அரசியல்வாதிகள் வேலைக்குத் தகுந்த ஊதியம் – எதிர்வினை 1

This entry is part [part not set] of 18 in the series 20010513_Issue

கிரிஸ்


அரசியல் தலைவர்கள் தனியார் நிருவன அதிகாரிகள் போல் ஊதியம் (இன்ஸென்டிவ்) பெறுவது பற்றிய கட்டுரைக்கு எதிர்வினை.

தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்து, வாடிக்கையாளரிடம் ஏதாவது விற்று லாபம் ஈட்டி, அந்த லாபத்துக்கு பங்களித்த நிர்வாகிகளுக்கும், ஊழியர்களுக்கும் உதாரணமாக விற்பனையாளருக்கு, ஏதோ ஒரு பங்கு கொடுக்கும். தாங்கள் குறிப்பிட்ட அரசாங்க-நிறுவனம் என்பது, தொழில் துறைக்கான அனுமதி கொடுத்து, தொழில்துறையும், மக்களும் பலனடைந்து வரும் வரி பணத்தில் ஒரு பகுதியை அரசியல் வாதிகளுக்கு ஊதியமாக வழங்க வேண்டும் என்றாகிறது. அதாவது இங்கு முதலீடு என்பது தொழில்துறை கொண்டு வருவதற்கான முயற்சி அல்லது அனுமதி என்றாகிறது. தனியார் கம்பெனிகளின் முதலீடு இத்தகைய ‘அப்ஸ்ட்ராக்ட் னெளன் ‘ அல்ல. மிகவும் துணிச்சலாகவும், சவாலாகவும் இருக்கும் பொருள் மற்றும் கடன் வாங்கி முதலீடு செய்கிறார்கள். ஆகையால் அவர்கள் லாபத்துக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். இந்த அடிப்படை சமாச்சாரம் புரியாமல் அரசியல்வாதிகள் செய்யும் ஊழல் சட்டபூர்வமாக்கப்பட வேண்டும் என்ற தங்கள் பரிந்துரை வேடிக்கையாக இருக்கிறது. ஊழல் செய்யும் அரசியல் தலைவனை கல் அல்லது காலணி கொண்டு அடிப்பதுதான் சட்டபூர்வமாக்கப் பட வேண்டும். ஆனால் இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எனவே அப்படி யாராவது பரிந்துரைப்பது அசத்துத் தனம். (தங்கள் கட்டுரையில் கட்சித் தொண்டர்களுக்கு என்ன கொடுப்பது என்ற பரிந்துரை இல்லாதது சற்று சங்கடமாக உள்ளது. பஞ்சாயத்து தலைவர், நகர மேயருக்கு போனால் போகட்டும் என்று ஏதோ குறிப்பிட்டிருந்தீர்கள்).

இரண்டாவதாக, நீங்கள் சொல்லும் மற்றோர் காரணமான படித்த அறிவாளிகள் சட்டபூர்வமாகி விட்ட ஊழல் காரணமாகவும், ஊதியம் காரணமாகவும் அரசியலுக்கு வருவார்கள் என்ற பரிந்துரை பற்றியது. படித்த அறிவாளிகள் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள். கம்பெனி சிஈஓ, மற்றும் எச்சுக்குட்டிகளையா ? நான் மற்றொரு அறிவு ஜீவி கூட்டத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அதுதான் ஐஐடி, ஐஐஎஸ்ஸி போன்ற கல்வி நிலயங்களில் கம்பெனி எச்சுக்குட்டி சம்பளத்தோடு ஒப்பிட்டால் மிகவும் சொல்ப சம்பளத்தோடு பேராசிரியர்களாக ஆராய்ச்சித்துறையில் இருப்போரைப் பற்றியது. மாணாக்கராக இருந்த போது எச்சுக்குட்டிகள் போலவோ அல்லது அதற்கும் மேலாகவோ மதிப்பெண் பெற்று, ஐக்கிய அமெரிக்காவிலோ, வேறு ஏதாவது ஒரு நாட்டிலோ பிஹெச்டி செய்து வந்திருப்பார்கள். அவர்களுக்கு படித்து முடித்ததும் என்ன குறிக்கோள் இருந்தது என்று கேட்டுப்பாருங்கள்.

