கருத்தம்மா
தலித் உளவியல் எப்படிக் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது, ‘குறிப்பிட்ட சில கட்சிகளின் ஓட்டுவங்கியாக தலித் சமூகம் செயல்பட்டுக் கொண்டு வருவது எதனால் ? ‘ என்ற கேள்விக்குப் பதிலாய், அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. போராட்ட குணம் அவனுக்கில்லை. (தலித் அடையாளத்தை ஏற்றுக்கொண்டு) மாடு நுகத்தடிக்குப் பழகுவதுபோல் அடிமைப் புத்திக்கு பழக்கமாகி விட்டான் என்றும் தாழ்வு மனப்பான்மையால் குறுகி, திறமையை வெளிப்படுத்துவதில் தயக்கமும் அச்சமும் கொள்கிறான் என்றும், மேற்சாதியினர் அவர்களைக் குறை கூறி, தாங்கள் அதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல என்று ஒதுங்கி நின்று சம தர்மம் பேசும் இன்றைய காலகட்டத்தில் தலித் உளவியல் பற்றிய ஆழமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.
அவ்வித ஆராய்ச்சிக்குள் நுழையும் முகமாக சில விவாதங்களை மட்டுமே இக்கட்டுரை முன் வைக்கிறது.
இந்திய சமுதாயச் சூழலில், சாதிக் கட்டுப்பாடு என்பதை மேற்சாதியினர் தனிப்பட்ட வாழ்க்கையில் விரும்பி ஏற்றுக்கொண்டு, மேம்போக்காக அதனைச் சாடி, தம் உதார குணத்திற்கு அடையாளமாகக் காட்டி வருவதாக மட்டுமே உள்ளது. எவ்வளவுதான் மறைக்க முயன்றாலும் அவர்கள் மனவியல் அடிப்படையிலேயே மேற்சாதி மனவியலாக இருந்து வந்திருப்பதை அவர்களது ஒவ்வொரு செயலிலும் பார்க்க இயலும். ‘பண்ணையார் வந்தார் ‘, ‘வேலையாள் வந்தான் ‘, என்று சாதாரணமாக வெளிப்படும் அவர்கள் மொழியில், சாதிய கட்டுமானங்களை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள விதம் விளங்கும். இதைக்கூட அவர்கள் கடினப்பயிற்சியால், விளங்கிக் கொள்ள முடியும்.
ஆனால், ‘அவன் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டானா, அக்குளில் சொருகிக் கொண்டானா ‘ என்ற பதிலில் நுணுக்கமான சாதி அடையாளமிருப்பதைக் கண்டறியாது, யதார்த்தமாய் தமது சாதிய அடையாளத்தை வெளிப்படுத்துவதாக (அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்ட மேற்சாதி உளவியலாகச் செயல்படுவதை) உணர முடியும்.
அவ்வாறே, தலித் உளவியலும் கறைபடிந்த வரலாற்றால், கொடூரமான சாதீய ஒடுக்குமுறையால் கடினமான பாதிப்புக்குள்ளாகி புரையோடி வேர் விட்டிருப்பதை தலித்தின் ஒவ்வொரு செயலும் விளக்கும்.
தனிச் சொத்து ஏதுமின்றி, சொத்து சுகம் அனுபவித்தறியாத அடிமை, ஆண்டையின் சொத்தைபாதுகாப்பதென்பது அச்சத்தால் ஏற்பட்ட ஒன்றேயன்றி, (பின் அடிமைப் மனோபாவத்தினால் பழக்கப்பட்டு விட்ட செயலேயன்றி), தன்னிச்சையாக, சுயபுத்தியோடு, பொறுப்புணர்வோடு செய்கின்றான் என்று சொல்ல முடியுமா ?
