முள்பாதை 26

This entry is part [part not set] of 30 in the series 20100425_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

கூட்ஸ் வண்டி ஒன்று தடம் புரண்டு விட்டதால் நான் பயணித்துக் கொண்டிருந்த ரயில் தாமதமாகிவிட்டது. பட்டா மாமி வெற்றிலையைப் போட்டுக்கொண்டே நடுநடுவில் வேதாந்தம் பேசிக் கொண்டிருந்தாள். எனக்கு காலமே நின்று விட்டதுபோல் இருந்தது. இரண்டு மணி நேரமாக ரயில் ஒரே இடத்தில் நின்றுவிட்டதால் எரிச்சலும், கோபமும் ஏற்பட்டாலும் வேறு வழியில்லாமல் பயணிகள் உட்கார்ந்திருந்தார்கள். எல்லோருடைய பொறுமையையும் சோதித்துவிட்டுக் கடைசியில் ஒரு வழியாக ரயில் புறப்பட்டது.
தாம்பரம் ஸ்டேஷன் வரப் போகிறது. என்னையும் அறியாமல் என் மனதில் கவலை குடி கொண்டது. வானத்தில் சுதந்திரமாக சுற்றிய பறவை மறுபடியும் கூண்டுக்குள் அடைப்படுவதுபோல் தோன்றியது.
“உன் முகம் ரொம்ப வாடியிருக்கு. களைப்பாக இருக்கிறதா?” மாமி கேட்டாள்.
வலிந்த சிரிப்பை உதிர்த்துவிட்டு ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தேன்.
“என்னுடன் தாம்பரத்திலேயே இறங்கி விடேன். ஏற்கனவே தாமதமாகிவிட்டது” என்றாள் மாமி. மாமியின் தங்கை தாம்பரம் ஸ்டேஷனுக்கு அருகிலேயே குடியிருக்கிறாளாம்.
“என்னிடம் எக்மோர் வரையிலும் டிக்கெட் இருக்கு. அப்பா அங்கே காரை எடுத்துக் கொண்டு வருவார்” என்றேன்.
“அப்படி என்றால் சரி. உங்க அப்பாவைக் கேட்டேன் என்று சொல்லு. இரண்டு பேரும் கட்டாயம் எங்கள் வீட்டுக்கு வாங்க.” மாமி பத்தாவது முறையாக அழைப்பு விடுத்தாள். நான் தலையை அசைத்தேன்.
ரயில் தாம்பரத்தில் வந்து நின்றது. தனக்காக யாராவது வந்திருக்கிறார்களா என்று ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்த மாமி திடீரென்று என் பக்கம் திரும்பி “அதோ! உங்க அப்பா இங்கேயே வந்துவிட்டார்” என்றாள்.
சட்டென்று நானும் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். மாமி சொன்னது உண்மைதான். அப்பா எனக்காக ஒவ்வொரு பெட்டியாக பார்த்துக் கொண்டே வேகமாக வந்து கொண்டிருந்தார். அவருடைய பார்வை என்மீது விழும் விதமாக கையை உயர்த்தி அசைத்தேன். அப்பா என்னைப் பார்த்து விட்டு இரண்டே எட்டில் எங்கள் கம்பார்ட்மெண்ட் அருகில் வந்தார். அப்பாவுக்குப் பின்னால் எங்களுடைய பழைய டிரைவர் நாராயணன் இருந்தான். அப்பா பெட்டிக்கு ஏறி என் லக்கேஜை கீழே இறக்கச் சொல்லி நராயணனிடம் சொன்னார்.
“வணக்கம் அய்யா! நன்றாக இருக்கீங்களா?” மாமி குசலம் விசாரித்ததும் அப்பா சட்டென்று திரும்பினார். மாமியைப் பார்த்ததும் அப்பாவின் கண்களில் நட்பும், அன்பும் வெளிப்பட்டன.
பதில் வணக்கம் தெரிவித்துவிட்டு “எங்கிருந்து வர்றீங்க?” என்று கேட்டார்.
“ராமேஸ்வரத்தில் மகளைப் பார்த்து விட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு மாமி முறுவலுடன் “உங்க மகள் அப்படியே உங்களுடைய ஜாடை. குணத்திலும் உங்களைக் கொண்டிருக்கிறாள். கொஞ்சம்கூட ராங்கி இல்லை. நன்றாகப் பேசிக் கொண்டே வந்தோம்” என்றாள்.
