கழுதை வண்டிச் சிறுவன்

This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue

அ.முத்துலிங்கம்



புத்தாயிரம் நெருங்க நெருங்க என் பதற்றம் அதிகரித்தது. இனி வரும் வருடங்களில் நினைவு வைக்கும் விதமாக அதைக் கொண்டாடவேண்டும் என்று திட்டமிட்டேன். திங்கட்கிழமை முடிந்து செவ்வாய்க்கிழமையாக மாறுவது, பங்குனி மாதம் சித்திரையாக மாறுவது, ஒரு வருடம் கழிந்து இன்னொரு வருடம் பிறப்பது எல்லாம் வழமைபோல நடப்பதுதான். ஆனால், ஆயிரம் வருடங்கள் முடிந்து இன்னொரு ஆயிரம் வருடங்களுக்கான தொடக்கம் என்பது எவ்வளவு அபூர்வமானது. ஆகவே அந்த இரவு என்றேன்றைக்குமே மறக்கமுடியாத ஒன்றாக அமையவேண்டும் என்று நான் விரும்பியதில் ஆச்சரியமில்லை.
நான் நமிபியாவை தெரிவு செய்தேன். பத்து வருடங்களுக்கு முன்னர் சுதந்திரம் பெற்றிருந்த அந்த நாட்டில் எனக்கு இரண்டு விசயம் ஆர்வமூட்டியது. ஒன்று, உலகத்திலேயே இங்கேதான் ஆப்பிரிக்க சிறுத்தைக்கு (Cheetah) ஒரு காப்பகம் அமைத்திருந்தார்கள். லோர்ரி மார்க்கர் என்ற அமெரிக்கப் பெண்மணி அதை நடத்தி வந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் அங்கே போனால் என்னுடைய நீண்டநாள் ஆசை நிறைவேறும். இன்னொரு காரணம், அங்கே வாழும் ஒருவகை தாவரம். அதைப் பற்றி பிறகு சொல்லலாம்.
லோர்ரி என்னுடைய விசாவுக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறினார். தென்னாப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு நமிபியாவுக்கு சென்று இறங்கியபோது அங்கே எனக்கு விசா இல்லை. விதிவசத்தால், காய்ந்து பேரிச்சம்பழம்போல காணப்பட்ட அந்த நடுத்தர வயதுப் பெண் அதிகாரியிடம் நான் மாட்டிக்கொண்டேன். காது குடைந்துவிட்டு விரலைப் பார்ப்பது போன்ற கவனத்திலும் குறைந்த கவனத்துடன் என் கடவுச்சீட்டை பின்னிருந்து முன்னாக தட்டி பார்வையிட்டார். என்னை நிமிர்ந்துபார்த்தார். என் முகத்தில் என்ன இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தாரோ அது அங்கே இருக்கவில்லை. எவ்வளவு கெஞ்சியும் என்னை ஒரு பொருட்டாகவே அவர் மதிக்கவில்லை. இரவு அங்கே தங்கிவிட்டு அடுத்த நாள் விமானம் பிடித்து திரும்பி போகச்சொன்னார். சரி, என்னுடைய புத்தாயிரத்தை சிறையிலேதான் கழிக்கவேண்டும் என்று எண்ணினேன். அதுவும் என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்றாகத்தான் அமையும். அங்கே தடுத்து வைக்கப்பட்டிருந்த பத்து மணிநேரமும் என் மண்டையில் கொலை பற்றிய சிந்தனைகள் ஓடுவதை நிறுத்த முடியவில்லை. நான் நம்பிக்கை இழந்துவிட்ட தருணத்தில் என் அதிகாரியின் மேலாளர் திடுமென்று தோன்றி, லோர்ரி சமர்ப்பித்திருந்த விசா விண்ணப்பத்தை கிளறிக் கண்டுபிடித்து, என்னை விடுவித்தார். நானும் இரவிரவாக வாடகைக் காரில் பிரயாணம் செய்து ஒற்ஜிவொறொங்கோ என்ற காட்டுப் பிரதேசத்துக்கு போய்ச் சேர்ந்தேன்.
லோர்ரியின் சிறுத்தை காப்பகம்17,000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருந்தது. நிர்வாகத்துக்கு பொறுப்பான ரொஸாலியா என்ற நமிபிய இளம்பெண் என்னை வரவேற்று எனக்கு புல்லினால் வேய்ந்த ஒரு குடிசையை ஒதுக்கித் தந்தாள். என்னைப்போல பல விருந்தினர்கள் ஏற்கனவே வந்திருந்தார்கள். இரவு விருந்துக்கு சரியாக ஏழுமணிக்கு வந்துவிடும்படி சொல்லிவிட்டு அந்தப் பெண் ஒரு சிறுத்தை திரும்புவதுபோல திரும்பி மறைந்தாள்.