இவர்களின் சினிமாக்களிலும், டிராமாக்களிலும் தான் இதைக் காணமுடியும். சாணிப்பால் கொடுத்து உதைத்துத் துன்புறுத்திய காலத்தில், ஆண்டை வீட்டு மாந்தோப்பில் மட்டும் வீசிய புயலில் மாம்பிஞ்சுகள் உதிர்ந்து போகவில்லையா ? டாக்கடையில் தனிக்கிளாசு வைத்த காலத்தில், முதலாளியின் குடிநீரில் சிறுநீர் கலந்தது எதற்காம் ? உண்ட வீட்டுக்கு ரெண்டகம் என்று ஆண்டை புலம்பிக் கொண்டிருக்கையில், ‘மாடா ஒழச்சேனே, மம்பட்டியா தேய்ஞ்சேனே ‘ என்று சொல்லி ஆண்டையில் இடத்தில் நாயைப் பிரதானப்படுத்தியது எதற்காம் ? ஆண்டை அடிமை உறவு நிலையிலும் எதிர்ப்பு இருந்தே வந்திருக்கிறது. இந்தப் பகையுணர்வு மேற்சாதியினரைப் பொறுத்தவரையில் சாதி வைபவங்களில், குழு வழிபாடுகளில் வர்க்க உணர்வாக பரிணமிக்காது, தலித்துக்கு எதிரான ஒற்றுமை என்றளவில் இன்று வரை நிலவி வருவதாலே, இங்கு வர்க்க உணர்வு காயடிக்கப்பட்டு, மேற்சாதியும் பிற்பட்ட சாதியும் இணைந்த கலவையாக ‘முற்போக்குச் சக்திகள் ‘ என்ற பெயரில் கேலிக்கூத்தாக வடிவமெடுத்தது.
தலித் இன்றுவரை பிறரோடு ஒன்ற முடியாது தனிச் சுடுகாடு, தனிக்கிணறு, தனிப்பாதை, தனித்தமிழனாக தன் வர்க்க உணர்வை காப்பாற்றுபவனாக, எதிர்ப்பு போராட்ட குணத்தை வாழ வைப்பவனாக இருக்கிறான். இங்கு ஏன் வர்க்கப் போராட்டம் வெற்றி பெறவில்லை என்று மேற்சாதி மூளை ஆராய்ந்து தரும் விளக்கம்: ‘தலித் எதிர்ப்புணர்வின்றி, போராட்ட உணர்வின்றி அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்டிருப்பதால்தான் ‘ என்பதாகத்தான் இருக்கிறது.
போராட்டம் என்றால் இவர்கள் பேரணியில் கலந்துகொண்டு, இவர்கள் படித்துச் சொல்வதைக் கேட்டு, ரசித்து, கைதட்டி, செங்கொடியை ஏந்திக்கொண்டு செல்வதுதானாம். பஞ்சமி நிலமீட்பு, பொதுச் சுடுகாடு, பொதுக்கிணறு, இதெல்லாம் சாதிப்பிரச்னையாம். வர்க்கரீதியாக இணைவதால், சாதியைப் பற்றி அங்கு மூச்சு விடக்கூடாதாம். இவர்களும் இவங்க போராட்டமும் தூத்தெறிக்க.
தலித்துக்கு இது பாதுகாப்பற்ற சமுதாயம், துஷ்ட விலங்குகள் சேரிக்குள் புகுந்து அவனது மனைவியையும், குழந்தையையும் அடிமை கொள்ளலாம். அவனை வெட்டிப் போடலாம், உயிரோடு கொளுத்தலாம். வெண்மணியில் 44 தலித்துகள் உயிரோடு கொளுத்தப்பட்டனர். சுண்டூரில் சினிமாக்கொட்டகையில் அருகில் உட்கார்ந்த குற்றத்திற்காக, வெட்டிக் கால்வாயில் கிடாசப்பட்டனர்.