“தாங்க்ஸ். அப்போ மினாவுக்கு நல்ல கம்பெனிதான் கிடைச்சிருக்கு.” அப்பா விடைபெற்றுக் கொண்டார்.
“மகளையும் அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வரணும்.” மாமி சொன்னாள்.
“கட்டாயம் வருகிறோம். மீனா! சீக்கிரம் இறங்கும்மா.” அப்பா பெட்டியிலிருந்து இறங்கினார்.
அப்பாவின் பின்னால் நானும் இறங்கிக்கொண்டேன். இருவரும் பிளாட•பாரத்தின் மீது நடந்து கொண்டிருந்தோம்.
“உங்க அம்மா டில்லியிலிருந்து வருகிறாள். உன்னை கட்டாயம் ஏர்போர்ட்டுக்கு அழைத்து வரச்சொல்லி டெலிகிராம் கொடுத்திருக்கிறாள். நாம் இப்போ நேராக ஏர்போரட்டுக்கு போய்க் கொண்டிருக்கிறோம்” என்றார் அப்பா.
திடுக்கிட்டாற்போல் பார்த்தேன். ரயிலை விட்டு இறங்கினேனோ இல்லையோ அதற்குள் ஆணைகள் வரத் தொடங்கிவிட்டன. “ரொம்ப களைப்பாக இருக்கு டாடீ. நேராக வீட்டுக்குப் போகிறேன்.” என் விருப்பமின்மையைத் தெரிவித்தேன்.
“இல்லை மீனா! உங்க அம்மா காரணமில்லாமல் எந்த வேலையும் செய்யமாட்டாள். முதலில் தான் வரப் போவதாக டெலிகிராம் கொடுத்தாள். பிறகு மறக்காமல் உன்னையும் அழைத்து வரச்சொல்லி இரண்டாவது டெலிகிராம் கொடுத்திருக்கிறாள். உங்க அம்மா ஊருக்கு வரும்போதே ஏமாற்றமளித்து அவளுக்குக் கோபம் வரும் விதமாக நடந்து கொள்வதில் எனக்கு விருப்பமில்லை” என்று சொல்லிக்கொண்டே அப்பா என்னை வெயிடிங் ரூமுக்கு அழைத்துச் சென்றார்.
அப்பா சொன்னபடி ஐந்து நிமிடங்களில் முகம் அலம்பி தலையை வாரிக்கொண்டு வெளியே வந்தேன். “இந்தப் புடவை?” கசங்கியிருந்த புடவையைப் பார்த்துக் கொண்டே சந்தேகமாக கேட்டேன்.
“பரவாயில்லை. நன்றாகத்தான் இருக்கு. நேரமாகிவிட்டது. சீக்கிரமாக வா.” அவசரப்படுத்தினார்.
பின்னாலிருந்து யாரோ துரத்திக் கொண்டு வருவதுபோல் இருவரும் வேகமாக வெளியே வந்தோம். வெளியே பார்க் செய்திருந்த காரின் அருகில் சென்ற நான், டிரைவிங் சீட்டில் அமரப்போன அப்பாவைப் பார்த்துவிட்டு “நாராயணன் எங்கே?” என்று கேட்டேன்.
“வீட்டிற்கு அனுப்பிவிட்டேன்.” அப்பா சொன்னார்.
நான் அமர்ந்து கொண்டதும் கார் வேகமாகப் புறப்பட்டது. அமைதியான சூழ்நிலையில் இருந்துவிட்டு வந்த எனக்கு ஜன நெரிசல் அதிகமாக இருந்த நகரத்தின் சாலைகள் புதியதாக தோன்றின.
அப்பா டிரைவ் செய்து கொண்டே “ரயில் தாமதமாக வருகிறது என்று தெரிந்தபோது எனக்கு உயிரே போய்விட்டது போல் இருந்தது. நீ வந்து சேரும் வரையில் இருப்பே கொள்ளவில்லை” என்றார்.
“என்னால் நேரத்திற்கு வர முடியாமல் போயிருந்தால் என்ன செய்திருப்பீங்க டாடீ?”
அப்பாவின் முகம் சீரியஸாக மாறியது. இடது கையால் கண்ணாடியைச் சரி செய்து கொண்டார்.
