மோந்தோ -3 – 1

This entry is part [part not set] of 34 in the series 20090205_Issue

பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா


ஆக மோந்தோவின் தினசரி வாழ்க்கையின் சிக்கல்களில்லை, நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் சியாப்பாகான் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருந்தது. சியாப்பாகானென்பது பாதுகாப்பு கவசமிட்ட சாம்பல் வண்ண வாகனங்கள். ஒவ்வொரு நாளும் அதிகாலை நேரங்களில் நகரவீதிகளில் நடைபாதைகளையொட்டி, சத்தமின்றி மெதுவாக அவை வலம் வரும். உறக்கத்திலிருந்து விடுபடாத, மூடுபனி கவ்விய வீதிகளில் அவ்வாகனங்கள் உலாவருவதற்குக் காரணங்களிருந்தன. உடையவர்களின்றி வீதிகளில் அலையும் நாய்களையும், ஊர் சுற்றும் அநாதைச் சிறுவர்களையும் தேடிப்பிடித்து வண்டியில் ஏற்றவேண்டிய கடமைகளே அவை.

ஒரு நாள் மோந்தோ எதிர்பாராதவிதமாக அவ்வாறான வாகனமொன்றை கண்டுவிட்டான். அன்றையதினம், கடலில் குளிக்கிறவர்களுக்காக நகராட்சி நிர்வாகம் கரையோரம் நிறுத்தியுள்ள மறைவிடமொன்றில் இரவைக் கழித்துவிட்டு தூக்கம் கலைந்து அப்போதுதான் எழுந்து வந்திருந்தான். நகராட்சி பூங்காவை குறுக்காக கடந்து போனவேளை. திடீரென்று ஒரு வாகனம் இவனுக்கு சில சில மீட்டர்கள்தூரம் முன்னால் நின்றது, புதருக்குள் சட்டென்று ஓடிமறைவதற்கு நேரமிருந்தது, ஒளிந்துகொண்டான். வாகனத்தின் பின்கதவு திறக்கப்பட சாம்பல் வண்ண சீருடை அணிந்த இரு ஊழியர்கள் கோணிப்பையும், கயிறுமாக வாகனத்தின் பின் கதவினைத் திறந்துகொண்டு இறங்குவதைப் பார்த்தான். பூங்காவின் இருபுறமும் பார்வையைச் செலுத்தி தேட ஆரம்பித்தனர். அவர்கள் பேசிக்கொண்டு புதரைக் கடந்தபோது, அவர்கள் பேச்சு காதில் விழுந்தது.

– இப்படித்தான் போயிருக்கணும்.

– நீ பார்த்தியா?

– ஆமாம். இத்தனை சீக்கிரம் வேறெங்கும் போயிருக்க முடியாது. இங்கேதான் எங்கேயாவது மறைந்திருக்கணும்.

சாம்பல் வண்ண சீருடை மனிதர்கள் இருவரும் ஆளுக்கொரு திசையில் விலகி நடந்தார்கள். புதருக்குப் பின்னே, மூச்சை அடக்கி அசையாமலிருந்தான். ஒருசில நிமிடங்கள் கழிந்திருக்கும், கரகரப்பானதொரு குரல் கேட்க விநோதமாக இருந்தது, வந்த கணத்தில் அடங்கியும்விட்டது. ஊழியர்கள் இருவரும் திரும்பவும் வாகனத்திற்கு வந்தபோது, கோணிப்பையில் ஏதோவொன்றை அடைத்து சுமந்து வந்தார்கள். கொண்டுவந்த பொதியை வாகனத்தின் பின் கதவைத் திறந்து உள்ளே ஏற்ற செவிப்பறை அதிர மீண்டும் சப்தம். கோணிப்பையிலிருந்தது ஒரு நாய். சில நொடிகளுக்குப் பிறகு சாம்பல் நிற வாகனம் வழக்கமான நிதானத்துடன் ஊர்ந்து பொதுப்பூங்காவின் வளர்ந்த மரங்களுக்குப்பின்னே மறைந்து போனது. அவ்வழியாக வந்த நபரொருவர் அதனைச் சொந்தக்காரர்களின்றி வீதிகளில் அலைகிற நாய்களை பிடிக்கிற வாகனமென்றார். மோந்தோவை மிகக் கவனமாகச் சிறிது நேரம் பார்த்தவர், பள்ளிக்குச் செல்லாமல் வீதியில் அலைகிற பிள்ளைகளையும் வாகனம் பிடித்து செல்வதுண்டு”, என்றார். அன்றையிலிருந்து, வீதிகளில் நடக்கிறபோதெல்லாம் சாம்பல் நிற வாகனம் கண்ணிற்படுகிறதாவென நான்கு திசைகளிலும் நோட்டம் விட்டபடி மிகவும் எச்சரிக்கையுடன் நடப்பான்.