ஆபத்து யார் வடிவில், என்ன ரூபத்தில் வந்து சேரும் என்ற அறிகுறியெதுவுமில்லாது, செய்வதறியாது, கல்வியறிவற்ற சமூகமாக சாண்வயிற்றைக் காப்பாற்றவே நாளும் பொழுதும் செலவிடுகிற தலித் சமூகத்தினரின் மீது, திட்டமிட்டு ஆதிக்கத்தின் துணையோடு, அவர்களால் திரட்டப்பட்ட படையோடு, கொலைவெறித்தாக்குதல் நிகழ்ந்தது.
கொடியங்குளத்தில் செத்தது இருசப்பனா, அப்போ தலித்தாகத்தான் இருக்கும் என்று வாசிக்கத் தெரிந்த தலித்துக்குக்கூட செய்தி சேராத அளவில் இன்று பத்திரிக்கை தர்மம் இருந்து வருகிறது. கண்ணையும் கட்டி, அறையையும் இருட்டாக்கி, நாற்ற மலக்குழியிலும் தள்ளிவிட்டு, ‘தாழ்வு மனப்பான்மையால் அவதியுறுகிறான் ‘ என்கிறது மேற்சாதி உளவியல். அடுத்தடுத்து வந்த எந்த சீர்திருத்த அரசும் அவர்களை பாதுகாப்பானவராக உணரச் செய்யவில்லை.
தந்திரம் செய்து திராவிட வாக்கு, முற்போக்கு வாக்கு என வோட்டு மேலேயே மேற்சாதி அரசியல் கவனம் செலுத்துகையில், ‘அடிச்சகன்னா, இன்னிக்காச்சும் நக்கித்தானே ஆவுணும் ‘, ‘ஆண்டை கதற்குல்லா போட்டிருக்கானா, நான் அம்மாவுக்குத்தான் போடுவேன். அம்மாவைவிட உங்காள் அழகாங்காட்டியும்! எப்படி வெள்ளே வெளேர்னு இருக்குது! அப்படியாக்கொத்த பொம்பிள வீடுதேடி வந்து கையெடுத்துக்கும்பிட்டிச்சே, அப்ப நீ தேவாங்கு மாதிரி பாத்துக்னு போனயே.. சாவு கெடந்து! எனக்கென்னா பூடிச்சி, நீ திங்கற சோத்தை அது துன்னுகிட்டுப் போவுது. நீ என்னத் தொடமாட்டேன்ன. நான் என்ன பண்ணேன் தெரியுமா ? காந்தி ரயில்ல போனப்ப பாத்து, அவரு காலத் தொட்டேன். அப்படியே எனக்குப் புல்லரிச்சு போச்சுல்ல. ‘
இப்படி மேற்சாதிக் கெதிரான கவனத்தைத் தம்பக்கம் ஈர்க்கும் விதமாகச் செயல்படும் உளவியலைச் சினிமா மாயை என்றும், பொறுப்பற்ற காலித்தனம் என்றும் விமர்சிப்பது மேற்சாதியினரின் செயலாக இருந்து வந்திருக்கிறது.
ஊழலற்ற அரசு என்று பிரச்சாரம் செய்து, அவர்களைத் தன்பக்கம் கவர்ந்துவிட வேண்டும் என்ற பிரயத்தனம் சிலர் செய்யும் போது, வரலாறு முழுவதிலும் (மக்களைத் துன்புறுத்தி வரிவாங்கும் ராஜாகாலத்திலிருந்து, தாயகத்துக்கு துரோகம் செய்து ஆங்கிலேயர், பிரஞ்சுக்கு நாட்டை அடமானம் செய்தது வரை) வசதி படைத்த மேற்சாதியினரின் அட்டூழியங்கள் யாவருக்கும் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. தினம் தினம் உழைப்பு, சாதிய ஒடுக்குமுறை என்று அல்லல் படுவோருக்கு ‘ஊழலற்ற அரசு ‘ என்பது நகைப்புக்கிடமானதாகவே உள்ளது. அவன் அடிச்சிக்கிட்டானே, நாம எப்ப அடிக்கிறதுன்னு கெடந்து துடிக்கிறான். ‘ஊழலற்ற அரசு அது இதுன்னு என்ன பூச்சி காட்றீங்களா ? ‘, நம்பிக்கையற்றுப்போன நிலையில் தேர்தலை திருவிழாவாக்கி நையாண்டி செய்கிறது தலித் உளவியல்.
தலித் மக்களின் அறியாமை என்பது மேற்சாதியின் உளவியலோடு கலந்ததாக இருக்கிறது. திட்டமிட்டுச் செயலாற்றும் தமது குரூரத் தன்மையை மறைத்துக்கொள்ளும் கவசமாகவும் இருக்கிறது.
புதிதாக இயற்கைப் பாதுகாப்பு, சுற்றுப்புறப் பாதுகாப்பு என்று பேசித் திரிவதை கடந்த சில வருடங்களாகக் கேள்விப்படுகிறோம். விஞ்ஞானக்கூடம் இன்னும் வீடுவரை வராத சூழ்நிலையில் பெரும்பாலான தலித் மக்கள்!
ஏஸி பெட்டி, ஏஸிக்கார், ஏஸி அறை என்று சகலத்தையும் அனுபவித்து, இங்கேயிருக்கிற மரத்தை வெட்டிச் சாய்த்தது காணாது என்று, பர்மா தேக்கு, மலேசிய ரப்பர் என்று காடு கண்டவிடமெல்லாம் அழித்து, வீட்டையும், தன்னையும் சொகுசு படுத்திக்கொண்ட மேல்நாட்டோர் மற்றும் உள்ளூர் மேற்சாதி செல்வந்தர்கள், விறகுக்கு முள்ளொடிக்கச் சென்றால் இயற்கையை பாதுகாப்போம் என்று கோஷம் போடுகிறார்கள். கொல்லம் பட்டறையில் ஊசி விற்ற கதை! ‘அவங்கெடந்து போறான். வேப்பமரம் நடு. குளுகுளுன்னு காத்துவரும். நுச்சி வியாதி அண்டாது. அவனுக்கென்னாத் தெரியும். உக்காந்து அதிகாரம் பண்ணத் தெரியும். எந்த மண்ணில என்னா வளரும்னு என்னக் கேளு சொல்றேன் ‘ ஆதிக்கச் சக்திகளின் அறியாமை தலித் மக்களின் அறியாமையாக வார்த்தெடுக்கப்படுகிறது.
இக்கட்டுரையில் தலித் உளவியலின் சிலக்கூறுகள் மட்டும் உதாரணத்துக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாக தலித் உளவியல் ஆண்டான்Xஅடிமை, மேற்சாதி கீழ்ச்சாதி, பணக்காரன் ஏழை என்றளவில் ஆதிக்கத்திற்கான எதிரான உளவியலாக கட்டமைக்கப்பட்டுள்ளது. எனினும், தலித் மக்களின் மெளனம் ஆதிக்கச் சாதிக்கு இணக்கமானதாகவே இருக்கிறது. நமது கல்விமுறையும், தொடர்புச் சாதனங்களும் ஆதிக்கச் சக்திக்கு துணைபோகிற வகையில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிற இன்றைய சூழ்நிலையில்ம் வர்க்க உணர்வைக் கூர்மைப்படுத்துவதில் இவ்வித ஆராய்ச்சிகள் துணை புரியலாம்.
**
கருத்தம்மா: சிவகாமி என்ற பெயரில் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் எழுதி தமிழில் தனியானதொரு இடத்தைப் பிடித்துள்ளார். கோடாங்கி என்ற தலித் இலக்கியத்துக்கான காலாண்டிதழின் ஆசிரியர்களுள் ஒருவர். ‘ஊடாக ‘ என்ற குறும்படம் ஒன்றையும் இயக்கியுள்ளார்.
**
‘தலித் கலை இலக்கியம் அரசியல் ‘ என்ற கட்டுரைத் தொகுப்பிலிருந்து.