“என்ன செய்திருப்பேனா? டிரைவரை வண்டியுடன் அனுப்பிவிட்டு நாமிருவரும் எங்கேயோ போயிருப்பதாகவும், மாலையில்தான் திரும்புவோம் என்றும் சொல்லச் சொல்வேன். நீ வரும் வரையில் ஸ்டேஷனில் தவம் கிடந்திருப்பேன்.”
தாங்க் காட்! மனதிலேயே கடவுளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன். என்னால் அப்பாவுக்கு எந்தப் பிரச்னையும் வருவதை நான் விரும்பவில்லை.
“திருநாகம் மாமி ஊரிலிருந்து வந்துவிட்டாளா?” பதற்றத்துடன் கேட்டேன்.
“மாமி இன்னும் வரவில்லை. பத்து நாட்கள் கழித்து வரச் சொல்லி கடிதம் எழுதிப் போட்டுவிட்டு பணத்தையும் அனுப்பிவிடேன்.”
“அப்பாடா!” நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டே பின்னால் சாய்ந்து உட்காரப் போனவள் வீலென்று கத்திவிட்டேன்.
“என்ன ஆச்சு?” அப்பா பதற்றத்துடன் கேட்டுக் கொண்டே பிரேக் போட்டு காரை நிறுத்னார்.
“பின்னால் டிக்கியில் என் பெட்டி படுக்கை?” பயந்து கொண்டே சொன்னேன்.
“அதுதான் உன் கவலையா? உன் பெட்டி படுக்கையை நாராயணனுடன் வீட்டிற்கு அனுப்பிவிட்டேன்.”
நிம்மதியாக மூச்சு விட்டபடி மறுபடியும் சரிந்து உட்கார்ந்து கொண்டேன். என் கோழைத்தனத்தை நினைக்கும்போது எனக்கே வெட்கமாகவும் இருந்தது.
“நாராயணன் மறுபடியும் வேலைக்கு வந்து விட்டானா?” அப்பாவைப் பார்த்துக் கொண்டே கேட்டேன்.
நான்கு மாதங்களுக்கு முன்னால் தன்னை எதிர்த்து பேசினான் என்பதற்காக அம்மா நாராயணனை வேலையிலிருந்த நீக்கிவிட்டாள். தன்னுடைய வேலையை ஒழுங்காக செய்துகொண்டு தேவையில்லாமல் யஜமானியிடம் பேச்சு கேட்க விரும்பாத நாராயணனைக் கண்டால் அம்மாவுக்கு எரிச்சல். சம்பளம் கொடுப்பவர்கள் ஏதாவது ஒரு சமயத்தில் கோபித்துக் கொள்ளாமல் இருப்பார்களா? அவ்வளவு சுயகௌரவம் பார்ப்பவர்கள் வேலைக்கு வரக்கூடாது என்பது அம்மாவின் வாதம்.
“இந்த முறை உங்க அம்மா வரும்போது அவளுக்கு விருப்பமில்லாத பல விஷயங்கள் நடந்திருக்கு” என்றார் அப்பா. அப்பாவின் இதழ்களில் முறுவலைப் பார்க்கும்போது எனக்கும் சிரிப்பு வந்தது.
நானும் அப்பாவும் உள்ளே போய் நின்று கொண்டோம். பயணிகள் வெளியே வந்த கொண்டிருந்தார்கள். அம்மாவும் வெளியே வந்தாள். அம்மாவின் சுறுசுறுப்பான கண்கள் சட்டென்று எங்களை அடையாளம் கண்டுகொண்டன. மலர்ந்த முகத்துடன் கையை உயர்த்தி அசைத்தாள். அப்பாவும் கையை அசைத்தார். நான் அப்படியே நின்று கொண்டிருந்தேன். ஷிபான் புடவை, கையில்லாத ரவிக்கை, புது விதமான சிகை அலங்காரத்தில் கண்களுக்கு கருப்புக் கண்ணாடி அணிந்து கொண்டு பார்ப்பவர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொள்ளும் உருவத் தோற்றம் கொண்ட அம்மாவைப் பார்க்கும்போது உள்ளூர குன்றிப் போய்விட்டேன். நான் ஏதோ பட்டிக்காட்டிலிருந்து வந்தவள் போலவும், நாகரீகம் தெரியாத முட்டாள் போலவும் தோன்றியது.