ஆப்பிரிக்க சிறுத்தை மெலிந்து, நீண்டு, இடைசிறுத்து பார்க்க அழகாக இருக்கும். உலகத்து விலங்குகளில் அதுவே ஆக வேகம் கூடியது. சிறுத்தையின் உடல்வாகு வேகத்திற்காக படைக்கப்பட்டதால் அதனால் சண்டைபோட முடியாது. வேட்டையாடும் இரையை இலகுவில் பிடித்து, பிடித்தவுடனேயே உண்ணத் தொடங்கும். அல்லாவிடில் சிங்கமோ, கழுதைப்புலியோ(Hynea) அதைப் பறித்துவிடும். அநேக சமயங்களில் இது வேட்டையாடுவது, மற்ற மிருகங்களின் பசியை போக்குவதற்குத்தான். அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டாலும், நமிபியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 2500 ஆகக் குறைந்துவிட்டது. அந்த நாட்டு சனத்தொகையிலும் பார்க்க அங்கே மாடுகளின் எண்ணிக்கையே அதிகம். சிறுத்தைகள், மாடுகளைக் கொல்ல ஆரம்பித்துவிட்டதால் மாட்டுப் பண்ணைக்காரர்கள் சிறுத்தைகளை கண்ட இடங்களில் சுட்டுத் தள்ளினார்கள். லோர்ரியின் காப்பகம் இதை தடுத்தது. பண்ணைகளுக்குள் நுழையும் சிறுத்தைகளைப் பொறிவைத்துப் பிடித்து, பராமரித்து, திரும்பவும் அவற்றை காட்டுக்குள் கொண்டுபோய் விடுவதுதான் அவர்களுடைய வேலை.
அங்கே வேலைசெய்தவர்களில் ஒரு பெண்மணி ரஸ்யாவில் இருந்து வந்தவர், வயது 26 அல்லது 27 இருக்கும். கண்களை நீளமாக்கிய ஒப்பனை. சிறிய இடையும், பெரிய தொடையுமாக இருந்தார். அவரிடம் எப்படி அங்குவந்து சேர்ந்தார் என்று கேட்டேன். சிறுவயதிலிருந்து காட்டு விலங்குகளுடன் பழகவேண்டும் என்று தான் ஆசைப்பட்டதால் லோர்ரியிடம் சம்பளம் இல்லாமல் வேலை செய்வதாகச் சொன்னார். விமான டிக்கட்டுக்கு காசு சேமிக்க தனக்கு நாலு வருடங்கள் பிடித்தன என்றார். ஜேர்மனியில் இருந்து புலம்பெயர்ந்த ஒரு பொறியாளரும் அங்கே வேலை செய்தார். வயது நாற்பது இருக்கும். அங்கிருந்த யந்திரங்களையும், ரேடியோ கருவிகளையும் அவரே பராமரித்தார்.
நான் நமிபியாவைத் தேர்ந்தெடுத்தற்கான இரண்டாவது காரணம் நிறைவேறவில்லை. இந்த உலகில் நமிபியா பாலைவனத்தில் மாத்திரமே காணப்படும் விநோதமான தாவரம் ஒன்று உண்டு. தாவரவியலாளர்கள் இதை தங்கள் வாழ்நாளில் இறப்பதற்கு முன் ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்று விரும்புவார்கள். இதன் பெயர் Welwitschia. இரண்டே இரண்டு இலைகள் கொண்ட இந்த தாவரம் தன் இலைகளை உதிர்ப்பதே இல்லை.
தாவரத்தைப் பார்ப்பதற்கு முன்கூட்டியே அனுமதி பெறவேண்டும். இது தெரியாததால் நான் அதைப் பார்க்க முடியவில்லை. ஆனால் அலாஸ்கா பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் தாவரவியல் பேராசிரியர் ஒருவர் அங்கு வந்திருந்தார். நீண்ட தாடிவைத்த, மெலிந்துபோன உருவம். முப்பது வருடங்களாக காத்திருந்து அந்த தாவரத்தை தான் பார்க்க முடிந்ததைப் பற்றி ஒரு சிறுவனின் மகிழ்ச்சியுடன் வர்ணித்தார். அந்த அபூர்வமான தருணம் எப்படி இருந்தது என்று கேட்டேன். அவர் பதில்கூறவில்லை. தன் பர்சைத் திறந்து அதற்குள் பாதுகாப்பாக வைத்திருந்த ஒரு புகைப்படத்தை உருவிக் காட்டினார். அது ஒரு பழைய பத்திரிகையிலிருந்து வெட்டப்பட்ட வெல்விட்சியா தாவரத்தின் படம். தன்னுடைய பத்தாவது வயதிலிருந்து அந்தப் படத்தை தான் பாதுகாத்து வருவதாகக் கூறினார்.
‘நான் பார்த்த தாவரத்துக்கு வயது 2000 வருடங்களுக்கும் மேலே. யேசு பிறந்தபோது அந்த தாவரம் ஏற்கனவே துளிர்விட்டிருந்தது. பாலைவனத்திலே என் வருகைக்காக காத்திருந்ததுபோல இத்தனை வருடமும் தனியாக நின்றது. நிலத்திலே ஒருவகை நச்சுத் திரவத்தை அது பரப்புவதால் அதற்கு கிட்ட வேறு தாவரம் வளரமுடியாது. பன்னிரெண்டு அடி நீளமான இரண்டு இலைகளும் பாலைவனக் காற்றில் கிழிந்து நூலாகிவிட்டன. ஆனால் அந்த தாவரம் இன்னமும் உயிர் வாழ்ந்தது. அதைப் பார்த்தபோது எப்படி இருந்தது என்று நினைக்கிறீர்கள்? யேசு எனக்கு முன்னால் நடந்து போயிருந்தால் எப்படி இருந்திருக்கும், அப்படி இருந்தது.’

