ளுதலும் தேவை. அவற்றை மனம் அமைதியாக இருக்கும்போது மட்டுமே இதயம் தர இயலும். மனத்தின் அமைதியானது தந்திரமான திட்டமிடலினால் விளைவதல்ல. அமைதிக்கு ஆசைப்படுவது என்பது முடிவற்ற முரண்பாடுகளும், வலியும் நிறைந்த சாதனை என்கிற சாபமாகும். ‘ஒன்றாக ஆக வேண்டும் ‘ என்பதான அடங்காத ஆசை – அது நேர்மறையானதாக அல்லது எதிர்மறையானதாக இருந்தாலும் – இதயத்தின் நற்பண்பைத் தடுக்கிறது. நற்பண்பு என்பது முரண்பாடும் சாதனையும் அல்ல; நீடித்தப் பயிற்சியும் அதன் விளைவும் அல்ல; மாறாக, அது – சுயப்பிதுக்கத்தினால் விளையும் ஆசைகள் மற்றும் அவற்றின் விளைவுகள் என்கிற நிலையில் இல்லாத ஒன்றாகும். ஒன்றாக ஆக வேண்டும் என்கிற போராட்டம் தொடர்கிற வரை, அங்கே நற்பண்பு இல்லை. ஒன்றாக ஆகவேண்டும் என்கிற போராட்டத்தில், எதிர்ப்பும் நிராகரிப்பும் இருக்கிறது, இந்திரிய நிக்ரகமும் கைவிடுதலும் இருக்கிறது. ஆனால், இவற்றையெல்லாம் விட்டு வெளிவருவது நற்பண்பல்ல. நற்பண்பு என்பது ஒன்றாக ஆகவேண்டும் என்கிற அடங்காத ஆசையிலிருந்து விடுபடுகிற சுதந்திரத்தின் சலனமற்ற அமைதியாகும். இந்தச் சலனமற்ற அமைதி இதயத்திலிருந்து வருவது – மனத்திலிருந்து அல்ல. பயிற்சி, நிர்ப்பந்தம், எதிர்ப்பு ஆகியவற்றின் மூலம் மனமானது தன்னை நிதானப்படுத்திக் கொள்ளலாம்; ஆனால், அத்தகைய ஒழுக்கமானது இதயத்தின் நற்பண்பை அழித்து விடுகிறது. இதயத்தின் நற்பண்பின்றி – அங்கே அமைதியில்லை, அங்கே பரமானந்தம் இல்லை. ஏனெனில், இதயத்தின் நற்பண்பு என்பது எதையும் புரிந்து கொள்ளுவதாகும்.
(மூலம்: வாழ்க்கை குறித்த வர்ணனைகள் – வரிசை : 1 – ஜே. கிருஷ்ணமூர்த்தி [Commentaries on living – Series: 1 – J. Krishnamurthi])
***
ஆசிரியர் குறிப்பு: பி கே சிவக்குமார் அவர்கள் ஜெயகாந்தன் பற்றி நடத்தும் இணையப்பக்கம் http://www.jeyakanthan.com
***
- துப்பறியும் சாம்பு
- ஆண்கள் – எப்படிப்பட்டவர்கள்
- காலச்சுவடு
- முயல் தடுப்பு வேலி – திரைப்படம்- ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர் வரலாற்றில் ஒரு கொடிய அத்யாயம்
- காலச்சுவடு பதிப்பகம் ஆகஸ்ட் 2002 வெளியிட இருக்கும் ‘புதுமைப்பித்தன் கட்டுரைகள்’ நூலுக்கு எம். ஏ. நுஃமான் அளித்துள்ள முன்னுரையின்
- பாரதிதாசன்
- பரவசமும் துக்கமும் (எனக்குப் பிடித்த கதைகள் -20 க.நா.சு.வின் ‘கண்ணன் என் தோழன் ‘)
- இத்தாலிய முட்டை தோசை
- காய்கறி முட்டைதோசை (வெஜிடபிள் ஆம்லெட்)
- ப்ரெஞ்ச் முறை ரொட்டி ( ப்ரெஞ்ச் டோஸ்ட் )
- அசுர விண்வெளி மீள்கப்பல்கள் புரிந்து வரும் அண்டவெளிப் பணிகள்
- அறிவியல் மேதைகள்- மைக்கேல் ஃபாரடே (Michael Faraday)
- சிறு சிறுத் துளிகள்
- ஒரு வரம்.
- சத்தியமாய் நீ பண்டிதனல்ல
- புதுயுகம் பிறக்கிறது
- கழுதை ஞானம்
- இருத்தல் குறித்து 3 கவிதைகள்
- இந்த நாடு விற்பனைக்கு.
- பரல்கள்
- திண்ணைப் பாடல்கள்
- இந்த வாரம் இப்படி – சூலை 28 2002 (ஜெயலலிதாவுக்கு அழைப்பு, கிருஷ்ணகாந்த், பாகிஸ்தான், என் ராம்)
- முயல் தடுப்பு வேலி – திரைப்படம்- ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர் வரலாற்றில் ஒரு கொடிய அத்யாயம்
- சரவணன் கட்டுரை பற்றி மாலன் – ஒரு பின் குறிப்பு
- நற்பண்பு (Virtue)
- உலக நாடுகளின் கடன் – ஆரம்பமும், தொடர்ச்சியும் – ஒரு எளிய முன்னுரை -1
- பெரியண்ணா மீது பெருவியப்பு
- குஜராத்தும் நமது அறிவுஜீவிகளும்
- போதி