பள்ளிவிடுகிற நேரங்களிலும், பண்டிகை நாட்களிலும் பயங்கொள்ளத் தேவையில்லையென்பது அவன் அனுபவம் தந்த பாடம். வீதிகளில் அதிக மக்கள் நடமாட்டமில்லாத நேரங்களில் அதாவது முன்காலையிலும் பின் மாலையிலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டியிருந்தது. நாய்போல சீரின்றி காலெடுத்துவைத்து மோந்தோ நடப்பதற்குங்கூட அவ்வச்சமே காரணம்.

அவ்வாறான நாட்களில்தான் ழித்தான், கொஸாக்கு, அவர்களுடைய வயதான கூட்டாளி ததி ஆகியோரை மோந்தோ தெரிந்து வைத்திருந்தான். அவர்களுடைய உண்மைப் பெயர் என்னவென்று எங்கள் ஒருவருக்கும் தெரியாது, இவைகளெல்லாம் நாங்களாக அவர்களுக்கு வைத்த பெயர். ழித்தான் (நாடோடி) என்று அழைக்கப்பட்ட நபருக்கும் வேறு பெயர் இருந்திருக்கவேண்டும். பழுப்பு நிறமும், கறுத்த தலை மயிரும், பார்க்க கழுகுபோலவும் இருப்பான். திடலொன்றில் நிறுத்தியிருந்த பழைய மோட்டார் வாகனமொன்றை குடியிருப்பாக மாற்றிக்கொண்டு தெருத் தெருவாக செப்படிவித்தைகள் காட்டி பிழைப்பு நடத்துவதால், அப்பெயரை வைத்திருப்பார்களென்று நினைக்கிறேன். கொஸாக் கொஞ்சம் வித்தியாசமான ஆசாமி. மங்கோலியர்போல தெரிவான். உரோமத்தாலான தொப்பியுடன் கரடிபோன்றிருப்பான். பகல் முச்சூடும் மதுவின் போதையில் இருப்பான். இரவு நேரங்களில் காப்பி பார்களில் அக்கோர்டியன் வாசிக்கிறவன்.

மூவரில் மூப்படைந்த ‘ததி’யெனில் மோந்தோவுக்குக் கூடுதற் பிரியம். ஒரு முறை கடற்கரை ஓரம் நடந்து சென்றபோது தினசரி இதழொன்றை விரித்து அமர்ந்திருந்த ததியைக் கண்டான். கிழவர் ததி, தன்னைக் கடந்துபோகிறவர்களைப் பற்றிய கவலையின்றி வெயில் காய்ந்து கொண்டிருந்தார். அருகிலேயே மற்றொரு தாளில் இவனது ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஓட்டைகளுடன் ஒரு மஞ்சள் நிற அட்டை பெட்டி. மனிதர் அமைதியான முகத்துடன், பார்க்க சாதுவாகத் தெரிந்தார். இவன் அச்சங்கொள்ள காரணங்களில்லை. மஞ்சள்நிறப் பெட்டியை பார்க்கவென்று நெருங்கினான், கிழவர் ததியிடம் கேட்டான்:

– உங்கள் பெட்டிக்குள் அப்படி என்னதான் இருக்கிறது?

மனிதர் கொஞ்சமாகக் கண்களைத் திறந்தார். பதிலேதுமின்றி பெட்டியைத் தூக்கி தமது மடியில் கிடத்தி அளவாய்த் திறந்தார். மர்மமான புன்னகையொன்றுடன் கைகள் பெட்டிக்குள் செல்கின்றன, அவை வெளிப்பட்டபோது இரண்டு வெண்புறாக்கள்.

– ரெண்டும் ரொம்ப அழகா இருக்கு? அதுகளுக்கு பெயர்களுண்டா?

கிழவர் ததி இரண்டின் சிறகையும் மெல்ல தடவிக்கொடுத்தார், பிறகு தமது கன்னத்தை அவைகளிடம் கொண்டு போனார்.

– இவனுக்குப் ‘பிலு’ண்ணு பேரூ; அவள் ‘ஸோயே’

பறவைகளை கீழே விடாமல் கைகளில் பிடித்தபடியிருந்தார். மெல்ல அவை இரண்டையும் தமது கன்னத்தினால் தடவிக்கொடுத்தார், பார்வை எங்கோ வெகுதூரத்தில் இருந்தது, அழகான ஈர மினுமினுப்புடன் கூடிய கண்கள், பார்வை குறையுள்ளவராக இருக்கவேண்டும்.