அன்று புத்தாயிரத்தை கொண்டாடும் முகமாக ஒரு சிறுத்தையை காட்டிலே விடுதலை செய்தார்கள். ரேடியோ வளையம் அணிவித்த சிறுத்தை கூண்டை விட்டு வெளியே வந்து சிறிது நேரம் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றது. எப்படியோ சுதந்திரமான காற்றை நுகர்ந்து பார்த்ததும் அது ஒரேயோட்டமாக ஓடிமறைந்தது. ஒவ்வொரு சிறுத்தையும் ஒரு தனவான் பெயரில் விடுதலையாகும். அவர் வழங்கும் பணம் காப்பகத்தை நடத்துவதற்கு உதவும் என்று லோர்ரி விளக்கினார்.

அன்று பின்னேரம் நான் விருந்துக்கு புறப்படும் சமயத்தில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது.
கழுதை வண்டியை ஓட்டியபடி ஆப்பிரிக்க சிறுவன் ஒருவன் வந்தான். தோள்கள்கூட முளைக்காத சின்னப் பையன் அவன். பால்குடம் வண்டியில் இருந்தது. வண்டியை விட்டு கீழே இறங்கி ஒரு லிட்டர் பாலை எடுத்து நடந்துவந்தான். அவனுடைய ரப்பர் செருப்பு அடியிலே பிய்ந்துபோய் இழுபட்டது. அவன் கேட்ட பணத்தை கொடுத்து பாலை வாங்கினேன். அடுத்த நாளும் நான் அங்கே தங்குவேனா என்று என்னிடம் விசாரித்தான். நான் ‘இருக்கலாம்’ என்றேன்.
‘அப்ப, இரண்டு லிட்டர் வாங்குங்கள், சேர்’ என்றான்.
‘ஏன்?’ என்றேன்.
‘நாளைக்கு நான் வரமுடியாது.’
‘ஏன்?’
‘என் அம்மா செத்துவிடுவார்?’
‘யார் சொன்னது?’
‘டொக்ரர் சொன்னார்’ என்றான்.
‘அம்மாவை யார் பார்க்கிறது?’
‘என்னுடைய தங்கச்சி.’
‘எத்தனை வயது?’
‘ஆறு’
‘அம்மாவுக்கு என்ன சுகயீனம்?’
‘தெரியாது, சேர்’