அம்மாவுக்கு பின்னாலேயே க்ரே கலர் சூட்டில் இருந்த மற்றொரு கருப்புக் கண்ணாடி ஆசாமியும் எங்களைப் பார்த்துக் கையை அசைத்தான். அவனை சாரதி என்று கண்டு கொள்வதற்கு எனக்கு ஒரு நிமிஷம் கூடத் தேவைப்படவில்லை.
“அதுதான் விஷயம். சாரதியும் வந்திருக்கிறான். அதான் உன்னையும் அழைத்து வரச்சொல்லி தந்தி கொடுத்திருக்கிறாள்.” தனக்குத்தானே பேசிக் கொள்வது போல் அப்பா சொன்னார்.
சாரதியும் அம்மாவும் சேர்ந்து நடந்து வருவதைப் பார்க்கும்போது கண்கொள்ளாத காட்சியாக இருந்தது. சாரதி அம்மாவை விட வயதில் ரொம்ப சிறியவன்தான். ஆனால் அந்த நிமிடம் பார்க்கும்போது அம்மா அவனைவிட இரண்டு மூன்று வயது சின்னவள் போல் காட்சியளித்தாள்.
“வெல்கம் மை பாய்!” கைகுலுக்குவதற்காக அப்பா கையை நீட்டினார். அம்மா என் கன்னத்தை லேசாக இழுத்து “ஏன் இவ்வளவு சோர்வாக இருக்கிறாய்? வேளைக்குச் சரியாக சாப்பிடவில்லையா? முகம் வாடியிருக்கே?” என்றாள்.
“நீ அவளை கூட அழைத்துப் போகவில்லை என்ற கோபத்தை எல்லாம் என்மீது காட்டி, என் உயிரை எடுத்துவிட்டாள்.” அப்பா சொன்னார்.
உண்மைதானா என்பதுபோல் அம்மா என் பக்கம் பார்த்தாள். கையை நீட்டி என் தோளைச் சுற்றிலும் போட்டு அருகில் இழுத்துக் கொண்டாள். “டார்ஜிலிங் போனேனே தவிர என் மனம் முழுவதும் உன்னிடம்தான் இருந்தது” என்றாள்.
என்றைக்கும் இல்லாத விதமாக அன்பும் பாசமும் கலந்து ஒலித்த அம்மாவின் குரலைக் கேட்டதும் என் கண்களில் நீர் தளும்பியது.
“வரப் போவதாகச் சொல்லிவிட்டு வராமல் போனதற்காக சாரதி உன்னிடம் நேரில் மன்னிப்பு கேட்டுக் கொள்ள வந்திருக்கிறான்.” அம்மா சொன்னாள்.
நான் நிமிர்ந்து பார்க்கவில்லையே தவிர சாரதியின் பார்வை என்மீது நிலைத்திருப்பதை என்னால் உணர முடிந்தது.
லக்கேஜ் வருவதற்குத் தாமதமாகும் போல் இருந்தது. வெயிட்டிங் ரூமில் உட்கார்ந்து கொண்டோம். அம்மா என் கையை விடாமல் பிடித்துக் கொண்டிருந்ததால் அம்மாவின் பக்கத்திலேயே உட்கார வேண்டியதாயிற்று. எங்களுடன் உட்கார்ந்திருந்த சாரதி “இதோ வருகிறேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து போனான்.
அவன் போன பிறகு அம்மா என்னை தலை முதல் கால் வரையில் பரிசீலித்துக் கொண்டே “என்ன இந்தக் கோலம்? ஏர்போர்ட்டுக்கு இப்படித்தான் வருவார்களா?” என்றாள்.
சற்றுமுன் அம்மாவின் குரலில் தென்பட்ட மென்மை இப்போ மருந்துக்குக் கூடத் தென்படவில்லை. அம்மா காட்டிய அன்பிற்கு இளகிய என் மனம் இந்த மாறுதலைக் கண்டு வரண்டு போய் விட்டது.
“கையில் பேக் எங்கே போச்சு? புது செருப்பு ஏன் இவ்வளவு பழசாக இருக்கு?” என்று கேட்டவள் அப்பொழுதுதான் கண்டுபிடித்தவள் போல் புடவையை பார்த்துவிட்டு நெற்றியைச் சுளித்தாள். “இந்தப் புடவை ஏது?” என்றாள்.
ஆபத்தில் சிக்கிக் கொண்டவள்போல் அப்பாவின் பக்கம் பார்த்தேன். அப்பா குறிப்பறிந்து தொண்டையைக் கனைத்துக் கொண்டு “நான்தான் வாங்கிக் கொடுத்தேன்” என்றார்.
அம்மா ஏதோ அதிசயத்தைப் பார்ப்பதுபோல் பார்த்தாள். பிறகு சந்தேகம் தொனிக்கும் குரலில் “என்ன விலை?” என்று கேட்டாள்.
“இரு நூறு.”
“இரு நூறா?” அம்மா புடவையைக் கையால் தொட்டுப் பார்த்து “நானூறுக்குக் குறையாது. இருநூறுக்கு உங்களுக்கு எந்த மடையன் கொடுத்தான்?” என்றாள்.
அப்பா கண்ணாடியை சரிசெய்து கொண்டே “உன்னிடம் உண்மையை மறைக்க முடியாது. அதனுடைய விலை நானூறுதான். அதிகம் கொடுத்துவிட்டேன் என்று நீ திட்டப் போகிறாயே என்று விலையைக் குறைத்துச் சொன்னேன்” என்றார்.
அம்மா பெருமையுடன் பார்த்தாள். அதற்குள் சாரதி வந்து விட்டதால் எங்கள் உரையாடல் நின்று விட்டது. வீட்டுக்கு வந்ததுமே நேராக என் அறைக்குச் சென்று விட்டேன். அறைக்குள் என் பெட்டி படுக்கையைக் காணவில்லை. குளித்துவிட்டு வந்ததும் தூக்கம் கண்களைச் சுழற்றிக் கொண்டு வந்தது. ஆனால் இப்போ உடனே தூங்க முடியாது.
கீழே சாப்பாடு யாராக இருப்பதாகத் தகவல் வந்தது. பச்சைத் தண்ணீரால் மற்றொரு முறை கண்களை அலம்பிக் கொண்டு கீழே சென்றேன. உணவு மேஜை அருகில் அப்பா, அம்மா மற்றும் சாரதி ஊர்கதைகளை பெசிக்கொண்டிருந்தார்கள். கொள்ளைப் பசியுடன் இருந்த நான் மளமளவென்று சாப்பிடத் தொடங்கினேன். அம்மா தடுப்பதுபோல் என்னைப் பார்த்தாள். ஆனால் நான் பொருட்படுத்தவில்லை. அகோரப்பசியுடன் இருக்கும்போது, கண்ணுக்கு எதிரில் ருசியான உணவு வகைகள் இருந்தால் யாரால்தான் கட்டுப்பாட்டுடன் இருக்க முடியும்?
சாப்பாடு முடிந்ததும் ஹாலில் வந்து உட்கார்ந்து கொண்டோம். சாரதி அத்தையின் வீட்டுக்கு போவதாகச் சொன்னான். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு மாலை நான்கு மணிக்கு டீ குடித்த பிறகு போகலாம் என்று அம்மா சொன்னாள். மூன்றுபேரும் மறுபடியும் பேச்சில் ஆழ்ந்து விட்டார்கள்.
அப்பா அம்மாவின் பயண விசேஷங்களை விசாரித்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு தாஜ்மகாலைப் பார்த்துவிட்டு டில்லிக்கு வந்தார்களாம். அங்கே அம்மா சாரதியைச் சந்தித்தாளாம். மற்ற எல்லோரும் ரயிலில் வந்து கொண்டிருக்கிறார்கள். அமமா சாரதியுடன் பிளையிட்டில் வந்துவிட்டாள்.
அவர்கள் பேசும் விஷயங்களில் எனக்குக் கொஞ்சம்கூட ஆர்வம் இருக்கவில்லை. தூக்கம் கண்களைச் சொருகியது. கொட்டாவி வரும் போதெல்லாம் பேப்பர் படிப்பதுபோல் முகத்தை மறைத்துக்கொண்டேன். என் இடத்தில் யார் இருந்தாலும் இப்படித்தான் செய்வார்களோ என்னவோ. பாழாய் போன தூக்கம்! வேண்டும் என்ற போது நம் அருகில் கூட வராது. தானாக வரும்போது நேரங்காலத்தைப் பார்க்காது. சோபாவின் விளிம்பில் தலையைச் சாய்த்தபடி கண்களை மூடிக்கொண்டேன். ஏற்கனவே களைத்துப் போயிருந்த என்னை உறக்கம் வெற்றிக் கொண்டு விட்டது. முகத்திற்குக் குறுக்கே பிடித்துக்கொண்டிருந்த பேப்பர் எப்பொழுது கையிலிருந்து நழுவியதோ தெரியாது.
திடீரென்று யாரோ என் தோள்களைப் பற்றி உலுக்கியபடி “மீனா… மீனா…” என்று கோபமாக அழைத்துக் கொண்டிருந்தார்கள்.
ரொம்பய முயற்சி செய்து கண்களைத் திறந்தேன். தூக்கக்கலக்கத்தில் இருந்த என் கண்களுக்கு அம்மாவின் முகம் மங்கலாகத் தெரிந்தது.
“உனக்குக் கொஞ்சமாவது புத்தி இருக்கா? இந்த நேரத்தில் என்ன தூக்கம்? சாரதி உன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வான்?” அம்மாவின் குரல் இடிமுழக்கம் போல் ஒலித்தது.
“தூக்கம் வருகிறது மம்மீ!” வலுக்கட்டாயமாக எழுந்து கொண்டேனே தவிர இரண்டடிகள் கூட என்னால் வைக்க முடியவில்லை. சற்று முன் அம்மா உட்கார்ந்திருந்த நீளமான சோபாவில் அப்படியே சரிந்து குப்புறப்படுத்துக் கொண்டேன். தூக்கம் இவ்வளவு சுகமாக, சந்தோஷம் தரக்கூடிய விஷயமாக இருக்கும் என்று இதுவரையிலும் எனக்குத் தெரியாது.
திடீரென்று முதுகில் அறை விழுந்தது.
முதுகில் விழுந்த அறையை விட தூக்கம் கலைந்து போனதற்குக் கஷ்டமாக இருந்தது. “ஊம்” என்று முனகிவிட்டு சும்மாயிருந்தேன்.
இன்னொரு அறை விழுந்தது.
“என்னம்மா?” எரிச்சலும் கோபமுமாக சிணுங்கினேன்.
“எழுந்து உன் அறைக்குப் போய் படுத்துக்கொள். முதலில் இந்த இடத்தை விட்டு எழுந்திரு.” அதட்டுவதுபோல் அம்மாவின் குரல் கேட்டது.
“ஆகட்டும் மம்மீ! இரண்டு நிமிடங்கள் கழித்துப் போகிறேன்.” சொன்னேனே தவிர என்னால் எழுந்துகொள்ள முடியவில்லை.
“எழுந்து உள்ளே போகச் சொன்னால் இன்னும் இங்கேயே இருக்கிறாயே?” அம்மாவின் குரல் தொலைவில் கேட்பதுபோல் ஒலித்தது.
“போகட்டும். இங்கேயே தூங்க விடேன்.” அப்பாவின் குரல் கேட்டது.
“இப்படியே செல்லம் கொடுத்து கொடுத்து அவளை குட்டிச் சுவராக்கிறீங்க. சாரதி முன்னாலேயே தூங்கி வழிகிறாள். அவன் என்ன நினைத்துக் கொள்வான்?”
“சரி, நடந்தது நடந்துவிட்டது. அவன்தான் போய்விட்டானே. இங்கே இப்போ யாரும் வரப்போவதும் இல்லை. அவளை நிம்மதியாகத் தூங்கவிடு.”
“நான் இல்லாத இந்தப் பத்து நாட்களில் இன்னும் எத்தனை வேண்டாத காரியங்களைச் செய்திருக்கிறாளோ?”
அப்பா அதற்கு என்ன பதில் சொன்னாரோ என் காதில் விழவில்லை. மறுபடியும் தூக்கம் என்னைத் தழுவிக்கொண்டது.
‘இங்கிருந்து உடனே எழுந்துகொண்டு உள்ளே போகணும். இல்லாவிட்டால் அம்மாவுக்குக் கோபம் வரும்’ என்று நினைத்தப் அங்கேயே உறங்கி விட்டேன்.

Series Navigationஐஸ்லாந்தின் பூத எரிமலைப் புகை மூட்டம் ஐரோப்பிய வான்வெளிப் போக்குவரத்தை முடக்கியது(கட்டுரை -1) >>

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்