முள்பாதை 28

This entry is part [part not set] of 21 in the series 20100509_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

சாரதி இருந்ததால் எதிர்பார்த்த அளவுக்கு ரகளை நடக்கவில்லை. அம்மா வலுக்கட்டாயமாக கோபத்தை அடக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. ஏனென்றால் சாரதி டைரக்டர் ஆக பொறுப்பு ஏற்றுக் கொள்ளப் போகும் கம்பெனியின் திறப்பு விழாவுக்காக, அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை கவனிப்பதற்காக அம்மா அப்பாவிடம் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்பாவும் அம்மா கேட்ட கேள்விகளுக்கு சுருக்கமாக, பட்டும் படாமலும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். சாரதியின் முன்னிலையில் இருவரும் ரொம்ப அன்யோன்யமாக, அடுத்தவரின் வார்த்தைக்கு ரொம்ப மதிப்பு தருவதுபோல் பேசிக் கொள்வார்கள். ஆனால் யாராவது கொஞ்சம் சிரத்தையாக அவர்களுடைய முகங்களைக் கூர்ந்து பார்த்தால் அந்த அன்யோன்யம் வெறும் நடிப்பு என்றும், அந்த பேச்சில் உண்மையான அன்பு குறைவு என்றும் சுலபமாகக் கண்டுபிடித்து விடுவார்கள்.
சாரதி இருக்கும்போது ரொம்ப அன்பாக நடந்து கொள்ளும் இருவரும் அவன் அந்தப் பக்கம் போனதும் வடதுருவம் தென்துருவமாக மாறிவிடுவார்கள். ஏறத்தாழ பத்து நாட்களுக்கு மேல் இருந்தாலும் சாரதி ஒருநாள் கூட அம்மா அப்பாவுக்கு நடுவில் கருத்து வேற்றுமை இருப்பதை உணரவில்லை. “என்ன மீனா? உங்க அம்மா அபாபாவுக்கு நடுவில் ஏதாவது பிரச்னையா?” என்று என்னிடம் கேட்கவும் இல்லை. அவன் மட்டும் அப்படி கேட்டிருந்தால் எனக்கு சந்தோஷமாக இருந்திருக்கும். அப்படி கேட்காமல் போனதால் அவனிடம் எனக்கு ஏற்பட்ட அபிப்பிராயத்தை அவன் கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டான்.
அம்மா அடிக்கடி “கடவுள் நல்லபடியாக கண் திறந்து பார்த்தால் இன்னும் ஓரிரு மாதங்களில் சாரதி இந்த ஊருக்கு வந்துவிடுவான். அப்போ இனி எந்த பிரச்னையும் இருக்காது” என்று ஜெபிக்கத் தொடங்கினாள். அவன் ஏதோ சாசாத் கடவுள் போலவும், அவன் இல்லாமல் போனதால் இத்தனை நாட்களும் நாங்கள் சுகமாக வாழவில்லை என்பது போலவும் அம்மா பேசுவதை கேட்கக் கேட்க எனக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. ஓரிரு முறை வெளியில் சொல்லி விடலாமா என்று தோன்றினாலும் கட்டுப்படுத்திக் கொண்டேன்.
வீட்டில் பழைய சூழ்நிலை திரும்பிவிட்டது. அம்மா வந்த நான்கு நாட்கள் கழித்து திருநாகம் மாமி வந்து விட்டாள். நன்றாக ஒரு சுற்று பெருத்து குண்டு பூசணியைப் போல் இருந்த மாமியை பார்த்ததும் அவளுடைய மகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட விஷயம் உண்மைதானா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அப்பாவும் அதைத்தான் சொன்னார். அம்மா இருந்தால் எங்கேயும் போக விடமாட்டாள் என்பதால் அம்மா ஊருக்கு போகும் விஷயம் தெரிந்து திட்டம் போட்டு மகளிடமிருந்து பொய் தந்தி வரவழைத்திருப்பாள். மகள் வீட்டில் நிம்மதியாக பத்து நாட்கள் இருந்துவிட்டு வந்திருப்பாளாய் இருக்கும். அதான் அன்று நானும் கூட வருவதாகச் சொன்னபோது பிடிவாதமாக மறுத்து விட்டிருக்கிறாள்.