விருந்து ஆரம்பித்துவிட்டது என்று ஆள்மேல் ஆள் வந்தபிறகு நான் போனேன். திறந்த வெளியில் ஆப்பிரிக்க வானத்தின் கீழ் மேசை போட்டு இருபது விருந்தினர்கள் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். அன்றைய விருந்தில் பரிமாறிய அத்தனை வகை உணவும் அங்கே உண்டாக்கியவை. மரக்கறி, கிழங்குகள், பழங்கள் மூன்று வகை இறைச்சி.. ஜேர்மன்காரர் பிளேட் பிளேட்டாக சாப்பிட்டுக் கொண்டே இருந்தார். மாடுகளுக்கு இருப்பதுபோல அவருக்கும் நாலு வயிறு என்று யாரோ சொன்னார்கள். ரஸ்யப் பெண்ணும் அவரும் காதலர்கள் என்பது அப்போது எனக்கு வெளிச்சமானது. அவள் நீண்ட மென் சிவப்பு ஆடையில், அந்த நட்சத்திர வெளிச்சத்தில் ஒரு வனதேவதைபோலவே தோன்றினாள். விருந்து தொடங்கிய நேரத்திலிருந்து அவள் தொடைமேல் வைத்த கையை ஜேர்மன்காரர் எடுக்கவே இல்லை.
என்னை வரவேற்ற ரொஸாலியோ பெண் சேக்ஸ்பியர் நாடகங்களில் வரும் ஒரு பாத்திரம்போல தன்னை அலங்கரித்திருந்தாள். முதலில் அவளை யார் என்றே தெரியவில்லை. நூறு வருடத்திற்கு முந்திய ஆங்கிலேயர் அணிந்ததுபோல நீண்ட ஆடையும், பொங்கிய கைகளும், தொப்பியுமாக முறுவலை சிந்தியபடி அவள் தோன்றியபோது மிதந்து வருவது போலவே பட்டது. அவள் நடந்துபோகும் இடம் எல்லாம் அவளுடைய ஆடை சரசரவென்ற ஒலியை எழுப்பியது. பன்னிரெண்டு மணி நெருங்க நெருங்க ஆரவாரம் அதிகமாகியது. சுற்றிவர எரிந்த பந்தங்களில் இருந்து வந்த வெளிச்சம் அனைவருடைய முகங்களிலும் ஒளிவீசியது. இந்த சமயத்தில் ஆகாயத்திலிருந்து இரண்டு நட்சந்திரங்கள் ஒரே நேரத்தில் உதிர்ந்து விழுந்தன. எல்லோரும் நிமிர்ந்து ‘ஆ, ஆ’ என்று பார்த்தார்கள். அவற்றினால் அடுத்த ஆயிரம் வருடங்களின் தொடக்கத்தை காண முடியவில்லை.

ரஸ்யப் பெண்ணின் கூந்தலில் இருந்து ஒரு தங்கமுடி பிரிந்து அவள் உதடுகளின் மேல் விழுந்து கிடந்தது. ஜேர்மன்காரர் அந்த முடியையும் சேர்த்து அவளுடைய இதழ்களை முத்தமிடத் தொடங்கினார். அது நீண்டு நீண்டு போனது. இருபதாம் நூற்றாண்டில் ஆரம்பித்த முத்தம் இருபத்தோராம் நூற்றாண்டில்தான் முடிவுக்கு வரவேண்டும் என்பதுபோல அவர் பாடுபட்டார். ‘அவர்களுடைய முத்தம் இரண்டு உள்ளங்களை மாத்திரம் அல்லாமல், இரண்டு கண்டங்களை மாத்திரம் அல்லாமல், இரண்டு நூற்றாண்டுகளையும் இணைக்கவேண்டும். விரைவில் மணம்புரியப் போகும் காதலர்களுக்கு என் வாழ்த்துக்கள்’ என்று லோர்ரி எழுந்து நின்று சாம்பெய்ன் கிண்ணத்தை தூக்கினார். அவர்களுக்காகவும் நாங்கள் இன்னொரு மிடறு அருந்தினோம்.