புறாக்களின் தலையை இப்போது மோந்தோவும் தடவிக்கொடுத்தான். கடுமையான சூரிய ஒளிக்கு அஞ்சியதைப்போல பெட்டிக்குத் திரும்ப அவை விரும்பின. அவைகளை சமாதானப்படுத்துவதுபோல கிழவர் மெல்லிய குரலில் கொஞ்சுகிறார், பின்னர் பெட்டிக்குள்ளேயே திரும்பவும் அவற்றை விட்டு மூடினார்.

– ரெண்டுமே ரொம்ப அழகு, என்ற மோந்தோ, அங்கிருந்து புறப்பட்டுச்செல்ல, கிழவர் கண்களை மூடினார், செய்தித்தாளில் அமர்ந்தபடி உறங்கத் தொடங்கினார்.

இரவானதும் முதியவர் ததியை பார்க்கவென்று நான்கு வீதிகளும் சந்திக்கிற இடங்களுக்குச் செல்வான். ழித்தான், கொஸாக்குடன் ஆகியோருடன் இணைந்து வீதிகளில் வித்தைகாட்டும் தொழிலை அவர் செய்தார். ததி தமது உடமையான மஞ்சள் பெட்டியுடன் சற்று தள்ளி அமர்ந்திருக்க, ழித்தான் பாஞ்சோ வாசிப்பான். கொஸாக் நடந்து செல்கிற பாதசாரிகளை வித்தை பார்க்க கூவி அழைப்பான். பாஞ்சோவை வாசிக்கையில் கம்பிகளில் தனது விரல்கள் மேலும் கீழுமாக இயங்குவதை ரசித்தபடி ழித்தான் பாடுவான். இருண்ட அவன்முகம் தெருவிளக்கில் ஒளிர்வதுண்டு.

வேடிக்கைப் பார்க்கும் கூட்டத்தில் முன் வரிசையில் மோந்தோவை பார்க்கலாம். ததியைப் பார்த்ததும் கையை அசைத்து புன்னகைப்பான். அப்போதுதான் ழித்தான் தனது வித்தையை ஆரம்பித்திருப்பான். பார்வையாளர்கள் முன்நின்றபடி தனது மூடிய கையிலிருந்து வண்ணக் கைக்குட்டைகளை, ஒன்றன் பின்னொன்றாக கீழே நழுவச்செய்ய, அதன் வேகத்திற்கு ஈடுகொடுத்து அவற்றை மோந்தோ பொறுக்கியெடுப்பான், பின்னர் அடுக்கவும் செய்வான். வித்தைகாட்டும் நிகழ்ச்சியில் அப்பணி தனக்கானதென்பதுபோல மோந்தோ அதைக் கருதினான். சாவிகள், மோதிரங்கள், பென்சில்கள், படங்கள், பிங்-பாங் பந்துகள், சில நேரங்களில் பற்றவைத்த சிகரெட் துண்டுகளென தொடர்ந்து புதிது புதிதாய் பொருள்களைக் கைகளிற் கொண்டுவந்து ழித்தான் கூட்டத்தை வியப்பில் ஆழ்த்துவான். வேடிக்கைப் பார்க்கிற மனிதர்களுக்கு அவற்றை அவன் வினியோகிப்பதுமுண்டு. என்ன நடக்கிறது, எப்படி முடிகிறது என்பதை வேடிக்கைப் பார்க்கிறவர்களால் புரிந்துகொள்ளவே முடியா¡து, கைகளில் அத்தனை வேகம். பொதுமக்கள் கைகளைத் தட்டி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிப்பார்கள், நாணயங்களை தரையில் எறியத் தொடங்குவார்கள்.

– பையா, அந்த காசையெல்லாம் பொறுக்கி எடு! – கொஸாக்கிடமிருந்து கட்டளை வரும்.

ழித்தான் கைகள் முட்டையொன்ற எடுக்கின்றன, அதனை சிவப்புத் துணியில்வைத்து மூடுவான். பிறகு ஒரே ஒரு நொடி, கப்..சிப்.

– கவனமா பாருங்க!