என்னுடைய மெலட்டூர் பயணத்தை நினைத்துப் பார்க்கும்போது நம்ப முடியாத அளவுக்கு வியப்பாக இருந்தது. இவ்வளவு செல்வம் படைத்த வீட்டில் பிறந்து வளர்ந்தவள், ஏழ்மை நிறைந்த அந்த வீட்டில் எவ்வளவு சந்தோஷமாக நாட்களைக் கழித்தேன்? உண்மையிலேயே மனிதர்கள் முட்டாள்கள். செல்வத்திற்கும் சுகத்திற்கும் முடிச்சுப் போடுவார்கள். இந்த இரண்டிற்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை என்று மெலட்டூர் பயணம் எனக்குப் பாடத்தை கற்றுக் கொடுத்தது.
அந்தப் பயணத்தின் நினைவாக என்னுடைய பீரோவில் வெள்ளை நிறப் புடவையும், அப்பாவின் சட்டப் புத்தகங்களுக்கு பின்னால் ஒரு போட்டோ ரீலும் எஞ்சியிருந்தன. இந்த இரண்டும் மட்டும் இல்லை என்றால் அந்தப் பயணமே ஒரு கனவுதானோ என்று நினைத்திருப்பேனோ என்னவோ. அதனால்தான் போலும், கிருஷ்ணன் அங்கிருந்து எந்த நினைவுகளையும் எடுத்துச் செல்லாதே என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தான்.
அத்தையின் குடும்பத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். வாழ்க்கையிடம் அவர்கள் காட்டும் பற்றுதல், பிரச்னைகளை எதிர்கொள்வதில் காட்டும் தைரியம், நிலைமையைச் சமாளிப்பதில் காட்டும் திறமை… இவையெல்லாம் பார்க்கும்போது அவர்கள் இதைவிட உயர்வான வாழ்க்கைக்குத் தகுதியானவர்கள் என்று தோன்றியது.
மெலட்டூரிலிருந்த வந்த பிறகு நான் அவர்களுக்கு ஒரு கடிதம் கூட எழுதவில்லை. அந்தக் குற்ற உணர்வு என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. நான் கடிதம் எழுதினால் ராஜி உடனே பதில் கடிதம் எழுதுவாள். எனக்குக் கடிதம் ஏதாவது வந்தால் அம்மாவின் பார்வையிலிருந்து தப்ப முடியாது. அதன் விளைவு எப்படி இருக்குமோ, என்னால் சுலபமாகவே ஊகிக்க முடியும்.
ஏற்கனவே நாராயணன் விஷயத்தில் எரிமலைக் குழம்பாக கொதித்துக் கொண்டிருந்த அம்மா இதையே சாக்காக வைத்துக்கொண்டு அப்பாவை என்ன வேண்டுமானாலும் சொல்லக்கூடும். அந்த பயம்தான் என்னை கடிதம் எழுதவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தது.
ராஜிக்கு கடிதம் எழுதாமல் எனக்கு இருப்பு கொள்ளவில்லை. என் நிலைமை திரிசங்கு சுவர்க்கமாக இருந்தது. அதோடு நான் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருந்தன. ராஜேஸ்வரியின் திருமண விஷயத்தில் என்ன முடிவு செய்தார்கள்? அவ்வளவு உரிமையுடன் நான் அவர்களிடம் சொந்தம் கொண்டாடிவிட்டு இங்கே வந்த பிறகு ஒரு கார்ட் கூட எழுதிப் போடாததற்கு கிருஷ்ணன் என்ன நினைத்துக் கொண்டிருப்பான்?