நேரம் பன்னிரெண்டு மணியை நெருங்க ரொஸாலியோ பதற்ற நிலையை அடைந்தாள். அன்று அவள் விசேஷமாக தெரிந்ததற்கு காரணம் அவள் ஒட்டுக்கண் அணிந்திருந்ததுதான். அவளுடைய இயற்கையான கண் கறுப்பு, ஆனால் அவள் பச்சை நிறக் கண் ஒட்டியிருந்தாள். பன்னிரெண்டுக்கு சில வினாடிகள் இருந்தபோது அவளுடைய ஒட்டுக்கண்ணாடி ஒன்று கழன்று புல்தரையில் விழுந்துவிட்டது. பத்துப்பேர் முழங்காலில் தவழ்ந்து பந்தங்களின் ஒளியில் அதை தேடினார்கள். புத்தாயிரத்துக்கு இன்னும் சில வினாடிகள் இருக்கும்போது ஒருவர் அதைக் கண்டுபிடித்தார். சரியாக பன்னிரெண்டு மணி அடித்தபோது அவளுடைய ஒரு கண் கறுப்பாகவும், மற்றக் கண் பச்சையாகவும் இருந்தது. பச்சைக் கண்ணாடியை ஒரு கையால் தூக்கிப் பிடித்தபடி அங்கு இருந்த அத்தனை விருந்தினருக்கும் முத்தம் கொடுத்தாள். பேராசிரியர் முறை வந்தது. அவர் முத்தத்தை ஏற்க மறுத்துவிட்டார். தனக்கு இரண்டு கண்களும் பச்சையான பெண்தான் முத்தம் தரவேண்டும் என்றார். இந்தப் பெண் முடியாது, இப்படியே தருவேன் என்றாள். அவர் ஏன் என்றார். அவள் புத்தாயிரம் முடிந்துவிட்டது என்றாள். அவர் இல்லையே இப்போதுதான் ஆரம்பித்தது. அது முடிய இன்னும் ஆயிரம் வருடங்கள் இருக்கின்றன என்றார். அவள் அவர் சொல்லைக் கேட்காமல் எட்டிப் பாய்ந்து தாடியிலே மறைத்து வைத்திருந்த அவர் வாயை உத்தேசமாகக் கண்டுபிடித்து முத்தம் கொடுத்தாள்.
முத்தம் கிடைத்ததும் பேராசிரியர் மாறிவிட்டார். அதே கால்கள், ஆனால் நடை வேறு. தான் பாடவேண்டும் என்று அடம் பிடித்தார். அலாஸ்காவில் இருந்து வெல்விட்ஸியா தாவரத்தைப் பார்க்க வந்த பேராசிரியரை யார் தடுக்கமுடியும். அவர் முகத்தில் வாய் இருக்கவேண்டிய இடத்தில் இருந்து சத்தம் எழும்பியது. பழுதுபட்ட முடி உலர்த்திபோல இருந்த அவருடைய குரலை யாரும் சட்டை செய்யவில்லை. தாலாட்டுப்போல ஆரம்பித்த பாடல் ஒரு கவிதைபோல முடிவை எட்டியது. தன்னைவிட்டு சொந்த புருசனிடம் திரும்பிப்போன காதலியை பற்றிய பாடல் அது. பாடலின் முடிவில் விட்டுப்போன காதலிக்கும் சேர்த்து ஒருவாய் சாம்பெய்ன் பருகினார். நாங்களும் பருகினோம். இரவு மூன்று மணியளவில் விருந்து முடிவுக்கு வந்தபோது தாறுமாறாக கவிழ்ந்திருந்த நாற்காலிகள், மேசைகள், விளக்கு பந்தங்களுக்கு நடுவில் சில மனித உடல்களும் கிடந்தன.
மறு நாள் மதியநேரம் நான் திரும்பவும் பயணப்பட்டேன். ஆப்பிரிக்க இருட்டு சொல்லாமல் கொள்ளாமல் இறங்கியதுபோல மனதிலும் இருள் நிறைந்து கிடந்தது. பிளேன் பல மணிநேரங்கள் தாமதித்து உருண்டு திடீரென்று எழும்பியபோது என் வலது பக்கத்து வானத்தில் இருந்த நட்சத்திரங்கள் எல்லாம் பொலபொலவென்று கொட்டின.

திட்டமிட்டதுபோல அந்தப் புத்தாயிரத்து இரவு அமைந்ததா என்று இப்போது, சரியாக எட்டு வருடங்கள் ஓடிய பிறகு, நான் யோசித்துப் பார்க்கிறேன். இன்றுகூட அந்த ரஸ்யப் பெண்ணும், வெல்விட்ஸியா தாவரமும், ஆப்பிரிக்க வானம் உதிர்த்த இரட்டை நட்சத்திரங்களும் ஞாபகத்துக்கு வருகின்றன. தாடிப் பேராசிரியரும், ஒட்டுக்கண்ணியும், பத்துமணி சிறைவாசமும் மறக்கவில்லை. ஆயிரம் டொலர் கொடையில் இன்றும் காட்டில் சுதந்திரமாக உலவும் சிறுத்தையின் நினைவு வருகிறது.
என்னை விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்ற வாகன ஓட்டி கடந்த இரவு கழுதை வண்டிச் சிறுவனின் தாயார் இறந்து போனதைச் சொன்னார். இப்பொழுது நினைத்து பார்க்கும்போது அந்த தாயார் எந்த நூற்றாண்டில் இறந்துபோனார் என்பதை நான் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை என்பது ஞாபகத்துக்கு வருகிறது.

[ அ.முத்துலிங்கம் எழுதி விரைவில் வெளிவரப்போகும் நூலிலிருந்து ஓர் அத்தியாயம்.]


Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்