‘முதலில் இந்தியா திரும்பவேண்டும். அங்கு ஏதாவது கல்விநிலையத்திலோ, ஆராய்ச்சிக்கூடத்திலோ, ஆராய்ச்சி மாணவர்ளுக்கு வழிகாட்ட வேண்டும். அது இல்லையானால், ஏதாவது ஒரு கம்பெனியில் மானேஜ்மெண்ட் வேலைக்கு சேர வேண்டும். கிடைப்பது சுலபம்தான். ஆனால், முக்கியத்துவம் என்பது ஆராய்ச்சிக்குத்தான் ‘

என்று பதில் வரும். கம்பெனியில் சட்டபூர்வமாக உள்ள ‘நேர்மை ‘ மீது படித்தவருக்கு இத்தனை மரியாதை. அப்பொழுது கம்பெனி எச்சுக்குட்டிகள் அறிவாளி இல்லையா ? வெறும் சாம்பார் வாளிகளா ? என்று கேட்கும் கேள்வியில் நிச்சயம் ஞாயம் உள்ளது.

கம்பெனிகள் எச்சுக்குட்டிக்கு என்று சில கல்வித்தகுதி வைத்திருக்கும். எம்பிஏ, பிடெக், பிஹெச்டி, எம்எஸ் என்று ஏதாவது தகுதி. எச்சுக்குட்டிகளாக இருப்பவரும், மிகுந்த புத்திசாலித்தனம் உள்ளவர்களாகத் தேறி இருப்பார்கள். நுனி நாக்கு ஆங்கிலம், மரியாதை என்று இருப்பார்கள். ஒன்றிரண்டு சிபாரிசு பிடித்து வந்து ‘பக்ர பக்ர ‘ என்று தவளைக் கத்தும் கத்தும். இருந்தாலும், தவளைகளுக்கும் சில கல்வித்தகுதி, முன் அனுபவம் என்று நிர்ணயம் இருக்கும். எல்லாம் உருளாண்டி, பிரளாண்டி என்று புரட்டு செய்யும். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஏதாவது ஒரு பிரிவில் வேலை செய்யும் ஊழியரில் பெரும்பான்மை எந்த மானிலத்தவர், ஜாதிக்காரர் என்பதை வைத்து அந்தப் பிரிவின் நிர்வாகிகள் எந்த மானிலம், ஜாதி என்று சுலபமாகவும் சரியாகவும் கணிக்க முடியும். (தாங்கள் குறிப்பிட்ட ‘சம்பாத்தியம் குறியாக இருக்கும் எம் எல் ஏ, ஜாதி வித்தியாசம் பாராமல் தொழில் முன்னேற்றத்தில் பெருமளவு அக்கறை செலுத்துவான் ‘ என்ற பரிந்துரையை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்). எச்சுக்குட்டிகள் வருமானம் பற்றி அனைவருக்கும் தெரியும். வருமான வரியும் ஏகப்பட்டது கட்டுவார்கள். எவ்வளவு கட்டினார்களோ, அதில் ஒரு காசு குறையாமல் வவுச்சர் போட்டு, கம்பெனியிலிருந்து நோட்டாக வாங்கி வைத்துக்கொள்வார்கள் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்பிகிறேன். அது ஏன் காசோலைகள் மாத்திரம் வருமான வரிக்குக் கணக்கில் கொள்ளப்படுகிறது என்பது எனக்கு இது வரை பதில் கிட்டாத ஒரு கேள்வி. இல்லை நோட்டும் கணக்கில் எடுக்கப்பட வேண்டியது என்பதுதான் உண்மை என்றால், படித்த எச்சுக்குட்டிகளின் ‘நேர்மை ‘ மிகவும் போற்றப்பட வேண்டிய சமாச்சாரமே.

நான் கேட்கும் கேள்வி: ஏன் தாங்கள் அரசியல் வாதிகளுக்குக் குறைந்த பட்சத்தகுதி என்று எதுவும் பரிந்துரைக்க வில்லை ? எச்சுக்குட்டியாகிவிட்ட படித்த அறிவாளி செய்வதைத்தான் படிக்காத சாம்பார் வாளி அரசியல்வாதியும் செய்கிறான், ஏன் தனியாக கல்வித்தகுதி என்று ஒன்று பரிந்துரைக்க வேண்டும் என்று தாங்களே முடிவு செய்திருக்கலாம்.