அவன் என்ன நினைத்துக் கொண்டாலும் பரவாயில்லை. அதை நான் லட்சியப்படுத்தப் போவதும் இல்லை. ஆனால் ராஜி! அவளைப் பற்றி நினைக்கும் போதுதான் ஏதோ திருட்டுத்தனம் செய்து விட்டதுபோல் உறுத்தலாக இருந்தது. கட்டாயம் கடிதம் எழுதுவேன் என்றும், மறக்க மாட்டேன் என்றும் எத்தனையோ முறை சொல்லிவிட்டு வந்தேன். அவர்களுடைய கல்மிஷமில்லாத அன்புக்கு எடுத்தக் காட்டாக இருந்த வெள்ளை நிறப் புடவை என்னை கேலி செய்வதுபோல் இருந்தது.
என் வருத்தத்தை அப்பாவிடம் சொன்னபோது “நீ §க்ஷமமாக வந்து சேர்ந்து விடதாக நான் கிருஷ்ணனுக்குக் கடிதம் எழுதிப் போட்டு விட்டேன். சாரதி வந்திருக்கிறான் என்றும், நீ பிசியாக இருப்பதாகவும் ராஜியிடம் சொல்லச் சொல்லியும் எழுதியிருக்கிறேன். நீ கடிதம் எழுதவில்லை என்று அவர்கள் தவறாக நினைக்க மாட்டார்கள்” என்றார்.
என் முகம் கன்றிவிட்டது. சாரதியின் வருகையால் நான் பிசியாகிவிட்டேனா? அதனால்தான் ராஜிக்குக் கடிதம் எழுதவில்லை என்பது உண்மை¨யா? அறையை விட்டு வெளியே வரும்போது அப்பாவிடம் கேட்டேன். “டாடீ! அவர்கள் என்னை நன்றாக கவனித்துக் கொண்டதற்கு தாங்க்ஸ் சொல்லி கிருஷ்ணனுக்கும், அத்தைக்கும் எழுதினீங்களா?”
அப்பா சிரித்துவிட்டார். “அது போன்றவை அவர்களுக்குத் தெரியாது. வீட்டுக்கு வந்த விருந்தாளியை உபசரிப்பது தங்களுடைய கடமை என்று நினைப்பார்கள்.”
“ஆனால் கிருஷ்ணன் வேறு இல்லையா?”
“ஆமாம். கிருஷ்ணன் வேறுதான்.” அப்பவின் குரல் வித்தியாசமாக ஒலித்தது. அவருடைய முகத்தில் வேதனை படர்ந்தது. திருநாகம் மாமி காபி எடுத்துக் கொண்டு உள்ளே வந்ததால் எங்களுடைய உரையாடல் நின்றுவிட்டது.
அன்று அம்மா, அப்பா, சாரதி மூன்று பேரும் கம்பெனி விஷயமாக யாரையோ பார்க்கணும் என்று கிளம்பிப் போனார்கள். நிறைய நேரம் பேச வேண்டியிருக்குமாம். அம்மா எந்த மூடில் இருந்தாளோ தெரியாது. வற்புறுத்தாமல் விட்டுவிட்டாள். சாரதி பற்றிக் கேட்க வேண்டியதில்லை. நான் வந்தாலும் வரவில்லை என்றாலும் அவனுக்கு ஒன்றுதான். அந்த விஷயம் எனக்கு ஏற்கனவே புரிந்துவிட்டது. சூரியன்போல் ஒளி வீசும் அம்மாவின் முன்னிலையில் என் தனித்தன்மை தீவிட்டியைப் போல் மங்கலாக இருப்பது பழகிவிட்டதால் வருத்தம் ஏற்படவில்லை.
அவர்களுடன் நான் வெளியே போக வேண்டியதில்லை என்ற நினைப்பே எனக்குப் புத்துயிர் தருவதுபோல் இருந்தது. அதே நேரத்தில் மாலை வேளையில் வீட்டில் தனியாக உட்கார்ந்திருப்பதும் சலிப்பாக இருந்தது.
அம்மாவும் மற்றவர்களும் அந்தப் பக்கமாக போனதும் நான் செருப்பை மாட்டிக் கொண்டேன். சமையலறைக்குள் எட்டிப் பார்த்துவிட்டு “மாமீ! நான் வாக்கிங் போய்விட்டு வருகி§ன்” என்றேன்.
“தனியாகவா?” வியப்புடன் கேட்டாள் மாமி.
“ரொம்ப தூரம் போகமாட்டேன்.” மாமியின் பதிலுக்காகக் காத்திருக்காமல் வெளியே வந்துவிட்டேன். கேட்டைத் திறந்துகொண்டு ஒரு நிமிடம் தயங்கிவிட்டு மறுபடியும் உள்ளே போனேன். அப்பாவின் அறையில் புத்தகங்களுக்குப் பின்¡ல் மறைத்து வைத்திருந்த போட்டோ ரீலை எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன்.
மெயின் ரோட்டுக்குக் கடைசியில் வலதுப் பக்கத்தில் போட்டோ ஸ்டூடியோ ஒன்று இருந்தது. அங்கே போய் ரீலை டெவலப் செய்வதற்குக் கொடுக்க வேண்டுமென்று முடிவு செய்தேன். மாலை வேளையில் தெருவில் தனியாக நடந்து போகும்போது ரொம்ப சந்தோஷமாக, உடலில் புது ரத்தம் பாய்வதுபோல் உற்சாகமாக இருந்தது.
எத்தனை முயற்சி செய்தும் அம்மாவின் முன்னிலையில் என்னால் இப்படி சுதந்திரமாக இருக்க முடியவில்லையே? காரணம் என்ன? யோசித்துக் கொண்டே போட்டோ ஸ்டூடியோவுக்குப் போய்ச் சேர்ந்தேன். ரீலை கொடுத்துவிட்டு எவ்வளவு காபிகள் வேண்டுமோ சொல்லிவிட்டு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தேன்.
வரும்போது ஏதோ யோசனையில் வேகமாக வந்துவிட்டேன். திரும்பிப் போகும்போது மக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே நிதானமாக போகலாம் என்று நினைத்தபடி மெதுவாக நடக்கத் தொடங்கினேன். என் எதிரே வந்து கொண்டிருந்த ஜனங்களில் ஒற்றை நாடியாக, கொஞ்சம் குள்ளமாக, பழைய குடை ஒன்றை அக்குளில் இடுக்கிக் கொண்டு வயதான ஒருவர் என்னைப் பார்த்ததும் முறுவலித்தார்.
நானும் அவரைப் பார்த்ததும் என்னை அறியாமல் நின்று விட்டேன். அறிமுகம் இருப்பவர்போல் அவர் அருகில் வந்து நின்றார்.
நான் கேள்விக்குறியுடன் பார்த்துக் கொண்டே வலிந்த சிரிப்பை உதிர்த்தேன். இவரை எங்கேயோ பார்த்திக்கிறேன். ஆனால் எங்கே? சட்டென்று நினைவுக்கு வரவில்லை.
“என்னை அடையாளம் தெரியவில்லையா? ராமேஸ்வரத்திற்கு போகும்போது ரயில் பயணத்தில்…”
ஆமாம். பட்டா மாமியின் கணவர். எனக்கு நினைவு வந்து விட்டது. அப்போ அவர் மொட்டை தலையுடன் இருக்கவில்லை. சமீபத்தில் திருப்பதிக்குப் போய்விட்டு வந்தாரோ என்னவோ. நான் மகிழ்ச்சியுடன் வணக்கம் தெரிவித்தேன்.
“என்னம்மா இந்தப் பக்கம்? நடந்து வருகிறாயே?”
“போட்டோ ஸ்டூடியோவில் ரீல் கொடுப்பதற்காக வந்தேன் மாமா.”
“எங்க வீடு அருகில்தான் இருக்கு. வாம்மா போகலாம். மாமி உன்னைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கிறாள்.”
“இப்பொழுதா?” தயங்கினேன்.
“ரொம்ப நேரம் ஆகாது. அதோ அந்த சந்து வழியாகப் போனால் இன்னும் சீக்கிரம் போய் விடலாம். உன்னை இப்படி திடீரென்று அழைத்துப் போனால் உங்க மாமி சந்தோஷத்தில் திக்குமுக்காடி விடுவாள்.”
அவருடைய அழைப்பை என்னால் மறுக்க முடியவில்லை. ரொம்ப தூரம் இல்லை என்று சொல்கிறார். உடனே வீட்டுக்கு போய் செய்ய வேண்டிய காரியம் எதுவும் இல்லை. அம்மா அப்பா வருவதற்கு இரவு எட்டு மணிக்கு மேல் ஆகிவிடும். மாமாவுடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினேன். இவருடைய வீடு இவ்வளவு அருகில் இருப்பது தெரிந்தால் இந்நேரம் ஒரு தடவையாவது போய் பார்த்திருப்பேன்.
என்னைப் பார்த்ததும் மாமி தாங்க முடியாத சந்தோஷத்துடன் வியப்படைந்தவளாக பார்த்தாள். வணக்கம் தெரிவிக்கப் போன என்னை இரு கைகளையும் நீட்டி அணைத்துக் கொண்டாள். “எவ்வளவு பாக்கியம் இன்றைக்கு! உன்னைப் பற்றி நினைக்காத நாளே இல்லை” என்றாள்.
எனக்கும் சந்தோஷமாக இருந்தது. திடீரென்று நான் மெலட்டூரில் இருப்பதுபோல் தோன்றியது.
மாமி என் கையைப் பிடித்துக் கொண்டே சமையல் அறைக்குள் அழைத்துச் சென்றாள். குமுட்டியின் மீது இருந்த பாலை இறக்கி வைத்தாள். வீட்டை சுற்றிக் காட்டினாள். சின்ன வீடு என்றாலும் இருப்பது இரண்டுபேர்தான் என்பதால் போதுமானதாக இருந்தது. கொல்லை பக்கம் இரண்டு அறைகளை வாடகைக்கு விட்டிருந்தார்கள். “சிக்கனமாக இருப்பதைப்
பற்றி அய்யர் வீடுகளிலிருந்துதான் கற்றுக் கொள்ளணும்” என்று அம்மா பாராட்டுவதுபோல் சொன்னது நினைவுக்கு வந்தது. கொல்லையில் மல்லிகைக் கொடியும், துளசி மாடமும் இருந்தன.
இந்த வீட்டை கட்டுவதற்கு எவ்வளவு செலவு ஆயிற்றோ, மாமாவின் சம்பளத்தில் மகளுக்குக் கல்யாணமும் செய்து வைத்து, இந்த வீட்டையும் எப்படி கட்டினார்களோ, இன்னும் இந்த வீட்டின் மீது எவ்வளவு கடன் பாக்கி இருக்கிறதோ மாமி வரிசையாக சொல்லிக் கொண்டிருந்தாள். என் நினைவு முழுவதும் அழகாக, பாந்தமாக இருந்த அந்த வீட்டின் மீதே இருந்தது. தேவைக்கு அதிகமாக வசதிகள் பெருக பெருக மன அமைதியும் குறையும் என்று தோன்றியது.
வீட்டை சுற்றிக் காட்டிய பிறகு மாமி என்னை மறுபடியும் சமையலறைக்கு அழைத்துச் சென்று மணையைப் போட்டு உட்கார வைத்தாள். குமுட்டியின் மீது தோசைக்கல்லை போட்டு சுடச்சுட தோசை வார்த்துக் கொடுத்தாள். அந்த தோசையின் ருசியை வாழ்க்கையில் என்னால் மறக்கவே முடியாது. அவ்வளவு ருசியாக இருந்தது. மாமி ஏதாவது நினைத்துக் கொள்வாளோ என்ற கூச்சத்தையும் ஒதுக்கிவிட்டு தோசை வார்த்து போடப் போட சாப்பிட்டுக் கொண்டே இருந்தேன். டிபன் சாப்பிட்ட பிறகு மாமி காபி கலந்து கொடுத்தாள். வேலைகளுக்கு நடுவில் மாமி எங்க வீட்டு விஷயங்களையும் கேட்டாள். நான் பட்டும் படாமலும் பதில் சொன்னேன்.
நான் அங்கே இருக்கும்போதே அக்கம் பக்கத்தில் இருக்கும் பெண்கள் இரண்டு மூன்று பேர் வந்தார்கள். ஒரு மாமி ஊசி, நூல் இரவல் கேட்க வந்தாள். இன்னொருத்தி காபி பொடி கடன் கேட்டாள். மூன்றாவது மாமி “சும்மாதான் வந்தேன்” என்று என்னைப் பார்த்துவிட்டு “அப்புறமாக வருகிறேன்” கிளம்பிப் போனாள்.
மாமி என்னிடம் பேசுவது போலவே எல்லோரிடமும் பேசினாள். எல்லோரிடமும் இப்படி அன்பாக, நெருக்கமாகப் பழகுவாள் போலும். மாமி என்னிடம் காட்டும் அன்பு முதலில் எனக்கு வேறுவிதமாக தோன்றினாலும் மாமியின் சுபாவம் புரிந்த பிறகு நிம்மதியாக இருந்தது.
யாராவது என்னிடம் தேவைக்கு அதிகமாக அன்பு காட்டி பேசினாலோ, பழகினாலோ எனக்கு பயமும் தயக்கமும் ஏற்படும். அம்மாவின் கிளப்பில் சிலர் என்னிடம் நெருக்கமாக பேசி பழகி என் மூலமாக அம்மாவிடம் காரியங்களை சாதிக்க முயற்சி செய்தார்கள். இதனால் அம்மாவிடமிருந்து பலமுறை நான் திட்டு வாங்கியிருக்கிறேன். மாமி என்னிடம் காட்டும் அன்பில் எந்தப் பின்னணியும் இல்லை என்று புரிந்து கொண்டதும் உண்மையிலேயே மாமியிடம் எனக்குப் பிரியம் ஏற்பட்டது.
ஐந்து நிமிடங்கள் இருந்துவிட்டு போகலாம் என்று வந்த நான் அரைமணிக்கு மேல் உட்கார்ந்திருந்தேன். விடைபெற்றுக்கொண்டு வரும்போது மாமி மல்லிகை பூச்சரத்தைக் கையில் கொடுத்துவிட்டு “அவ்வப்பொழுது வந்து போய்க் கொண்டிரு” என்றாள்.
“அவ்வப்பொழுது என்ன? பொழுது போகாத போதெல்லாம் ஓடி வந்து விடுவேன்” என்றேன் முறுவலுடன்.
“கட்டாயம் வா. எப்போ வந்தாலும் வீட்டிலேயே இருப்பேன். எங்கேயும் போக மாட்டேன்” என்றாள் மாமி. மாமாவை அழைத்து வீடு வரையிலும் என்னை கொண்டு விட்டு வரச் சொன்னாள்.
மாமா வீடு வரையிலும் வந்து என்னை கொண்டுவிட்டு பிறகு திரும்பிப் போக போனார்.
“மாமா! உள்ளே வாங்க” என்றேன் தயங்கிக் கொண்டே.
“இன்னொரு தடவை வருகிறேன். அப்பாவைக் கேட்டதாக சொல்லும்மா” என்று சொல்லிவிட்டு மாமா போய்விட்டார்.

(தொடரும்)

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்