கைகளை தட்டிக் காட்டுவான். துணியில் போட்ட முடிச்சை அவிழ்க்கிறபோது முட்டை மாயமாக மறைந்திருக்கும். கூட்டத்தினர் முன்பைவிடக் கூடுதலாகக் கைத்தட்டுவார்கள். மோந்தோ மறுபடியும் தரையில் விழும் நாணயங்களைச் சேகரித்து அவற்றை சிறியதொரு இரும்புப்பெட்டியில் போடுவான். தரையில் விழுந்த நாணயங்களை எல்லாம் எடுத்தானதும், மோந்தோ குத்துக்காலிட்டு அமர்ந்து, ழித்தானுடைய கைகள் கட்டுப்பாடின்றி இயங்குவதை ஆர்வத்துடன் கவனிப்பான். ழித்தான் மூடிய கையிலிருந்து முட்டைகளை வரவழைத்து, கணத்தில் மறையச்செய்கிறபோதெல்லாம் மோந்தோவைப் பார்த்து கண்ணைச் சிமிட்டுவான்.

– ஓப்..ஓப்..

ழித்தான் வித்தைகளில் பலரையும் கவர்வது: பொதுமக்கள் பிரம்மிப்புடன் பார்த்துக்கொண்டிருக்க, கைகளில் இரண்டு மூட்டைகளை நொடிப்பொழுதில் வரவழைத்து, அவற்றை மஞ்சளும், சிவப்புமான பெரிய கைக்குட்டைகளில் வைத்து மூடி, ஓரிரு நொடிகள் உயர்த்தி பிடிப்பதும் பின்னர் அவற்றை நொடிப்பொழுதில் மறையச் செய்வதுமாகும். மக்கள் வியப்பில் சுவாசத்தையே மறந்திருக்கும் நேரமது.

– ஜா…க்கிரதை, இங்கே கவனியுங்க!

ழித்தான் மெல்ல கைகளை இறக்கியவண்ணம் கைக்குட்டைகளை பிரிப்பான். இரண்டு வெண்புறாக்கள் வெளிப்பட்டு அவன் தலைக்கு மேலாக பறந்து கடைசியில் கிழவர் ததியின் தோளிற் சென்று அமர்ந்துவிடும்.

வேடிக்கை பார்க்கிற மக்கள் தங்களை மறந்து ஆராவாரம் செய்வார்கள்:

– ஓ..!

கைகளைப் பலமாகத் தட்டுவார்கள். நாணய மழை பொழியும். நிகழ்ச்சி முடிந்ததும், ழித்தான் சாண்ட்விச்சும், பீரும் வாங்கி வருவார், பிறகு எல்லோருமாக ததியின் மோட்டார் வாகன குடியிருப்பின் படிகளில் அமர்ந்துகொள்வார்கள்.

– நீ எனக்கு இன்றைக்கு நிறைய உதவியிருக்க- மோந்தோவிடம் ழித்தான் கூறினான்.

பீரைகுடித்துக் கொண்டிருந்த கொஸாக் திடீரென்று ஆச்சரியப்பட்டான்.

– ழித்தான்.. பையன் யார், உன்னோட மகனா?

– இல்லை, என்னோட சிநேகிதன்.

– பையா! அப்போ உன்னுடைய நலனுக்காக குடிக்கிறேன், – கையிலிருந்த பீர் பாட்டிலை உயர்த்திக் காட்டினான். போதை தலைக்கேறியிருந்தது

– உனக்கு சங்கீதம் வருமா?

– தெரியாது சார் – மோந்தோவின் பதில்.

கொசாக் வெடித்துச் சிரித்தான்

– தெரியாது சார்.. நம்புங்க சத்தியா எனக்கு தெரியாது- திடீரென்று கத்திச் சொன்னான். ஆனால் கொஸாக், அவனுடைய பதிலைக்கேட்டுத் தொடர்ந்து சிரித்தான். சிரிக்குமளவிற்கு அப்படி என்ன சொன்னோம் என்று மோந்தோ யோசித்தான். அவனுக்குக் காரணம் விளங்கவில்லை.

கொஸாக் தனது சிறிய அக்கோர்டியனை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான். வழக்கமாக அப்படி வாசிப்பவனல்ல. பாடல் சலிப்பூட்டும் தன்மையுடன் – சீரின்றி – சில நொடிகள் அதிவிரைவாகவும், சில நொடிகள் அடங்கி நிதானமாகவும், வித்தியாசமாகவும் அன்றைக்கு ஒலித்தது. கைகள் வாசித்துக்கொண்டிருக்க, கால்கள் தாளமிட்டன. அப்பாடலில் வேறு சொற்களெதுவும் அவனுக்குத் தெரியாதென்பதுபோல கட்டைக்குரலில் ஒரேயொரு வார்த்தையை திரும்பத்திரும்பப் பாடிக்கொண்டிருந்தான்.