சரி நானும் ஏதாவது மாற்று சொல்லவேண்டும் அல்லவா ? என்னுடைய பரிந்துரைகள்:

1. அனைத்துத் தொழிலாளருக்கும் வாழ்க்கைத்தரம் உயரும் வண்ணம் ஊதியம் அளிக்கப்படவேண்டும். நான் இந்தக் கட்டுரையை ஆஸ்ட்ரைலியாவிலிருந்து எழுதுகிறேன். ஆகையால் இங்கிருந்து உதாரணம். என் வீட்டில் ஒரு நாள் கழிப்பரையில் வாசனைக்கு வைக்கும் சாதம் விழுந்து ஒரு அடைப்பு. ப்ளம்பர்கள் ஏழு அல்லது எட்டு பேரோடு தொலை பேசினேன். மிகவும் குறைந்த கூலி என்பது நூற்றைம்பது டாலராக இருந்தது. என் கையில் எப்போதும் ஒரு பெரிய உபகரணப் பெட்டி இருக்கும் என்பதால் நானே பதினைந்து நிமிடத்தில் எந்தவித அறுவருப்பான அசம்பாவிதம் நிகழாமல் சரி செய்துவிட்டேன். சென்ட்ரல் ஹீட்டிங்க் அல்லது பாத்திரம் கழுவும் இயந்திரம் பழுது பட்டால் தொழிலாளியிடம் தொலை பேசி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினாலே அறுவது டாலர். அதன் பின்னர் ஒவ்வொரு பதினைந்து நிமிடத்துக்கும் நாற்பது டாலர். ‘இப்ப நேரம் சரியில்லை, நாளைக்கு வாப்பா ‘ என்று கூலி கொடுக்காமல் டபாய்க்க முடியாது. இத்தனை கூலி வாங்கி சொந்த வீடு, பண்ணை என்று வசதியாக வாழும் உழைப்பாளி பள்ளி இறுதி கூட வந்திருக்கமாட்டான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆகையால் ஆஸ்ட்ரைலிய பல்கலைக்கழகங்கள் வருமானத்துக்காக் இந்திய மாணவர்களை கவர்ந்திழுக்கும் வண்ணம் பல திட்டங்களைத் தீட்டுகிறது.

என்னுடைய பரிந்துரை என்பது அடிமட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நல்ல ஊதியம் என்பதே. வரப்புயர நீர் உயரும் என்பது போல் இதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று பார்ப்போம்.

தாங்கள் தங்கள் கட்டுரையில் எந்த வித ஆதாரமும் இல்லாமல் போகிறபோக்கில் குறிப்பிட்டிருந்த அடிப்படைத் தொழில்களின் மதிப்பு உயர்வு என்பது ஏற்படும். அடிப்படைத் தொழிலில் விருப்பம் இருந்து ஊதியம் அதிகம் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக ‘எப்பிடியும் க்ளார்க் ஆயிருணம் ‘ என்ற மனப்பான்மை குறையும். கல்வி கற்பவர்கள் கடனெழவே என்று படிக்க வரமாட்டார்கள். பட்டப் படிப்பு மாத்திரம் கல்வி என்பதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன். போய்ப் பாருங்கள், மீன் காரிகளை. எழுதப் படிக்கத் தெரியாமல் மனதுள் எத்தனை வேகமாகவும், துல்லியமாகவும் கணக்கிடுகிறார்கள் என்று. தொழில் நேர்த்தி அதிகரிக்க கல்வி மாத்திரம் பெருந்துணை செய்து விட வில்லை.

சிறு வியாபரங்கள் பெருகும். எல்லாத் தொழிலாளிகளும் சிறு வியாபாரிகள் ஆவார்கள். தொழில் தரம் உயரும்.

ஓரளவுக்கு வசதியான சூழ்நிலையில், தொழிலாளியின் வாரிசுகளால் தங்களுக்குப் பிடித்த தொழிலை மேற்கொள்ள இயலும்.

அடிப்படைத் தொழிலாளிகள் வருமான வரி கட்டுகையில் அரசு வருமானம் அதிகரிக்கும். தொழிலாளி ஊதியத்தாலாவது கள்ளப் பணப் புழக்கம் குறையும்.

தொழிலாளியின் கூலி அதிகரிக்க, பன்னாட்டுக் குப்பைகள் நம் நாட்டில் சேறுவது தவிர்க்கப்படும்.

2. கணினி நிரலர்களுக்கு, மிக மிக மிக அதிக ஊதியம் வழங்கப்பட வேண்டும். இது இன்றைய நிலை. நாளை எந்தத் தொழிலில் அரசாங்கத்துக்கு வெளிநாட்டுப் பணம் வர வாய்ப்பு உள்ளதோ, அந்தத் தொழிலாளர்கள் ஊதியம் மிகுந்த அளவில் அதிகரிக்கப்பட வேண்டும்.

3.தேர்தல் செலவுகள் கட்சி செலவுக்களுக்கு ஒரு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.

4. எம். எல். ஏ மற்றும் எம். பி களின் ஊதியம் இரண்டாயிரத்திலிருந்து அவர்கள் ஓரளவு வசதியாக வாழத்தக்க வகையில் உயர்த்தப் பட வேணும். இவர்கள் தனியார் நிறுவனத்தின் பராமரிப்பாளர்கள் போல். இவர்களுக்கு இன்ஸெண்டிவ் தேவை இல்லை.

5. மத வழிபாடு அதிகம் உள்ள நாடுகளில் வாழ்கைத் தரம் குறைவாக இருப்பதைக் காணலாம். எளிய வழிபாடுகளை அனுமதித்தலும், பெரிய பெரிய வழிபாட்டு நிலையங்களுக்கு மிகப் பெரிய அளவில் வரி விதித்தலும் முக்கியம். பெரிய வழி பாட்டு நிலையங்கள் வரி அதிகமானால் நுழைவுக் கட்டணம் அதிகரிக்குமே என்று யாராவது கேட்கக் கூடும். வழி பாட்டு நிலையம், சினிமா தியேட்டர் இந்த இரண்டு இடங்களிலும் நுழைவுக் கட்டண உயர்வு அவற்றின் வியாபாரத்தைக் குறைத்து விடாது. அரசுக்கு வருமானம் கூடும்.

6. ஆராய்ச்சி கூடங்களில் என்னத்தையாவது கொட்டிக் கலக்கி, அளந்து அதை ஒரு பேப்பராக எழுதி, ஏதாவது ஜர்னலுக்கு அனுப்புவதில் குறியாக இருப்பார்கள். இவர்கள் ஆராய்ச்சிக்கு பெரும்பாலும் உதவுவது அரசாங்கமே. அரசாங்கம் இந்த முதலீட்டை பயனுள்ளதாக ஆக்கலாம். உதாரணமாக பேட்டண்ட்களை ஊக்குவிக்க வேண்டும். பேட்டண்ட்களுக்குப் பங்களிப்பவருக்கு அரசாங்கம் தனியாக ஒரு இன்ஸெண்டிவ் அளிக்க வேண்டும். ஆராய்ச்சிக்குத் தேவை தனியார் கம்பெனி மாதிரியான நிர்வாகம். வெளிநாட்டு தொழில் துறை ப்ராஜக்ட்டுக்களை வாங்க இந்திய ஆராய்ச்சியாளர் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

7. அரசாங்க சர்வீஸ்களுக்கு ஃபீஸ் வசூலிக்கப்பட வேண்டும். முக்கியமாக போலீஸ் வெரிஃபிகேஷன் போன்ற விஷயங்களுக்கு. வரும் ஃபீஸைப் பொருத்து அந்த ஊழியர்களுக்கு இன்செண்டிவ் வழங்கப் பட வேண்டும். கோப்புக்கள் தேங்கிப் போகாமலிருந்து, தொழில் தொடங்க வேண்டி யார் கையில் எவ்வளவு அழுத்துவது என்று புரியாமல் விழிப்பவருக்கு தொழில் தொடங்க எளிதாக இருக்கும். எந்த ஊரில் எளிதாகத் தொழில் தொடங்க இயலுகிறதோ, அந்த ஊர் அரசாங்க நிர்வாகிக்கு இன்ஸெண்டிவ் வழங்கப்பட வேண்டும்.

இந்தியா ஜனநாயகம். இங்கு அதிகாரிகளை முழுக்க முழுக்க ஆள விட இயலாது என்ற சப்பைக்கட்டு படு வேகமான முன்னேற்றத்தை விரும்பும் போது செல்லுபடியாகாது. எம் எல் ஏ, எம் பிக்களுக்கு தாங்கள் குறிப்பிட்ட இன்ஸெண்டிவ் தேவையில்லை.

இதுவும் ஒரு வாதத்தின் ஆரம்பம். இறுதி அல்ல. நன்றி

கிரிஸ்

Series Navigation

கிரிஸ்

கிரிஸ்