– அய், அய், யாயா, யாயா, அயாயா, யாயா, அயாயா, யாயா, அய், அய்! மெல்ல அசைந்தபடி பாடிக்கொண்டே அக்கோர்டியன் வாசித்த. கொஸாக்கை அன்றைக்குப் பார்க்க கரடிபோல இருந்தான்.

அவ்வழியாகப் போனவர்களில் ஒரு சிலர் சிறிது நேரம் நின்று கேட்டுவிட்டுப் போனார்கள், கேட்டவர்களில் சிலர் சிரித்தார்கள், பிறகு தொடர்ந்து நடந்து போனார்கள்.

நடு நிசியானதும் வாசிப்பதை கொஸாக் நிறுத்திவிட்டு மீண்டும் ழித்தான் பக்கத்தில் அமர்ந்துகொள்வான். கறுப்புரகச் சுருட்டினை மூவரும் பற்றவைத்துக்கொள்வார்கள். சுருட்டின் வாசம் கடுமையாக இருக்கும், சகிக்காது. பிறகு மூவரும் பீர் குடித்தபடி. உரையாடுவார்கள். போர், பயணம் என்று பழைய நினைவுகளின் அடிப்படையில் பேச ஆரம்பிப்பார்கள், மோந்தோவுக்கு எதுவும் விளங்காது. முதியவர் ததி அதிகம் வாயைத் திறக்கிறவரல்ல. அப்படி வாய் திறந்தாரென்றால் பறவைகள், வெண்புறாக்கள், தகவல் பரிமாற்ற புறாக்கள் பற்றிய கதைகளைச் சொல்வதற்காக இருக்கும். எனவே மோந்தோ கிழவர் பேச்சை மாத்திரம் ஆர்வத்துடன் கேட்பான். அவர்பேச்சில் கிராமப்புறங்களில் நேரங்காலமின்றி பறந்துகொண்டிருக்கிற பறவைகள்; பூமிக்கடியில் நதிகள் நெளிந்தோடும் காலம்; சிவப்பு மற்றும் சாம்பல் வண்ணத்தில் கூரைகளைக் கொண்ட வீடுகள்; புல்வெளிகள், திறந்த வெளிகள், கற்கள் குவிக்கப்பட்டது போல தோற்றமுள்ள மலைகள் இடம்பெறும். மீகாமர்களையும், விமானிகளையும்போல நட்சத்திரங்களை அடையாளம் வைத்தும், நிலவியல் காட்சிகளை வரைபடமாகக்கொண்டும் எங்கனம் பறவைகள் தங்கள் இருப்பிடம் திரும்புகின்றன என்பது பற்றியும் நிறைய சொல்லியிருக்கிறார். பறவைகளின் வீடுகள் கதவுகளின்றி கோபுரம்போல இருக்குமென்றும், கூரைக்கடியில் சிறிய சன்னல்களை மாத்திரம் கொண்டிருக்கும் என்பார். வெக்கை கூடிய காலங்களில், அவற்றின் இல்லங்களில் காச்சுமூச்சென்று சத்தங்கள் வெளிப்படுமென்றும், அவற்றினை வைத்து பறவைகள் வீடு திரும்பியிருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள முடியுமென்பார்.

இரவு நேரமானதால் பளிச்சென்று கணிந்துகொண்டிருக்கும் சிகரெட் கங்குவை பார்த்தபடி ததி சொல்லும் கதையை மோந்தோ கவனமாய்க் கேட்டுக்கொண்டிருந்தான். சுற்றியிருந்த வீதிகளில் அந்நேரத்திலும் மோட்டார் வாகனங்கள் அதிகச் சத்தமின்றி நீர்த்தாரைகள் போல ஊர்ந்தன. வீட்டுவிளக்குகள் ஒன்றன் பின்னொன்றாக அணைக்கப்பட்டன. மோந்தோவுக்கு, தூக்கக் கலக்கம், இரவுபிறந்து வெகுநேரம் ஆகிவிட்டதென்பதைப் புரிந்துகொண்டான். போய் படுக்கவேண்டும். ழித்தான் அவனை மோட்டார்வாகனத்தின் பின்புறமிருந்த நீள் பலகையில் படுக்கச் சொன்னான். அன்றிரவை மோந்தோ அங்குதான் கழித்தான். ததியும் அவரிடத்திற்குத் திரும்பினார். ழித்தானும் கொஸாக்கும் மாத்திரம் உறங்காமல் வாகனத்தின் படியிலமர்ந்தபடி விடியவிடிய குடிப்பதும், புகைப்பதும், கதைபேசுவதுமாக இருந்தார்கள்.

——-

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா